திங்கள், 13 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஏழு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பழையன கழிதலும் புதியன புகுதலும்… பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"THE MOMENT ANYONE TRIES TO DEMEAN OR DEGRADE YOU IN ANY WAY, YOU HAVE TO KNOW HOW GREAT YOU ARE. NOBODY WOULD BOTHER TO BEAT YOU DOWN IF YOU WERE NOT A THREAT." - CICELY TYSON.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஏழு



 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பத்து ஏழாம்  விதி சொல்வது, "பிறரைச் சுண்டி இழுக்கும்  தனித்தன்மையான அடையாளங்களால் உன்னைச் சூழ்ந்துகொள்".

 

மூல நூலில், இதை "CREATE COMPELLING SPECTACLES" என்கிறார் எழுத்தாளர்.

 

பக்கம் பக்கமாக எழுதுவதையும், மணிக்கணக்காகப் பேசுவதையும் விட, ஒரு அடையாளக் குறியீட்டால், நாம் சொல்ல வருவனவற்றை எளிதில் பலருக்கு புரியவைக்கும் உத்தி குறித்தே இவ்விதி பேசுகிறது.

 

கல்வியறிவு குறைவாக இருந்த காலங்களில், அரசியல் கட்சிகள், தத்தம் கொள்கைகளை மக்கள் மனதில் சேர்க்க உபயோகித்த சின்னங்களுக்கான தேவையும், மதிப்பும் கல்வியறிவு பெருகிவிட்ட இப்போதும் சிறிதும் குறையவில்லை.

 

வணிகக் குழுமங்கள் முதல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வரை, அனைத்து அமைப்புகளின் தனித்தன்மையான கொள்கைகளும், சின்னங்கள் மூலமே வெளிப்படுத்தப்படுகின்றன.

 

அவற்றின் அங்கத்தினருக்கான உடை மற்றும் பேசும் முறை தொடர்பான விதிகள் முதல், விற்பனைத் துறை உருவாக்க முயலும் நற்பிம்பம் "Brand" வரை, அனைத்திலும், இத்தகைய அடையாள உருவாக்கத்திற்காகவே பெரும் பொருட் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

இவற்றிற்காக அதிக அளவில் செலவு செய்வது எல்லோருக்கும் சாத்தியம்தானா? என்னும் கேள்விக்கான பதில், சாத்தியமும் இல்லை, அவசியமும் இல்லை என்பதே ஆகும்.

 

மஹாகவி பாரதியார் அவர்களின் மீசை, மஹாத்மா காந்தியடிகளின் அரையாடை போன்றவை, விடுதலை நாட்களில், மிகச் சாதாரண முறையிலேயே அவரவர் கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பித்த அழுத்தமான அடையாளங்கள் என்பதை எவராலும் மறந்திருக்க முடியாது.

 

இக்காலத்திலும், தங்கள் எளிய வாழ்க்கை முறையாலேயே, மக்கள் மனதில் நம்பகத்தன்மையை தலைமுறை தலைமுறையாகத் தக்க வைப்பதில் டாடா குழுமத்தைச் சேர்ந்தவர்கள் நிபுணர்களாகத் திகழ்கின்றனர்.

 

பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆடம்பரத் திருமணங்களுக்கிடையே, 2019 இல், நெருங்கிய சிலர் ஆசிகளுடன் வீட்டிலேயே நடந்த திரு நவல் டாடா அவர்களின் திருமணம் இதற்குச் சான்று பகர்கிறது.

 

இத்தகைய சிறப்பான அடையாளச் சின்னங்களை உருவாக்குவதும், அது தொடர்பாக நம் மீது உருவாகும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் தொடர்ச்சியாகத் தக்கவைப்பதுமே, எவராலும் தவிர்க்க இயலாத மிகப் பெரிய சவால் ஆகும்.

 

இன்ஃபோசிஸ் அறக்கட்டளைத் தலைவரான திருமதி சுதா மூர்த்தி அவர்களின் அனுபவங்கள், அத்தகைய பெரும் சிரமங்களை எனக்குப் புரிய வைத்தன.

 

அறக்கட்டளை தொடங்கிய நாட்களில், தேவதாசி முறையால் வட கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவையாற்றவும், கொடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வூட்டவும் முயன்றிருக்கிறார்.

 

அவருக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், அப்பெண்களிடமிருந்து ஆரம்பத்தில் வசைச்சொற்களும், காலணி வீச்சும், தக்காளி வீச்சுமே கிடைத்திருக்கின்றன.

 

அதற்கான காரணம், அவர் அணிந்திருந்த மேற்கத்திய பாணி உடைகளே என அறிந்து, நம் நாட்டு பாரம்பரிய உடையோடும், தம் வயது முதிர்ந்த தந்தையோடுமே சென்று அப்பெண்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் சிறிது சிறிதாகப் பெற்றிருக்கிறார்.

 

பின் நாட்களில், இதே பாரம்பரிய உடையுடன் லண்டன் விமான நிலையத்தில் சென்றபோது, "கால்நடை வகுப்பினர்" என சக பயணியரால் எள்ளி நகையாடப்பட்ட சம்பவமும் உண்டு.

 

இதற்கும் அப்பால், அறக்கட்டளைக்கான நன்கொடைகளைப் பெறுதல், ஊடக வெளிச்சத்தைத் தவறாக உபயோகிப்போரின்  மிரட்டல்களை எதிர்கொண்டு சரியான நபர்களுக்கு நன்கொடைகள் சேர்வதை உறுதி செய்தல், அறக்கட்டளை உதவிகள் குறித்துப் புலனத்தில் பகிரப்படும் வதந்திகளுக்குப் பதில் அளித்தல் உள்ளிட்ட சவால்களை நாள்தோறும் எதிர்கொள்கிறார்.

