புதன், 3 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NO LUXURIES REQUIRED TO BE HAPPY; IT REQUIRES ONLY GOOD COMPANY!


******

 

பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  

 

பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்

 

பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்

 

பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்

 

பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


******













சென்ற பகுதியில் சொன்னது போல, மாலை நேரம் அருகில் இருந்த புத்தமத வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று வந்த பிறகு, சக பயணிகள் எல்லோரும் தயாராகி வந்த பின்னர் எங்கள் அன்றைய திட்டமான டார்ஜிலிங் நகரில் இருக்கும் பிரபலமான மால் ரோடு என அழைக்கப்படும் வியாபார ஸ்தலத்தினை நோக்கிய பயணத்தினைத் துவக்கினோம். எங்கள் பயண ஏற்பாட்டாளர் GMVN Limited செய்த ஒரு பெரிய தவறாக நான் நினைத்தது டார்ஜிலிங் நகரில் தங்குமிடத்தினைத் தேர்ந்தெடுக்காமல் டார்ஜிலிங் நகரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் GHUM எனும் இடத்தில் இருந்த Sterling Resorts எனும் இடத்தினைத் தேர்ந்தெடுத்தது!  சாதாரண இடங்களில் எட்டு கிலோமீட்டர் என்பது பெரிய தூரம் இல்லை - அதுவும் வாகனங்கள் இருந்தால் எட்டு கிலோ மீட்டர் என்பது அதிக பட்சம் 15 நிமிடங்களில் சென்று சேர்ந்து விடும் நேரம் தூரம் தான்.  

 

ஆனால் மலைப் பிரதேசங்களில் இந்த தூரத்தினைக் கடப்பதற்கு குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் ஆகின்றன! ஏனென்றால் குறுகிய பாதைகள், அதிகமான வண்டிகள், அதிலும் சில ஓட்டுனர்கள், குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஓட்டுனர்கள் கடைபிடிக்காத சாலை விதிகள் என எல்லாம் சேர்ந்து கொண்டு எட்டு கிலோ மீட்டர் தொலைவினைக் கடக்க சில சமயங்களில் ஒன்றரை மணி நேரம் கூட ஆனது! அதனால் திட்டமிட்டபடி பயணங்களை மேற்கொள்ளவோ, பார்க்க நினைத்த இடங்களைப்  பார்க்கவோ முடிவதில்லை.   டார்ஜிலிங் போன்ற இடங்களில் மற்ற இடங்களை விட முன்னரே சூரிய அஸ்தமனம் ஆகிவிடுவதால் நமக்குக் கிடைக்கும் நேரமும் குறைவு.  காலை விரைவில் சூரிய உதயம் ஆகிவிடும் என்றாலும் தில்லி போன்ற நகரங்களில் இருந்து வரும் நபர்களால் விரைவில் எழுந்து கொள்ள முடிவதில்லை! மாலை 04.15 மணிக்கு நாங்கள் புறப்பட்டாலும் டார்ஜிலிங் மால் ரோடு பகுதியைச் சென்றடைந்த போது மணி 05.00.

 

செல்லும் வழியில் எங்கள் வாகனம் டார்ஜிலிங் பகுதியில் இயங்கும் பிரபலமான UNESCO HERITAGE SITES-களில் ஒன்றான Darjeeling Himalayan Railway-ஆல் இயக்கப்படும் மலை இரயில்கள் கடந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.  சாலை ஓரங்களிலும், சில இடங்களில் சாலையைக் கடந்தும் அந்த இரயில் மெதுவாகச் செல்வதைப்  பார்க்க அப்படி ஒரு மகிழ்ச்சி.  இந்தப் பயணத்தில் இந்த இரயில்களிலும் நாங்கள் பயணிக்க இருப்பதால், அந்த இரயிலை எங்கள் வாகனத்தில் இருந்து பார்க்கும் சமயம் “ஆஹா நாமும் இந்த இரயிலில் பயணிக்க இருக்கிறோமே!” என்ற உணர்வு மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கியது. மலைப்பகுதிகளில் இருக்கும் இன்னுமொரு பிரச்னை வாகன நிறுத்தங்கள்.  நாம் இறங்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் தான் வாகனங்களை நிறுத்தும் வசதி இருக்கும். அதனால் நாம் ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டு காலாற நடக்க வேண்டியது தான்.  உலா வந்த பிறகு ஓட்டுனரை அழைத்து நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்! எங்களை மால் ரோடு அருகே இறக்கி விட்ட பிறகு ஓட்டுனர்கள் தங்களது தொடர்பு விவரங்களைத் தந்து விட்டு சென்று விட்டார்கள்.  நாங்கள் மால் ரோடில் உலா வர ஆரம்பித்தோம்.  

