புதன், 17 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பன்னிரண்டு - Darjeeling Himalayan Railway - மலை இரயிலில் ஒரு பயணம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“Be like a train; go in the rain, go in the sun, go in the storm, go in the dark tunnels!” —Mehmet Murat Ildan.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


******


தேயிலைத் தோட்டங்களை பார்த்ததோடு, ரோப்வேயில் பயணித்த அனுபவங்களுடன் மதிய உணவுக்காக மீண்டும் தங்குமிடம் பயணித்தோம் என்று சென்ற பகுதியில் சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம்.  அதன் பின்னர் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் டார்ஜிலிங் நோக்கி வாகனத்தில் பயணித்தோம்.  இந்தப் பயணம் எதற்காக?  மிகவும் பிரபலமான, UNESCO WORLD HERITAGE என்று சொல்லப்படும், பாதுகாக்கப்படும் ஒரு புராதனமான இரயில் மூலம் நாங்கள் பயணிப்பதற்காகவே இந்த டார்ஜிலிங் நோக்கிய பயணம்.  Darjeeling Himalayan Railway, இந்தியாவில் மலைப்பகுதிகளில் இயங்கும் மூன்று இரயில் பாதைகளில் பிரதானமானதும் முதன்மையானதும் ஆகும்.   இந்தியாவில் மூன்று மலைப்பிரதேசங்களில் இது போன்ற இரயில்கள் இயங்குகின்றன.  அவை நம் தமிழகத்தின் நீலகிரி மலையில் (மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை) இயங்கும் இரயில், மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பய்குரியிலிருந்து டார்ஜிலிங் வரை இயங்கும் இரயில் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் கல்கா நகரிலிருந்து ஷிம்லா வரை இயங்கும் இரயில் ஆகியவை. 



















இந்த மூன்று மலை ரயில்களில் 1854-ஆம் ஆண்டு நீலகிரி மலை இரயில் குறித்து பேசப்பட்டாலும், முதன் முதலாக 1881-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மலைப்பாதை இரயில் டார்ஜிலிங் நகரில் இயங்கும் இரயில் தான்.  இருப்பதிலேயே நீளமான மலைப்பகுதி இரயில் பாதையைக் கொண்டது ஷிம்லா இரயில்! அதிக அளவு பரப்பளவு கொண்டதும் இந்த ஷிம்லா இரயில் தான்.  டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே மொத்தம் 88.48 கிலோமீட்டர் நீளமான பாதையைக் கொண்டுள்ளது. நியூ ஜல்பைகுரியை டார்ஜிலிங்குடன் இணைக்கும் இந்தப் பாதை நாங்கள் தங்கி இருந்த GHUM வழியாக செல்கிறது.  கடல் மட்டத்திலிருந்து 2258 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த பாதையில் இரயில்கள் தற்போதும் இயங்குகின்றன.  மூன்று மலைப்பகுதி ரயில்களும் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது பெருமைக்குரிய விஷயம் தான்.  மலைப்பாதையில் பேருந்து போன்ற வாகனங்கள் செல்லும் சாலையும், இரயில் பாதையும் குறுக்கேயும் நெடுக்கேயும் போக, இரயில் செல்லும் போது தானாகவே வாகனங்கள் நின்று வழி விடுவதுமாக அழகான காட்சிகளை இந்த டார்ஜிலிங் பகுதிகளில் நீங்கள் பார்க்க முடியும்.  





