அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட சிறப்பு எதிரி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தலைமுறையின் அடையாளம் - 19 ஜனவரி 2026 :
எல்லோருக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்! எங்களுக்கு இந்த வருடம் பண்டிகை இல்லாததால் அன்புள்ளங்கள் பகிர்ந்து கொண்ட சர்க்கரைப் பொங்கலுடன் நேற்றைய நாள் இனிமையாகவே சென்றது! இன்று அதிகாலையில் எழுந்து மொட்டைமாடிக்குச் சென்று உடன்பிறந்தோரின் நலனுக்காக வேண்டி கணுப்பிடி வைத்து விட்டு வந்தேன்! 'காக்காப்பிடி வெச்சேன்! கணுப்பிடி வெச்சேன்! உன் கூட்டம் மாதிரி எங்க கூட்டமும் எப்பவும் ஒத்துமையா இருக்கணும்! நல்லதே நடக்கணும்! என்று பிரார்த்தித்துக் கொண்டேன்!
அன்பு சூழ் உலகில் இன்றைய தினத்தில் யாருக்காக வேண்டுமானாலும் பிரார்த்தித்துக் கொள்ளலாம்! டெல்லியில் எங்கள் ஏரியாவில் வசித்த நண்பர் ஒருவர் இத்தனை வருடங்களுக்குப் பின்னும் வருடம் தவறாமல் என்னை தன்னுடைய தங்கையாக பாவித்து பொங்கல் காசு அனுப்புகிறார்! இது அன்பு சூழ் உலகு தானே!
சரி! விஷயத்திற்கு வருகிறேன்!தலைமுறை இடைவெளி என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்! இந்த இடைவெளி என்பது அவரவர்களின் எண்ணத்தில், வார்த்தைகளில், குணதாசியத்தில் என மாறுபடலாம்! நாங்கள்லாம் எப்படி இருந்தோம்! தெரியுமா? இப்படியா உங்கள மாதிரி இருந்தோம்! என்றெல்லாம் சொல்லிக் கொள்வதும் கூட தலைமுறையின் இடைவெளி தான்!
சமீபத்தில் மகளின் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பாரம்பரிய உடையான புடவையணிந்து சென்றிருந்தாள்! அங்கு அன்று நடைபெற்ற நிகழ்விற்காக மாணவிகள் எல்லோரும் ஒன்று கூடி பலதரப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்! கிராமிய சூழலில் பொங்கல், வளையல் கடை, அம்மன் அலங்காரம் என்று ஏற்பாடுகள் இருந்தன! இவர்களுடன் இவர்களின் துறைத் தலைவரும் சேர்ந்து விறகு அடுப்பில் பொங்கல் வைத்தார் என்று மகள் சொன்னாள்!
இந்த பொங்கல் நிகழ்வை மீடியாவிலிருந்து வந்தும் பதிவு செய்திருக்கிறார்கள்! அதில் மகளையும் கூட சில வார்த்தைகள் பேசச் சொல்லியிருக்கிறார்கள்! அவளும் அதற்குத் தயாராகிச் செல்ல, அங்கு பதிவு செய்ய வந்திருந்தவர், அவள் இந்த நிகழ்வில் நெற்றியில் வைத்திருந்த சந்தனத்தை பார்த்து விட்டு, “நான் மலையாளி! நான் கேரளாவிலிருந்து இங்கு வந்து படிக்கிறேன்!” என்று இவளை கேமிராவுக்கு முன் சொல்லச் சொன்னாராம்!
இவளுக்கு தன் அடையாளத்தை மாற்றிச் சொல்லணும் என்று அவர் சொன்னது பிடிக்காததால் பேச மறுத்து வந்துவிட்டாள்! “அது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும்! நான் ஏன் என்னுடைய அடையாளத்தை மாத்திக்கணும்! நாம இப்பவும் டெல்லியில இருந்திருந்தாக் கூட நான் தமிழ்ப் பொண்ணு தான்! என்னோட ஊர் இது தான் இல்லையா! எங்க காலேஜ்ல எல்லாரும் சேர்ந்து தான் படிச்சிண்டு இருக்கோம்! அவர் அப்படிச் சொல்லுங்களேன்னு சொன்னது தாம்மா எனக்குப் பிடிக்கல! மாட்டேன்னு சொல்லிட்டு வந்திட்டேன்! என்று கம்பீரத்துடன் சொன்னாள்!
