வெள்ளி, 12 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“Great things are done when men and mountains meet; This is not done by jostling in the street.” - William Blake.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


******




சென்ற பகுதியில் பார்த்த பத்மஜா நாயுடு ஹிமாலயன் விலங்கியல் பூங்கா இருக்கும் வளாகத்திலேயே இருக்கும் ஒரு இடம் Himalayan Mountaineering Institute. பூங்கா சென்ற போதே இந்த இடத்தினையும் சுற்றி பார்க்க நினைத்திருந்தோம்.  கிடைத்த அரை மணி நேரத்தில் இரண்டு இடங்களையும் பார்த்து வருவது கொஞ்சம் கடினமான வேலை.  இருந்தாலும் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டு நாங்கள் பூங்காவினைப் பார்த்ததோடு, இந்த மலையேற்றத்திற்கான பயிற்சி நிலையத்திலும் சுற்றி வந்தோம்.  இந்த பயிற்சி நிலையம் மிகவும் பழமையான ஒன்று.  1953 ஆம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரியுடன் இணைந்து டென்சிங் நார்கே எவரெஸ்ட் சிகரத்தின் (8848 மீ / 29,028 அடி) மீது ஏறியது, இந்தியாவில் மலையேற்றம் குறித்த ஒரு உத்வேகத்தை அளித்தது என்றால் மிகையாகாது. அப்போதைய பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு மலையேற்றத்தில் ஈடுபாட்டினை உண்டாக்க விரும்பியதால், மேற்கு வங்காளத்தின் அப்போதைய முதல்வராக இருந்த டாக்டர் பிதான் சந்திர ராய் உடன் இணைந்து டார்ஜிலிங் நகரில் ஒரு மலையேற்ற பயிற்சி நிலையத்தினை அமைக்க முயற்சி மேற்கொண்டார்.  அப்படி உருவானது தான் இந்த Himalayan Mountaineering Institute.



இந்த பயிற்சி நிலையம், நவம்பர் 4, 1954 இல் நிறுவப்பட்டது. தொடங்கிய சில காலத்திற்குள்ளாகவே இந்த பயிற்சி நிலையம், மலையேறுதல் துறையில் சிறந்த மையமாக மாறியது. இந்த பயிற்சி நிலையத்தினை இங்கே நிறுவ காரணமாக இருந்த ஒரு விஷயம் - டார்ஜிலிங், டென்சிங் நோர்கேயின் சொந்த நகரமாகவும், இமயமலையில் உள்ள மிக அழகான இடங்களில் ஒன்றாகவும் இருந்ததால்!  பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி நிலையம் இன்றைக்கு ஆல் போல் தழைத்து பெரும் நிலையமாக வளர்ந்து மலையேற்றத்தில் பலருக்கு பயிற்சி அளிப்பதோடு பல சாதனைகளை உருவாக்கவும் இந்த நிலையம் வழிகாட்டியாக இருக்கிறது என்பது அனைவராலும் ஒத்துக்கொள்ளக் கூடிய உண்மை. மலையேற்றம் என்னும் சவாலான விஷயத்தினை விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பயிற்சி நிலையம் ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம்.   பயிற்சி நிலையம் தொடங்கப்பட்ட சமயத்தில் Roy Villa at Lebong Cart Road என்ற இடத்தில் இயங்கி வந்தாலும், 1958-ஆம் ஆண்டு இந்த பயிற்சி நிலையம் தற்போதைய இடமான Birch Hill என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. 



தற்போது புகழ்பெற்ற மலையேறும் பயிற்சி நிலையமாக இருப்பதுடன், HMI சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மிக முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் இயங்கும் ஒரு கண்காட்சியகத்தில் இருந்து Telescope மூலம் 8586 மீ உயரமுள்ள காஞ்சன்ஜங்காவின் அற்புதமான காட்சியை பார்க்கும் வசதியும் இருக்கிறது.  ஆனால் அதை பார்க்க தோதான சூழல் இருக்க வேண்டும் - அதாவது மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் பார்க்க முடியும். பயிற்சி நிலையம் தொடங்கியதிலிருந்து இந்த நிலையத்தில் சுமார் 50000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கையில் 2500 வெளிநாட்டில் இருந்து வந்த மாணவர்களும் அடக்கம். HMI இன் சான்றிதழ் என்பது அனைத்து பயிற்சியாளர்களின் மதிப்புமிக்க உடைமையாகக் கருதப்படுகிறது என்பதோடு Union Internationale des Associations d'Alpinisme என்ற பிரெஞ்சு பெயரில் அழைக்கப்படும் The International Climbing and Mountaineering Federation (UIAA ) எனும் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது. இங்கே வழங்கப்படும் சான்றிதழ்கள் மலையேறுதல் பயிற்சித் துறையில் ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறது.