நியூ ஜல்பய்குரியிலிருந்து டார்ஜிலிங் வரையான தூரம் சுமார் 89 கிலோமீட்டர்.  ஆனால் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக டார்ஜிலிங் நகரிலிருந்து புறப்பட்டு Batasia Loop என்ற நிலையம் வழியாக Ghum வரை சென்று மீண்டும் அதே வழியில் டார்ஜிலிங் வரை சென்று சேரும்படி ஒரு Circular Train-ஐ இயக்குகிறார்கள்.  தினமும் இப்படியான இரயில்கள் காலையிலிருந்து மாலை வரை இயக்கப்படுகிறது.  ஒரு Circular Trip இந்த இரயிலில் பயணிக்க, கட்டணம் 1600 ரூபாய்.  மிகவும் சிறிய, Toy Train என்று அழைக்கப்படும் இந்த இரயிலில் பயணிக்கும்போது மிகவும் மெதுவாகவே செல்வதால் சுற்றி இருக்கும் மலைகளின் அழகையும் இயற்கை எழிலையும் பார்த்தபடி பயணிப்பதோடு, நடுவில் வரும் சிறு கிராமங்களில் கடைத்தெருக்களையும் பார்த்த படியே நீங்கள் பயணிக்க முடியும்.  இந்த இரயிலில் பயணிப்பதற்காகவே நாங்களும் டார்ஜிலிங் நோக்கி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம்.  இரயில் நிலையம் வாயிலில் எங்களை இறக்கி விட்ட வாகனங்கள் அங்கேயே காத்திருக்க, நாங்கள் இரயிலில் சுற்றி வர இரயில் நிலையத்திற்குள் புகுந்தோம்.  


ஆரம்ப காலத்தில் நீராவி மூலம் இயங்கிய எஞ்சின்கள் மட்டுமே இருந்தன என்றாலும் பின்னர் டீசல் மூலம் இயங்கும் என்ஜின்களும் இந்தப் பாதையில் பயன்படுத்தப்பட்டன.  இப்போதும், நீராவி மூலம் இயக்கப்படும் எஞ்சின்கள் இந்தப் பாதையில் பயன்படுத்தப்படுகின்றன.  132-ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் இந்த எஞ்சின்கள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  நாங்கள் இரயில் நிலையம் சென்ற போது அங்கே இருந்த சில நீராவி எஞ்சின்களை படங்களும் காணொளியும் எடுத்துக் கொண்டோம்.  பிறகு எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அனைவரும் அமர்ந்து கொண்டோம்.  ஒரு பெட்டி முழுவதும் எங்கள் குழுவினர் மட்டுமே! அதனால் பாட்டும், நடனமும் புகைப்படங்கள் எடுப்பது என்றும் மிகவும் சந்தோஷமாக ஆரம்பித்தது எங்கள் மலைப்பாதை இரயில் பயணம்.  மிகவும் மெதுவாகவே இந்த இரயில்கள் இயங்கும் என்பதால் காட்சிகளை பொறுமையாக பார்த்து ரசிக்கலாம்.  பொதுவாக நாம் இரயிலில் பயணிக்கும்போது வேகமாக பயணிப்பதால், பல காட்சிகள் நொடியில் மறைந்து விடுவதாகவே அமையும்.  ஆனால் இந்த இரயில் மிகமிக மெதுவாக பயணிப்பதால் நின்று நிதானித்து எல்லா காட்சிகளையும் நாம் பார்த்து ரசிக்க முடியும். 


பொதுவாக நாம் பார்த்திருக்கும் இரயில் பாதைகள் மூன்று மட்டுமே - அதாவது Broad Gauge, Meter Gauge மற்றும் Standard Gauge மட்டுமே! ஆனால் இந்த மலை இரயில்கள் இயங்குவது அவற்றை விட குறுகிய Narrow Gauge என்ற இரயில் பாதையில்!  அதாவது இரயில் பாதையில் இரண்டு இரயில் தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் தூரத்தினை வைத்து இந்த பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.  உங்கள் புரிதலுக்காக பொதுவான அளவுகள் கீழே தந்திருக்கிறேன்.  