நானும் அடடா! டிவில வர சான்ஸை இவ விட்டுட்டாளேன்னு நினைக்கலை! இதைக் கேட்டதும் மிகவும் பெருமையாக தான் உணர்ந்தேன்! இதுவே இன்றைய தலைமுறையின் அடையாளம்! இந்த இடத்தில் நான் உள்பட நம்மில் பலரும் அவங்க என்ன சொல்லுவாங்க! அவங்க என்ன நினைப்பாங்களோ என்று அந்த யாரோ ஒருவருக்காகவோ கூட அன்றாட வாழ்வில் அனுசரித்துச் சென்று கொண்டிருக்கிறோம்! என்பது தான் நினைவுக்கு வந்து சென்றது!
ஆனால்! இன்றைய தலைமுறையின் இந்த அடையாளம் என்பது எல்லா இடத்திலும் ஒத்து வருமா? என்ற எண்ணமும் வராமல் இல்லை! இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
******
Patholi - 19 ஜனவரி 2026:
கணுப்பிடி வைப்பதற்காக வாங்கிய மஞ்சள் கொத்தில் இலைகள் மிகவும் பெரிதாகவும் செழிப்பாகவும் அருமையாக இருந்தது! பண்டிகை இருக்கும் நாட்களில் கூட இவ்வளவு ஃப்ரெஷ்ஷாக கிடைத்ததில்லை...🙂 கணுப்பிடி வைத்தது போகவும் மீதி நிறைய இருக்கும் என்று தோன்றியது! இதை வைத்து ஏதாவது செய்யலாமே என்று தோன்றவும், நேற்றே இணையத்தில் தேடி ரெசிபியும் எடுத்து விட்டேன்..🙂
Patholi!
கொங்கன் பகுதி என்றதும் டெல்லியில் எங்கள் வீட்டின் கீழே இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வசித்தது தான் நினைவுக்கு வந்தார்கள்! அங்கிள், ஆன்ட்டி மற்றும் அவர்களின் இரு மகள்களான Lonaவும் Laviயும்! அன்றாடம் அவர்களுக்கு dry fish இல்லாமல் உணவே இறங்காது..🙂 அவர்களுக்கு அருகில் பெங்காலீஸ்! கேட்கவே வேண்டாம்...🙂
நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் மஞ்சள் இலைகளை வீணாக்காமல் இப்படிக் கூட செய்யலாம்! மஞ்சள் இலையின் மணத்தோடும், மருத்துவ பயனோடும் உடலுக்கு கெடுதல் விளைவிக்காத உணவாக மாறியது!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
20 ஜனவரி 2026





கதம்பத்தை ரசித்தேன். மலையாளிப் போல் மாறி பேச மாட்டேன் என்று மகள் சொன்னது மகிழ்ச்சியை தந்தது.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன். கதம்பம் நன்றாக உள்ளது. வீட்டில் பண்டிகை இல்லாமல் போனாலும், சகோதரர் சகோதரி நலனுக்காக கணுப்பிடி வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. கணுப்பிடி படம் நன்றாக உள்ளது.
/இந்த இடத்தில் நான் உள்பட நம்மில் பலரும் அவங்க என்ன சொல்லுவாங்க! அவங்க என்ன நினைப்பாங்களோ என்று அந்த யாரோ ஒருவருக்காகவோ கூட அன்றாட வாழ்வில் அனுசரித்துச் சென்று கொண்டிருக்கிறோம்! என்பது தான் நினைவுக்கு வந்து சென்றது! /
உண்மை. ஆனால் இந்தக் காலகட்டத்தில் இருப்பவர்கள் சற்று துணிச்சலுடன் சட்டென முடிவுகளை எடுக்கிறார்கள். உங்கள் மகள் சொன்னது அவரது மனம் எடுத்த முடிவு அவரது துணிச்சலை வியந்து பாராட்டுகிறேன்.
