சனி, 6 மே, 2023

காஃபி வித் கிட்டு - 170 - யார் அந்த நிகிதா? - பனீர் சாம்பார் - Be A Girl Again - சயன கோலத்தில் இராமர் - தமிழினி - மூதாட்டிகள் - புது டிசைன் உடை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட இரவு உணவும் அதிகாலை விழிப்பும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“YOU HAVE BRAINS IN YOUR HEAD. YOU HAVE FEET IN YOUR SHOES. YOU CAN STEER YOURSELF IN ANY DIRECTION YOU CHOOSE.” - DR. SEUSS.


******


சமீபத்திய எனது முகநூல் இற்றை : யார் அந்த நிகிதா?

 

சென்ற மாதம் மனைவியும் மகளும் என்னுடன் தலைநகரில் இருந்த நாட்களில், ஒரு நாள் மாலை நேரம் ஏதோ பொருட்கள் தேவை என்று இல்லத்தரசி சொல்ல, எப்போதும் போல ஆபத்பாந்தவன் உருவில் இருக்கும் Blinkit செயலி மூலம் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்தேன்.  அப்படியே Vadilal Gourmet Silk Chocolate Ice Cream 120 Ml Cup மூன்றும் சேர்த்து ஆர்டர் செய்தேன்.

 

இன்றைக்கு அதிக அளவில் ஆர்டர் இருந்ததால்,  வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும் என செயலியில் தகவல் வந்தது. பத்து நிமிடங்களுக்குள் வரும் பொருட்கள் இன்றைக்கு இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்தது. ஐஸ் க்ரீம் உருகிவிடும் என்பதால் ஐஸ் பாக்ஸ் ஒன்றில் கொண்டு வந்தார் இன்றைய டெலிவரி பார்ட்னர் ரோஹித்......

 

பொருட்களை கொடுக்கும் முன்னர் அவர், பில்லில் இருந்த என் பெயரை தட்டுத் தடுமாறி படித்து "வெங்கட் நிகிதா" உங்கள் ஆர்டர் தானே? என்று கேட்க, என் பெயரைச் சொல்லி பொருட்களை வாங்கிக் கொண்டேன்....

 

கேட்டுக் கொண்டிருந்த இல்லத்தரசியும், மகளும் "யாரந்த நிகிதா?" என்று கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருக்கிறார்கள்...... 🙂

 

குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிட்டியே ரோஹித் என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன் நான்.....😊


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : பனீர் சாம்பார்

 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பனீர் சாம்பார் - இரயில் பயணம் குறித்த அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தேநீர் தயாரிக்கத் தேவையான பால் பவுடர், சர்க்கரை, Tea Bag, Patties எனும் உணவுப் பொருளும் கொடுத்தார் எங்கள் Coach-க்கான Waiter. மற்றொருவர் Flask-ல் சூடான தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இவர்கள் இருவரும் சென்னை வரை எங்களுக்கு அன்னதாதா!..... ஏனோ இருவருக்குள்ளும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. ஒருவர் மற்றவரை குறை சொல்லியபடியே இருந்தார்.

 

இரவு உணவிற்கு முன் Soup Sticks, Salt, Pepper, Butter என ஒருவர் தர, மற்றொருவர் ஒரு Cup-ல் Soup வழங்கியபடிச் சென்றார்.  சாதாரணமாக ஒரு Salt ஒரு Pepper Sachet தான் இருக்கும். அந்த நினைப்பில் அனைவரும் அவற்றைப் பிரித்து Soup-ல் போட்டு Soup Stick கொண்டு கலக்கி, இருக்கும் Butter-ஐயும் சேர்த்து குடிக்க ஆரம்பிக்கும் போது அனைவர் முகமும் அஷ்ட கோணலானது! – உப்பிட்டவரை உள்ளளவும் நினை! என்பதாக இரண்டு Sachet-வும் உப்பு!