Broad Gauge - 1676 mm - 5 Ft 6 Inches;

Standard Gauge - 1435 mm - 4 Ft 8 ½ Inches;

Meter Gauge - 1,000 mm - 3 ft 3 3/8 Inches;

Narrow Gauge - 600 mm 


பல ஹிந்தி சினிமா படங்கள் இந்த இரயில் பாதையிலும், இரயிலிலும் எடுக்கப்பட்டு இருக்கின்றன.  2012-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட Barfi என்ற திரைப்படம் கூட இங்கே தான் எடுத்தார்கள் என்று தகவல்கள் உண்டு.  இந்தப் படத்தில் டார்ஜிலிங் மற்றும் இங்கே இயங்கும் இந்த இரயில் என அனைத்தையும் அழகாகக் காண்பித்து இருப்பார்கள்.  படத்தில் இருக்கும் பல காட்சிகளை நாங்கள் நேரிலேயே பார்த்தோம்.  அழகான பாதையும் காட்சிகளும் பார்த்து ரசிக்க வேண்டியவை.  


சில மணித்துளிகள் பயணித்த பிறகு இரயில் Batasia Loop என்ற இரயில் நிலையத்தில் ஒரு சுற்று சுற்றி நிற்கிறது.  அங்கே சுமார் 15 நிமிடங்கள் இரயில் நிற்கும்.  அந்த இரயில் நிலையத்தில் ஒரு ஸ்தூபாவும் அழகான பூங்காவும் இருக்கிறது.  அங்கே ஒவ்வொரு சுற்றுலா பயணியும் படங்கள் எடுத்துக் கொள்வதோடு இயற்கை எழிலையும் பார்த்து ரசிக்கலாம்.  நிறைய படங்கள், காணொளிகள் என எடுத்துக் கொண்டிருக்க, இரயில் புறப்படுவதற்கான நீண்டதொரு விசில் ஒலிக்கிறது! மீண்டும் அனைத்து பயணிகளும் இரயிலில் ஏறிக்கொள்ள மலைப்பாதையில் பயணித்து இரயில் சென்று சேரும் இடம், நாங்கள் தங்கி இருந்த Ghum! இந்த இரயில் நிலையத்தில் இரயில் சுமார் 20 நிமிடங்கள் நிற்கின்றது.  அங்கே இந்த மலை இரயில் சம்பந்தமான ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.  அதனை சுற்றுலா வாசிகள் கண்டு ரசிக்கவே இந்த 20 நிமிடம்.  நாங்கள் சென்ற சமயத்தில் அங்கே ஒரு திருவிழாவும் நடந்தது என்பதால் பாட்டு, ஆட்டம் என மிகவும் ரசனையாக இருந்தது.  இந்த நேரத்திலும் நிறைய படங்கள் எடுத்தோம்.  


இருபது நிமிடத்திற்குப் பிறகு நாங்கள் வந்த இரயில் மீண்டும் டார்ஜிலிங் நோக்கிய தனது பயணத்தினை துவங்கியது.  நாங்களும் அந்த இரயிலில் ஏறிக்கொண்டு டார்ஜிலிங் நோக்கி பயணித்தோம்.   காலையில் புறப்படும் போது எங்களுடன் வராமல் தாமதமாக புறப்பட்ட பெண் (சக பயிற்சியாளர்) ஓடும் இரயிலில் வந்து ஏற, அவரை கை பிடித்து தூக்கி விட்டோம்! ஒரு வழியாக எங்கள் அன்றைய தினத்தின் திட்டங்களில் கடைசியாக இருந்த பயணத்தில் அவரும் வந்து சேர்ந்து விட்டார்.  அவர் தாமதமாக வந்தாலும், விட்டு வந்த மற்ற சக பயிற்சியாளர்களிடம் அவர்கள் தவறு செய்தது போல சண்டை வேறு!  அனைவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பில் நானும் எங்களது பயிற்சியாளரும்! எப்படியோ, UNESCO WORLD HERITAGE இரயிலில் நாங்களும் பயணித்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியுடன் இந்த இரயில் பயணம் இனிதே முடிந்தது.  டார்ஜிலிங் நகரில் எங்கள் வாகனங்கள் காத்திருக்க, அந்த வாகனங்களில் ஏறிக்கொண்டு நாங்கள் தங்கிய இடமான GHUM வந்து சேர்ந்தோம்.  தொடர்ந்து என்ன அனுபவங்கள் என்பதை வரும் பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.    


