அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட CGV தைப் பொங்கல் திருவிழா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
என்ன கார்த்தி? - 17 ஜனவரி 2026:
பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு சிலரும், பெயர் தான் எல்லாமே என்று மற்றவர்களும் சொல்லக்கூடும். பெயர்கள் என்னை நிறைய யோசிக்கச் செய்யும். நடைப்பயணத்தில் பார்க்கும் பதாகைகள், போஸ்டர்கள் என அனைத்திலும் இருக்கும் பெயர்களை கவனிப்பது எனக்கு வழக்கம். ஒரு சில பெயர்கள் எதற்காக இந்தப் பெயர் என்று யோசிக்க வைக்கும் விதமாக இருக்கும். தில்லியில் இருந்தவரை போஸ்டர்கள் அத்தனை பார்க்க முடியாது - அதிலும் குறிப்பாக “இமயம் சரிந்தது” போன்ற பதாகைகள், போஸ்டர்கள் அங்கே யாரும் வைப்பதில்லை, சுவற்றில் ஒட்டுவதில்லை. இங்கேயோ அது ஒரு வித விளம்பரமாகவே இருக்கிறது. யார் இறந்தாலும், அந்தப் பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் படம் போட்டு போஸ்டர்கள் ஒட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த நபர் இருந்த பகுதியில் தண்டோரா போட்டு, இன்னார் காலமானார் என்று அறிவிக்கும் பழக்கமும் இருக்கிறது என்றபோது இந்த போஸ்டர் விளம்பரங்கள் தேவையா என்ற எண்ணம் எனக்கு எப்போதும் ஏற்படும் ஒன்று.
அப்படியான எண்ணத்தினைக் குறித்து பிறிதொரு சமயம் பேசுவோம். இன்றைக்கு பேச வந்த பெயரில் என்ன இருக்கிறது என்ற தலைப்பினைக் கவனிப்போம். சமீபத்தில் அப்படியான போஸ்டரில் ஒரு நபர் இறந்தது குறித்த தகவலை வெளியிட்டு இருந்தார்கள். ஒரு மனிதரின் நிழற்படம் வெளியிட்டு, அதன் கீழே “பஜ்ஜி என்கிற முருகேசன்” காலமானார் என்ற தகவலை பகுதி முழுவதும் ஒட்டி வைத்திருந்தார்கள். முருகேசன் என அழகான பெயர் இருக்க, பஜ்ஜி என்கிற அடைமொழி அவருக்கு ஏன் வந்தது? அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்தித்தபடியே தான் நடந்து கொண்டிருந்தேன். தொடர்ந்து பல முறை அந்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அந்தப் போஸ்டரும், அவரின் பெயருக்கான காரணம் என்ன என்ற சிந்தனையை மனதுக்குள் ஓடச் செய்யும். இறந்தவர் இமயமா இல்லையா என்பதே இல்லை - இறந்து விட்டால் அவர் இமயம் என்பதாகவே இங்கே ஒட்டப்படும் போஸ்டர்கள் இருக்கின்றன.
அதைப் போலவே இங்கே இருக்கும் வீதிகளில் உள்ள வீடுகளின் பெயர்களையும் கவனிப்பது எனக்கு வழக்கமாக இருக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பெயர் வைப்பது வழக்கமான ஒன்று என்பதைப் போல தனி வீடுகளுக்கும் பெயர் வைத்து ஒரு மார்பிள் கல்லும் வைத்து விடுகிறார்கள். திருவரங்கத்தில் இருக்கும் பல வீடுகள் ஏதேனும் ஒரு விதத்தில் அரங்கனை, விஷ்ணுவை நினைவுபடுத்தும் விதத்தில் தான் இருக்கும். ரங்க பாதுகா என்ற பெயர் பார்க்கும்போதெல்லாம் அரங்கனின் பாதமலர்கள் கண்ணுக்குள் தோன்றும். அப்படி பல வீடுகளின் பெயர்களை கவனித்தபடியே நடப்பது வழக்கம் எனக்கு. சமீபத்தில் அப்படி ஒரு வீட்டின் பெயர் பார்த்ததும் மீண்டும் “எதற்காக இந்த வீட்டிற்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்?” என்ற எண்ணம் தோன்றியது. அப்படி என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? “அநி” என்கிற குறும்பெயர் தான் அந்த வீட்டிற்கு பெயர்.