 

அனைத்துச் சவால்களையும் திறம்படவும், பொறுமையாகவும் கையாளுவதிலேயே, இவர் உருவாக்கிப் பேணிய அறக்கட்டளையின் நல் அடையாளத்தின் உயிர்ப்பும், அது சார்ந்த மென்பொருள் நிறுவனத்தின் மானமும் உள்ளது என்பதை ஒவ்வொரு நொடியும் மனதில் கொண்டு செயலாற்றுகிறார்.

 

அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைப் பாடங்களாகும் இவரின் பொன்னான அனுபவங்களை, மேலும் விரிவாகவும், சுவாரசியமாகவும் அறிய "மூவாயிரம் தையல்கள்" எனும் இவரது நூலை கீழ்காணும் சுட்டியில் வாசித்து மகிழலாம்.

 

Three Thousand Stitches (Tamil) (Tamil Edition) eBook : Sudha Murty: Amazon.in: Kindle Store

 

எனவே, வலுவான அடையாளங்களால் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்  உத்தி, மிகப்பெரும் வலிமையையும் மக்கள் ஆதரவையும் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

ஆனால், நூல் சொல்வதுபோல், அத்தகைய அடையாளத்திற்குள் ஒளிந்துகொண்டு எந்தத் தவறான செய்கையையும் மறைத்துவிடலாம் எனும் எண்ணம், நீண்டகால அளவில் பெரும் அழிவையே நமக்கு அளித்துவிடும் என்பதையும் மனதில் கொள்வோம்.

 

அடையாளங்கள், பிறர் துயரங்களையும் எதிர்பார்ப்புகளையும் மதிக்கும் நம் நல் எண்ணங்களின் மூலமே வலிமையைப் பெற்று நம்மைக் காக்கும் என்பதை, இவ்விதி மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

 

அங்கனம் நம் எண்ணங்களையும் செயல்களையும் வடிவமைக்கும் சிறந்த உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

 

13 கருத்துகள்:

  1. தனித்தன்மையான அடையாளங்களுக்குள் உன்னை மூழ்கடித்துக்கொள் என்று சொல்லலாமா?  நம்மை நாமே சூழ்ந்து கொள்ள முடியாது.  தனித்தன்மையான அடையாளங்களை உருவாக்கிக்கொள் என்றோ, உன்னைச்சுற்றி வெளிப்படுத்து என்றோ கூட சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மேலான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
      நூலாக தயாரிக்கையில் சரியான சொற்களை திருத்தி அமைத்துவிடுகிறோம்.

      நீக்கு
  2. மஹாகவி பாரதிக்கு மீசையைச் சொல்வதைவிட முண்டாசை சொல்லலாம்!  தனித்தன்மை, அடையாளம் என்பதை படித்தபோது நான் வேறுவகையில் யோசித்தேன்.  நீங்கள் சிறந்த முறையில் உதாரணங்கள் கொடுத்து விளக்கி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
      ஆம். முண்டாசையும் அடையாளமாக சொல்லலாம்.

      நீக்கு
  3. ​'மூவாயிரம் தையல்கள்' PDF ஆகக் கிடைத்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கான வழிகளை குறித்து ஆராயலாம் ஐய்யா.

      நீக்கு
  4. //பிறர் துயரங்களையும் எதிர்பார்ப்புகளையும் மதிக்கும் நம் நல் எண்ணங்களின் மூலமே வலிமையைப் பெற்று நம்மைக் காக்கும் என்பதை, இவ்விதி மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.//

    நல்ல கருத்து . பிறர் துன்பங்களை, எதிர்ப்பார்ப்புகளை மதிக்கும் நலல குணம் வேண்டும். அந்த நல்ல எண்ணமே நம் வலிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  5. தனித்தன்மை இருந்தால் தானே பிறர் சூழ்வார்கள்... ஆனால் அந்த தனித்தன்மை தான் என்னென்ன...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனித்தன்மையை உருவாக்கும் முறைகள் குறித்தும், அவசியம் குறித்தும் 41 ஆம் விதி முதல் விவாதிக்கப்பட்டு 48 ஆம் விதியில் உச்சம் பெரும் சார்.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  6. இன்றைய வாசகம் மிக மிக அருமை. ரசித்து வாசித்தேன், ஜி!

    எனக்குள் இதை முதலில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். முதல் வரியை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பக்கம் பக்கமாக எழுதுவதையும், மணிக்கணக்காகப் பேசுவதையும் விட, ஒரு அடையாளக் குறியீட்டால், நாம் சொல்ல வருவனவற்றை எளிதில் பலருக்கு புரியவைக்கும் உத்தி குறித்தே இவ்விதி பேசுகிறது.//

    ஆ!! கீதாவுக்குத் தேவையானதுதான். சுருங்கச் சொல் வரவே மாட்டேங்குதே....சும்மா இது இந்த வரிக்கான கருத்து,,

    விதி சொல்வது புரிகிறது. நல்ல உதாரணங்கள், தனித்தன்மை என்றால் பொதுவான பொருளில் இருந்து இது வேறு வகையான தனி அடையாளம்..அழகான அடையாளம்...

    //அடையாளங்கள், பிறர் துயரங்களையும் எதிர்பார்ப்புகளையும் மதிக்கும் நம் நல் எண்ணங்களின் மூலமே வலிமையைப் பெற்று நம்மைக் காக்கும் என்பதை, இவ்விதி மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.//

    அருமையான வரி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....