திங்கள், 8 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட உன்னில் உறைந்தவன் நானே பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WHEN AMBITION OVERTAKES PERFORMANCE, THE GAP IS CALLED FRUSTRATION; BUT IF PERFORMANCE OVERTAKES AMBITIONS, THEN IT IS CALLED SUCCESS.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்

******










சென்ற பகுதியின் இறுதியில் சொன்னது போல, அதிகாலை புறப்பட வேண்டும் என்று சக பயணிகளிடம் சொல்லி இருந்தாலும், ஒரு சிலர் தங்குமிடத்தில் வரவேற்புப் பகுதிக்கு வந்து சேரவில்லை. அறையில் இருக்கும் தொலைபேசி வழி அழைத்தால் நாங்கள் வரவில்லை என்று அந்த நேரத்தில் தகவல்கள் சொன்னார்கள்.  முதல் நாளே “நாங்கள் வரவில்லை” என்று சொல்லி இருந்தால் அவர்களுக்காகக் காத்திராமல் எங்கள் பயணத்தினை தொடங்கி இருக்கலாம். எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக் கொண்டு தயாராகி வந்த நண்பர்களை எப்போதும் போல, ஐந்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்.  எங்கள் தங்குமிடத்தில் இருந்து நாங்கள் சென்று சேர வேண்டிய இடமான TIGER HILL எனும் இடம் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.  20 கிலோ மீட்டர் தொலைவு தான் என்றாலும் மலைப்பகுதி என்பதால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.  காலை நேரம் சாலைகளில் அதிக கூட்டம் இருக்காது என்றாலும் டார்ஜிலிங் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் நிச்சயம் அதிகாலை வேளையில் இந்த இடம் நோக்கி பயணம் செய்வார்கள் என்பதால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் அங்கே சென்று சேர்ந்து விடுவது நல்லது.  அப்போது தான் அங்கே பார்க்க வேண்டிய காட்சியை சரியான முறையில் பார்க்க முடியும். 


TIGER HILL என்ற இடம் தான் டார்ஜிலிங் பகுதியில் சூரிய உதயம் பார்க்க தகுந்த இடம்.  பொதுவாகவே இது போன்ற மலைப்பகுதிகளில் சூரிய உதயம் மற்ற இடங்களை விட முன்னராகவே நடந்துவிடுவதால் அதிகாலையில் புறப்பட்டு இந்த மலைப்பகுதிக்கு (மலைமுகடு) வந்துவிட்டால், அங்கே காத்திருந்து செம்பிழம்பாக உதிக்கும் சூரியனை கண்ணாரக்கண்டு ரசிக்கலாம்.  பொதுவாக சூரிய உதயம் கடற்கரைகளில் பார்த்து ரசிக்க நிறைய பேர் செல்வதை நீங்கள் பார்த்திருக்க, படித்திருக்க, கேட்டிருக்க முடியும். மலைப்பகுதிகளில் சூரிய உதயம் என்பது வெகு சில இடங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் ஒரு காட்சி.  எனது பல பயணங்களில் நான் கடற்கரையில் இப்படியான சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகளை பார்த்து வெகுவும் ரசித்ததுண்டு.  மலைப்பிரதேசத்தில் சூரிய உதயம் பார்க்க இது வரை வாய்ப்பு கிடைத்ததில்லை.  அப்படி முதன் முதலாக கிடைத்த ஒரு வாய்ப்பை நான் கைநழுவ விடுவதாக இல்லை என்பதால் காலையில் புறப்பட்டுவிட்டேன்.  குறுகலான மலைப்பாதையாக மட்டும் இல்லாமல் சாலைகளும் சரியாக இல்லாமல் இருந்தால் சற்றே கடினமான பயணமாகவே அந்த மலைப்பயணம் இருந்தது. 


