சனி, 24 ஜனவரி, 2026

காஃபி வித் கிட்டு - 223 - என்ன தோன்றுகிறது? - பண்டு பாடவரம்பத்திலோடே - வாங்கியவன் திண்டாட - Nothing - மஞ்சள் நிறத் திருவிழா - பூனைகளின் குளியலறை - House Arrest


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் நிழற்படமும் எண்ணங்களும் : என்ன தோன்றுகிறது?



அவ்வப்போது முகநூல் வழியோ, அல்லது WhatsApp வழியோ ஏதோ படங்கள் நமக்கு வந்து சேரும்போது, பார்த்த மாத்திரத்தில் அந்த நிழற்படங்கள் நமக்குள் வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுவதுண்டு.  அந்தப் படம் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், அந்தப் படம் நமக்கு உண்டாக்கிய அதிர்வுகள் என சில நாட்களேனும் தொடர்வதுண்டு.  அப்படியான ஒரு படம் தான் மேலே இருக்கும் படம்.  நண்பர் ராஜேஷ் சங்கரபிள்ளை அவர்கள் முகநூல் பக்கத்தில் தான் இந்தப் படத்தினை நான் முதன் முதலாக பார்த்தேன்.  இந்தப் படம் பார்த்ததும் எத்தனை எத்தனை சிந்தனைகள்.  தனது வயிற்றையும் கவனிக்க வேண்டும், தனது குட்டிக்கும் பாலூட்ட வேண்டும், அதற்கு நானும் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருக்குமோ, அந்த ஆடு - அதற்கு நினைக்கும் சக்தியிருந்திருந்தால்….  இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது…  கவிதையா, கதையா அல்லது ஏதேனும் சிந்தனைகளா?  எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்களேன் - பின்னூட்டமாகவோ, அல்லது எனக்கு அனுப்பினால், இங்கே ஒரு பதிவாக கூட வெளியிட நான் ரெடி…. எழுதுங்களேன். 


******


இந்த வாரத்தின் ரசித்த இசை :  பண்டு பாடவரம்பத்திலோடே


அவ்வப்போது ஏதேனும் ஒரு பாடலை கேட்கத் தொடங்கி, மொழிப் பாகுபாடே இல்லாமல் ஏதேதோ மொழியில், ஏதேதோ நாட்டின் இசையில் மயங்கியதுண்டு.  சமீபத்தில் கூட ஒரு பெங்காலி பெண்ணின் வாத்திய இசையில் மயங்கினேன்.  அப்படி பார்க்கும்/கேட்கும் சமயங்களில் சில பாடல்கள் பிடித்துப் போகும்.  அப்படி கேட்ட ஒரு பாடல் ஜோசப் என்கிற மலையாள சினிமாவில் வரும் டைட்டில் சாங்க்….  “பண்டு பாடவரம்பத்திலோடே..” என்கிற பாடல்.  மலைப்பகுதியில் காரில் சென்ற படி தண்ணி அடிப்பதும், பீடி பிடிப்பதும் கொஞ்சம் பதற்றம் தந்தது என்றாலும், பாடல் பிடித்திருந்தது.  கூடவே அந்தப் பாடல் காட்சியமைக்கப்பட்ட விதமும்.  கேட்டுப் பாருங்களேன்.


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : வாங்கியவன் திண்டாட


2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - வாங்கியவன் திண்டாட - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் தேனீர் போலவே தேனீர் கிடைத்தது. கடன் அன்பை முறிக்கும் என்று பல கடைகளில் எழுதி இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.  இங்கே வித்தியாசமாய் கவிதையாய் எழுதி இருந்தார்கள்.


கான மயிலாட

கடன் வந்து மேலாட

வாங்கியவன் கொண்டாட

நான் இங்கு திண்டாட

தயவு செய்து கடன்

கேட்காதீர்!


