புதன், 10 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


TIME IS A RARE LUXURY WHICH CAN NEVER BE PURCHASED AT ANY COST; SO WHEN SOMEONE SPENDS IT FOR YOU, IT DEFINES THE DEPTH OF CARE THEY HAVE FOR YOU.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


******


பூங்காவின் நுழைவாயில்….


சென்ற பகுதியில் Tiger Hill என்று அழைக்கப்படும் மலை முகட்டிலிருந்து பார்த்த சூரிய உதயம் குறித்த விஷயங்களை பார்த்தோம்.  இந்தப் பகுதியில் தொடர்ந்து எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைக் குறித்துப் பார்க்கலாம் வாருங்கள்.  தங்குமிடத்திலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு புறப்பட்டு சூரிய உதயம் கண்டு ரசித்த நாங்கள் மீண்டும் பயணித்து எங்கள் தங்குமிடம் திரும்பினோம்.  எங்களுக்காக காலை உணவு காத்திருந்தது.  காலை உணவில், Buffet முறை என்றால் சில உணவுகள் வழக்கமாக வைத்துவிடுகிறார்கள்.  வட இந்தியாவில் எங்கே சென்றாலும் Bread Toast, Butter, Omelette, Boiled Eggs, Poori Sabji, Fresh Juice போன்றவை எப்போதும் இருக்கும்.  இந்த முறை Idly, Vada, Sambar, Poha (அவல் உப்புமா) போன்றவையும் வைத்திருந்தார்கள். இதைத் தவிர அருந்துவதற்கு டீ, காஃபி போன்றவையும் உண்டு.  ஒரு சிலர் இருக்கும் அத்தனையும் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அனைத்திலிருந்தும் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டு விடுவார்கள்.  பார்த்தாலே பயமாக இருக்கும்!  சிலர் ஜூஸ் அருந்திய உடன் டீ அல்லது காஃபி அருந்துவார்கள்! எப்போதும் நான் மிகவும் குறைவாகவே எடுத்துக் கொள்வது வழக்கம்.  அந்த காலை வேளையும் அப்படியே! 



பூங்காவின் உள்ளே பூக்கள் அணிவகுப்பு…


காலை உணவுக்குப் பிறகு அருகில் இருந்த புத்தமத வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று அமைதியான சூழலில் திளைத்து வந்தேன்.  இந்த வழிபாட்டுத் தலம் குறித்து தொடரின் ஐந்தாம் பகுதியிலும் பார்த்திருக்கிறோம்.  படிக்கவில்லை என்றாலோ, நினைவில் இல்லை என்றாலோ, கொடுத்திருக்கும் சுட்டி வழி (மீண்டும்) படிக்கலாம். இந்த குறிப்பிட்ட பதிவில் சொல்ல மறந்த ஒரு விஷயம் - வழிபாட்டுத் தலத்தில் நிழற்படங்கள் எடுத்துக் கொள்ள நினைத்தால் கேமராவுக்கு 100 ருபாய் கட்டணம் தரவேண்டும் என்று ஒரு தகவல் பதாகை அங்கே இருந்தது.  ஆனால் வசூலிக்க யாரும் இல்லை, என்னிடம் யாரும் கேட்கவும் இல்லை! அதனால் நான் சில படங்கள் எனது DSLR மூலம் எடுத்துக் கொண்டேன்.  காலை ஒன்பது மணிக்கு மேல் ஆன பிறகு அன்றைய நாளின் அடுத்த நிகழ்வுகள் நடக்க இருந்ததால் வழிபாட்டுத் தலத்திலிருந்து புறப்பட்டு தங்குமிடத்தின் வாயிலுக்கு வந்து சேர்ந்தேன்.  காலை ஒன்பது மணிக்கு புறப்பட வேண்டும் என்று முன்னரே சொல்லி இருந்தாலும் சிலர் வந்து சேரவில்லை.  குழுவாக பயணிக்கும்போது அனைவரையும் ஒருங்கிணைத்து, நேரத்திற்கு வர வைப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.  