இந்தப் பயிற்சி நிறுவனத்தின் வாயிலில் ஒரு மிகப் பெரிய, இயற்கையாக அமைந்த ஒரு பாறை இருக்கிறது.  உள்ளூரில் இதை டென்சிங் நார்கே அவர்கள் பயிற்சி பெறுவதற்காக பயன்படுத்தினார் என்று சொல்வதுண்டு.  இந்தப் பாறைக்கு தற்போது அவரது பெயரையே வைத்து மலையேற்ற பயிற்சி தருவதற்கும் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் செய்து பார்க்கவும் வசதியாக வைத்திருக்கிறார்கள்.  உள்ளே நுழைவதற்கு கட்டணம் இல்லை என்றாலும் மலையேற்றம் செய்து பார்க்க கட்டணம் உண்டு.  பயிற்சி நிலையத்திலிருந்து சில பயிற்சியாளர்கள் இங்கே இருப்பார்கள்.  மேலே ஒருவரும் கீழே ஒருவரும் இருக்க கயிறு தொங்கிக் கொண்டிருக்கும். அதனைப் பிடித்துக் கொண்டு நீங்கள் மலையேற்றம் செய்யலாம்.  சிறுவர்களும் சிறுமிகளும் இந்த மலையேற்றப் பயிற்சியை செய்து மகிழலாம்.  பெரியவர்களும் மலையேற்றம் செய்யலாம் என்றாலும் சற்றே கடினமான விஷயமாகவே இருக்கிறது இந்த கயிறு பிடித்து ஏறும் மலையேற்றம்.  சுற்றுலா பயணிகள் மலையேற்றம் செய்யும் பக்கம் சுலபமானதாக தெரிந்தாலும் பாறையின் மற்ற பக்கம் மலையேற்றம் பயிற்சி செய்ய பயன்படுத்துவதை நமக்கு பார்க்கும் போதே பயம் வந்து விடும் அளவுக்கு இருக்கிறது.  



இன்னும் சற்று அருகே Gombu Rock என்ற பாறைப்பகுதியும் உண்டு. அங்கேயும் சென்று வரலாம்.  அதைத் தவிர இந்தப் பகுதிகளில் நிறைய கடைகளும் இருக்கிறது. அங்கே மோமோஸ் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன.  டார்ஜிலிங் நகரில் எங்கே பார்த்தாலும் டார்ஜிலிங் தேயிலை என்று விற்பனை ஜரூராக நடக்கிறது.  அவற்றின் தரம் குறித்த உத்திரவாதம் ஒன்றும் இல்லை என்பதால் வாங்காமல் இருப்பது நல்லது.  அது மட்டுமல்லாது அங்கே கிடைக்கும் சுத்தமான தேயிலை கூட நமக்கு பிடிக்கும் வகையில் இருப்பதில்லை - ஒரு முறை வாங்கி பிடிக்கவில்லை!  இந்த முறை எங்களது குழுவில் நிறைய பேர் வாங்கினாலும் நான் தேயிலையோ வேறு எந்த பொருளுமோ அங்கே இருந்து வாங்கவில்லை.  ஒரு சில இடங்களில் மேற்கு வாங்க அரசாங்கமே நடத்தும் கடைகள் உண்டு என்பதும், அங்கே கிடைக்கும் தேயிலை நன்றாகவே இருக்கும் என்றாலும் நம் தமிழகத்தில் கிடைப்பது போல தூள் அல்லாமல் சிறு இலைகளாக இருப்பதால் இந்த தேயிலை பயன்படுத்தி தேநீர் தயாரித்தால் அதன் சுவை அத்தனை பிடிக்காமல் போகலாம்! Dust Tea மற்றும் Leaf Tea இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது என்பதை இரண்டும் அருந்திப் பார்த்தவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். 


HMI என்று சுருக்கமாக அழைக்கப்படும் Himalayan Mountaineering Institute மலையேற்றத்தில் பல பயிற்சிகள் மற்றும் படிப்பு இங்கே தரப்படுகின்றன.  மலையேற்றம் குறித்த படிப்போ அல்லது பயிற்சிகளோ நீங்களோ உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்களோ படிக்க ஆசைப்பட்டால் அவர்களது இணையதளத்தில் விவரங்கள் இருக்கின்றன.  இந்த பயிற்சி நிறுவனத்தில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் சிறப்பாகவே இருந்தன.  இந்த இடத்திற்குப் பிறகு நாங்கள் எங்கே சென்றோம், என்ன அனுபவங்கள் கிடைத்தன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. தகவல்கள் சொல்லிய விதம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....