நான் சனிக் கிழமை அன்று புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். முதலில் பிள்ளையார் பாட்டில் ஆரம்பித்து, இரண்டாவதாய் தை மகளை வரவேற்று, மூன்றாவதாக அவரது மிகப் பிரபலமான பாடலான “தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு” பாடலைப் பாடினார்.  பிறகு விறுவிறுப்பான கும்மிப் பாட்டு, மாடு பாட்டு, கோழிப் பாட்டு, ஜல்லிக்கட்டுப் பாட்டு, குழந்தைகளுக்கான பாட்டு என்று எல்லா மக்களும் ரசிக்கும்படி பல பாடல்களை பாடினார்கள்.


நடுநடுவே நல்ல நகைச்சுவை உணர்வோடு பேசவும் செய்தார்.  கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பாடலான ”விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி” பாடலையும் பாடினார்.  மொத்தத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களைப் பாடி தில்லி தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல இசைவிருந்தினை நல்கினர் புஷ்பவனம் குப்புசாமி தம்பதிகள். அவர்களும், குழுவில் இருந்த மற்ற கலைஞர்களும் தில்லியின் கடும் குளிரிலும் இங்கே வந்திருந்து, அதுவும் ஒரு திறந்த வெளி அரங்கிலிருந்து மக்களை மகிழ்வித்ததற்காகவே பாராட்டலாம்!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் நகைச்சுவை  : Nothing


சில விஷயங்கள் அதிகம் விளக்கமே தேவையற்றதாக இருக்கும் - படிக்கும்போதே புன்னகைக்க வைக்கும் விஷயமாக இருக்கும் - அப்படியான ஒரு நகைச்சுவை…  ஆங்கிலத்தில் - உங்கள் பார்வைக்கு - பாருங்களேன்!



******


இந்த வாரத்தின் வேதனை :  மஞ்சள் நிறத் திருவிழா…



Bபசந்த்/வசந்த பஞ்சமி - தமிழகத்தில் அத்தனை கொண்டாடப்படுகிறதோ இல்லையோ வடக்கில் இந்த வசந்த பஞ்சமி மிகவும் சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.  அதிலும் கிராமப் பகுதிகளில் இந்த வசந்த பஞ்சமி நாளில் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். வசந்தத்தினை வரவேற்கும் விழாவாகவும், வசந்த நவராத்திரியின் ஐந்தாம் நாளை சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது.  நாம்தாரி எனும் பெயர் கொண்ட சீக்கியர்களின் ஒரு பிரிவினர் கூட இந்த விழாவினைக் கொண்டாடுவதுண்டு.  மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் நிறப் பூக்கள் என மஞ்சளை பிரதானமாக வைத்து விழாவினை கொண்டாடுவதோடு, பெண்கள் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் கடுகுச் செடிகள் இருக்கும் வயலில் வசந்தத்தை வரவேற்று கொண்டாடுவார்கள்.  ஆனால் இந்த வருடம் இங்கே பார்த்தால் அதனை அப்படியே மாற்றி தங்கம் வாங்கச் சொல்கிறார்கள். 


மஞ்சள் நிறத் திருவிழாவில் தங்கம் வாங்குங்கள் என புதிதாக (?) ஆரம்பித்து இருக்கிறார்கள்.  எப்படி அக்ஷய திருதியை சமயத்தில் தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி மக்களை மடைமாற்றிவிட்டார்களோ அதே போல இந்த வசந்த பஞ்சமி சமயத்திலும் மஞ்சள் நிறத் தங்கத்தினை வாங்க வேண்டும் என்று பாட்டுக்கு இடையே பல முறை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே இருக்க, அதன் மீதான மோகமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது - குறைவதாகத் தெரியவில்லை! விலை எத்தனை அதிகமானாலும் எங்களுக்குக் கவலையில்லை - வாங்கிக் கொண்டே தான் இருப்போம் என்று வாங்கும்போது இப்படி நொடிக்கொரு நகை விளம்பரம் வருவதைப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. 


