ஞாயிறு, 5 மார்ச், 2023

முகநூல் இற்றைகள் - ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ அமலீஸ்வரர் திருக்கோவில் கோபுரப்பட்டி…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ஆஹா என்ன அழகான ஊர் - அழகிய மணவாளம்…  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீங்கள் பிறரிடம் இருந்து தனித்திருக்க விரும்பினால்… நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் போதுமானது…  தானாக ஒதுக்கி வைக்கப்படுவீர்கள். 

 

******

 

பூமிநாதர் கோவிலுக்கும் திருப்பைஞ்சீலி கோவிலுக்கும் அழகிய மணவாளம் சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கும் சென்ற அன்றே சென்ற இன்னும் இரு கோவில்கள் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம்.  

 

முகநூல் இற்றைகள் - ஸ்ரீ ஆதிநாயகி சமேத ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள் கோவில், கோபுரப்பட்டி… - 26 ஜனவரி 2023


 

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில், அழகிய மணவாளம்  கோவிலுக்குச் சென்று பெருமாளை சேவிக்க முடியாமல் திரும்பிய பின்னர் நான் சென்ற இடம் கோபுரப்பட்டியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஆதிநாயகி சமேத ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள் கோவில்.  இந்தக் கோவில் அழகிய மணவாளம் கோவிலைப் போலவே பல நூற்றாண்டுகளாக பாழடைந்து இருந்தாலும், சில வருடங்களுக்கு முன்னர், திருப்பணிகள்செய்யப்பட்டு, கோலாகலமாக கும்பாபிஷேகம், சரியாகச் சொல்வதானால் 27 ஆகஸ்ட் 2010 அன்று நடந்திருக்கிறது.  மீண்டும் சமீபத்தில், பன்னிரண்டு வருடங்கள் கழித்து 07 செப்டம்பர் 2022 அன்று கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.  இன்னமும் திருப்பணிகள் நடந்தபடியே இருக்கின்றது.  நான் சென்ற போதும் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தது. 



 

மிகவும் அழகான பெருமாள் - திருவரங்கம் போலவே இங்கேயும் பள்ளிகொண்ட பெருமாள் தான்.  நின்று நிதானித்து தரிசனம் செய்து கொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சியான விஷயம்.  நான் சென்ற போது திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பெருமாளை சேவிக்க வழி செய்தார்.  ஆஹா என்னவொரு அழகு!  கோவில் திருப்பணிகள் நடக்க ஒரு காரணமாக இருந்த திருவரங்கம் கோவில் பிரதம Bபட்டர் அவர்களின் தளத்தில் நிறைய தகவல்கள் இருக்கிறது.  அவரது தளத்தில் சொல்லியுள்ள சில வரிகள் இங்கே - “பாம்பணைத் துறந்து மண்தரையில் பாம்புப் புற்றுகள் சூழ, கோபுரப்பட்டிப் பெருமாள் துயின்றதையும் கண்ணுற்று வருந்தின காலம் சென்று, நம் வருத்தம் தீர்ந்திட இன்று பாம்பணையில் கம்பீரமாகப் பள்ளி கொள்ளும், கண் கொள்ளா பாக்கியமும் கிடைக்கப் பெறுகின்றோம்.” 




 

ஸ்ரீசுதர்ஸன நரஸிம்ஹ, மூலவர் விக்ரஹமானது (சுமார் ஒரு டன் எடையும், 4 அடிக்கும் சற்று அதிகமான உயரமும், முழுவதும் கருங்கல்லினால் ஆனது) விரைவில் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது (ஃபிப்ரவரி மாதம் 12-ஆம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது).  நான் எடுத்த சில நிழற்படங்களையும் இணையத்திலிருந்து சில படங்களையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.  திருச்சி வரும் வாய்ப்பு இருந்தால் இந்த திருக்கோவிலுக்குச் சென்று ஸ்ரீ ஆதிநாயகி சமேத ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாளின் தரிசனம் பெற வேண்டுகிறேன். இந்தக் கோவில் குறித்தும், நேற்று பதிவிட்ட கோவில் குறித்தும் இணையத்தில் முன்னூர் ரமேஷ் பக்கங்கள் என்ற தளத்தில் நிறைய விவரங்கள் இருக்கின்றது.  அழகிய படங்களும் உண்டு.  படித்துப் பாருங்களேன்.