 

மால் ரோடு - நான் இது வரை பல மலைப் பிரதேசங்களில் மால் ரோடு என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சாலைகளுக்குச் சென்று இருக்கிறேன். சிம்லா,  முசோரி, நைனிதால், மணாலி போன்ற இடங்களில் பார்த்த மால் ரோடு போல இல்லை என்றாலும் இந்த டார்ஜிலிங் நகரில் இருக்கும் மால் ரோடும் எனக்கு பிடித்தே இருந்தது.  நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் இருக்கும் இந்த மால் ரோடு பகுதி எப்போதும் உள்ளூர் வாசிகளும் சுற்றுலா பயணிகளும் நிறைந்து காணப்படும் இடமாக அமைந்திருக்கிறது.  மாலை நேரங்களில் இங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக உலவுவதை நம்மால் பார்க்க முடியும்.  கூட்டத்தில் நாங்களும் ஐக்கியமானோம்.  மிகவும் பழமையான கடைகள், உணவகங்கள் என அனைத்தும் இங்கே உண்டு.  மெதுவாக நடந்தபடியே நீங்கள் உலா வருவதோடு, இது போன்ற கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கிக் கொள்வதோடு, உணவகங்கள், சாலை ஓர உணவகங்கள் என அனைத்திலும் விதம் விதமான உணவுகளை, அதிலும் இப்பகுதியில் கிடைக்கும் பாரம்பரிய உணவு வகைகளைச் சுவைக்கலாம். 

 

பொதுவாகவே இந்த மலைப்பகுதிகளில் மோமோஸ் எனப்படும் வேகவைக்கப்பட்ட உணவு வகை மிகவும் அதிகமாக விற்பனை ஆகிறது. தற்போது தில்லி, சென்னை போன்ற மற்ற நகரங்களிலும் கிடைக்கிறது என்றாலும் பாரம்பரியமான சுவையோடு நீங்கள் சுவைக்க வேண்டும் என்றால் மலைப்பிரதேசங்களில் தான் சுவைக்க வேண்டியிருக்கும்.  நாங்கள் சென்ற சமயம் பார்த்த உணவுகளின் பெயர்கள் வித்தியாசமாகவே இருந்தது - அதிலும் குறிப்பாக அசைவ உணவு வகைகள் அதிகம் என்பதால் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் அதிகம் அங்கே உலவ வில்லை.  பல வருடங்களுக்குப் பிறகு - சரியாகச் சொல்வதானால் எனது அருணாச்சலப் பிரதேசம் பயணத்திற்குப் பிறகு - இந்த முறை சைவ மோமோஸ் (5 pieces 30/-) ருசித்தேன்.  சிவப்பு மிளகாய் சட்னியுடன் சுவை நன்றாக இருந்தது.  அசைவ வகைகளில் Chicken  shefali, chicken balls, momos  என சிலவற்றை அங்கே விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலான கடைகளில் பெண்களே விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.   இங்கே அதிக அளவில் பெண்களையே உழைப்பாளிகளாக பார்க்க முடியும்.  பொதுவாகவே மலைப்பிரதேசங்களில் பெண்கள் அதிக அளவில் உழைக்கிறார்கள் என்பதை எனது பல பயணங்களில் கவனித்திருக்கிறேன். 

 

உணவு தவிர குளிர் காலத்திற்கான உடைகள், தொப்பிகள், மரத்திலான வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் அழகிற்காக வைக்கப்படும் பொருட்களென பலவும் அங்கே விற்கப்படுகின்றன.  பொதுவாக நான் பயணிக்கும் சமயங்களில் எங்கும் இம்மாதிரி பொருட்களை வாங்குவது கிடையாது. சற்றே மாறுதலாக டார்ஜிலிங் மால் ரோடு பகுதியில் குளிர் காலத்தில் அணியும் ஓர் தலைக்குல்லாய் வாங்கினேன்.  இந்தப் பயணத்தின் பின் பகுதியில் அந்தக் குல்லாய் மிகவும் பயன்பட்டது! நான் தில்லியில் இருந்தே  குளிர் நாட்களுக்கான இரண்டு தலைக்குல்லாய்கள் எடுத்துச் சென்றாலும் இந்த இடத்தில் வாங்கிய தலைக்குல்லாய் தான் அங்கே இருந்த குளிருக்கு தக்கவாறு இருந்தது! என்னுடன் பயணித்த மற்ற நண்பர்களும் இங்கே நிறைய பொருட்களை வாங்கினார்கள்.  சிலர் வாங்கிய பொருட்களை வைத்துக் கொள்வதற்காகவே புதிதாக ஒரு பேட்டி/பை போன்றவற்றை வாங்கிக் கொண்டார்கள்! சிலருக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடித்தமானது என்பதை இந்தப் பயணத்திலும் பார்க்க முடிந்தது!

