செவ்வாய், 7 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“THE FIRST STEP TOWARDS GETTING SOMEWHERE IS TO DECIDE YOU’RE NOT GOING TO STAY WHERE YOU ARE.”  - J.P. MORGAN

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்


 

சென்ற பகுதியில் வாரணாசி என அழைக்கப்படும் காசி மாநகரில் அமைந்திருக்கும் துர்கா கோவில் குறித்து பார்த்தோம்.  இந்தப் பகுதியில் பார்க்கப்போவது துர்கா கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் சங்கட் மோச்சன் மந்திர் என்று அழைக்கப்படும் ஹனுமன் கோவில் குறித்து தான்.  வாரணாசி நகரில் இருக்கும் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று இந்த சங்கட் மோச்சன் மந்திர் என்று அழைக்கப்படும் ஹனுமனின் கோவில்.  தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களின் சங்கடங்களை தீர்த்து வைக்கும் ஹனுமனுக்கான ஒரு கோவில் இந்தக் கோவில்.  இந்தக் கோவில் குறித்து நிறைய தகவல்கள் உண்டு - அதில் முதலானது - இந்தக் கோவிலுக்கும் “ராம்சரித்ரமானஸ்” எழுதிய துளசிதாசருக்கும் உண்டான சம்பந்தம்.  அது என்ன பார்க்கலாம் வாருங்கள். 


 

துளசிதாசர் பகவான் ஸ்ரீராமர் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர்.  தினம் தினம் ஸ்ரீராமனின் பெருமைகள் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்பவர்.  அவர் வாரணாசி நகரில் வசித்து வந்தார். தினமும் தனது காலைக்கடன்களை முடிக்க நதிக்கரைக்குச் சென்று திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் தன்னிடம் இருக்கும் தண்ணீரில் கொஞ்சம் விடுவது வழக்கமாக இருந்தது.  அந்த மரத்தடியில் குடிகொண்டிருந்த பூதம் ஒன்று தினம் தினம் தண்ணீர் தரும் துளசிதாசர் மீது அன்பு கொண்டு அவருக்கு ஒரு வரம் அளிக்க முடிவு செய்தது.  துளசிதாசர் முன்பு தோன்றிய அந்த பூதம், உனக்கு நான் ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் என்று கேட்க, ஸ்ரீராம பக்தரான துளசிதாசர் கேட்ட வரம் - “எனக்கு ஸ்ரீராமபகவானை பிரத்யக்ஷமாக பார்க்கவேண்டும்” என்பது தான்.  இதைக் கேட்ட பூதம், “என்னால் இயலாத உதவியைக் கேட்கிறீர்கள்…  ஆனால் உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன்.  நீங்கள் தினம் தினம்  ஸ்ரீராமர் குறித்த உபன்யாசத்தினைக் கேட்க ஹனுமன் மாறுவேடத்தில் வருகிறார்.  முதலில் வந்து கடைசியாக செல்பவர் ஹனுமன் தான். அவரை நீங்கள் கண்டுபிடித்து வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஸ்ரீராமனை தரிசனம் செய்ய வழி செய்வார்” என்று சொன்னதாம். 


 

அடுத்த நாள் உபன்யாசத்தின் போது முதலாக வந்து கடைசியாக புறப்பட்டது ஒரு தொழுநோயாளி.  துளசிதாசர் அந்த தொழு நோயாளியை பின்தொடர, அவர் ஒரு அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்.  துளசிதாசர் அவர் காலில் விழுந்து “நீங்கள் ஹனுமன் என்பதை அறிவேன்.  நீங்கள் தான் எனக்கு ஸ்ரீராமன் தரிசனம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்” என்று கேட்க, அந்த தொழுநோயாளி வேடத்தில் இருந்த ஹனுமன் “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்…  நான் நீங்கள் நினைப்பது போல ஹனுமன் இல்லை” என்று மறுக்க, துளசிதாசரோ அவரது காலை விடாமல் பற்றிக்கொண்டு மீண்டும் அவரை ஸ்ரீராம தரிசனம் வேண்டிக் கேட்க, அவரது பக்தியில் மகிழ்ச்சி அடைந்த ஹனுமன் அவருக்கு காட்சி அளித்து, “நீங்கள் சித்ரக்கூடம் செல்லுங்கள், அங்கே உங்களுக்கு ஸ்ரீராமன் காட்சி தருவார்” என்று அருளினாராம்.   அப்படி துளசிதாசருக்கு ஹனுமன் காட்சி அளித்த இடத்திலேயே, துளசிதாசரால் அமைக்கப்பட்ட கோவில் தான் இந்த சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன் குடிகொண்டிருக்கும் “சங்கட் மோச்சன் மந்திர்”.

 

அஸ்ஸி Gகாட் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஹனுமனின் கோவில் வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும்.  மிகவும் பிரபலமான கோவில் என்பதால் எப்போதும் பக்தர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.  அதிலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.  பொதுவாகவே வட இந்தியாவில் ஹனுமனுக்கு உகந்த தினமாக கருதப்படுவது செவ்வாய் கிழமை.  அன்றைய தினம் ஒவ்வொரு ஹனுமன் கோவிலிலும் பக்தர்கள் வந்து ஹனுமனை வழிபட்டு, பூந்தியை அவருக்குப் படைத்து அனைவருக்கும் பிரசாதமாக தரும் வழக்கம் இருக்கிறது.  எங்கள் அலுவலகத்தில் கூட இப்படி ஒரு நபர் உண்டு - எல்லா செவ்வாய் கிழமைகளிலும் பூந்தி பிரசாதமோ அல்லது லட்டு பிரசாதமோ நிச்சயம் எங்களுக்கும் வந்துவிடும்.    சங்கட் மோச்சன் என்றால் சங்கடங்கள் தீர்ப்பவர் என்ற பொருள்.  இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் ஹனுமன் பக்தர்கள் அனைவருடைய சங்கடங்களையும் தீர்க்கவல்லவர் என்று ஒரு நம்பிக்கை.  இந்தக் கோவிலிலும் பூந்தி/Bபேசன் லட்டு (Bபேசன் - கடலை மாவு) தான் பிரசாதம்.   

