சனி, 11 மார்ச், 2023

கதம்பம் – பிள்ளையார் ஓவியம் - புதுவரவு புத்தகங்கள் - வயலூர் சிவகுமரா - யாரிவள் மின்புத்தகமாக - திருவானைக்காவல் - அச்சுமுறுக்கு!

  

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"THE FUTURE BELONGS TO THOSE WHO BELIEVE IN THE BEAUTY OF THEIR DREAMS." - ELEANOR ROOSEVELT.

 

******

 

பிள்ளையார் ஓவியம் - 30 ஜனவரி 2023: 

 

சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது முகநூல் இடுகைகள் தொகுப்பாக ஒரு கதம்பம் பதிவு இதோ உங்கள் வாசிப்பிற்கு.  முதலாக வருவது மகளின் கைவண்ணத்தில் ஒரு பிள்ளையார் ஓவியம். 


 

******

 

புதுவரவு - 2 ஃபிப்ரவரி 2023:


 

வானதி பதிப்பகம் மூலம் வரவழைத்துக் கொண்டோம்! வாசிப்பில் ஆழ்ந்து போகத் தான் ஆவல்! வீட்டுச்சூழலும், நேரமின்மையும் அதை சற்றே தாமதமாக்கலாம்!

 

அடுத்த மாதம் நடைபெறப் போகும் மகளின் பொதுத்தேர்வுகளை எண்ணி அவளிடமிருந்து இவற்றை மறைத்து தான் வைக்கணும்...🙂 என்னை விட வேகமாக வாசித்து முடித்து விடுவாள்..🙂

 

******

 

வயலூர் சிவகுமரா - 9 ஃபிப்ரவரி 2023: 

நாம ரெண்டு பேரும் இன்னிக்கு எங்கேயாவது போயிட்டு வருவோமா??

 

வந்து மத்த வேலையெல்லாம் பார்த்துக்கலாம்! சட்டுன்னு கிளம்பு!  சாப்டுட்டு கிளம்புவோம்! என்ன??

 

எங்கே போவது?? இருவரின் எண்ணமும் கோவிலாக இருந்தது!! மனதிற்கான நிம்மதியும், அமைதியும் கிடைக்குமிடம்!

 

கிடைத்த பேருந்துகளை ஓடிப் பிடித்து ஏறி, ஒலித்த பாடல்களில் சற்றே லயித்து, கடந்து செல்லும் வழிகளை கவனித்துக் கொண்டு என்று மூன்று பேருந்துகளை மாற்றிச் சென்று இறங்கிய இடம் குமார வயலூர்!

 

உள்ளே நுழைந்தவுடன் மனதில்....

 

உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்!

 

அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா!

 

அன்றாடம் சொல்லிக் கொண்டிருக்கும்  கந்த கரு கவசத்தின் வரிகள்! 

 

முருகா இந்த  நிம்மதியும், சந்தோஷமும் எப்போதும் நிலைச்சிருக்கணும்! என்று பிரார்த்தித்துக் கொண்டு பிரகாரத்தை வலம் வந்தோம்!

 

பிரசித்தி பெற்ற கோவில் இது! சில வருடங்களுக்கு முன்பு சென்ற போது கூட கோவில் பளிச்சென்று இருந்தது! இப்போது எல்லா இடமும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது!

 

கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்று தெரியவில்லை! கோவிலின் நிலையை பார்த்த போது மிகவும் வருத்தமாக இருந்தது!

 

வயலூர் சிவகுமரனே இதற்கு ஒரு வழி செய்யட்டும் என்று நினைத்துக் கொண்டோம்!

 

வெளியே வந்து கிடைத்த பேருந்துகளை பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்!

 

******

 

யாரிவள் - மின்புத்தகமாக - 11 ஃபிப்ரவரி 2023:


 

முகநூலிலும், ப்ளாகிலும் எழுதி வந்தத் தொடரான 'யாரிவள்' இப்போது அமேசானில் மின்னூலாக மாற்றம் கண்டுள்ளது! உங்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்ற தொடராக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!