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

20 கருத்துகள்:

  1. அருமையான பயணமாக இருந்திருக்கும்.  நீங்கள் பயணம் செய்தது 88 கிலோமீட்டரா?  சீக்கிரமே முடிந்து விட்டதா?  பயண நேரம் எவ்வளவு?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சிறப்பான பயணமாக அமைந்தது ஶ்ரீராம். நாங்கள் சென்றது மொத்தம் 16 கிலோமீட்டர் - Darjeeling - Ghum - Darjeeling மட்டும். மொத்தமாக சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. தங்களின் சிம்லா ரயில் பயணம் குறித்து படித்தது போலவே மிகவும் சுவாரசியமாக இறுக்கிறது சார்.
    தன்னீர் நிறப்ப இடையிடையே நீலகிரி ரயில் நிறுத்தி நிறுத்தி செல்வதை வே டு கோ யூட்டியூபிலும் கண்டிருக்கிறேன். மெதுமெதுவாக அணுபவித்து செல்லும் பயணம். விரைவில் நானும் செல்ல முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வெங்கட்ஜி ! வாசிக்க வாசிக்க, எப்படா எனக்கு இப்படியான பயணம் வாய்க்கும் என்ற ஆவல் என் பயண ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. கல்கா - ஷிம்லா விற்கு மலை ரயிலில் இரு முறை பயணத்திருக்கிறேன். அங்கிருந்து கல்கா வருவதற்கு மோட்டார் காரில் பயணித்திருக்கிறேன். அதுவே என்னை மிகவும் பரவசப்படுத்தியது என்றால் இந்த டார்ஜிலிங்க் circular ரயிலில் பயணிக்க வேண்டும் கண்டிப்பாக.

    படங்கள் எல்லாம் அருமை. ரசித்துப் பார்த்தேன். தகவல்களும் மிகச் சிறப்பு.

    ஊட்டி மலை ரயிலில் பயணித்ததில்லை. அந்த ஆசையும் உண்டு. இத்தனைக்கும் அதிக தூரம் இல்லாத ஊர். பார்ப்போம்,

    மைசூர் - ஊட்டி/குடலூர், அல்லது நிலம்பூர் வரை செல்லும் பேருந்து பயணமும் ஜன்னல் இருக்கை கிடைத்தால் அத்தனை ரசிக்கலாம். முதுமலை, பந்திப்பூர் வழியாகத்தானே போகும் விலங்குகளையும் பார்க்கலாம். பகல் நேரப் பயணம் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இப்படி ஒரு பயணம் விரைவில் அமையட்டும் கீதா ஜி. பதிவு குறித்த தங்களது விரிவான எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. பயண விவரம் நன்று. காணொளியும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பெயரில்லா17 மே, 2023 அன்று PM 1:56

    ஜுன் முதல் வாரம் காசி செல்ல உள்ளோம்.அது தொடர்பாக தங்கள் பதிவுகளை மீண்டும் படிக்க ஆசை..அட்டவணை மூலம் பதிவினைக் கண்டு பிடிக்க முடியவில்லை..முதல் லிங்கை கொடுத்தால் தொடர்ந்து படிக்க ஏதுவாகும்...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமனி மேடம். தாங்கள் காசி உட்பட முழு ஶார்டாம் யாத்திரை குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ள வெங்கட் சாரின் இவ்வலைப்பதிவை படிப்பதோடு, சொல்வனம் இதழின் பின்வரும் சுட்டியையும் வாசித்து அறிந்துகொள்ளலாம். https://solvanam.com/2023/05/14/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf/

      நீக்கு
    2. ரமணி ஜி உங்கள் காசி பயணம் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். வாட்ஸப் வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கு பலனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    4. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பயண விவரங்கள் அருமையாக இருக்கிறது. காணொளிகள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. நல்ல தகவல்கள் ...

    பல நாள் ஆசையான நீலகிரி மலை இரயில் பயணம் , இந்த கோடை விடுமுறையில் நிறைவேறிவிட்டது .. மனம் குழந்தையாய் மாறிய நிமிடங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீலகிரி மலை இரயில் பயணம் - உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....