திங்கள், 10 ஜூலை, 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குவாரி பாஸ் - மலையேற்றம் - காணொளி உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஐந்து


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஆறு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஏழு

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி எட்டு


தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


******


இதுவரை எனது சதுரகிரி பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இந்தப் பகுதியில் சதுரகிரி குறித்த சில கதைகளை, நம்பிக்கைகளை சொல்ல இருக்கிறேன்.  வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்! 


சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயில். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர் என்பதோடு சிலர் இங்கேயே மலையேறும் பாதையில் கடை போடுகிறார்கள். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது.  பழனியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.  இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். இங்கே உள்ள கடைகளில் இலை ஒன்றும் இதற்காகவே கிடைக்கிறது. திரிக்குப் பதிலாக இந்த இலையை பயன்படுத்தினால் தீய சக்திகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். 


சதுரகிரி தல வரலாறு குறித்த ஒரு கதை: சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து, பிழைத்து வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.


சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.  சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, ”நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.


பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.


பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 


தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.


தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.


சுந்தரமூர்த்தி: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.


லிங்க வடிவ அம்பிகை: சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.


இப்படி பல கதைகள் இந்த சதுரகிரி மலை குறித்து சொல்கிறார்கள்.  இவை அனைத்தும் செவிவழிச் செய்திகளாக அங்கே இருப்பவை.  ஒரு சில விஷயங்களை தோண்டித்துருவி பார்க்காமல் இருப்பதே நல்லது.  தொடர்ந்து பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அது வரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


16 கருத்துகள்:

  1. இயற்கையை ரசித்து விட்டு வருவோம். மற்றவற்றை விட்டு விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். இயற்கையை ரசிப்பது நல்லதே.

      நீக்கு
  2. சதுரகிரியைப் பற்றிப் பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதுரகிரி குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ந்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. மிக அருமையான பயணம் . சதுரகிரி "பெரிய மகாலிங்கம் " விவரம் அறிந்தேன். பெரிய மாகலிங்கம் அனைவருக்கும் அனைத்து நலங்களும் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதுரகிரி குறித்த இந்தப் பதிவு தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. எவ்வளவு கதைகள்! //ஒரு சில விஷயங்களை தோண்டித்துருவி பார்க்காமல் இருப்பதே நல்லது.//

    ஆமாம். சதுரகிரி மலைக்குப்பயணம் செய்து பயணத்தை அனுபவித்துவிட்டு வந்துவிடலாம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வோம். பயணத்தினை ரசிப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்த வாசகமாக அமைந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சதுர கிரி மலையை பற்றிய தகவல்களும், ஒவ்வொரு மலை அமைப்புகளுக்கு உள்ள கதைகளையும் சுவாரஸ்யமாக படித்து தெரிந்து கொண்டேன்.

    /இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்./

    அனைத்தும் செவிவழிச் கதைகளாக இருப்பினும். மூல கதைகள் இதன் அம்சத்தை தாங்கியதாக இருந்திருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு நல்ல கதைகளாக மாறியிருக்கும். நல்லதொரு பயணம். நிறைய தகவல்கள். இன்னமும் ,அடுத்த பகிர்வில் இம்மலையில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை தெரிந்து கொள்ள தொடர்கிறேன். . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து உற்சாகமூட்டும் உங்களைப் போன்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....