புதன், 5 ஜூலை, 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஐந்து


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஆறு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஏழு

தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


******


சென்ற பகுதியில் சந்தன மகாலிங்கம் ஆலயத்தில் பிரதோஷ கால அபிஷேகத்தினைக் கண்டு களித்தது குறித்து எழுதி இருந்தேன்.  இரவு உணவிற்குப் பிறகு, அங்கேயே இருந்த கூடம் ஒன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் சரவணன்.  அந்த மலைப்பகுதியில் தங்குவதற்கான இடம் இல்லை. பொதுவாக அங்கே தங்க அனுமதிப்பதும் இல்லை. இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லா பாதையில் திரும்புவது சரியல்ல என்பதால் மட்டுமே அங்கே தங்க அனுமதிக்கிறார்கள் - அதுவும் முன்னரே நாம் சொல்லி வைப்பது அவசியம்.  இருக்கும் கூடங்கள் ஒன்றில், மழைக்கான பாதுகாப்பிற்கு வைத்திருப்போமே அது போன்ற தார்பாலீன் தரையில் விரித்து அதில் படுத்துக் கொள்ள வேண்டியது தான்.  நாங்கள் போகும்போதே இது தெரிந்து இருந்ததால் ஒரு மெல்லிய போர்வையையும் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன்.  தலையணை எல்லாம் கிடையாது. அப்படியே உறங்க வேண்டியது தான். பொதுவாக எனக்கு புதிய இடங்கள் செல்லும் போது உறக்கம் வருவதில்லை.  சாதாரண இடமாக இருந்தால் வெளியே வந்து அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்.  அந்த மலைப்பகுதியில் அதுவும் வனப்பகுதியில் அப்படி தனியே யாரும் இல்லா நேரத்தில் தனியாக அமர்ந்து இருப்பதும் பாதுகாப்பானது அல்லவே! அதனால் அப்படியே படுத்துக் கொண்டு அன்றைய நிகழ்வுகளைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  


அலைபேசியை நோண்டலாம் என்றால் திரும்பி வீடு சேரும் வரை அது தேவையாக இருக்கும் (பவர் பேங்க் எடுத்துச் செல்லவில்லை).  இறை சிந்தனையில் நாட்டம் செலுத்துவோம் என்று அப்படியே படுத்து விட்டேன். நள்ளிரவு பன்னிரெண்டு, ஒரு மணி வரை உறக்கம் இல்லை. அதன் பிறகு தூங்கி விட்டேன்.  ஆனாலும் இரண்டு இரண்டரை மணிக்கு விழித்து விட்டேன்.  பொதுவாக இரவு நல்ல உறக்கம் இருந்தால் இயற்கை அழைப்பு பிரச்சனை இல்லை.  இப்படி குறைவான உறக்கம் என்றால் அதுவும் ஒரு பிரச்சனை.  இந்த மலைப்பிரதேசத்தில் கழிவறை வசதிகள் ஏதும் கிடையாது. அப்படியே கொஞ்சம் ஒதுங்கிச் சென்று வெட்டவெளியில் தான் எல்லாம்.  ஆனால் அந்த இடத்தில் இரவு நேரத்தில் இப்படி உலாத்துவது  சரியல்ல! முதல் நாள் இரவு தான் உணவு சமைத்துத் தந்த சமையல் கலைஞர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வேறு பாதையில் கூட்டமாக செந்நாய்கள் உலா வருவது குறித்துச் சொல்லி இருந்தார்.  நாம் எங்கேனும் இரவில் சிறுநீர் கழிக்கவென தனியே சென்று செந்நாய் கூட்டம் வந்து விட்டால்! என்ற எண்ணம் மனதில் ஓட, சில மணித்துளிகள் அப்படியும் இப்படியுமாக நெளிந்து கொண்டிருந்தேன். மற்றொரு நண்பரும் எழுந்திருக்க, அப்படியே இரண்டு பேருமாக வெளியே சென்று வந்தோம் - மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயத்தோடு! 🙂