 

இரவு உணவு முடிந்து Ice Cream சாப்பிட்டு படுத்து உறங்கியாயிற்று. காலை எழுந்து காலைக் கடன்களை செவ்வனே முடித்து மீண்டும் எனது இருக்கைக்கு வரும் வழியில் அதே Coach-ல் பார்த்தால் எனது நெய்வேலி பால்ய கால நண்பர் முரளியும் பயணிக்கிறார்! – பிறகென்ன மீண்டும் நெய்வேலி கதைகளும் ”மனச் சுரங்கத்திலிருந்து” பகுதிக்கான விஷயங்களும் பேச ஆரம்பித்தோம்!

 

எங்களது Coach-ல் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் – அதிலும் ஒருவர் நிறை மாதம் போலிருக்கிறது! ஒவ்வொரு முறையும் மூச்சு முட்ட, ரொம்பவே கஷ்டப்பட்டு என்னைத் தாண்டி [கதவுக்கருகில் தான் எனது இருக்கை – A2-6] செல்லும்போதும் அவர்களை விட நான் அதிகம் கவலைப் பட்டேன் – பயணத்திலேயே பிரசவம் ஆகிவிடுமோ என! இத்தனை நிறைமாதத்தில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்னவோ என்ற எண்ணமும் மனதில்!

 

முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Be A Girl Again 

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக நாம் பார்க்க இருப்பது ஒரு AMAZON விளம்பரம் ஒன்று. நீங்களும் பார்த்து ரசிக்கலாமே! 


 

மேலே உள்ள சுட்டி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே கொடுத்திருக்கும் YOUTUBE சுட்டி வழி நேரடியாக பார்க்கலாம்! 

 

#MomBeAGirlAgain | Amazon India campaign

 

******

 

இந்த நாளின் தகவல் - சயன கோலத்தில் இராமர் :  

 

சமீபத்தில் நண்பர் ஒருவர் சயன கோலத்தில் இருக்கும் இராமர் கோவில் குறித்து தகவல் தந்தார். இணையத்தில் தேடிய சமயம் கோவில் குறித்து தகவல்கள் கிடைத்தன.  அதிலிருந்து சில வரிகள்   கீழே. 

 

ராமபிரான் எப்போதுமே, கோயில்களில் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருவார். ஆனால் கடலூருக்கு அருகில் உள்ள கோயிலில் சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமபிரான்.

 

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான வைணவத் தலங்களில் வெங்கட்டாம்பேட்டை திருத்தலமும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் உள்ளது குறிஞ்சிப்பாடி. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 

தகவல்களை முழுதாக படிக்க கீழே உள்ள சுட்டியைச் கொடுக்கலாமே! 

 

சயன கோலத்தில் ஸ்ரீராமர்! | sayana ramar - hindutamil.in

 

******

 

இந்த வாரத்தின் இணைய தள அறிமுகம் - தமிழினி : 

 

சமீபத்தில் இணையத்தில் உலா வரும்போது தமிழினி என்ற ஒரு தளம் பார்த்தேன்.  கவிதைகள், கதைகள், கட்டுரை என பல விஷயங்கள் இத்தளத்தில் இருக்கின்றன. சில கவிதைகளும், கதைகளும் நான் வாசித்தேன். சற்றே பெரிய சிறுகதைகள் என்பதால் நேரம் எடுக்கிறது.  ஆனாலும் நன்றாகவே இருக்கிறது.  முடிந்தால் தமிழினி இணையதளத்தில் நுழைந்து சில பதிவுகளையேனும் வாசித்துப் பாருங்களேன்!

 

*****

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - மூதாட்டிகள் : 



 

சமீபத்தில் இணையத்தில் பார்த்த ஒரு நிழற்படம் இது.  இந்த படம் பார்த்தவுடன், இந்த இரண்டு மூதாட்டிகளும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? என்று நிச்சயம் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்.  உங்களுக்குத் தோன்றியவற்றை எழுதி அனுப்புங்களேன்.  சுவாரஸ்யமான விஷயமாக இருந்தால் இங்கே தனிப்பதிவாக கூட பகிர்ந்து கொள்கிறேன்! 