 

திருக்கோவிலுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்து பெருமாளை நின்று நிதானித்து தரிசிக்க முடிந்த மனமகிழ்ச்சி உடன் அங்கிருந்து வெளியேறி மிகவும் பழமையான இன்னுமொரு கோவிலுக்குச் சென்றேன்.  அந்த கோவில் என்ன கோவில்?  சொல்கிறேன். 

 

******

 

முகநூல் இற்றைகள் - அமலீஸ்வரர் திருக்கோவில், கோபுரப்பட்டி… - 31 ஜனவரி 2023


 

ஒரே நாளில் பார்த்த கோவில்களின் வரிசையில் நான் கடைசியாக பார்த்தது கோபுரப்பட்டி பகுதியில் பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும், மிகவும் பழமையான ஒரு சிவன் கோவில்.  பெருமாள் கோவிலிலிருந்து சற்றே முன்னே நடந்தால், ஒரு சிறு பதாகை - தமிழ்நாடு சுற்றுலா துறையினர் வைத்திருக்கிறார்கள் - அமலேஸ்வரர் கோவில் என!  அமலீஸ்வரர் கோவில் என சில இணையதளங்களில் எழுதி இருக்கிறார்.  கோவில் பகுதியில் இருக்கும் ஒரு கல்வெட்டு (?) அமனீஸ்வரர் திருக்கோவில் என்று சொல்கிறது.  எந்த பெயராக இருந்தாலும் என்ன?  கோவில் குறித்து பார்க்கலாம் வாருங்கள்! அந்த கல்வெட்டு சொல்லும் தகவல் இது தான்!

 

இக்கோயில் கி.பி. 975-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு உத்தம சோழர், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.  இக்கோயிலின் அடித்தளத்தில் இராமாயணக் காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. கண்டராதித்த சோழனின் தேவியும் உத்தம சோழனின் தாயுமான செம்பியன் மாதேவி இக்கோயிலுக்கு விளக்குகள் தானம் செய்துள்ளார். 


 

மேற்கண்ட தகவலிலிருந்தே எத்தனை பழமையான கோயில் என்று தெரிந்து கொள்ளலாம். தகவல் பலகை வழியே நடந்து செல்ல முற்பட்ட போது கிராமத்தில் அமர்ந்து இருந்த ஒருவர் எங்கே செல்கிறீர்கள் என சைகையில் கேட்க, நானும் சைகையில் கோவிலுக்கு என்று சொல்ல, சரி என கைகளை காண்பித்தார்.  பசுமையான வயல்வெளிகள், அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்கள் என அழகான பாதை.  அந்தப் பாதை வழி நான் சென்ற போது கோவில் மூடி இருந்தது.  வெளியே பாழடைந்த நிலையில் ஒரு நந்திபெருமான் சிலை. உள்ளே ஒரு பெரிய நந்தி புதியதாக வைத்திருக்கிறார்கள்.  கோவில் உள்ளே செல்ல முடியாததால் உள்ளே இருக்கும் சிற்பங்களை என்னால் நேரில் பார்த்து ரசிக்க முடியவில்லை.  ஆனால் நான் தொடர்ந்து வாசித்த ஒரு வலைப்பூவில் இக்கோயில் குறித்து சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார் - Bபூஷாவளி எனும் சகோதரி.  அவரது பதிவுக்கான சுட்டி.  அவரது பதிவில் சிற்பங்கள் படங்களும் இருக்கிறது. பார்த்து ரசிக்கலாம்!