 

இந்தத் தொடரை எழுதியதன் மூலம் இதுவரை வாழ்வில் கடந்து வந்த பாதைகளை அசை போட வைத்து, மிகுதி வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவத்தையும் தந்தது என்று சொல்லலாம்!

 

மின்னூலுக்காக மகிழ்வுடன் மதிப்புரை எழுதித் தந்த Rishaban Srinivasan சாருக்கும், நண்பர் அரவிந்த் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அட்டைப்படத்திற்கான ஓவியத்தை வரைந்தவர் Sujatha Sambamurthy சுஜாக்காவின் மகள் Samrutha Sambamurthy! அட்டைப்படத்திற்காக ஓவியத்தை கேட்ட போது 'தாராளமா எடுத்துக் கொள்ளலாம்' என மகிழ்வுடன் மனமுவந்து அனுமதி கொடுத்த சுஜாக்காவிற்கு என் அன்பான நன்றிகள்.

 

தொடர் எழுதிக் கொண்டிருக்கும் போதே இதை மின்னூலாக மாற்றுவீர்களா ஆதி?? என்று கேட்டுக் கொண்டிருந்த தோழி Priyasaki Ammu விற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

 

மின்னூலை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கீழே...

 

யாரிவள் (Tamil Edition) eBook : Venkat, Adhi, Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store

 

******

 

திருவானைக்காவல் - 16 ஃபிப்ரவரி 2023:


 

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

 

இந்த தூண்ல இருக்கிற சிற்பங்களை பாரேன்! எவ்வளவு நுணுக்கமா செதுக்கியிருக்காங்க இல்ல!

 

தலையை அசைத்துக் கொண்டே வாய் சிவபுராணத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது!

 

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!

தேசனே தேனார் அமுதே சிவபுரனே!

பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே!

 

வரிசையில் தட்டு நிறைய நறுமணத்துடன் கூடிய  நாகலிங்கப்பூக்களால் ஆன மாலை வைத்துக் கொண்டு நின்றிருந்த வயதான தம்பதிகள்! அந்தச் சூழலை சுகந்தமாக்கியது!

 

குனிஞ்சு உள்ள வாங்கோ! பார்த்தாச்சுன்னா நகருங்கோ! குருக்களின் அதட்டல்!

 

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! மனசில நல்ல எண்ணங்களை குடுப்பா!  நல்லதே நடக்கணும்!

 

விபூதியை இட்டுக் கொண்டே 'அப்பா அழகா நெத்திக்கு இட்டுப்பா! என்றேன்!

 

இது தான் ஸ்தல விருக்ஷம்! வெண் நாவல்! இந்த கோவில்ல அஷ்ட கொடிமரம் இருக்கும்!

 

பிரகாரத்தை வலம் வந்தோம்!

 

இங்க ரெண்டு பேரும் சேர்ந்து நமஸ்காரம் பண்ணிப்போம்!

 

நமஸ்கரித்தோம்!

 

இன்றைய நாள் இறையருளால் சிறப்பானது!

 

******

 

அச்சு முறுக்கு - 18 ஃபிப்ரவரி 2023:


 

ரோஸ் குக்கீஸ், அஞ்சறைப்பெட்டி முறுக்கு என்று பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த அச்சுமுறுக்கை என் அம்மா செய்து கொடுத்து சுவைத்திருக்கிறேன். தேங்காயெண்ணெயில் பொரிப்பதால் அதன் மணமும் சேர்ந்து மிகவும் சுவையாக இருக்கும்!

 

ஆதியின் அடுக்களையில் புதுவிதமான முயற்சிகளுக்கு நேரமே இருப்பதில்லை! வழக்கமான சமையலும், மற்ற வேலைகளும் என பம்பரமாய் சுழல வேண்டியதாய் தான் உள்ளது! மோல்ட் வாங்கி வைத்தும் செய்ய முடியவில்லை!