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - பூனைகளின் குளியலறை :


என்னப்பா, போன சனிக்கிழமை தான் பத்மநாபன் அண்ணாச்சி பத்தி எழுதினப்போ பூனைகள் பத்தியும் சொல்லி இருந்த… இந்த வாரம் என்னடான்னா பூனைகளின் குளியலறை என்று தலைப்பில் எழுதப் போகிறாயா என்று கேட்காமல் கீழே இருக்கும் விளம்பரத்தினைப் பாருங்கள்! பூனைகளுக்காகவே ஒரு குளியலறை! எப்படியெல்லாம் விளம்பரத்திற்காக யோசிக்கிறார்கள்! இது ஒரு தாய்லாந்து விளம்பரம் - ஆங்கில சப்டைட்டில் உடன்!


******


இந்த வாரத்தின் தகவல் - House Arrest :



கொஞ்சம் பழைய செய்தி தான் - அதுவும் ஒன்பது வருஷ பழசு…. இருந்தாலும் ஸ்வாரஸ்யமான செய்தி தான்.  ஆங்கிலத்தில் இருக்கும் செய்தி - படித்துப் பாருங்களேன்!


In 2016, a 70-year-old man named Lawrence Ripple walked into a bank in Kansas City and handed the teller a note that said "I have a gun, give me money."


The teller was terrified and handed him nearly $3,000 in cash.


But instead of running to a getaway car, Lawrence simply took the cash, walked into the lobby, and sat down in a comfortable chair. He waited patiently for the police to arrive and arrest him.


When they arrived, Lawrence just looked up and said, "I'm the guy you're looking for."


When asked why he didn't run, he told them the brutal truth.


He had just had a massive argument with his wife. He had written the robbery note right in front of her and told her "I would rather be in jail than at home."


He pleaded guilty and was fully prepared to spend his final years in a peaceful prison cell. But the judge had a different sense of humor.


Since Lawrence had no prior criminal record and the gun wasn't real, the judge decided that prison was too harsh.


Instead, he sentenced Lawrence to six months of house arrest.

  

******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

24 ஜனவரி 2026


44 கருத்துகள்:

  1. வாசகமும் முதல் படமும் அழகு.

    "சிறிய இலைகள்தான்.  கூட முட்களும் இருக்கின்றனதான்.  விட முடியுமா?  என் வயிற்றுக்கு உணவிட்டால்தான் உங்களுக்கு பால் சுரக்கும்.  உழைக்காமல் வாழ்க்கையில்லை என்று  இன்றைய வாசகம் கூட சொல்கிறதே...!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் முதல் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். படத்திற்கான உங்கள் வரிகள் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. மலையாள பாட, நம்மூரு 'கும்மியடி பெண்ணே கும்மியடி' என்கிற பாரதி பாடல் மெட்டை நினைவு படுத்துகிறது!

    பழைய பதிவில்ப் பாடல்கள் காணாமல் போயிருந்தாலும் அணியம் கிடைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையாளப் பாடல் தமிழ் பாடலை நினைவுபடுத்தியது - மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      ஆமாம் - முன்பு பதிவிட்ட பாடல்கள் - வேறு தளங்களிலிருந்து எடுத்த பாடல்கள் - அவை இப்போது இல்லை - நானும் கவனித்தேன். ஆனாலும் அணியம் கிடைத்திருக்கிறதே உங்களுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. சரிதான்...  இன்னும் கொஞ்ச நாளில் வசந்த பஞ்சமி நாளுக்கு எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தங்கம் வாங்க வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.. 

    அப்புறம் வசந்தம் என்கிற வார்தையைக் கேட்டதும்,  வேறு சில பாடல்கள் இருந்தாலும் எனக்கு சட்டென 'வசந்தமே அருகில் வா' பாடல்தான் நினைவுக்கு வந்தது.  'வெண்பனி வீசிடும் மேகங்களே...'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஏதேதோ சொல்லி மக்களை அவர்களது விளம்பரம் வரவழைக்கிறது. என்ன சொல்ல...