சிவப்பு வண்ண பாண்டா…


எங்கள் குழுவில் இருந்த ஒரு பெண், ஒன்பதரை மணிக்குப் பிறகும் வந்து சேரவில்லை. கேட்டால் இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று Cool - ஆகச் சொன்னார்.  ஒரு வாகனத்தினை மட்டும் அங்கே நிறுத்தி அந்தப் பெண்ணுடன் வருவதற்கு சிலரை நிறுத்தி வைத்து விட்டு மற்ற நன்கு வாகனங்கள் இலக்கை நோக்கி புறப்பட்டன.  ஆனால் அந்தப் பெண்ணுக்காகக் காத்திருந்தவர்கள் அதிக நேரம் ஆனதால், அப்பெண் இல்லாமலேயே புறப்பட்டு விட்டார்கள்.  இது பயணம் முழுவதும் பெரிய பிரச்சனைகள் உருவாகக் காரணமாக இருந்தது.  தெரியாத இடத்தில் அந்தப் பெண் தனியாக பொது வாகனத்தில் டார்ஜிலிங் சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டார்.  குழுவாக அழைத்துச் செல்லும் போது, அதுவும் அலுவலகம் சார்ந்த பயணமாக இருக்கும்போது பயணத்தில் உடன் வரும் பயிற்சியாளர் அனைத்து பயணிகளுடைய நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் பொறுப்பு உடையவர் என்பதால் எங்கள் பயிற்சியாளர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்.  தொடர்ந்து அப்பெண்ணிடம் பேசிக்கொண்டே இருந்தாலும் மாலை வரை எங்கள் குழுவுடன் இணைந்து கொள்ளாமல் தனியாகவே சுற்றிவிட்டு எங்களுடன் இணைந்த சமயம் கூட ஓடும் இரயிலில் ஏறும் அளவுக்கு பரபரப்பாக இருந்தது!   





கூண்டுக்குள் என்னை அடைத்து விட்டீர்களே என்று கேட்பது போலவே இருக்கிறதல்லவா இதன் தோற்றம்…


அன்றைய நாள் முழுவதும் பரபரப்பாகவே இருந்தது என்ற போதிலும் நாங்கள் பார்க்க வேண்டிய இடங்களில் சிலவற்றையேனும் பார்த்து விடுவது என்று முடிவு எடுத்தோம்.  நாங்கள் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு நேராகச் சென்று சேர்ந்த இடம் ஒரு விலங்கியல் பூங்கா - அந்த விலங்கியல் பூங்காவின் பெயர் பத்மஜா நாயுடு ஹிமாலயன் விலங்கியல் பூங்கா! பூங்காவின் பெயரைப் பார்த்ததும் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் எங்கேயிருந்து பத்மஜா நாயுடு வந்தார் என்று எங்களுக்குத் தோன்றியது. கொஞ்சம் பூங்காவினைப் பற்றிய தகவல்களை அங்கே இருந்த பதாகைகளிலும் பூங்காவின் இணைய தளத்தினையும் படித்ததில்  பெயர்க்காரணம் தெரிந்து கொள்ள முடிந்தது! Nightingale of India என்று பெயர்பெற்ற சரோஜினி நாயுடு அவர்களின் மகள் தான் பத்மஜா நாயுடு.  அவரும் மேற்கு வங்கத்தின் கவர்னராக சற்றேறக்குறைய 12 வருடங்கள் இருந்தார் என்பதால் அவரது பெயரை இந்த விலங்கியல் பூங்காவிற்கு வைத்திருக்கிறார்கள்.  1958-ஆம் ஆண்டிலிருந்து இந்த பூங்கா இயங்கிக் கொண்டிருக்கிறது, இந்த பூங்காவிற்கு பத்மஜா நாயுடு ஹிமாலயன் விலங்கியல் பூங்கா என்று பெயர் சூட்டியவர் இந்திரா காந்தி - வருடம் 1975. 



எத்தனை வண்ணங்கள் என்னுள்…


தண்ணீர் பழம் என்று அழைக்கப்படும் தர்பூசணி சாப்பிடும் கரடி…


Snow Leopard போன்ற விலங்குகள் இங்கே இருந்தாலும் இந்த பூங்காவின் சிறப்பு என்று சொல்லப்படும் இடத்தினை இங்கே இருக்கும் சிவப்பு நிற பண்டாக்கள் பிடித்துக் கொள்கின்றன.  சிவப்பு வண்ண பாண்டாக்கள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று என்பதால், இந்தப் பூங்காவில் இவற்றை மிகவும் கவனமாக பாதுகாத்து, பராமரித்து வருகிறார்கள்.  நாங்கள் சென்ற சமயம் இரண்டு மூன்று தடுப்புகளில் மரங்களின் மீது அமர்ந்து கொண்டும், படுத்து உறங்கிக் கொண்டும் இருந்த சிவப்பு நிற பாண்டாக்களை பார்க்க முடிந்தது.  தவிர விதம் விதமான வண்ணங்களில் பறவைகள், Star Tortoise, Goral, Himalayan Tahr, Common Palm Civet, Himalayan Civet, Jackal, Slow Loris, Leopard Cat, Common Leopard, Black Leopard, Clouded Leopard, Deer என்று பலவகை மிருகங்கள் இந்த விலங்கியல் பூங்காவில் இருக்கின்றன.  என்னதான் விலங்கியல் பூங்கா என்று சொன்னாலும், நேரத்திற்கு அவற்றுக்குத் தேவையான உணவு கிடைக்கும் என்றாலும், அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் வசிக்க முடியாமல் அடைபட்டுக் கிடைக்கும் இந்த உயிரினங்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு சோகம் இழையோடுவதை தவிர்க்க முடிவதில்லை.  