 

******

 

இந்த வாரத்தின் நிலைத்த தகவல் - புது டிசைன் உடை : 

 

புது டிசைன் உடையாம்! இப்படிப் போட்டுக் கொண்டு போனால் மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும் கூட மிரண்டு விடலாம்! தெருவில் இப்படியே போனால், நாய் கடிக்காமல் விட்டால் சரி! 

 

******

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

9 கருத்துகள்:

  1. நிஜமாகவே பனீர் சாம்பார் முயற்சித்தால் எப்படி இருக்கும்?  உங்கள் அந்த பழைய பதிவில் என் கமெண்ட் இல்லை.  ஏனென்று தெரியவில்லை!!

    ரசித்த விளம்பரம் ரசனை.  அழகான அம்மா, அழகான அப்பா.

    பாட்டிகள் பேசிக்கொள்வது...

    "பணம் சேர்த்துக்கிட்டே வர்றேன்.  அடுத்த சென்னை மேட்சுல எப்படியும் நானே போய் டிக்கெட் வாங்கி தோனியை பார்த்துடுவேன்..."

    புதிய கண்ராவி டிசைன் சட்டை..   துணி இருக்கிறதா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவில் உங்கள் கருத்து இல்லை. விடுபட்டு இருக்கலாம். விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பாட்டிகள் பேசிக்கொண்ட கற்பனை நன்று. சட்டை டிசைன் கண்றாவி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. வைணவ திவ்யதேச கோவில்களில் திருப்புல்லாணி தர்ப்பசயநர், கோலவில்லி இராமர் என சயன கோலத்தில் இராமர் உண்டே.

    புது டிசைன் உடை.... சில நாட்கள் முன்பு ஜீன்ஸில் தொடைக்குக் கீழே நெடுக ரிப்பன் மாதிரி கிழிக்கப்பட்ட புது வகை ஜீன்ஸை ஆண்கள் அணிந்து செல்வது போன்ற காணொளியைப் பார்த்தேன். நல்ல முன்னேற்றம்.

    பதிலளிநீக்கு
  3. பழைய பதிவில் கருத்துத் தெரிவித்திருந்த சிலர் இப்போது இல்லை

    பதிலளிநீக்கு
  4. யார் அந்த நிகிதா ?
    ஓ... அந்த பெண்மணியா...!

    புது மாடலில் தைத்தவன் சட்டை காலரை பழைய மாடலில் தைத்து விட்டானே... (காலர் பழையபடி முழுமையாக இருக்கிறது)

    பதிலளிநீக்கு
  5. நிர்மலா ரெங்கராஜன்6 மே, 2023 அன்று AM 9:41

    அனைத்தும் அருமை.
    Blinkit ல் இன்னும் நான் முயற்ச்சிக்க வில்லை. நிகிதா யாரென்று எங்களுக்கும் புரியவில்லை 🤪
    விளம்பரம் அருமை 👍
    பாட்டிகள் வீட்டு பிரச்சினை பேசி இருப்பர்.
    புது டிசைன் உடுப்பு வ்வாக்....

    பதிலளிநீக்கு
  6. "யாரந்த நிகிதா?" ரசித்தேன்.
    காணொளி அருமை கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. மகன் வாங்கி கொடுத்த காமிராவில் நானும் இப்படி படங்களை எடுத்தேன், என் கணவரையும் நிறைய படம் எடுத்தேன்.
    அலுப்பு தட்டும் வாழ்வில் இப்படி இனிய சந்தோஷங்களை அளித்த தருணங்கள்.

    உங்கள் ரயில் பயணம் விவரம் (கர்ப்பிணிப் பெண்கள்)எனக்கும் பயத்தை உண்டாக்கி விட்டது, நலமாக ஊர் போய் சேர்ந்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
    புது உடை கலைவாணர் பாட்டை நினைவு படுத்தியது. (நாகரீக கோமாளி வந்தேன் ஐயா.)

    பதிலளிநீக்கு
  7. ரயில் பயணம் படித்து இருக்கிறேன்.
    இரண்டு மூதாட்டிகள் படங்கள் மிக அழகு.
    பேரன் , பேத்திகளின் குறும்புகளை சொல்லி சிரித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....