அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இந்த வாரத்தின் நிழற்படமும் எண்ணங்களும் : யாருமில்லை…
சமீபத்தில் ஒரு மாலை நேர நடையில் எடுத்த படம் இது. சாலையோரத்தில் ஒரு முருங்கை மரம். அதில் காய்த்து, அதிலேயே காய்ந்து போய்க்கொண்டிருக்கும் முருங்கைக்காய்கள்…. பார்த்த உடன் தோன்றியது… இப்படித்தான் சில முதியவர்களும் யாருடைய கவனிப்பும் இன்றி இருக்கிறார்கள் என… பல வீடுகளில் இப்படித்தானே இன்றைய நிலை. இந்தப் படம் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன? சொல்லுங்களேன்.
******
இந்த வாரத்தின் ரசித்த இசை : மொழி அவசியமல்ல!
சமீபத்தில் இன்ஸ்டாவில் பார்த்த ஒரு காணொளி… என்ன மொழியில் பாடுகிறார் என்பது அவசியமற்ற விஷயமாக இருந்தது. என்ன ஒரு துள்ளல் இந்த இசையில். பாடுபவர், இசை பக்கவாத்தியங்கள் என அனைவருடைய ஈடுபாடு, அவர்களின் முகபாவனைகள் என பார்க்கும் அனைத்தும் பிடித்தது. கேட்கவும் நன்றாகவே இருந்தது. கேட்டுப் பாருங்களேன். யூட்யூபிலும் இருக்கிறது. அந்த காணொளி கீழே!
******
பழைய நினைப்புடா பேராண்டி : எங்கும் பனிமழை பொழிகிறது
2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - எங்கும் பனிமழை பொழிகிறது - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
பொதுவாக காஷ்மீர் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்றாலும் ஜம்மு பகுதிகளில் அத்தனை பனிப்பொழிவு இருப்பதில்லை. ஜம்முவின் கட்ரா மாநிலத்தில் இருக்கும் வைஷ்ணவ் தேவி கோவில் இருக்கும் மலைப்பகுதியில் இந்த நாட்களில் குளிர் அதிகம் இருக்கும் என்றாலும், பெரும்பாலும் பனிப்பொழிவு இருப்பதில்லை. ஆனால் இந்த வருடம் வைஷ்ணவ் தேவி கோவில் இருக்கும் மலையிலும் அத்தனை பனிப்பொழிவு – பனி மூடிய மலைகளைப் பார்க்க முடிகிறது.
சரி எங்கோ ஷிம்லாவிலும், ஜம்முவிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலும், காஷ்மீரிலும் பனிப்பொழிவு என்றால் தில்லியில் இருக்கும் உனக்கென்ன கவலை – தில்லியிலா பனிப்பொழிவு என்று நீங்கள் கேட்கலாம்…. தலைநகர் தில்லியை நம்பித் தானே நாட்டின் எல்லா மாநிலங்களும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் தலைநகர் தில்லி எல்லாவற்றிற்கும் பக்கத்து மாநிலங்களை நம்பித்தானே இருக்கிறது! சொந்தமாய் எதுவுமே கிடையாது! பக்கத்து மாநிலமான ராஜஸ்தானின் பாலைவனங்களில் சூடு அதிகமானால் தில்லி கொதிக்கும். பக்கத்து மாநிலங்களில் பனிப்பொழிவு என்றால் இங்கே குளிர் அதிகரித்து விடும்!
இப்போது கூட தலைநகர் தில்லியில் அடிக்கும் குளிர் காற்று உடலை உறைய வைக்கும் அளவிற்கு இருக்கிறது. இப்போது அடிக்கும் காற்றினை இங்குள்ளவர்கள் Barfeeli hawa என்று அழைக்கிறார்கள் – ஏதோ தேங்காய் பர்ஃபி என நினைத்துவிடாதீர்கள். ஹிந்தியில் Barf என்றால் ஐஸ்கட்டி! ஐஸ்கட்டி போன்ற காற்று என்பதைத் தான் இப்படி Barfeeli hawa என அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் சொல்வதானால் Icy Wind! இந்தக் குளிர் காற்று அடிக்கும்போது நம் எலும்புகளை ஊடுருவிச் செல்வது போன்ற ஒரு உணர்வு!
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் கவிதை : சிநேகம்
இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக சொல்வனம் தளத்திலிருந்து வேலாயுத முத்துக்குமார் என்பவர் எழுதிய கவிதை ஒன்று - செல்லங்கள் குறித்த கவிதை!
எங்கள் தெரு நாய்கள்
இப்போது என்னைப் பார்த்து குரைப்பதில்லை.
