வியாழன், 4 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - சில அனுபவங்கள் - முதல் விமானப் பயணம் - பகுதி இரண்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

SATISFACTION IN LIFE IS MORE IMPORTANT THAN SUCCESS BECAUSE OUR SUCCESS IS MEASURED BY OTHERS BUT OUR SATISFACTION IS MEASURED BY OUR OWN MIND AND HEART.


******

 

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று 



 

எல்லோரும் சொன்னாலும் நம் மனது ஒன்றை ஏற்றுக் கொள்ள சில காலங்கள் அதற்கு தேவைப்படுகிறது! இடையூறுகளைத் தருவதால் பயணங்களை என் மனம் ஏற்றுக் கொள்வதில்லை! ஆனால் என்னவரோ அதற்கு எதிர்ப்பதம்! தொடர்ந்து பயணம் செய்யச் சொன்னாலும் அவர் அதற்கு ரெடி..🙂

 

என்னையும் எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே தான் இருப்பார். ஆனாலும் என் மனம் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு ஜெயித்துக் காண்பிக்கனும் என்ற வெறியாக மாற இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது...🙂 மூன்று மாதங்கள் எங்களுடன் நேரத்தை செலவிட்ட என்னவர் திரும்பிப் போகும் போது 'என்னுடன் நீங்க ரெண்டு பேரும் வாங்க! நாம  ஃப்ளைட்ல போலாம்!' என்று சொல்லவும் முடிவு செய்தாச்சு..🙂

 

டிக்கெட்டை பதிவு செய்த நாளிலிருந்து மனம் ஒரு திட்டமிடலில் இறங்கியாச்சு! ஒரு ஓரத்தில் பயம்! ஒரு ஓரத்தில் கெளரவம்..🙂 என ஓடிக் கொண்டிருந்தது! நிறைய பாசிடிவ்வான அறிவுரைகள் வந்தாலும் என்னைப் பற்றி அறிந்தவர்கள் 'உன்னால முடியுமா' என்பது போலவும் சொல்லிக் கொண்டு தான் இருந்தார்கள்...🙂

 

உணவுக் கட்டுப்பாடுடன், மருந்துகளும் எடுத்துக் கொண்டு விட்டதால் 'எதுவும் ஆகாது' என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டே இருந்தது! விமான நிலையத்தின் சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அங்கேயே வலம் வந்து கொண்டிருந்தோம்! நிறைய கடைகள் இருந்தன! எல்லாமே அழகாகவும் இருந்தன! விலை எல்லாம் கேட்கக்கூடாது..🙂 கண்களால் ஷாப்பிங் செய்து விட்டு காத்திருந்தோம்!

 

எங்களுக்கு முந்தைய விமானங்கள் தரையிறங்குவதையும், புறப்படும் விமானங்களை பார்ப்பதுமாக நேரங்கள் கடந்து கொண்டிருந்தன! விமானத்துக்கு அருகில் பயணிகளை பேருந்தில் அழைத்துச் செல்வதும், இன்னும் வராதவர்களை கூவிக் கூவி அழைப்பதும், தரையிறங்கும் விமானங்களிலிருந்து பயணிகளின் உடைமைகள் தனியாக ஒரு பெல்ட் மூலம் இறக்குவதையும் என பொழுதுபோக்க அங்கே நிறைய விஷயங்கள் இருந்தது!

 

நாமளும் இந்த மாதிரி பஸ்ல போவோமா? அந்த வண்டி எதுக்கு? இந்த கேட் வழியா தான் போகணுமா? இன்னும் கைல இவ்வளவு லக்கேஜ் வெச்சிருக்காங்களே? நாம ஏன் எல்லாத்தையும் குடுத்திட்டோம்? என்ற என் கேள்விக்கணைகள் தொடர்ந்து கொண்டிருந்தன...🙂

 

பறவையாய் மாறி!!

 

என் கேள்விக்கணைகள் தொடர்ந்து கொண்டிருக்க எங்கள் விமானத்துக்கான அழைப்பும் வரவே நாங்களும் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டோம்! அது ஒரு வட்டமாக பயணித்து எங்கள் விமானம் அருகே கொண்டு இறக்கி விட, எங்கள் இருக்கைகள் பின்புறமாக இருந்ததால் விமானத்தின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  தற்காலிக படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினோம்.

 

அதில் ஏறும் போது சுற்றியுள்ள பரந்து விரிந்த இடத்தை பார்க்கும் போதே மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டானது. அப்படியே இயந்திரப்பறவையின் உள்ளே சென்று எங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்! ஜன்னல் இருக்கையில் மகளும் அடுத்துள்ள இருக்கையில் நானும் என்னருகில் அவருமாக எங்கள் பயணத்தை துவக்கினோம்.