 

மால் ரோடு பகுதியில் நீண்ட நேரம் நடப்பது உங்களால் இயலாத காரியம் என்றால் கவலை இல்லை. சாலை ஓரங்களில் நிறைய பெஞ்சுகள் போட்டு வைத்திருப்பார்கள் என்பதால் அங்கே அமர்ந்து கொண்டு மலைகளில் இருக்கும் பைன் மரங்களையும், இயற்கை எழிலையும் பார்த்து ரசிக்கலாம்.  இங்கே இருக்கும் பெரியவர்கள் மாலை நேரங்களில் இங்கே வந்து அமர்ந்து நண்பர்களுடன் பழங்கதைகள் பேசி பொழுதைக் கழிப்பதை பார்க்க முடியும்.  முதியவர்கள் அமர்வதற்கென்றே சில இருக்கைகள்/பெஞ்சுகள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றால் இங்கே எத்தனை வயதானவர்கள் வந்து அமர்ந்து இருப்பார்கள் என்பதை உங்களால் உணர முடியும்.  அதைப் போலவே இந்த மால் ரோடு பகுதியில் ஒரு பெரிய LCD திரையில் நிகழ்ச்சிகளை தொடர்ந்து காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.  அத்தனையும் பார்த்து ரசிக்கலாம் என்பது கூடுதல் வசதி. சில நிமிடங்கள் அங்கே நின்று அப்போது வந்த ஒரு நடனக் காட்சியை பார்த்து ரசித்தோம்.  

 

உங்களுக்கு ஒரு தகவலும் இப்பகுதியில் சொல்லலாம் என இருக்கிறேன்.  மஹா காவியமான இராமாயணத்தினை சமஸ்க்ருத மொழியிலிருந்து நேபாளி மொழியில் மொழிபெயர்த்த நேபாளி கவிஞர் பானுபக்த ஆச்சார்யா என்பவருக்கு இங்கே மிகப்பெரிய தங்க நிற சிலை ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.  1814-ஆம் ஆண்டு பிறந்து 1868-ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு முதன் முதலில் இங்கே சிலை அமைத்தது 1947-ஆம் வருடத்தில் என்றாலும் மீண்டும் இங்கே சிலை நிறுவப்பட்டது 1996-ஆம் ஆண்டு தான் - நேபாளி சாஹித்ய சம்மேளன் என்ற நேபாளி இயக்கத்தினர் இந்த சிலையை  நிறுவி இருக்கிறார்களாம்.  சிலையின் பக்கத்தில் இந்த பிரபல கவிஞர் குறித்த தகவல்கள் அதிக அளவில் இல்லை என்பது எனக்கு குறையாகத் தெரிந்தது.  சுத்தமாக பராமரிக்கிறார்கள் என்பது சற்றே மகிழ்வைத் தந்தது - பல இடங்களில் சிலைகளை வைத்து இருந்தாலும் சுத்தம் செய்யப்படாமல் பறவைகளின் கழிவுகளோடு சிலைகளை பார்க்கும் போது, சிலை வைக்கப்பட்ட அந்த பிரபல மனிதரை அவமதிப்பது போலவே எனக்குத் தோன்றும்.  

 

சுமார் ஒன்றரை மணி நேரம் மால் ரோடு பகுதிகளில் உலா வந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் எட்டு கிலோ மீட்டர் பயணித்து தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.  பிறகு என்ன நடந்தது, அடுத்த நிகழ்வு என்ன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன். 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

 

3 கருத்துகள்:

  1. படங்கள் சுவாரஸ்யம்.  விவரங்களும்.  மால் போன்ற இடங்களில் சுற்றுவது சுவாரஸ்யம்தான்.  மலைப்பிரதேச நடை பின்னர் வலியைக் கொடுக்கும்.  பொருட்கள் வாங்கி சுமை சேர்த்தால் அத்தனையையும் கட்டித் தூக்கி வரவேண்டுமே..!

    பதிலளிநீக்கு
  2. படங்கள் மற்றும் விரிவான தகவல்களுடன் பகிர்வு நன்று. சமீப வருடங்களாக மோமோ பெங்களூரிலும் பிரபல உணவாகி வருகிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....