இந்தத் தெருவில் இந்த வீட்டிற்கு
குடிவந்த புதிதில்
தெருமுனையிலிருந்து வீடுவரை
அவைகள் சதா குரைத்துக் கொண்டே
பின் தொடர்ந்து வரும்.
எனது பிஸ்கட்களை அவைகள் நுகரக்கூட இல்லை.
ஆரம்பத்தில் அந்நியமாய் இருந்த
எனது அலுவலகச் சீருடையின் நிறம்
இப்போது அவைகளால்
அடையாளம் கொள்ளப்பட்டுவிட்டன.
எனது வாசனையை
அவைகள் மோப்பம் கொண்டுவிட்டன.
இன்று வீடு திரும்பலில் தெருவோரக் கூட்டத்தில்
கல்திண்டில் அமர்ந்திருந்த நாய் ஒன்று
என்னைப் பார்த்து முறைத்தது.
பார்த்த மாத்திரத்தில் வாலாட்டிச் சிநேகம் கொள்ள
நாய்களுக்கு சிலகாலம் பிடிக்கும் போலும்.
******
இந்த வாரத்தின் கேள்வி : என்ன செய்வீர்கள்?
உங்கள் வீட்டில் ஒரு கடிகாரம் இருக்கிறது. பொதுவாக கடிகாரங்களில் ஒரே ஒரு பேட்டரி போடுவது தானே வழக்கம். சில கடிகாரங்களில் இரண்டு அல்லது மூன்று பேட்டரிகள் கூட இருப்பது வழக்கம். அப்படியான கடிகாரங்களில் அல்லது டார்ச் போன்றவை பேட்டரி தீர்ந்து போகும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? மூன்று பேட்டரிகளையும் மாற்றுவீர்களா அல்லது ஒரே ஒரு பேட்டரியை மட்டும் மாற்றினால் வேலை செய்யுமா என்று பார்ப்பீர்களா? ஒரு பேட்டரி மட்டுமே மாற்றினாலும் சில காலத்திற்கு வேலை செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி எடுக்கப்பட்ட ஒற்றை பேட்டரியை வேறு ஏதேனும் சாதனங்களில் பயன்படுத்துவீர்களா? சொல்லுங்களேன்! சமீபத்தில் ஒரு இடத்தில் அப்படிச் செய்ததை பார்க்க நேர்ந்தது. எனக்கெல்லாம் இப்படிச் செய்து பழக்கமில்லை! பேட்டரி மாற்றுவது தான் ஒரே வழி. பழைய பேட்டரியை தூர எறிவது தான் எனது வழக்கம்!
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - Celebration of Hope :
இரண்டொரு நாட்கள் முன்னர் தான் பஞ்சாப் பகுதிகளில் கொண்டாடப்படும் லோரி(டி) பண்டிகை குறித்து இங்கே சில செய்திகள் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்தப் பண்டிகை சமயத்தில் சரியாக வெளியிடப்பட்டிருக்கும் பார்லே ஜி பிஸ்கெட் விளம்பரம் ஒன்று - மிகச் சிறப்பாக இருக்கிறது. பாருங்களேன். பஞ்சாபி மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருக்கிறது என்பதால் மொழி தெரியாதவர்களுக்கும் கவலை இல்லை.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - பத்மநாபன் அண்ணாச்சி :
முன்பெல்லாம் இங்கே சில நண்பர்களின் பதிவுகளை வாங்கி வெளியிடுவது வழக்கமாக இருந்தது. குறிப்பாக பத்மநாபன் அண்ணாச்சியிடமிருந்து அவ்வப்போது பதிவுகள் வாங்கி வெளியிட்டு இருக்கிறேன். ஆனால் சமீப காலமாக அவர் ஒன்றுமே எழுதித் தருவதில்லை. அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அவரிடம் பதிவுகள் எழுதி அனுப்புங்கள் என்றால் ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். பணியிலிருந்து ஓய்வு பெற்று தென் தமிழகத்தில் வந்து சேர்ந்த பிறகு எழுதுவதற்கு விஷயங்கள் நிறையவே இருந்தாலும் ஏனோ எழுத முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். போதாதற்கு வீட்டில் இப்போது இரண்டு பூனைகள் வேறு! அதனுடன் செலவிடும் நேரம் குறித்து அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் விஷயங்களையேனும் எழுதி அனுப்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் - ஆனால் எழுத மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் - என்ன செய்ய? அவரது பதிவுகளுக்கு எனது பக்கத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்தும் எழுதி அனுப்புவதில்லை! ம்ம்ம்ம்.