 

மாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டிய எங்கள் விமானம் நேற்று பிரதமர் கிளம்பிய பிறகு 4:30 மணிக்கு தான் கிளம்பியது. ஏர் ஹோஸ்டஸின் அறிவுரைகளையும் என்னவரின் அறிவுரைகளையும் பின்பற்றி எல்லாமே செய்தாயிற்று! இதோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணமும் வந்துவிட்டது! எங்கள் விமானமும் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் துவங்கியது!

 

ஓடுதளத்தில் வேகத்தை கூட்டி மின்னல் போல் ஓடியது! சட்டென தன் இறக்கைகளை விரித்து பறக்கத் துவங்கியது! சில நிமிடங்கள் எனக்கு தலைசுற்றியது போன்ற உணர்வு ஏற்பட்டது! காதுகளும் அடைத்துக் கொண்டது! மகளின் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு 'ரோஷி' என்று கத்தினேன்..🙂 சற்று சாய்வாகவும் பறந்தது போன்ற உணர்வு!

 

மகளும் நானும் புன்னகையுடன் எங்கள் கைகளை குலுக்கி  மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம்..🙂 இதோ விமானத்தில் ஏறி பறந்தாச்சு! இதற்கா இவ்வளவு நாட்கள் பயந்தோம்! என்று அப்போது தோன்றியது…:) அதன் பின்பான பயணம் சாதாரணமாகத் தோன்றியது!


 

கட்டடங்கள் எல்லாம் புள்ளிகளாக மறைந்து பஞ்சுப்பொதிகளான மேகக் கூட்டங்களுக்கும் மேலே பறந்து கொண்டிருந்தோம்! எல்லாவற்றையும் விட்டுவிட்டு மிதப்பது போன்ற உணர்வு! மனதில் எந்த சிந்தனைகளும் இல்லை! சாதித்து விட்ட உணர்வு தான்! பயணத்தில் நிறைய போட்டோக்களும் எடுத்தோம்!


 

இருவரும் சிறிது நேரமும் தூங்கி எழுந்தோம்! அடுத்த 2 ½ மணிநேரத்தில் டெல்லிக்கும் வந்தாச்சு! 6:55க்கு ஓடுதளத்தில் இறங்கும் போது சக்கரங்கள் பூமியில் படும் போது ஜெர்க் ஆனது தெரிந்தது! அவ்வளவு தான்…:) வெளியே வந்து எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு prepaid call taxi ல் ஏறி வீட்டுக்கும் வந்தடைந்தோம்!

 

வழியெங்கும் பூத்துக் குலுங்கிய கண்கவர் மலர்களும், டாக்சியில் ஒலித்த 93.7 FM ன் இந்திப் பாடல்களுமாக டெல்லி எங்களை வரவேற்றது! அருகே இருந்த தாபாவிலிருந்து என்னவர் வாங்கி வந்த ஃபுல்கா ரொட்டியும் தால் மக்கனியும் வயிற்றையும் குளிர்வித்தது! அன்றைய பொழுதும் இனிமையானது!

 

பெரும்பாலானோருக்கு சாதாரணமாகத் தோன்றும் இந்தப் பயணம் என் வரையில் சாதனை தான்..🙂 இதுவரை எனது முதல் விமானப் பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்! தில்லி அனுபவங்கள் தொடர்ந்து வெளி வரும். 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

9 கருத்துகள்:

  1. அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.  நான் வந்த என் ஒரே விமான பயணத்தில் விமானம் டர்புலன்ஸில் மாட்டி சில நிமிடங்கள் பயமுறுத்தியது!

    பதிலளிநீக்கு
  2. நிர்மலா ரெங்கராஜன்4 மே, 2023 அன்று AM 7:57

    ஹாஹாஹா....
    பயம் தெளிந்தது👍
    இனி டெல்லி பயணம் விமானத்தில் தான் 😄

    பதிலளிநீக்கு
  3. பயண விவரனை மிக அருமை மேடம்.
    எந்த விஶயத்தையும் தொடங்குவதில் உள்ள பயத்தை கடந்துவிட்டால் கொண்டாட்டம்தான்.
    மே மாதம் டில்லி வெப்பம்தான் சவாலாக இருக்கும். கவனமாக சமாளியுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான விவரிப்பு. மேலும் பல இனிய விமானப் பயணங்கள் செய்ய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பயண அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது.

    தொடர்ந்து விமானத்தில் பயணிப்பவர்களுக்கு வெறுப்பு வரும் என்பதும் உண்மையே...

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பயண விவரிப்பு. என் முதல் விமானபயணம் புதுடெல்லிதான்.
    அப்போது உங்களை போல குழந்தையின் குதுகலத்தில் இருந்தேன். இப்போது பயணம் கடினமாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  7. உங்களின் முதல் விமான பயணம் அருமையாக இருந்தது. படிக்கும்போது என்னுடைய முதல் விமான பயணம் ( அதுவும் டெல்லிதான்) அனுபவங்கள் நினைவில் வந்து சென்றது.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா5 மே, 2023 அன்று PM 1:54

    👍👍👍👍👍👍

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....