கொஞ்சம் கடுமையான பயணமாகவே இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே TIGER HILL பகுதிக்கு நாங்கள் சென்று சேர்ந்த சமயம் அங்கே ஏற்கனவே பல வண்டிகள் வந்து சேர்ந்திருந்தன என்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.  அந்த அதிகாலை நேரத்தில் கூட, குளிரைப் போக்குவதற்குத் தேவையான தேநீர் மற்றும் காஃபி விற்பனை கண ஜோராக நடந்து கொண்டிருந்தது.  அப்படி விற்பனை செய்த அனைவருமே பெண்கள் என்பதை இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும்.   அனைவரும் அந்த மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களிலிருந்து நடந்து வந்து அங்கே விற்பனையை கவனிக்கிறார்கள்.   இரவு மூன்று மணிக்கு வீடுகளிலிருந்து இரண்டு மூன்று Flask-களில் தேநீர்/காஃபி போன்றவை தயாரித்து எடுத்து வந்து அங்கே விற்பனை செய்ய வேண்டும். இவை தவிர சிகரெட் விற்பனையும் உண்டு. அவர்களது இந்த விற்பனை காலை சூரிய உதயத்திலிருந்து முன்னரும் பின்னரும் சில மணி நேரங்கள் மட்டுமே! அந்த குறைவான நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் விற்பனை செய்து திரும்ப வேண்டும்.  அதன் பின்னர் வீட்டு வேலை இருக்கவே இருக்கிறது - நாள் முழுவதற்கும்! எங்கள் வாகன ஓட்டி இந்தப் பெண்களின் கடுமையான வாழ்க்கை குறித்து எங்களிடம் பேசிக் கொண்டு வந்தார்.  


அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் நானும் எனது வாகனத்தில் என்னுடன் வந்த மற்ற சக பயணிகளும் சர்க்கரையும் மிளகுத் தூளும் போட்ட கட்டஞ்சாய்  வாங்கி அருந்தினோம்.  அந்த குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது அந்த கட்டஞ்சாய்.  தேனீர் தந்த அந்த இளம் தேவிக்கு நன்றி சொல்லி கூட்டத்தில் புகுந்து புறப்பட்டு எங்கே சூரியோதயம் நன்றாகக் பார்க்க முடியும் என்று தேடினால், எங்கே பார்த்தாலும் மக்கள் கூட்டம்.  புதிதாக ஒரு VIEW POINT கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அந்த கட்டிடத்தின் ஓரத்தில் கொஞ்சம் இடம் இருக்க அதன் மீது குதித்து ஏறிக்கொண்டோம்.  கொஞ்சம் தள்ளு முள்ளு நடந்தாலும் ஐந்து அல்லது ஆறடி கீழே விழ வேண்டியிருக்கும் என்றாலும் அந்த இடத்திலிருந்து சூரிய உதயத்தினை மிகவும் சிறப்பாகக் காண முடியும் என்பதால் கொஞ்சம் risk எடுத்தோம்.  நகைச்சுவை நடிகர் வடிவேல் போல “risk எடுப்பதெல்லாம் rusk சாப்பிடுவது மாதிரி” என்று நிச்சயம் சொல்ல மாட்டேன்.  இது போன்ற தேவையில்லாத வேலைகளை செய்வது சரியல்ல என்பது அந்த இடத்தில் ஏறி நின்றபின்னர் மனதில் தோன்றியது. என் உயரத்திற்கு தரையில் நின்றிருந்தால் கூட சூரிய உதயத்தினைச் சிறப்பாக பார்த்திருக்க முடியும்! 