ஆடு போன்று தோற்றம் அளிக்கும் Ghoral …


இந்தப் பூங்காவிற்கு உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு என்பதை சொல்லவும் வேண்டுமா? இந்தியர்கள் என்றால் 20 ரூபாய், வெளி நாட்டவர் என்றால் 50 ரூபாய் மற்றும் கேமராவிற்கும் பத்து ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள்.  பூங்காவிற்குள் நடந்து ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டு வர வேண்டும் என்றால் நிச்சயம் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் தேவை.  அதிலும் அங்கே இருக்கும் மரங்கள், இயற்கையான சூழல் போன்றவற்றை ரசித்துக் கொண்டே, விலங்குகளை கவனித்து, படங்களும் எடுத்துக் கொண்டு, சில பல செல்ஃபிகளையும், ரீல்ஸ்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் நிச்சயம் இத்தனை நேரம் ஆகும்! ஆனால் எங்களுக்கு இந்த பூங்காவினைச் சுற்றிப் பார்க்க கொடுக்கப்பட்ட நேரம் வெறும் அரை மணி நேரம் மட்டுமே! அதுவும் அல்லாமல் பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு இடத்தினையும் சேர்த்து, அரை மணி நேரத்தில் பார்த்து விட வேண்டும் என்று சொன்னார் எங்கள் பயண ஏற்பாட்டாளர் விஷால். வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை (குளிர் நாட்களில் இந்த நேரம் சற்றே குறையும்!) திறந்திருக்கும் இந்தப் பூங்கா டார்ஜிலிங் சென்றால், அதிலும் குறிப்பாக குழந்தைகளுடன் சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் தான்.  



என்னையா படம் புடிக்கிற? என்று பார்த்த ஒரு விலங்கு!


எங்கள் குழுவினர் இந்தப் பூங்காவில் இருக்க தரப்பட்ட நேரம் அரை மணி நேரம் மட்டுமே என்றாலும் இத்தனை பெரிய குழுவில் அனைவரும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வந்து விடுவார்களா என்ன?  அதிலும் மொத்தமாகச் செல்லாமல் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டதால் யார் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல்!  கடைசி நபர் வரை வந்து சேர்ந்தால் மட்டுமே அங்கிருந்து புறப்பட வேண்டும் என்று காத்திருந்தார் விஷால். இரண்டே இரண்டு நபர்கள் மட்டும், அவர்களுக்காக காத்திருப்பார்கள் என்ற கவலைகளும் இன்றி, தங்களது அலைபேசிகளையும் அணைத்து வைத்து விட்டு சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  கேட்டால் ஒரே ஒரு இடம் பார்த்தாலும் முழுதாக பார்த்து விட வேண்டும் - எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்து எங்களுக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இது போன்ற மனநிலை கொண்டவர்கள் குழுவாக பயணிக்க ஏற்றவர்கள் அல்ல என்பதை அவர்களாகவே உணர்ந்து கொண்டால் தான் நல்லது! இப்படி அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்தே குழுவினரின் ஒரு சிலருக்காக காத்திருந்ததில் நிறைய நேரம் விரயம் ஆனது தான் மிச்சம்! 


பூங்கா அருகில் இருந்த இடம் என்ன, வேறு என்ன பார்க்க இருந்தோம் போன்ற தகவல்கள், எங்களுக்கு அன்றைய தினம் கிடைத்த அனுபவங்கள் போன்ற தகவல்களை தொடர்ந்து அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

  

7 கருத்துகள்:

  1. நிச்சயம் இது மாதிரி விதண்டாவாதம் பேசுபவர்கள் மிகவும் எரிச்சலூட்டுபவர்கள்தான்.  எப்படி சமாளித்தீர்களோ, பொறுத்துக்க கொண்டீர்களோ..  அதிலும் அந்தப் பெண் செய்தது அட்டூழியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எரிச்சல் தான். பல இடங்களில் இப்படியானவர்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் அந்தப் பெண் போன்றவர்களை நம்மால் ஒன்றும் சொல்லவும் முடியாது. வேறு பெண்கள் மூலம் தான் சமாளிக்க வேண்டியிருந்தது.

      தங்கள் அன்பிற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. ஒருங்கிணைப்பாளருடன் சேர்ந்து சுயவிருப்பத்தில் நீங்களும் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது என்று முதலில் சொல்லி இருந்தீர்கள்.  அதைப்பற்றி அப்புறம் ஒன்றும் காணோமே...  இவற்றில் உங்கள் பங்கு என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய இடங்களில் இந்தப் பணிகள் இருந்தன. அனைவரையும் ஒருங்கிணைப்பது கடினமான வேலை முதல் நாளில் ஆரம்பித்த பணி கடைசி வரை இருந்தது. In fact பயணம் முடிந்த பின்னரும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  3. ஆம். இப்போது செல்ஃபி எடுக்கிறேன் என்று வேர பலர் நேரத்தை கரைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....