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
17 ஜனவரி 2026



கடைத்தெருவில் வாங்க முடியா விலைஉயரத்தில் முருங்கை. தெருவோரத்தில் பறிக்க முடியாத உயரத்தில் காய்ந்த முருங்கை.
பதிலளிநீக்குஉற்சாகத் துள்ளலாய் பாட்டு... என்ன பாடுகிறாரோ.. குரலிலும் ஸ்ருதியிலும் வெரைட்டி காட்டி அதகளப்படுத்துகிறார்!
மொழி தெரியாவிட்டால் கூட பாடலை ரசிக்க முடிகிறது என்பது தான் இந்த பகிர்வுக்கான நோக்கமும்.
நீக்குமுருங்கை...... சிந்தனைகள் சிறப்பு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
பனிமழை போய் பார்த்து வந்தேன்!
பதிலளிநீக்குபார்த்த மாத்திரத்தில் சிநேகம் கொள்ளும் நாய்கள் நிறையவே உண்டு.
முந்தைய பதிவு மீண்டும் சென்று பார்த்தமைக்கு நன்றி.
நீக்குசில செல்லங்கள் அப்படியும்.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
ஒரு பேட்டரி மாற்றி உபயோகிக்கலாமா என்று நான் அவ்வப்போது யோசித்ததுண்டு. ஆனால் செய்ததில்லை. புதுசு எது, பழசு எது என்று குழம்பி விடும் என்பது மட்டுமல்ல, அந்தப் பொருளும் வீணாய்ப்போய்விடும் என்று தோன்றும்.
பதிலளிநீக்குலோரி விளம்பரம் ஈர்த்தது. பாஸிட்டிவ்!
ஆமாம்...... ஒரு பேட்டரி மட்டும் மாற்றினால் அந்தப் பொருள் கெட்டுப் போகவும் வாய்ப்பு உண்டு என்று தான் எனக்கும் தோன்றியது.
நீக்குலோரி விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஶ்ரீராம்.
பப்பு அண்ணாச்சின்னு தலைப்புல பார்த்ததும் அட! பதிவு வந்திருக்குமோன்னு பார்த்தால் இப்படி மறுக்கிறாரே!!! பிரபலங்கள் ரூம் போட்டு எழுதுவாங்களாமே அது போல பப்பு அண்ணாச்சிய அப்பப்ப தில்லிக்குப் போகச் சொல்லி அங்கு ரூம் போட்டு எழுதச் சொல்லுங்க ஜி!!!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
தில்லிக்குப் போகச் சொல்லி எழுத வைக்க வேண்டும்..... அதான் ஒரே வழி போல கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஏன்? முருங்கைக்காய்கள் சும்மா தொங்கிக் கொண்டிருக்கின்றன? கிராமங்களில் முருங்கைய் போடாம சாம்பார் வைக்க மாட்டாங்களே! ஆச்சரியம். சும்மா கிடைச்சா பறிப்பவர்கள் இருப்பாங்களே!
பதிலளிநீக்குகீதா
இந்த மரத்தில் மட்டும் ஏனோ எப்போதும் காய்களை பறிப்பது இல்லை கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அதுவும் இங்கு ஒரு முருங்கை சில சமயம் 5 ரூ 10 ரூ ன்னு...
பதிலளிநீக்குசிலப்போ 3 காய் 10 ரூ...சில கடைகளில் 5 காய் 10 ரூக்குக் கூடக் கிடைச்சிருக்கு
கீதா
இங்கே சில சமயங்களில் மூன்று இருபது ரூபாய்..... ஒரு காய் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கும் கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பனிமழை பார்த்திருக்கேனோ என்று தோன்றியதும் போய்ப் பார்த்தால் பார்த்திருக்கிறோம். எனக்குக் குளிர் ரொம்பப் பிடித்த சீசன். வெயில் தாங்காது ஆனால் குளிரை அதற்கான உடைகளுடன் தாங்கிவிட முடியும். குளிர்ல் எனர்ஜி கூடுதலாக இருப்பது போல் எனக்குத் தோன்றும்.
பதிலளிநீக்குகீதா
எனக்கும் குளிர்காலம் தான் மிகவும் பிடித்தது. அந்த நாட்களில் தான் அதிகம் சுற்றி வருவேன் கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சொல்வனம் கவிதை சூப்பர்!