இத்தனை குறுகிய பெயரான “அநி” என்கிற பெயர் வைப்பதற்கான காரணம் என்ன, அந்தப் பெயருக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கக்கூடுமோ? என்றெல்லாம் சிந்தனை செய்தபடியே நடந்தேன். உடன் வந்த இல்லத்தரசியிடமும் இந்தப் பெயருக்கு என்ன காரணம் இருக்க முடியும்? அதன் அர்த்தம் என்னவாக இருக்கக்கூடும் என்றெல்லாம் அளவளாவியபடியே நடந்தோம். அப்படி நடந்தபடியே வந்தபோது மஹாராஷ்ட்ரா பதிவு கொண்ட ஒரு வாகனம் எதிரே வந்தது. வாகனத்தில் ஐயப்ப பக்தர்கள்… வாகனத்தின் முன்புறம் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த பெயர் கண்களைக் கவர்ந்தது! அப்படி என்ன பெயர் எழுதியிருந்தது? அது பெயர் தானா? இல்லை ஒரு கேள்வியா? சிந்தனைகள் தொடர்ந்தன. அந்த வாகனத்தில் எழுதியிருந்தது இது தான் - “என்ன கார்த்தி”.
*******
பாரம்பரிய உடையில் - 18 ஜனவரி 2026:
பொங்கல் அன்று எங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை. தில்லியில் இருந்தவரை பொங்கல் அன்று அரசு விடுமுறை அல்ல! வேண்டியவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும் விதமாக வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே Restricted Holiday என்று அனுமதி தருவார்கள். நமக்கு வேண்டிய இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் இப்படி அனுமதிக்கப்பட்ட விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இங்கே தமிழகத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்த பிறகு முதல் முறையாக பொங்கல் விடுமுறை கிடைத்திருக்கிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் அலுவலகத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் வேஷ்டி - சட்டையில் பாரம்பரியமாக வரலாமே என்று இளைஞர் ஒருவர் குரல் கொடுக்க, 16-ஆம் தேதி அப்படியான உடையில் அலுவலகம் சென்று வந்தேன். அதற்கு முன்னர் வீட்டில், அந்த உடையில் ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, இல்லத்தரசி மொட்டைமாடிக்குச் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மகளும் செல்ல, மகள் சில படங்கள் எடுத்துத் தந்தார். அலுவலகத்திலும் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். படங்களைப் பார்த்த இல்லத்தரசி, ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு வித கமெண்ட் அடித்தார்… உதாரணத்திற்கு ஒரு படமும் அதற்கான கமெண்ட் மட்டும் இங்கே….
தைரியம்! தலைவனோட லட்சணம்… 🙂
பொதுவாகவே வேஷ்டி நமது பாரம்பரிய உடை என்பதோடு, அதனை உடுத்திக் கொண்டால் இருக்கும் Comfort, Pant போன்றவை அணியும் போது வருவதில்லை என்பதை நாம் அனைவருமே நன்கு உணர்ந்து தான் இருக்கிறோம். ஆனாலும் இப்படி ஏதோ ஒரு நாள் மட்டுமே அலுவலகத்திற்கு வேஷ்டியில் செல்ல முடிகிறது என்பதும் நிதர்சனம். தில்லியில் இருந்த வரை, அலுவலகத்திற்கு இப்படி வேஷ்டி சட்டையில் சென்றதே இல்லை - அதுவும் பொங்கல் சமயத்தில் குளிர்காலம் என்பதால் நிச்சயம் அலுவலகத்திற்கு நிச்சயம் வேஷ்டி சட்டையில் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. வாசிக்கும் உங்களில் எவராவது வேஷ்டி சட்டையில் அலுவலகத்திற்குச் சென்றது உண்டா? அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளியே, வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்படி அலுவலகத்திற்கு உடை அணிந்து சென்றதுண்டா? உங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
23 ஜனவரி 2026


முருகேசன் பஜ்ஜி பிரியராக இருந்திருக்கக் கூடும்! அநி என்பது கணவன் மனைவி இருவர் பெயர்களின் முதல் எழுத்துகளாக இருக்கலாம். என்ன கார்த்தி என்னும் வண்டியை நிறுத்தி.. "ஹலோ.. நான் கார்த்தி இல்லீங்க.. வெங்கட்" என்று சொல்லியிருக்கலாம்!
பதிலளிநீக்குநானும் இந்தப் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபடுவேன். நண்பர்களின் பெயர்கள்தான் பெரும்பாலும். அதேபோல் அந்தப் பெயரில் ஏதாவது பாடல் இருந்தால் சட்டென எனக்கு அது நினைவுக்கு வந்து விடும்!
பஜ்ஜி ப்ரியராக இருந்திருக்கலாம்... பஜ்ஜி கடை வைத்திருக்கலாம் - எதுவாக இருந்தாலும் அவருடன் அடைமொழியாக சேர்ந்து விட்டது பஜ்ஜி - இறந்த பின்னரும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
வேஷ்டி அணிந்து அலுவலகம் செல்லும் நிகழ்வு புன்னகைக்க வைத்தது. உண்மையில் நாம் நம் பாரம்பரிய உடையான வேஷ்டி யில் தான் இயங்க வேண்டும். வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்திய குழாய் கலாச்சாரத்தில் உழல்கிறோம்!