மஞ்சள் இலைகளில் செய்த உணவு மிகவும் கவர்கிறது. நன்கு யோசித்து பல விதங்களில் உணவை தயாரிக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். உங்கள் மகள், மற்றும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மை தான் ஜி. துணிவுடன் தான் செயல்படுகிறார்கள்.
நீக்குமஞ்சளின் மணத்தோடு மிகவும் அருமையாகவே இருந்தது. இலைகளையும் வீணாக்கவில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.
இன்றைய வாசகம் நல்ல வாசகம்.
பதிலளிநீக்குஇதன் மறுபக்கத்தைச் சொல்லவில்லை!....அது மனித மனத்தைப் பற்றியது.
கீதா
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நீக்கு“நான் மலையாளி! நான் கேரளாவிலிருந்து இங்கு வந்து படிக்கிறேன்!” என்று இவளை கேமிராவுக்கு முன் சொல்லச் சொன்னாராம்!//
பதிலளிநீக்குஇதென்ன கூத்து!! ரோஷ்ணி சூப்பர்! Rocks!! என் மனமார்ந்த பாராட்டுகளைச் சொல்லுங்க ரோஷ்ணிக்கு. எதற்கு நம் அடையாளத்தை மாற்றணும்? எங்கிருந்தாலும் நாம் நாமாகவே!
நம் வீட்டில் நான் கிட்டத்தட்ட இப்படித்தான்...அதாவது சில பல விஷயங்களில். பள்ளி கல்லூரிக் காலத்திலிருந்தே அதனால் வீட்டில் பிரச்சனைகள் வந்ததுண்டு...எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதற்கு மட்டும் விட்டுக் கொடுத்தால் போதும் என்பதை என் அனுபவங்களிலிருந்தே கற்றுக் கொண்டதுதான்.
கீதா
உண்மை தான். ஆனால் இதுவரை என்னால் அப்படியெல்லாம் சொல்ல முடியவில்லை.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
ஆனால்! இன்றைய தலைமுறையின் இந்த அடையாளம் என்பது எல்லா இடத்திலும் ஒத்து வருமா? என்ற எண்ணமும் வராமல் இல்லை! இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??//
பதிலளிநீக்குகண்டிப்பாக எல்லா இடங்களிலும் அல்ல எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு மட்டும், எகுறிப்பாகக் குடும்பத்திற்குள், வேலை செய்யும் இடத்தில் நம் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டு சூழ்நிலைகளைக் கையாளும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால் போதும்!!!!! இதுதான் மனரீதியான விஷயங்களில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
கீதா
தாங்கள் சொல்வது மிகச்சரி.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
அட! பதேலி / கடுபு....நல்லா வந்திருக்கு, நான் இனிப்பும் செய்ததுண்டு. உப்பு/காரம் செய்வதுண்டு இப்ப உப்பு/காரம் தான்.
பதிலளிநீக்குகடுபு/கொட்டே இட்லி செய்வதுண்டு. ஹலசின (பலாப்பழ) கடுபு ....இந்த இரண்டுமே எங்கள் ப்ளாகில் போட்டிருக்கிறேன். திங்க பதிவில். இது இட்லி வெரைட்டி.
சன்னாஸ் தான் இன்னும் போடவில்லை!!!
கீதா
சூப்பர். எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடித்திருந்தது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை. முகநூலில் படித்தேன். சந்தனகீற்று வைத்ததால் மலையாளி என்று தவறுதலாக நினைத்து பேச கூப்பிட்டார் என்று பார்த்தால் கேரளவிலிருந்து வந்து படிக்கிறேன் என்று சொல்ல சொல்லி இருக்க கூடாது.
ரோஷணி மாட்டேன் என்று மறுத்தது சரிதான்.
ஆமாம் அம்மா. தெரிந்து தான் மாற்றி பேசச் சொன்னாகள்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நம் தமிழர்களுக்கான அடையாளத்தை விட்டு கொடுக்காமல் மகள் பேசியது பெருமையாக உள்ளது மஞ்சள் இலை கொழுக்கட்டை அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயலக்ஷ்மிஜி.
நீக்கு