      வசந்தம் - இந்த வார்த்தையில் தொடங்கும் இன்னும் சில பாடல்களும் இருக்கின்றன என்று எனக்கும் தோன்றியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பூனைகளுக்கான பாத்ரூம் புன்னகைக்க வைக்கிறது..  நமக்கே வசதியான பாத்ரூமைக் காணோம்..  இங்கே என்னடான்னா....  நல்லவேளை நாங்கள் பூனையும் வளர்க்கவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெர்மனில குழந்தை பெத்துக்கணும்னா தனி அறை மற்றும் பல வசதிகள் இருக்கணும். எப்பன்னாலும் சோதிப்பாங்க. இல்லைனா குழந்தையை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். திட்ட முடியாது அடிக்க முடியாது அடல்ட் போல நடத்தணும்.

      நீக்கு
    2. //நமக்கே வசதியான பாத்ரூமைக் காணோம்....// ஹாஹா... பல இடங்களில் பாத்ரூம் வசதிகள் சரியில்லை தான் - அதிலும் குறிப்பாக பயணங்களில் படும் அவஸ்தை... ஸப்பா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தனி அறை மற்றும் சில வசதிகள் இருந்தால் தான் குழந்தை பெத்துக்கவே முடியும் - ம்ம்ம்ம்... நம் பழைய கால வீடுகள், அதிலிருந்த வசதிகள் போன்றவை நினைவிற்கு வருகின்றன நெல்லைத் தமிழன். குறைவான வசதிகளே ஆனாலும் அக்காலக் கட்டத்தில் நடந்தவை வேறு இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பாவம் அந்த நபர்.  பேங்க்கை கொள்ளை அடித்ததற்கு பதில் அவர் மனைவி மனத்தைக் கொள்ளை அடித்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம். அது முடியாமல்தான் இந்த முடிவு எடுத்திருப்பார் போலும்!!!

      கீதா

      நீக்கு
    2. மனைவி மனத்தைக் கொள்ளை அடித்திருக்கலாம் - அது தான் முடியவில்லையே பாவம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. அதானே... முயற்சித்து முடியாமல் போக, இப்படியான முடிவு எடுத்திருக்கக்கூடும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வாசகமும் படமும் அழகு.

    முதற்படம் சூப்பர். ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்தேன். இன்றைய வாசகத்துக்கும் பொருந்திப் போகிறதோ?

    எட்டாக்கனியல்ல, முயற்சி செய்து நிமிர்ந்து நின்றால்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், அதற்கான படம் மற்றும் முதல் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. வாசகத்திற்குப் பொருத்தமான படம் - தானாக அமைந்ததே.

      முயற்சி திருவினையாக்கும் - இந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தது - உங்கள் வரிகளைப் படித்ததும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. ஆடு - படத்திற்கு இன்னொரு வரி. தாய்மை. தாய் சேய் நலம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய்மை - தாய் சேய் நலம் - ஆஹா... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. பாடல் கேட்டிருக்கிரேன் வெங்கட்ஜி! ரொம்பப் பிடித்த பாடல் இப்ப மீண்டும் கேட்டு ரசித்தேன். நானும் பல மொழிகளிலும் கேட்பதுண்டு ஆனால் எங்கள் தளத்தில் பகிர நினைத்து லிங் எடுக்க மறந்துவிடும்.