மீண்டும் வந்து படுத்தாலும் உறக்கம் வரவில்லை.  அந்த கூடாரத்தில் மொத்தமாக பத்து இருபது பேர் இருந்திருப்போம்.  எங்களைத் தவிர வேறு சில குடும்பங்களும் வந்திருந்தார்கள்.  அன்றைய இரவு அங்கே தங்கியவர்கள் சுமார் இருபது பேர் இருக்கலாம்.  அதிகாலையிலேயே என்னையும் மற்ற நண்பரையும் நண்பர் சரவணன் எழுப்பினார்.  எழுந்து தயாரானோம்.  அதிகாலை நேரத்தில் மீண்டும் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள்.  ஆஹா… என்ன சொல்ல, முதல் நாள் போலவே விஸ்தாரமான அபிஷேக ஆராதனைகள்.  அந்த அதிகாலை நேரத்தில் மலையில் தொடர்ந்து ஆலய மணி ஒலிக்க, பொறுமையாக ஒவ்வொரு திரவியமாக சிவபெருமானுக்கு அபிஷேகம்.  மொத்தமாகவே இருபது பேர் தான் இருந்ததால் நின்று நிதானித்து, அங்கே அமர்ந்து அபிஷேக ஆராதனைகளை எங்களால் பார்க்க முடிந்தது. முதல் நாள் அபிஷேகத்திற்குப் பிறகு இறைவனுக்கு சார்த்திய பூ மாலைகள், ருத்திராட்ச மாலை, பூக்கள் என எங்களுக்கும் கிடைத்தது.  கண்களில் ஒற்றிக் கொண்டு பத்திரப்படுத்தினோம்.  இறைவனுக்கு அபிஷேகம் செய்த சந்தனம், விபூதி ஆகியவையும் கிடைத்தது.  எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து நண்பர் சரவணன் வாங்கிக் கொடுத்தார்.   எல்லா சன்னதிகளிலும் அபிஷேகம், பூஜைகள் என நடந்து முடியும் வரை நாங்களும் அங்கே இருந்து பக்தியில் திளைத்திருந்தோம்.  


அதன் பிறகு எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு சந்தன மகாலிங்கம் சன்னதி பூசாரியிடம் விடை பெற்றுக் கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். வழியில் மீண்டும் சுந்தர மகாலிங்கம் சன்னதியில் இறைவனை தரிசிக்கச் சென்றோம். அங்கே இருக்கும் கஞ்சி மடத்தில் எங்கள் உடைமைகளை வைத்து விட்டு சுந்தர மகாலிங்கம் சன்னதி நோக்கிச் சென்று அங்கே இருக்கும் சன்னதிகளில் தரிசனம் செய்து கொண்ட பிறகு பிரதான சன்னதிக்குச் சென்றோம். அங்கே காலை நேர அபிஷேக ஆராதனைகள் முடிந்து இறைவனுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள்.  அதனால் காத்திருந்தோம். காலை நேரத்திலேயே பக்தர்கள் வர ஆரம்பித்து இருந்தார்கள்.  சன்னதி வாயிலில் சற்றேறக்குறைய ஐம்பது பேர் இருந்திருப்பார்கள்.  அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க சில மணித்துளிகளுக்குப் பிறகு அலங்காரம் முடிந்து திரை விலகியது! ஆஹா… என்னவொரு அற்புதக் காட்சி. சற்றே சாய்ந்த நிலையில் இருக்கும் சுந்தர மகாலிங்கம் எங்களுக்குக் காட்சி அளித்தார். அலங்காரம் மிகவும் அழகாக இருந்தது. ஒவ்வொருவராக நடந்து சென்று அங்கே இறைவனிடம் மனமார பிரார்த்தனை செய்து கொண்டோம்.  



பொதுவாக எங்கே சென்றாலும் பொறுமை என்பது மிக அத்தியாவசியமான  விஷயம். அதிலும் இறைவனது சன்னதிக்குச் செல்லும் போது அங்கேயும் வேகவேகமாக தரிசனம் செய்து புறப்படுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்! பொறுமை இல்லாமல் முண்டியடித்துக் கொண்டு சென்று இறைவனுக்கு முன் ஒரு கும்பிடு! அவ்வளவு தான் - ஓட்டமாக வெளியே சென்று விடுகிறார்கள். அப்படியானவர்களை விட்டு விலகி ஒரு ஓரமாக நின்று, நிதானமாக தரிசனம் செய்தேன். கோயிலில் கொடுத்த பிரசாதங்களை வாங்கிக் கொண்டு சன்னதிக்குப் பின் புறம் இருக்கும் தேவியின் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்து கொண்டோம்.  அங்கேயும் நின்று நிதானித்து தரிசனம் கிடைத்தது.  மனதில் ஒரு வித நிம்மதியும் மகிழ்ச்சியும் ஒரு சேர குடிகொள்ள, ஒன்றும் பேசத் தோன்றவில்லை. அப்படியே நடந்து வந்து அருகில் இருக்கும் கஞ்சிமடத்திற்குத் திரும்பினோம். அங்கே இருந்தவர் எங்களை அழைத்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு அங்கேயே காலை உணவினை உண்ண அழைப்பு விடுத்தார் அந்த காலை நேரத்திலேயே சுடச் சுட உணவு தயாராக இருந்தது - சாம்பார், ரசம், பொரியல் என சுவையான சாப்பாடு.  அதுவும் கேட்கக் கேட்கத் தந்து கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு தருவது என்பது சுலபமான விஷயம் இல்லை - அதுவும் அந்த மலைப்பகுதியில்! 


சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களுமே தலைச்சுமையாக மலையடிவாரத்திலிருந்து சுமந்து வர வேண்டியிருப்பதால் இத்தனை பேருக்கும் தினம் தினம் சமைத்து உணவு அளிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.  இந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைவரும் - தேவையான பொருட்களைக் கொடுப்பவர்கள், மலையடிவாரத்திலிருந்து சுமந்து வந்து தருபவர்கள், சமைப்பவர்கள், உணவைத் தருபவர்கள், பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், கடைக்காரர்கள், மற்றும் தேவையான பண உதவி செய்பவர்கள் என அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தான்.  இறைப்பணியில் ஈடுபட்டு இருக்கும் இந்த அனைத்து நல்லுள்ளங்களைக் கொண்ட அனைவருமே பாராட்டுக்குரிய்வர்கள் தானே.  எங்களையும் சாப்பிட அழைக்க, நான் கொஞ்சமாகவே சாப்பிட்டு முடித்தேன். அதிகமாக சாப்பிட்டால் மலை மீதிலிருந்து இறங்கி வரும் போது சிரமமாக இருக்கலாம் என்று தோன்றியதால் குறைவான உணவை உண்டு, தேவைப்பட்டால் க்ளூக்கோஸ், கடலை மிட்டாய் போன்றவற்றை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன். அது நல்லதாகவே தோன்றியது.  அது தவிர வழியில் நிறைய இடங்களில் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் நீர் மோர் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள் என்பதால் அதனையும் தேவைப்பட்டால் வாங்கிப் பருகலாமே! 


இப்படியாக சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் ஆகிய இரண்டு சன்னதிகளிலும் தரிசனம் முடிந்து, மலையடிவாரம் நோக்கிய எங்கள் பயணத்தினைத் துவங்கினோம். அந்த இறக்கம் எப்படி இருந்தது, வேறு விஷயங்கள் போன்றவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம் நண்பர்களே.  தொடரை முடிப்பதற்கு முன்னர் சதுரகிரி குறித்த சில கதைகளையும் பார்க்க இருக்கிறோம். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே. 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

  1. மலை பற்றிய மேல்விவரங்களை அறிய காத்திருக்கிறோம். இரவில் கூடாரத்தை ஒட்டி ஏதும் சலசலப்பு எல்லாம் எழுமோ என்று படித்துக் கொண்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலசலப்பு எழுமோ - ஹாஹா... எங்களுக்கும் அப்படி எண்ணங்கள் இருந்தன ஸ்ரீராம். பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  2. மலையில் படுத்து உறங்கி இருப்பது திரிலான விசயமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையில் படுத்து இருந்தது ஒரு சிறப்பான அனுபவம் தான் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. மலை உறக்கம் மறக்க முடியாதது தான். சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. அருமை. அவனருளாலே அவன் தாள் பணிந்து என்று சிவபுராணத்தில் சொல்லி இருப்பது போல் அவன் அருள் இருந்தால்தான் அவனை இதுபோல் நிம்மதியாக தரிசிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் அருள் இல்லாமல் நாம் ஏது! நம் செயல்கள் ஏது! உண்மை பத்மநாபன் அண்ணாச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வாசகம் அருமை.

    //இறைவனுக்கு சார்த்திய பூ மாலைகள், ருத்திராட்ச மாலை, பூக்கள் என எங்களுக்கும் கிடைத்தது. //

    மிகவும் மகிழ்ச்சி. பொறுமையாக சாமி தரிசனம் செய்து வந்த பலன்.
    உணவு கிடைத்தது மேலும் மகிழ்ச்சி. அனைவரையும், வாழ்த்தி பாராட்ட வேண்டும்.
    பயண அனுபவம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பயண அனுபவம் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

      நீக்கு
  7. அருமையான தரிசனம், வெங்கட்ஜி! அதுவும் காலையில் அந்த அமைதியான மலைப்பகுதியில் கோயில் மணி ஒலிக்க....எத்தனை இனிமையான தருணங்கள். அதுவும் அதிகம் கூட்டம் இல்லாமல்.

    மலைப்பகுதியில் உறங்கிய அனுபவம் அழகான மறக்கமுடியாத அனுபவம்.

    அந்த அனுபவம் எனக்கும் உண்டு. அதுவும் மலைப்பகுதியில் இப்படிக்கட்டாந்தரையில், மண் திட்டில் என்று. மலைப்பகுதியே தனிதான்.

    நல்ல அனுபவங்கள் ஜி.

    இன்றைய வாசகம் நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. சிறப்பான அனுபவம் தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. இறைவனுக்குச் சார்த்திய பூ ருத்ராட்சமாலை எல்லாம் கிடைத்தது சிறப்பான அனுபவம். தரிசனம் செய்யும் போது பொறுமை மிக அவசியம். நல்ல உணவும் கிடைத்ததே...பிரசாதமாக என்றும் சொல்லலாம்.

    அனுபவங்கள் சிறப்பான அனுபவங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்குக் கிடைத்த பிரசாதங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டோம். வீட்டிற்கு வந்த பிறகும் அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து கொண்டோம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி

      நீக்கு
  9. வாசகமும், இரவு அணுபவமும் அருமை சார். மலை குறித்த கதைகளைப் படிக்க ஆர்வமாக உள்ளோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....