பதிலளிநீக்குசில பைரவ/விகள் டக்கென்று ஒட்டிக் கொண்டுவிடுவார்கள் ஒரு சிலர் கொஞ்சம் குரைப்பார்கள் அப்புறம் நட்பாகிவிடுவாங்க. எங்கள் தெருவில் ஒரு வீட்டில் இருக்கும் பைரவர் என்ங்களைப் பார்த்து எப்போதும் குரல் கொடுப்பார். ஏனென்றால் அவருக்குப் பிடிக்காத மற்றொரு பைரவருக்கு பிஸ்கட் போடுகிறோம் என்று...... இப்ப இவரும் மற்ற பைரவர்களோடு வந்ததைப் பார்த்ததும் அட! என்று தோன்றி பிஸ்கட் போட்டதும் இப்ப குரைப்பதில்லை!
கீதா
செல்வங்கள் குறித்த கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குபாட்டு உற்சாகமான பாட்டு. செம மாடுலேஷன்ஸ்! High Vibe!
பதிலளிநீக்குகீதா
உற்சாகத் துள்ளல் பாட்டில்..... எனக்கும் அது பிடித்தது கீதா ஜி.
நீக்குஜி, நம் வீட்டில் நீங்கள் செய்வது போலதான். பழசு எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு புதுசு...ஒன்றே ஒன்று மட்டும் மாற்றும் பழக்கம் இல்லை. மற்ற பழைய பேட்டரியினால் இந்தப் புதுசும் ஒரு மாதிரி ஆகிவிட்டதுனா? பழசை வைத்திருந்தால் அது லீக் ஆகவும் வாய்ப்பு உண்டு இல்லையா?
பதிலளிநீக்குகீதா
ஆம். பழசும் புதுசும் சேர்ந்து லீக் ஆகும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனாலும் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தோன்றியது எனக்கு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
விளம்பரம் அட்டகாசமான விளம்பரம். உணர்வுபுர்வமான ஒன்றும் கூட. ரொம்ப ரொம்ப ரசித்தேன். ஜி.
பதிலளிநீக்குகீதா
விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குநிறைய முருங்கைக்காய்கள் காய்ந்து தொங்குகின்றன. சரிதான். ஆனால் அந்த மரத்தைச் சுற்றிலும் நிறைய வயர்கள் போய்க்கொண்டிருக்கின்றன. அவை கேபிளா இல்லை மின்சார வயர்களா என்பது யாருக்குத் தெரியும்? ஐந்து ரூபாய் முருங்கைக்காய்க்கு யாராவது ரிஸ்க் எடுப்பாங்களா? நான் மார்க்கெட் செல்லும்போதெல்லாம் அங்குள்ள முருங்கைக்காய் விற்பவர்கள் என்னிடம் வாங்கிக்கொள்ளச் சொல்லிச் சொல்வார்கள். வீட்டில் பண்ணுவதில்லை.
பதிலளிநீக்குரிஸ்க்..... வாங்கு/தொரட்டி கொண்டு எடுக்கலாம். பொதுவாக இந்த மரத்தில் யாரும் காய்களை பறிப்பது இல்லை நெல்லைத் தமிழன். எங்கள் வீட்டில் எப்போதாவது பயன்படுத்துவது உண்டு.
நீக்குஎனக்கு (இன்னும் பலருக்கு) வீட்டில் நாய், பூனை இவற்றை வளர்த்து அதில் நேரம் செலவழிப்பவர்களுக்கு வேறு எதுவும் பிடிக்காது (குழந்தை பெறுவதில்கூட ஆர்வம் இருக்காது என்று பலர் சொல்கின்றனர்) என்று எண்ணம். தன்னுடைய ஓய்வு நேரத்தை, எழுதிச் செலவழிக்கலாம். பலரும் படிப்பர். இந்த பத்நாபன் அண்ணாச்சி பூனைகளோடு செலவழிக்கிறாரே...
பதிலளிநீக்குஅவருக்கு இப்போது இது தான் பிடித்திருக்கிறது...... மீண்டும் எழுத சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
எனக்கு சுவர் கடிகாரத்தில் அப்சஷன். அதாவது எல்லா அறைகளிலும் எனக்கு கடிகாரம் இருக்கணும் (பாத்ரூம் உட்பட). அதிலும் படுக்கையறையில் இரண்டு திசைகளிலும் கடிகாரம் வைத்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் ஒரே நேரம் காண்பிக்க வைப்பது பெரிய பிரச்சனை. பேட்டரி போய்விட்டால், அனைத்தையும் மாற்றிவிடுவேன். சிலர் உருளைக்கிழங்கிலிருந்து பேட்டரிக்கு மின்சாரம் செலுத்தலாம் என்று இன்னும் பலவித யோசனைகளையும் சொல்கிறார்கள் (வேற எங்க? யூடியூபில்தான்). நான் சின்ன மற்றும் பெரிய பேட்டரிகள் மொத்தமாக வாங்கிவைத்திருப்பேன். ரிமோட் மற்றும் கடிகாரங்களுக்கு வேணுமல்லவா?