 

முடிந்தால் இன்னும் ஒரு முறை அப்பகுதிக்குச் சென்று பார்க்க முடியாத இந்தக் கோவிலையும், அழகிய மணவாளம் சுந்தர ராஜ பெருமாளையும் பார்த்து ரசிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  அவன் அழைத்தால் சென்று வருவேன்.  பிறகு தகவல்களை இங்கே சேர்த்துவிடுகிறேன்.   பழமையான கோவில்கள் பல நம் நாட்டில் இருக்கிறது.  அதன் பழமை மாறாமல் முடிந்த அளவு திருப்பணிகள் செய்வதோடு, பக்தர்களுக்காக வசதிகளும் செய்து விட்டால் சுற்றுலா துறை வாயிலாக பக்தர்களை அங்கே வரவழைப்பதோடு, அரசுக்கு வருமானமும் ஈட்டலாம் - அவற்றை நல்ல விதமாக - பொது மக்களுக்கு பயன் தரும் வகையில் கல்வி, மருத்துவ வசதி என பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.  கூடவே நிறைய வேலைவாய்ப்பும் தர முடியும்.  எல்லாவற்றிற்கும் எல்லாம் வல்ல இறைவனும் வழி வகை செய்ய வேண்டும் என்பதோடு அரசாங்கமும் சரியான திட்டமிட வேண்டும்.  எப்போதைக்கு இப்படி நடந்தாலும் நல்லதே!  ஒரே நாளில் பார்த்த கோயில்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.  இந்த விஷயங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

11 கருத்துகள்:

  1. சிவன் கோவிலுனுள் செல்ல முடியாதது வருத்தம்தான் இல்லையா?  நாங்களும் சில படங்களையும், விவரங்களையும் இழந்தோம்.  அவ்வளவு பழமையான கோவில் என்பது சந்தோஷம் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கோவில்களை எல்லாம் குறித்துக்கொண்டுள்ளேன். அடுத்த முறை திருவரங்கம் வரும்போது இவற்றையெல்லாம் தரிசிக்கும் வாய்ப்பு வரணும்.

    வயல்களுக்கிடையே கோவில் எப்படி இருக்கும்? இடங்களை ஆக்கிரமித்திருப்பது புரிகிறது

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தத்துவம் எனக்கு மிகவும் பொருந்துகிறது ஜி.

    நல்லதொரு தரிசனம் கிடைத்தது தகவல்கள் சிறப்பு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கோபுரப்பட்டி பெருமாள், அமலீஸ்வரர் பழமைவாய்ந்த கோவில்களை பகிர்ந்துள்ளீர்கள். கண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
  5. இன்று இங்கும் நரசிம்ம ஸ்வாமி தரிசனம்..

    கோபுரப்பட்டி பெருமாள் பற்றி ஆறேழு வருடங்களுக்கு முன்னரே வாசித்திருக்கின்றேன்..

    சிறப்பான செய்திகளுக்கு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. வாசகம் அருமை.

    // “பாம்பணைத் துறந்து மண்தரையில் பாம்புப் புற்றுகள் சூழ, கோபுரப்பட்டிப் பெருமாள் துயின்றதையும் கண்ணுற்று வருந்தின காலம் சென்று, நம் வருத்தம் தீர்ந்திட இன்று பாம்பணையில் கம்பீரமாகப் பள்ளி கொள்ளும், கண் கொள்ளா பாக்கியமும் கிடைக்கப் பெறுகின்றோம்.” //

    உண்மை. அவர் நினைத்தால்தான் எல்லாம் நடக்கும்.

    அனைத்து கோவில்கள் தகவல்களும் அருமை.

    என் கணவர் இப்படி நடந்து போய் விசாரித்து தரிசனம் செய்த காலங்களை நினைவு படுத்துகிறது. முன்பு போக்குவரத்து வசதி இல்லா கோவில்களை நடந்தும், சைக்கிளில் பயணம் செய்தும் பார்த்து இருக்கிறார்கள்.

