ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

முகநூல் இற்றைகள் - என்னைப் போல் ஒருவன்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“YOU CAN SPEND MINUTES, HOURS, DAYS, WEEKS, OR EVEN MONTHS OVER-ANALYZING A SITUATION; TRYING TO PUT THE PIECES TOGETHER, JUSTIFYING WHAT COULD’VE, WOULD’VE HAPPENED…OR YOU CAN JUST LEAVE THE PIECES ON THE FLOOR AND [MOVE] ON.” — TUPAC SHAKUR, RAPPER.

 

******

 

முகநூல் இற்றைகள் - நம்பிக்கை - என்னைப் போல் ஒருவன்… - 6 மார்ச் 2023




 

நிகழ்வு ஒன்று: 

 

நேற்று காலை மாந்துறையில் இருக்கும் அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் செல்லலாம் என வீட்டிலிருந்து புறப்பட்டேன். லால்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டதிலிருந்தே முன் சீட்டில் அமர்ந்து இருந்த பழுத்த மூதாட்டி என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தார். தெலுகுவில் மாட்லாடியபடியே என்னையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தார். பேச்சு என்னைப் பற்றி இல்லை என்பதால் நானும் வேறு எதுவும் எண்ணாமல் பயணத்தைத் தொடர்ந்தேன். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இருக்கையில் இருந்து எழுந்து முன் புறம் சென்றபோது, அந்த மூதாட்டி என்னிடம், "உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு….. எங்கேன்னு தான் புரியல, உங்களுக்கு லால்குடியோ?" என்றார்.  பதிலுக்கு,  இல்லை என்று சொல்லி சிரித்தபடியே மறுத்து விட்டு, நிறுத்தம் வந்ததும் இறங்கிக் கொண்டேன். 

 

நிகழ்வு இரண்டு:

 

மாந்துறை, லால்குடி, திருமங்கலம் என மூன்று கோவில்களில் சிறப்பான தரிசனம் கிடைத்தது. திருமங்கலம் கோவில் தரிசனம் முடித்து லால்குடி வரை இரண்டரை கிலோமீட்டர் நடை….. அந்த சமயம் பேருந்து ஒன்றும் இல்லை என்பதால், பசுமையான வயல்வெளிகளை ரசித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் ஒரு உழைப்பாளி வந்து கொண்டிருந்தார். மேல் சட்டை இல்லாமல் கைலி மட்டும் உடுத்தி வேகமாக வந்து கொண்டிருந்தவர், என்னைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி, "சாமி நல்லா இருக்கீங்களா? அப்பா நல்லா இருக்காங்களா? எவ்வளவு வருஷம் ஆச்சு பார்த்து?" என்றெல்லாம் பொங்கி பக்கத்தில் வந்தார்.  

 

"நீங்க யாரையோ நினைத்துக் கொண்டு என்னிடம் பேசுகிறீர்கள், எனக்கு உங்களைத் தெரியாது" என்று சொல்ல, அவரோ விடாமல் "நீங்க திருமங்கலம் சுப்ரமணிய ஐயாவோட மகன் தானே, அப்படியே அப்பா ஜாடை உங்களுக்கு!" என்றார் மீண்டும். அவரிடம், "இல்லை ஐயா, எனக்கு திருமங்கலம் இல்லை. இந்த ஊருக்கு முதல் முறை இப்போது தான் வந்து திரும்புகிறேன்." என்று சொல்லி நடக்க யத்தனித்தேன். 

 

அவரோ என்னை விடுவதாக இல்லை! "அப்படியா, ஐயா ரொம்ப நல்லவங்க….. அப்பா, மகன் ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க" என்று சொல்லி விட்டு, அடுத்ததாகக் கேட்டது "ஐயா டீ குடிக்க கொஞ்சம் காசு தரீங்களா?" 

 

இப்போது எனக்கு ஒரு பெருத்த சந்தேகம்….. இத்தனையும் ஒரு டீ காசுக்காகவா? இல்லை உண்மையாகவே, என்னைப் போல் ஒருவன் இருக்கிறானா? 

 

"என்னவோ போடா மாதவா! உன்னை பார்த்த உடனே இப்படி காசு கேட்கணுன்னு எப்படித்தான் தோணுமோ! ரொம்ப நல்லவன்னு மூஞ்சில எழுதி ஒட்டி இருக்குமோ" என்று நினைத்தபடியே அந்த உழைப்பாளிக்கு பத்து ரூபாய் கொடுத்து நடக்க ஆரம்பித்தேன். 

 

அது சரி கோவில் பத்தி ஒண்ணும் எழுதலையேன்னு கேட்கறீங்களா? விரைவில் எழுதறேன்….. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்


 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

6 கருத்துகள்:

  1. சின்ன ஊர்தானே?  கேட்டவர்கள் பின்னாலேயே சென்று அவர்கள் சொல்லும் நபரைப் பார்த்திருக்கலாமோ!  ஏழில் ஒருவரைக் கண்டுபிடித்திருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  2. பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. சுப்பிரமணிய ஐயாவோட மகனை சந்திக்க முயற்சித்து இருக்கலாம் ஜி

    பதிலளிநீக்கு
  3. உங்களிடம் அவர் நேரிடையாகவே டீக்கு காசு கேட்டிருக்கலாம். ஒரு வேளை அந்தப் பகுதியில் நடந்துவந்துகொண்டிருந்ததால் உள்ளூர்கார்ர் என்று நினைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. ஒருத்தரை போல ஏழு பேர் இருப்பார்கள் என்பார்கள்.
    உங்களை போல இருப்பார்போலும் இருவரும் அது போல சொல்லி இருக்கிறார்களே!
    இதில் என்ன சந்தேகம்? நல்லவர்தான் டீ குடிக்க காசு கொடுத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. "கேட்டால் கிடைக்கும்" என்று தெரிந்து உள்ளது...

    பதிலளிநீக்கு
  6. ஆம் சார். இராமேஶ்வரம் போன்ற சில இடங்களில், அவர்களாகவே வாழ்த்திவிட்டு காசு கேட்பதும் உண்டு.
    அதுபோலவே ஒரு உக்தியை இங்கே இவர் கையாண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....