    இந்த மலையாளப்பாடலில் நீங்க சொல்லியிருக்கும் //மலைப்பகுதியில் காரில் சென்ற படி தண்ணி அடிப்பதும், பீடி பிடிப்பதும் கொஞ்சம் பதற்றம் தந்தது// எனக்கும் தோன்றியது. பதற்றம் என்பதோடு இப்படியான சீன் இவ்வளவு அழகான காட்சி அமைப்பில் அழகான பாடலுக்குத் தேவையா என்று.... மலையாள சினிமாக்களில் அவர்கள் மிக நன்றாக எடுக்கிறார்கள் கதையும் ஸ்க்ரீன் ப்ளேயும் இயக்கமும் என்று... தண்ணியும் சிகரெட்டும் இல்லாமல் எடுக்கமாட்டாங்களா என்று தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த ரசித்த பாடல் உங்களுக்கும் பிடித்த பாடலாக இருந்ததில் மகிழ்ச்சி.

      பல மலைப்பிரதேசங்களில் கிடக்கும் மது குப்பிகள் வேதனையைத் தரும். மலையாள சினிமாக்களில் இருக்கும் தரம் எப்போதும் பிரமிப்பு தரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. புஷ்பவனம் குப்பிசாமி பழைய பதிவுக்குப் போனால் அங்கு வீடியோவே காணவில்லை. பழையது எல்லாம் இப்படிப் போய்விடும் போல. பதிவு புரிந்தது. இப்போது கூட பொங்கல் விழா தில்லியில் கொண்டாடியதைப் பார்க்க முடிந்தது. ஜீவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி. அதில் அவர் திருவாசகம் பாடினார் ரொம்ப நன்றாக இருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சில பழைய பதிவுகளில் இருந்த இணைப்புகள் - வேறு இணைய தளங்களிலிருந்து எடுத்தவை தற்போது பார்க்கும்போது இல்லை.

      தில்லியில் சமீபத்தில் நடந்த விழா - சில காணொளிகள் வந்தன - ஆனால் பார்க்கவில்லை ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. தயார் என்பதற்கான தமிழ்ச்சொல் அணியம் என்பதையும் அறிய முடிந்தது. பப்பு அண்ணாச்சி அங்கு விடையை நிகழ்விற்கு வந்திருந்தவர்!! சொல்லியதையும் பார்த்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயார் - அணியம்! பழைய பதிவுக்குச் சென்று படித்ததில் மகிழ்ச்சி. ஆமாம்... நானும் அண்ணாச்சியும் இப்படி சில நிகழ்வுகளுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தோம். இனிமையான நாட்கள் அவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. கடனுக்கான கவிதையை ரொம்ப ரசித்தேன் நல்ல வித்தியாசமான சிந்தனை இல்லையா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடனுக்கான கவிதை - வித்தியாசமான சிந்தனை தான் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. நகைச்சுவை சிரித்துவிட்டேன்! பாவம் அந்தக் கணவர். தன் கையே தனக்குதவி வகை இல்லையோ?!!!!

    Bபசந்த்/வசந்த பஞ்சமி//

    கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பார்த்ததில்லை.

    //மஞ்சள் நிறத் திருவிழாவில் தங்கம் வாங்குங்கள் என புதிதாக (?) ஆரம்பித்து இருக்கிறார்கள். //