பதிலளிநீக்குசிலருக்கு கைக்கடிகாரங்கள் மீது மோகம். உங்களுக்கு சுவர் கடிகாரங்கள் மீது...... ஓ.... குளியலறையில் கடிகாரம் - சில ஐந்து நட்சத்திர தங்குமிடங்களில் பார்த்து இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
எண்ணெய் தேய்த்தால், எத்தனை நேரம் ஊறணும் என்று பார்க்க, அப்புறம், சில நேரங்களில் வெந்நீர் குளியல் சுகத்தில் ஆழ்ந்துவிட்டால், நேரம் எவ்வளவு என்று செக் பண்ணிக்கொள்ள.
நீக்குநல்லது தான். எல்லா இடங்களிலும் கடிகாரம் - எங்கள் வீட்டில் இரண்டு இடங்களில் மட்டுமே இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம் சென்ற போது மரத்தில் செய்யப்பட்ட வாட்ச் போன்ற ஒரு கடிகாரம் வாங்கிக் கொண்டு வந்தேன். ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்த கடிகாரம் பகுதி மட்டும் மரத்திலிருந்து விழுந்து விட, அதனை மீண்டும் ஒட்ட முடியவே இல்லை! :( இப்போது இங்கே கிடைத்த ஒரு கடிகாரம் தான் அந்த இடத்தில் இருக்கிறது.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
எங்கும் பனிமழை - எனக்கு கால்கள் புதையுமளவிற்கு பனி உள்ள இடங்களுக்குச் செல்ல ஆசை. பசங்கள்டயும் சொல்லிட்டேன், டிசம்பர், ஜனவரிலதான் அவங்க ஊருக்கு வருவேன் என்று. ஆனால் 18 டிகிரி பெங்களூர் குளிரே அதிகமாகத் தெரிகிறது. இந்த லட்சணத்தில் எப்படி அந்தக் குளிரில் இருப்பது என்ற யோசனையும் வருகிறது. பசங்க, அந்த மாதிரி குளிர் (பனி), படங்கள் எடுக்கத்தான் லாயக்கு, ஓரிரு நாளில் வெறுப்பாயிடும்னு சொல்றாங்க
பதிலளிநீக்குஓரிரு நாட்களில் வெறுப்பு ஏற்படும். உண்மை. எதுவும் அதீதமாக இருந்தால் கடினம் தான். பனிப்பொழிவு பார்க்க அழகு என்றாலும் அதில் பால் சிரமங்கள், ஆபத்துகள் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குமுருங்கை சிந்தனை சிந்திக்க வைக்கிறது. நீங்கள் ரசித்த இசை அருமை, சிநேகம் கவிதை நன்றாக இருக்கிரது. பழக நேரம் எடுத்தாலும் பழகி விட்டால் அவை நட்பு பாராட்டும் அழகே தனி.
கடிகாரத்தில் புது பாட்டரி மாற்றி விட்டால் பழையது தூக்கி ஏறியபடும் . பார்லே பிஸ்கட் விளம்பர காணொளி அருமை மனதை நெகிழ வைத்த காணொளி அருமை.
பத்மநாபன் அவர்கள் மீண்டும் பதிவுகள் தர வேண்டும் என்று விரும்புகிறேன்.
வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குபதிவுகள் நிறைய எழுதனும்னுதான் நினைக்கிறேன். ஆனால் ஏனோ முடியவில்லை. விரைவில் எழுத முயற்சிக்கிறேன். ✍️💪. அதுக்கு முன்னால ஜனநாயகன் ரிலீஸ் ஆயிரும்னு நம்புகிறேன்.
பதிலளிநீக்குவிரைவில் ஒரு பதிவு எழுதி அனுப்புங்கள் அண்ணாச்சி. அதன் பிறகு வாரத்திற்கு ஒன்று இல்லை என்றாலும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் பதிவுகள் எழுதி அனுப்புங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
வாசகம், காணொளி உட்பட தொகுப்பு அருமை. தனிமையில் முருங்கை.. சிந்திக்க வைக்கும் ஒப்பீடு. அனைத்து பேட்டரியையும் ஒரு சேர மாற்றுவதே வழக்கம். மீண்டும் அவற்றைப் பயன்படுத்தியதில்லை.
பதிலளிநீக்கு