    //பழமையான கோவில்கள் பல நம் நாட்டில் இருக்கிறது. அதன் பழமை மாறாமல் முடிந்த அளவு திருப்பணிகள் செய்வதோடு, பக்தர்களுக்காக வசதிகளும் செய்து விட்டால் சுற்றுலா துறை வாயிலாக பக்தர்களை அங்கே வரவழைப்பதோடு, அரசுக்கு வருமானமும் ஈட்டலாம் - அவற்றை நல்ல விதமாக - பொது மக்களுக்கு பயன் தரும் வகையில் கல்வி, மருத்துவ வசதி என பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். கூடவே நிறைய வேலைவாய்ப்பும் தர முடியும். எல்லாவற்றிற்கும் எல்லாம் வல்ல இறைவனும் வழி வகை செய்ய வேண்டும் என்பதோடு அரசாங்கமும் சரியான திட்டமிட வேண்டும். எப்போதைக்கு இப்படி நடந்தாலும் நல்லதே! //

    ஆமாம் நீங்கள் சொல்வது போல நடக்கட்டும். இறைவனும் வழி வகை செய்ய வேண்டும். பிரார்த்தனை செய்வோம்.


    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவும், வாசகமும் அருமை. தாங்கள் நடந்தே தேடிச் சென்று பழமையான கோவில்களை தரிசித்து வந்தது குறித்து மகிழ்ச்சி. கோவிலுக்கு செல்லும் வழிகளும் இயற்கை சூழ்ந்ததாக அமைந்தது மனதுக்குள் பசுமையாக நீடித்திருக்கும். அழகிய மணவாளம் ஊரின் பெருமாளை தரிசிக்காத நிலையில் திரும்பிய உங்களுக்கு இந்த ஊரிலிருக்கும் பெருமாளின் திவ்ய தரிசனம் மனதுக்கு நிறைவாக கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. மேலும் சிவன் கோவில் தரிசனத்தையும் மீண்டும் ஒருமுறை நேரம் வாய்க்கையில் சென்று பெற்று வாருங்கள். உங்களின் அந்த பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். உங்களால் நாங்களும் மனதுக்குள் பெருமாளையும், சிவனையும் தரிசித்து கொண்டோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. நேற்று பதிவு வாசித்தேன் கருத்து போட்டுவிட்டேன் என்றே நினைத்திருந்திருக்கிறேன்!!!

    நரசிம்மர், சுதர்சனர் கருங்கல் திரு உருவங்கள் அழகு..

    திருவரங்கம் போலவே இங்கேயும் பள்ளிகொண்ட பெருமாள் தான். நின்று நிதானித்து தரிசனம் செய்து கொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சியான விஷயம். //

    சூப்பர் ஜி. எனக்கு கூட்டம் என்றால் ரொம்பத் தயங்குவேன். இப்படியான கோயில்கள் பழம் பெருமை வாய்ந்தவை நின்று நிதானமாக ரசிப்பதுண்டு. வாய்ப்பு கிடைக்கணுமே

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சிவன் கோயிலும் மனதைக் கவர்கிறது. சுட்டியில் சென்றும் பார்த்தேன் ஜி. அழகான சிற்பங்கள். சுற்றிலும் வயல்கள் என்றால் ஆஹாதான்.

    எங்கள் ஊர்ல இருக்கும் சிவன் கோயிலும் ஒரு பக்கம் பழையாறு மறு பக்கம் சுற்றிலும் வயல்வெளிகள்......போகும் பாதையே அத்தனை அழகு.

    ஆனால் கோயிலுள் செல்ல முடியாமல் போயிற்றே....வாய்ப்பு கிடைக்கும் ஜி...

    இரு கோயில்கள் பற்றிய தகவல்களும் தெரிந்துகொள்ள முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வாசகம் ரொம்ப யதார்த்தம்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....