    கடவுளே! அது சரி கடவுளை ஏன் அழைத்தேன்!!!!!? கடவுளுக்குமே தங்கம் வாங்கிக் கொடுக்கிறார்களே மக்கள்! என்னவோ போங்க. இந்த மாதிரி விளம்பரங்கள் மக்கள் அதை உடனே கண்மூடித்தனமாக நம்பி கடைகளுக்குச் செல்லுதல் கடுப்பாகிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கம் மீதான மோகம் ஏற்கனவே இங்கே நிறைய... அதனை இன்னமும் அதிகமாக்குகின்றன இது போன்ற விளம்பரங்கள். புதிது புதிதாக ஏதேதோ கிளப்பிவிடுகிறார்கள் - கடைசியில் நிஜமாகவே அப்படித்தான் என்று மக்களை நம்பவைத்துவிடுகிறார்கள் என்பதே நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  13. விளம்பரத்தை மிகவும் ரசித்தேன். சிரித்தும் விட்டேன் பார்த்து. பப்பு அண்ணாச்சி பார்த்தாரா? கட்டினாலும் கட்டிவிடுவார்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அண்ணாச்சி கட்டினாலும் கட்டுவார். :) பூனைக்காக அப்படி சில விஷயங்கள் செய்வது குறித்து சொல்லியிருக்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. பாவம் அந்த மனிதர். அவ்வளவு கொடுமைகளா அவருக்கு!? வித்தியாசமான செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வித்தியாசமான செய்தி தான். விடுடா விடுடா என்று அவருக்கு அவரே சொல்லிக்கொண்டு கடக்க முடியவில்லை போலும்.... பாவம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  15. பாவம் அந்த மனிதர்.ஆனாலும் judge இத்தனை கொடூரமான(house arrest) தண்டனையைக் கொடுத்திருக்க வேண்டாம்.மனைவியை கொல்ல முயற்ச்சி செய்து ஜெயிலுக்குப் போயிருக்கலாம்! அவர் நினைத்த வாழ்வு கிடைத்திருக்கும்.

    மஞ்சள் நிறத்தில் தங்கம் மட்டும்தான் இருக்கிறதா? கஸ்தூரி மஞ்சளிலிருந்து வெந்தயம் வரை எத்தனையோ இருக்கின்றனவே!
    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலை முயற்சி செய்து விட்டு.... ஹாஹா... டெரர் ஐடியாவாக இருக்கிறதே விஜி.

      ஆம் மஞ்சள் வண்ணத்தில் எத்தையோ இருக்கிறது - ஆனாலும் தங்கத்தை வாங்கச் சொல்கிறது கடை விளம்பரம்... எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  16. ​பண்டு : நாட்கள் முன்பு
    பாடம் : வயல்
    வரம்பு: வரப்பு​பண்டு : நாட்கள் முன்பு
    பாடம் : வயல்
    வரம்பு: வரப்பு
    பாடல் 21 மில்லியன் ஹிட் என்பது ஆச்சர்யம்.
    கதம்பம், படம், கட்டுரை, கவிதை என்று கலந்து கட்டி சிறப்புற அமைந்தது.

    Jayakumar
    பாடல் 21 மில்லியன் ஹிட் என்பது ஆச்சர்யம்.
    கதம்பம், படம், கட்டுரை, கவிதை என்று கலந்து கட்டி சிறப்புற அமைந்தது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. மலையாளம் உங்களை இங்கே அழைத்து வந்துவிட்டது போலும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  17. ஹவுஸ் அரெஸ்ட்.. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக ஆகிவிட்டதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக ஆகிவிட்டதே// அதே தான். பாவம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. முதல் படம் தேவர் மகன் படத்தை நினைவுபடுத்தியது. கண்மாய் கரை உடைந்து அரற்றும் பெண்ணிடம் சாப்பிடும்மா அப்பத்தானே இன்னொரு குழந்தைக்கு பால் கொடுக்கமுடியும் என்று சொல்லும் காட்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் தேவர் மகன் படத்தினை உங்களுக்கு நினைவுபடுத்தியது - அந்தக் காட்சி இப்போது என் மனதிலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  19. மஞ்சள் நிறத் திருவிழா பெண்களும் மஞ்சள் நிறம்.. யதேச்சையாக அமைந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களும் மஞ்சள் நிறம் - ஒரே பெண் தான் - சாய் பல்லவி என்கிற நடிகை. வசந்த பஞ்சமி என்று தேடியபோது கிடைத்த படம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  20. வாசகம் அருமை. முதல் படம் மிக அருமை.
    அனைத்தும் அருமை. மலையாள பாடல் கேட்க நன்றாக இருக்கிறது. பூனையின் குளியல் அறை காணொளி அருமை.
    கடன் கேட்காதீர் கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், முதல் படம் மற்றும் பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....