சிறிது நேரம் காத்திருந்த பிறகு மலைமுகடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது கிரணங்களை வெளிக்காட்டி சூரியன் மிகவும் அழகாக, காலை 05.45 மணி அளவில் உதித்துக் கொண்டிருந்தான். பொதுவாக அதைவிடவும் முன்னரே சூரிய உதயம் நடந்து விடும். அன்றைக்கு சூரியனும் கொஞ்சம் அதிகமாக ஒய்வு எடுத்துக் கொண்டான் போலும்! சூரிய உதயக் காட்சிகளை எனது கேமரா கண்களில் பார்த்தாலும், சில படங்களை எடுத்துக் கொண்டாலும், நேரடியாக ஆண்டவன் கொடுத்த கண்களால் பார்த்து ரசிப்பதே சிறந்தது என்று தோன்றியதால் படம் எடுப்பதை நிறுத்தி விட்டு சூரியோதயக் காட்சிகளை பார்த்து ரசிக்கத் தொடங்கினேன். சூரிய உதய நேரத்தில் சூரியனின் கிரணங்கள் நம் மீது படுவதால் பல நன்மைகள் நமக்கு உண்டாகிறது என்பது நம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்.  ஆனாலும் நம்மில் பலருக்கு சூரிய உதயத்தினை பார்க்கவே மறந்து விட்டது! உண்பதும், உறங்குவதும் சரியான காலத்தில் இல்லாமல் எந்த நேரத்திலும் சாப்பிடுவதும், அகால வேளைகளில் விழித்திருந்து அதிகாலை எழுந்திருக்காமல் நேரம் கழித்து எழுந்திருப்பதும் பழகி விட்டது. பழைய பழக்கங்கள் மாறி விட்ட நிலையில் இப்படி பயணம் செய்யும் சமயத்திலேனும் சூரிய உதயம் காண ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. இப்போது பலருக்கு, Vitamin D குறைபாடு காரணமாக உருவாகும் மூட்டு வலி போன்றவை அதிகரித்து இருப்பது கவலைக்குரியது! 


சூரியனின் கிரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனது முழு திறனுடன் மலைமுகட்டிலிருந்து வெளிப்பட, அப்படியே கண்களை ஒரு 180 டிகிரி திருப்பினால் பனி மூடிய கஞ்சன்ஜங்கா மலைப்பகுதியை நம்மால் காண முடியும்.  ஆனால் நாங்கள் சென்ற அன்று பனிமூட்டம் காரணமாக அந்த அளவிற்கு தெளிவாக பார்க்க இயலவில்லை.  இருந்தாலும் ஓரளவிற்கு பார்த்து ரசித்தோம்.  எங்களது இந்தப் பயணத்தில் அடுத்து வரும் நாட்களில் இன்னமும் அருகிலிருந்து இந்த மலைப்பகுதியை பார்க்க இருந்தோம் என்பதால் அந்த நாளின் காலை நேரம் TIGER HILL பகுதியிலிருந்து கஞ்சன்ஜங்கா-வை பார்க்க முடியாததால் அதிக வருத்தமில்லை. இன்னும் ஒரு விஷயமும் சொல்ல இருக்கிறது. இந்த இடத்தில் சரியானபடி சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் இல்லை - குறிப்பாக கழிவறை வசதிகள்.  அந்த இடத்திற்கு அதிகாலை நேரத்தில் வர வேண்டி இருப்பதால் சிலர் இங்கே வந்த பின்னர் திண்டாடுவதை பார்க்க முடிந்தது. சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்து கொடுப்பது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என்பதை ஒவ்வொரு அரசும் உணர்ந்தால் நல்லது.  தற்போது கட்டப்பட்டு வரும் Watch Tower உடன் இது போன்ற வசதிகளையும் சேர்த்து அமைத்தால் பயனுள்ளதாக அமையும். பார்க்கலாம் மேற்கு வங்க அரசு என்ன செய்கிறது என! 


அந்த காலை நேரத்தில் சூரிய உதயக் காட்சிகளையும் இயற்கை எழிலையும் பார்த்து ரசித்த பிறகு அங்கிருந்து புறப்படுவதற்கான நேரம் வந்தது.  மீண்டும் ஒரு கட்டஞ்சாய் வாங்கி பருக மனம் விழையவே, காலையில் எங்களுக்கு தேநீர் வழங்கிய அதே பெண் கண்ணில் பட, அவரிடம் ஒரு கப் கட்டஞ்சாய் வாங்கி அருந்தி விட்டு அங்கிருந்து நண்பர்களுடன் புறப்பட்டேன்.  நாங்கள் திரும்பும் சமயம் எங்கள் வாகனத்தின் அருகே ஒரு தேநீர் விற்பனை செய்யும் பெண்மணி காத்திருந்தாள்.  எங்கள் ஓட்டுனரிடம் பேசிக் கொண்டிருந்த அவர் நாங்கள் வந்து சேர்ந்ததும் எங்களிடம் “உங்கள் வாகனத்தில் நானும் சிறிது தூரம் வரை வரலாமா?” என்று கேட்டார்.  ஓட்டுனரிடம் கேட்டதற்கு நாங்கள் அனுமதித்தால் அழைத்துச் செல்வதாக கூறினார் என்றும் சொல்ல, அனுமதித்தோம்.  எங்கள் வாகனத்தில் பின்புறம் உடைமைகள் வைக்கும் இடத்தில் (சற்றே தாராளமாகவே இருந்தது!) அமர்ந்து கொண்டார்.  ஓட்டுனரிடம் பேசிக்கொண்டே வந்தார் அந்தப் பெண்மணி.   வழியில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், எங்களுக்கும் ஓட்டுனருக்கு நன்றி கூறி இறங்கிக் கொண்ட பின்னர் ஓட்டுநர் எங்களிடம் அந்தப் பெண்மணியின் கடினமான உழைப்பு குறித்து எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  இந்தப் பகுதியில் இருக்கும் பல பெண்களின் நிலை கடினமானதே என்பதும் அவர் கூறியதிலிருந்து தெரிந்தது. 