பதிலளிநீக்குகுழாய் கலாச்சாரத்தில் உழல்கிறோம் - ஆமாம். நாளைக்கு குடியரசு தினத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் - மீண்டும் வேட்டி - குர்த்தாவில் செல்லலாம் என நினைத்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குமுகபுத்தகத்தில் வாசித்தேன்.
என்ன கார்த்தி ரசித்தேன். சில பட்டபெயர்கள் காரணம் சுவரொட்டிகள்
ஒட்டிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
பாரம்பரிய உடையில் ஆதி சொன்னது போல தைரியம்! தலைவனோட லட்சணம்… 🙂
உண்மை கம்பீரம் தோற்றம்.
மகள் நன்றாக படம் எடுத்து இருக்கிறார்.
வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குபெண் குழந்தைகள் வயதுக்கு வந்தாலே போஸ்டர் பெரிய பதாகைகள் வைக்கிறாங்க...ஆச்சரியமாக இருக்கிறது. நல்லகாலம் இங்கு அப்படி எதுவும் இல்லை.
பதிலளிநீக்குகீதா
ஆம். பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் விஷயம் வடக்கில் மிக இயல்பான விஷயமாக இருக்கிறது. இங்கே விழா எடுத்து ஊருக்கே தெரியப்படுத்துகிறார்கள்... அதிலும் போஸ்டர்! ஹைட்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
அதேதான் காலமானாலும் பல இடங்களிலும் போஸ்டர் இருப்பதைப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குகீதா
காலமானால் போஸ்டர் - இங்கே திருச்சியில் அதிகமாக இருக்கிறது இந்தப் பழக்கம். தமிழகம் முழுக்க இப்படியா என்பது தெரியவில்லை. வடக்கில் இப்படியான போஸ்டர்கள் பொதுவாக பார்க்கவே முடியாது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
பஜ்ஜி முருகேஸன் என்பவர் பஜ்ஜி கடை வைத்திருந்தாரோ என்னவோ? நானும் இப்படியான பெயர்களைப் பற்றி யோசிப்பதுண்டு. அதில் சில கற்பனைகளும் நமக்கு சிலவற்றிற்கு வழி வகுக்கும்!
பதிலளிநீக்குஅநி என்பது குழந்தையின் பெயராக இருக்கக் கூடும்.
கேரளத்தில் பொதுவாகப் பெயர்கள் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். தெக்கே பரம்பில், சாலியத்துபரம்பில், அம்பத்துபரம்பில், களத்தில்பரம்பில் இப்படி
என்ன கார்த்தி? யோசிக்க வைக்கிறது.
கீதா
பெயர் குறித்த பதிவின் பகுதிக்கு தங்களது எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி. மலையாள வீடுகள் பெயரிலேயே இருப்பதை அறிவேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
வெளிநாட்டில் பாரம்பர்ய உடையில் கோயிலுக்கு பிறர் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அலுவலகத்துக்கு அல்ல. இப்போ தோணுது, போயிருக்கலாமோ என்று
பதிலளிநீக்குநானும் தில்லியில் நிகழ்வுகள், நண்பர்களின் வீடுகள், ஆலயம் போன்ற இடங்களுக்கு வேட்டியில் சென்றதுண்டு. ஆனால் அலுவலகத்திற்குச் சென்றதில்லை நெல்லைத் தமிழன்.
நீக்குதங்கள் நினைவுகளையும் இங்கே பகிர வைத்திருக்கிறது இப்பதிவு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வேஷ்டி சட்டையில் சூப்பர்! மேச்சிங் மேச்சிங் வேஷ்டி பார்டர்!!!
பதிலளிநீக்குரோஷ்ணி படம் எடுப்பதிலும் கில்லாடியாக இருக்காங்க.
கீதா
மகள் என்னை வேட்டி - சட்டையில் எடுத்த படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இந்த மாதிரி போஸ்டர்கள் பிரிண்ட் செய்ய 500 சதம் ஜி.எஸ்.டி, சுத்தம் செய்யும் சார்ஜ் ஒரு போஸ்டருக்கு 500 ரூபாய்னு வச்சால் ஒருவேளை எந்த இமயமும் சரியாதோ?
பதிலளிநீக்குஆமாம்..... இப்படியெல்லாம் சட்டம் இருந்தால் நல்லதே. ஆனால் இங்கே சட்டத்தை மதிப்பதே இல்லை என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பெயர்க் காரணம் குறித்த ஆராய்ச்சியும் எண்ணங்களும் சுவாரஸ்யம். பாராம்பரிய உடை என்றும் சிறப்பே.
பதிலளிநீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குபஜ்ஜி அவருடைய பிரியமான சிற்றுண்டியாக இருக்கும் பாரம்பரிய உடை எப்பொழுதும் அழகுதான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜயலக்ஷ்மி.
நீக்கு