 

நாங்கள் சென்ற போது அப்படி ஒன்றும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லை என்பதால் நின்று நிதானித்து ஹனுமனை தரிசிக்க முடிந்தது. இனிமையான தரிசனம். வட இந்தியா முழுவதுமே ஹனுமனை வணங்கும் ஒவ்வொருவரும் துளசிதாசர் அவரது தாய் மொழியான “அவத்(dh)”-இல் எழுதிய ஹனுமன் CHசாலிசா மனப்பாடமாக தெரிந்து வைத்திருப்பார்கள்.  40 பாடல்கள் கொண்ட இந்த ஹனுமன் CHசாலிசா கேட்கவும் நன்றாக இருக்கும்.  இணையத்தில் எம்.எஸ். அம்மா அவர்களின் குரலில் இந்த ஹனுமன் CHசாலிசா கீழே உள்ள இணைப்பு வழி கேட்டுப் பாருங்களேன். தில்லியில் எங்கள் பகுதியில் நடக்கும் ஒவ்வொரு விழாவிலும் இந்த ஹனுமன் CHசாலிசா சொல்லி தான் விழாவை நிறைவு செய்வார்கள். இந்தக் கோவிலில் வருடா வருடம் நடக்கும் சங்கட் மோச்சன் சங்கீத் ஸமாரோஹ் மிகவும் பிரபலமான ஒரு சங்கீதத் திருவிழா. பல சங்கீத வித்வான்களின் இசை நிகழ்ச்சி வருடா வருடம் நடக்கும். 

 

Hanuman chalisa by MS Subbulakshmi - YouTube 

 

இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் ஹனுமனின் சிலை களிமண்ணால் ஆனது.  பக்தர்களுக்கு தனது வலது கையால் அபயம் அருளும் விதமாக அபயஹஸ்தமாகவும், இடது கை அவரது இருதயத்தில் தொட்டுக்கொண்டிருப்பது போலவும் அமைந்திருக்கிறது.  ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத கிருஷ்ண சதுர்த்தியில் சிறப்பு ஆராதனைகளும் வழிபாடுகளும் நடப்பது வழக்கமாக இருக்கிறது.  மிகச் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு, உங்கள் காசி பயணத்தில் நிச்சயமாக சென்று வரலாம்.  துளசிதாசருக்கு ஹனுமன் காட்சி அளித்த இடத்தில் ஹனுமனுக்கு கோவில் இருக்கிறதே, ஆனால் துளசிதாசருக்கு கோவில் கிடையாதா என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம்.  எனக்கும் தோன்றியது.  ஆம். அவர் பெயரில் ஒரு  கோவில் வாரணாசியில் உண்டு - அதுவும் சங்கட் மோச்சன் மந்திர் அருகிலேயே… அந்தக் கோவில் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாமா? அது வரை பயணத்தில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

11 கருத்துகள்:

  1. மதிய இடைவெளியில் மூடப்போகும் தருணத்தில் சென்று அவர்களிடம் மன்றாடி வேகமாக தரிசனம் முடித்து வந்தோம்.

    பதிலளிநீக்கு
  2. சங்கட் மோச்சன் மந்திர்”. தரிசனம் செய்து துளசி தாசர் கதையை அறிந்து இருந்தாலும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். முன்பு அனுமன் சாலிஸா தினம் படிப்பேன். சங்கரா தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை வைப்பார்கள் மாலை நேரத்தில் அதை கேட்பேன்.
    அனுமன் சங்கடங்களை போக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. இவற்றை இந்த மாதம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்காக்க் குறித்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. தரிசனம் பெற்றோம். ஜெய் ஆஞ்சநேயா.

    பதிலளிநீக்கு
  5. அறியாதன அறிந்தோம்..விரிவான அருமையான பதிவு..தொடரவாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  6. ஆஞ்சு!! என் பிரிய ஆஞ்சு! காசி, அயோத்யா ஜி செல்லும் வாய்ப்பு கிடைத்தால்....கண்டிப்பாக இதற்குச் சென்று வர வேண்டும் நோட் செய்துகொண்டுவிட்டேன். ஹனுமான் சாலிஸா தினமும் கேட்பதுண்டு. எம் எஸ் அம்மா குரலில், மற்றும் சூர்யகாயத்ரி குரலில்.... மனப்பாடம் என்றாலும் உச்சரிப்பு சரியாக வராது என்று பாடுவதில்லை.

    கோயில் வரலாறு என்று நல்ல தகவல்கள், ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இங்கும் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை ஹனுமன் தினங்கள் என்று சொல்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சங்கட் மோச்சன் மந்திர் அறிய தகவல்கள் .. நல்ல தரிசனம் தங்களின் வழி

    ஜெய் ஸ்ரீ ஹனுமான்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....