வெள்ளி, 14 ஜூலை, 2023

தினம் தினம் தில்லி - Boot Polish… - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - ரோலர் கோஸ்டர் ஐஸ்க்ரீம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


1954 ஆம் வருடம் வெளிவந்த ஒரு ஹிந்தி மொழி சினிமா Boot Polish… அந்தப் படத்தில் ஒரு பாடல் பூட் பாலிஷ் செய்வது பற்றியும் அவர்களது உழைப்பு பற்றியுமான பாடல்…..  பாடல் யூட்யூபில் இருக்கிறது. பாடலுக்கான இணைப்பு முதல் கமெண்டில் தந்து இருக்கிறேன்.   பொதுவாகவே நம் ஊரை விட தலைநகர் தில்லி மட்டுமல்லாது வட இந்தியா முழுவதுமே ஷூ அணியும் வழக்கம் அதிகம். குளிர் நாட்களில் நம் ஊர் போல இங்கே செருப்பு அணிந்து கொள்ள முடியாது. அதுவே கோடை நாட்களிலும் தொடரும்.

வட இந்தியாவில் மார்க்கெட் பகுதிகள், இரயில் நிலையம் என எல்லா இடங்களிலும் இப்படி ஷூ பாலிஷ் செய்பவர்கள் தொடர்ந்து அமர்ந்து இருப்பதைப் பார்க்கலாம். அதிலிருந்தே அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பதையும் உணர்ந்து கொள்ளலாம். பலரை இப்படி பார்த்து இருந்தாலும் அவர்களது சேவையைப் பயன்படுத்தி இருந்தாலும் இவர்களில் ஒருவர் என்னால் எப்போதும் நினைக்கப்படும் நபராக இருக்கிறார். 


ஷூ பாலிஷ் செய்வது ஒரு கலை. வீட்டில் செய்து கொள்ளலாம் என்றாலும் இதற்கெனவே இருக்கும் உழைப்பாளிகள் பாலிஷ் செய்வது போல வருவதில்லை. பாலிஷ் செய்வது தவிர ஃபீத்தா எனப்படும் ஷூ லேஸ் மாற்றுவது, சிறு சிறு ரிபேர் செய்வது என அனைத்தும் செய்து தருவார்கள். எனது அலுவலகத்திற்கு வெளியே ஒரு உழைப்பாளியை நான் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகிறேன். அவர் தொழில் மீது வைத்திருக்கும் பக்தி பார்த்து அசந்திருக்கிறேன். தினமும் காலை ஒன்பது மணிக்கு வந்து நடைபாதையில் அமர்ந்தார் எனில் மாலை ஐந்தரைக்கு மேல் தான் அங்கிருந்து புறப்படுவார் - எங்கள் அலுவலக நேரம் தான் அவருக்கும் அலுவல் நேரம். எங்களைப் போலவே அவருக்கும் சனி ஞாயிறு விடுமுறை. :) 


அவரது தொழில் எவ்வளவு நேர்த்தியாக இருக்குமோ அதே போல அவர் உடையும்…. வெள்ளை நிற குர்த்தா பைஜாமா தான் தினமும்…. ஒரு நாள் கூட பணி முடிந்து திரும்பும் வரை அவர் உடையில் பாலிஷ் போடும் போது அழுக்கு, வண்ணம் ஒட்டிக் கொண்டு பார்த்ததே இல்லை. அவ்வளவு சுத்தமாக இருப்பார். போலவே பேசுவது வெகு குறைவு. ஷூ பாலிஷ் போட குறைந்த பட்சம் பத்து நிமிடம் எடுத்துக் கொள்வார். இராணுவ வீரர்கள் தங்கள் ஷூ பாலிஷ் போடும்போது பார்த்து இருக்கிறேன் - பளபளவென கண்ணாடி போல் மின்ன வேண்டும் என்று சொல்வார்கள். அது போல இருக்கும் இவர் தொழில் நேர்த்தி. இப்போது பத்து ரூபாய் வாங்குகிறார் என்றாலும் அவர் உழைப்பிற்கு இவ்வளவு நிச்சயம் கொடுக்கலாம் ….


பணம் பற்றிச் சொல்லும்போது இன்றைக்கு பேருந்தில் பயணித்த போது பார்த்த ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது - ஷூ பாலிஷ் செய்து ஃபீத்தா மாற்றிய ஒரு உழைப்பாளிக்கு ஒருவர் 250/- ரூபாய் கொடுத்ததோடு முதுகில் தட்டிக் கொடுத்தார்….. அதைப் பார்த்த பேருந்து நடத்துனர், பொறுமிக் கொண்டார்…… உழைப்பாளிக்கு கொடுத்த காசு அதிகம் என. பணம் இருப்பவருக்கு கொடுக்கவும் மனது இருக்கிறதே என்று தோன்றியது எனக்கு.


நாளை தில்லி குறித்த வேறு ஒரு தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன்…. அது வரை….


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


7 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  வடநாட்டில் ஷூ பாலிஷ் காரர்கள் பற்றி நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன்.  தீவார் படத்தில் ஒரு ஷூ பாலிஷ் பையன்தான் அமிதாப்புக்கு உளவு சொல்வான். 

    அது சரி, தமிழ்ப்பாடல் ஒன்று பூட் பாலிஷ் என்று இருக்கிறது தெரியுமோ....

    பதிலளிநீக்கு
  2. ஷூ பாலீஷர் பாராட்டுக்குறியவரே...

    பதிலளிநீக்கு
  3. சுவாரசியமாக இருந்தது. யமுனையின் பெரும் வெள்ளத்தைக் கண்டதும் உங்கள் நினைவுதான் வந்தது தில்லி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  4. வாசகம் அருமை. பாடல் அருமை.
    தில்லி யமுனையில் வெள்ளம் என்று செய்திகள் படித்தேன், பார்த்தேன். விவசாய நிலங்கள், குடிசைகள் மூழ்கி விட்டது போல. போக்குவரத்து நெரிசல் காட்டினார்கள்.

    கவனமாக அலுவலகம் சென்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. தகவல்கள் நன்று. மற்றும் குறிப்பிட்ட அந்த நபர் நேர்த்தியாகச் செய்வது அதுதான் தொழில் பக்தி நேர்த்தி.

    பாட்ல் ரொம்பப் பிடித்திருந்தது. பழைய படங்களில் ஷூ பாலிஷ் பற்றி பாடல்தெரியாது ஆனால் காட்சிகள் இருக்கும்.

    வாசகம் ரொம்பப் பிடித்த வாசகம். சில வருஷங்களாக நான் கடைபிடிக்கத் தொடங்கிய ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....