 

இன்று சற்று நேரம் கிடைக்கவே உடனே செய்து விட்டேன். என்னவரும் விடுமுறையில் இங்கு இருப்பதால் 'சிவார்ப்பணம்' எனச் சொல்லி விட்டு, சுடச்சுட அவருக்கும் கொடுக்க முடிந்தது!

 

*****

 

இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

ஆதி வெங்கட்

 

13 கருத்துகள்:

 1. அருணகிரி நாதர் திருப்புகழைப் பாடுதற்கு இங்கு தான் தொடங்கினார்..

  வாரியார் ஸ்வாமிகளது இஷ்ட மூர்த்தி..

  கோயிலின் இன்றைய நிலை மனதுக்கு வருத்தமாக இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
 2. பிள்ளையார் ஓவியம் அழகு.. அருமை..

  யாரிவள்
  மின் நூலுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 3. யாரிவள்..

  மின்னூலின் அட்டைப்படம் அழகு.. அழகு..

  மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 4. ரோஷ்ணியின் ஓவியம் அருமை.  இருவருமாய்ச் சேர்ந்து கோவில்கள் சுற்றியது சந்தோஷம்.  மகிழ்ச்சிகள் நிறையட்டும்.

  பதிலளிநீக்கு
 5. ஒவியம் அழகு...

  மற்ற பகுதிகளும் அருமை...

  பதிலளிநீக்கு
 6. ஓவியம் அருமை.
  இன்றைய கதம்பம் நன்று.

  அச்சு முறுக்கு எனக்கு பிடித்தமானது.

  பதிலளிநீக்கு
 7. யாரிவள் மின் நூலுக்கு வாழ்த்துகள் மேடம். ஏணைய பகுதிகள் அனைத்தும் அருமை. ரோஶ்னியின் தேர்வுகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. மகளின் ஓவியம் அருமை வாழ்த்துகள்.
  வயலூர் முருகன் தரிசனம். திருவானைக்காவல் தரிசனம் என மகிழ்ச்சியான பொழுதுகள்

  முறுக்கு சுவைத்தோம்..

  மின் நூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. ரோஷ்ணி வரைந்த பிள்ளையார் அழகு! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  புதுவரவுகள்- வாவ்! ரோஷ்ணி நன்றாகத் தேர்வுகள் எழுதுவார். நல்ல எதிர்காலம் உண்டு. மனதார வாழ்த்துகள்!

  வயலூர் முருகன் தரிசனம் மற்றும் திருவானைக்காவல் அப்பன் தரிசனம் எல்லாமே மகிழ்வான நிறைவான ஒன்று. கண்டிப்பாக நல்லது நடக்கும், ஆதி!

  யாரிவள் புத்தக ஓவியம் அருமை!! மின் நூலுக்கு வாழ்த்துகள்! ஆதி!

  ஆஹா அச்சு முறுக்கு!!! எங்க ஊர் ஃபேமஸ் ஆச்சே..நாரோயில்ல....நல்லா வந்திருக்கு ஆதி!! ஆஅமாம் தேங்காய் எண்ணையில் பொரிப்பதால் மணம் சுவை சூப்பரா இருக்கும்.

  நானும் மோல்ட் வைத்திருக்கிறேன் செய்ததுண்டு. சமீபத்தில்தான் செய்வதில்லை. கொஞ்சம் இனிப்பாச்சே!!! ஆனால் என் ஃபேவரைட்! படம் பார்க்கும் போதே, drooling!

  நாமும் செஞ்சு ரொம்ப நாளாச்சே செய்யலாம்னு நினைச்சா அச்சு இப்ப வீடு மாறி வந்ததில் எந்தப் பெட்டியில் இருக்கிறதோ மேலே!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. ஆதி உங்கள் கதம்ப பகிர்வு அருமை. ரோஷ்ணியின் ஓவியம் மிக அருமை.
  தேர்வுகள் நன்றாக எழுதுவார் கதை படித்தாலும், வாழ்த்துக்கள்.
  அனைத்தையும் முகநூலில் படித்தேன்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....