மலைப்பகுதிகளில் பயணித்து எங்களுடைய தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்த போது எங்களுக்கான காலை உணவு தயாராக இருந்தது.  காலை உணவு, அதன் பின்னர் எங்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன, போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  ஆதலினால் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

படங்கள் TIGER HILL எடுத்தவை.

11 கருத்துகள்:

  1. அறையில் படுத்துத் தூங்கவா அவ்வளவு தூரம் புறப்பட்டு வந்தார்கள்?  ஆச்சர்யம்!

    ஆண்கள் யாரும் விற்பனை செய்யுமிடத்தில் இல்லையா?  சிங்கங்களா அவர்கள்?!!  சூர்யோதப் படங்களும் விவரங்களும் படித்து ரசித்தேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான சிலர் இருக்கவே செய்கிறார்கள் ஶ்ரீராம். பலமுறை குழுவாக செல்லும் போது கிடைத்த அனுபவங்கள் விதம் விதமாக உண்டு. சிலவற்றை பொது வெளியில் எழுத இயலாது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. பயணத்தின்போது அசௌகரியங்களைப் பொருட்படுத்தாமல் வந்த காரியத்திலேயே குறியாக இருந்தால்தான் பல இடங்களையும் ரசிக்க முடியும். நண்பர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை போலிருக்கு

    சூரிய உதயம் கண்ணால் பார்த்து ரசிப்பதுபோல் புகைப்படத்தில் வராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்த காரியத்தில் குறியாக இருக்க வேண்டும் என்பது சரியான வழி. பலருக்கும் இது புரிவதில்லை. இயற்கை காட்சிகள் இயற்கையான நம் கண்களால் பார்க்கும் அளவு வேறு எதிலும் இருக்க முடியாது என்பதை பலமுறை உணர்ந்து இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. சூரியோதயப் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி.

    விவரணம் நன்று சுற்றுலாத்துறை எங்கும் வசூல் செய்வதில் உள்ள முனைப்பு பராமரிப்பதில் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசூலிக்கும் காசில் ஒரு பகுதியேனும் பராமரிப்பிற்கு செலவு செய்தால் நல்லது. ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பது வேதனையான விஷயம்.

      தங்கள் அன்பிற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. அழகான விவரிப்பு! ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என்பது சரிதான்.
    மஹாபலேஷ்வர் அருகில் இருக்கும் பஞ்ச்கனி என்னும் இடத்தில், டேபிள் பிலாட்டோ என்னும் இடத்திலிருந்து சூரிய உதய, அஸ்தமன காட்சிகளை பார்க்க முடியும். பெங்களூர் அருகில் நந்தி ஹில்சில் கூட சூரிய உதயம் பார்ப்பதற்காக செல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரிய அஸ்தமனம் மற்றும் உதய காட்சிகளை பார்க்க சிறந்த சில இடங்களை மேலதிக தகவலாக இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பானும்மா.

      நீக்கு
  6. சூரியோதயம் பார்க்க இவ்வளவு போட்டி என்பது எனக்கு புதிய தகவல் சார்.
    அருமையான விவரிப்பு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....