ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

என் இனிய தோழி...பத்து வயதிலிருந்தே என் இனிய தோழி அவள். பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும், பின்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த காலத்திலும் கூட என்னோடு இருந்தாள். கல்யாணம் வரை இணைபிரியாது திரிந்தோம். கல்யாணம் முடிந்து தில்லி சென்ற பிறகு வேறு வழியின்றி பிரிந்து விட்டோம். அதன் பிறகு தோழியுடனான தொடர்பு முற்றிலும் விட்டுப் போயிற்று. இவளைப் போல அங்கும் சில தோழிகள் இருந்தாலும், அவர்கள் பேசும் மொழி ஹிந்தியானதால் அவ்வளவு ப்ரியம் இல்லை. பத்து வருடங்களுக்கு மேல் பிரிந்திருந்த தோழிகள்  இப்போது மீண்டும் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.யார் அந்த தோழி? யூகிக்க முடிந்ததா? மனிதர்களோடு தான் நட்பாக இருக்க முடியும் என்ற அவசியமில்லையே...... நான் சொல்வது என் வானொலித் தோழியைத் தான்.

காலையில் எங்களை எழுப்பும் போதே அப்பா வானொலியை ஆன் செய்து விடுவார். வந்தே மாதரம், சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், செய்திகள், திரைப்பாடல்கள் என்று எங்களுடனேயே குடும்பத்தில் ஒருத்தியாக பள்ளி செல்லும் வரை கூடவே இருப்பாள். மாலையிலும் துணையாயிருப்பாள். சனி, ஞாயிறுகளில் பகல் வேளைகளில்  பொழுது போக ஒரே வழி இவள் தான்!  பாடல்களை கேட்டுக் கொண்டே படிப்பேன். இதற்காக எவ்வளவோ முறை திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் காதினுள் போக முடியாதபடி பாட்டு வழிமறிக்கும்! 

உள்ளூர் பேருந்தில் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. இதற்காகவே வரும் அரசு பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு தனியார் பேருந்துகளில், அதுவும்பாட்டு பாடும் பேருந்தா? என்று பார்த்து ஏறி பயணித்ததும் உண்டு. இப்போதும் அப்படித்தான். சென்ற முறை திருச்சி வந்த போது கூட உள்ளூர் பேருந்தில் பாடல்களை கேட்டுக் கொண்டே வந்து, இறங்க வேண்டிய இடத்தில் இறங்க மனமில்லாமல் இறங்கினேன். அது ஒரு சுகமான அனுபவம்.

திருமணமாகி தில்லி சென்ற புதிதில் கணவர் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் எனக்கு துணை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்திலிருந்து, பதினைந்து கேசட்டுகளாவது கேட்பேன். பிறகு ஒலித்தகடுகளில். அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க நான் ஒருபக்கம் வேலை செய்து கொண்டிருப்பேன். அவர் அலுவலகம் சென்றபிறகு பாடல்களும், சத்தங்களும் தான் எனக்குத் துணை.

இப்போது காலை எழுந்திருக்கும் போதே வானொலியை ஆன் செய்து விடுகிறேன். திருச்சி பண்பலையில் கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், வெள்ளிக்கிழமைகளில் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் என பக்தி மணம் கமழ ஆரம்பிக்கும். வாசலை பெருக்கி கோலத்தைப்  போட்டு விட்டு பாலை அடுப்பில் வைத்து ஆத்திச்சூடியில் கேட்கும் புராணங்கள், இதிகாசங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு ஓடி வந்து பதிலைச் சொல்லி விட்டு, பின்பு பக்திப் பாடல்கள், திரைப்பாடல்கள் என தொடர்ந்து அவளின் ஸ்னேகம். இரவில்வெள்ளிரதம் என்ற பெயரில் இடைக்கால திரைப்படப் பாடல்களை கேட்டு விட்டு அன்றைய நாளை நிறைவு செய்கிறேன்.

தோழி புதுகைத்தென்றல் அவர்கள் அவர்களது தோழியை சந்தித்தது குறித்து இந்த பதிவில் எழுதியிருந்தார்கள். அதை படித்தவுடன் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த வரிகளை உடனே உங்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டியது. இதற்காக அவர்களுக்கு என் நன்றி.

உங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். கேட்காதவர்கள் இனிமேல் கேளுங்கள். ஆனந்தமாக, உற்சாகமாக ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குங்கள்.

இப்போது வானொலிப் பெட்டி (Radio) கடைகளில் கிடைப்பதே அரிதாகி விட்டதாம். நான் கூட தேடி ஒரு வானொலிப் பெட்டியை வாங்க வேண்டும். தற்போது அலைபேசியில் தான்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

30 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு ஆதி. நாங்கள் சிறு வயதில் வானொலி எல்லாம் பெரியவர்களுக்குத் தெரியாமல் கேட்டதுதான். கஸின்ஸ் எல்லோரும். எனக்கு ஆர்வம் உண்டு வானொலி கேட்பதில். ஆனால் அப்போதும் வாய்ப்பு இல்லை....அதன் பின்னும் இதுவரை வாய்ப்பு இல்லாததால் பழக்கம் இல்லாமல் போயிடுச்சு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டிலும் சுதந்திரம் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. குட்மார்னிங். படங்கள் எதுவுமே கண்ணுக்குப் புலனாகவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   பயணத்தில் இருக்கிறேன். தில்லி திரும்பிய பின் சரி செய்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. வானொலி நினைவுகள் வெகு சுகமானவை. வானொலி நினைவுகளில் வகியாகையாக நினைவு கூரலாம். ஒலிச்சித்திரங்கள், நாடக விழா ஒருமணிநேர நாடகங்கள், பதினைந்துநிமிட தொடர் நாடகங்கள், பினாகா கீத்மாலா, இலங்கை வானொலி நினைவுகள் என்று நிறைய நினைவுகூரலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய நினைவுகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. மாதத்துக்கு இரண்டுமுறை வானொலி புத்தகம் வெளிவரும். தவறாமல் வாங்கிவிடுவோம். அதில் நிகழ்ச்சி நிரலில் பல சமயம் என்னென்ன பாடல்கள் போடப்போகிறார்கள் என்றும் தெரிவித்திருப்பார்கள். அருகாமை வீட்டுக்காரர்களுக்கு நாங்கள் முன்னதாகவே அடுத்த பாடல் இதுதான் என்று சஸ்பென்ஸ் உடைக்கும் ஆர்வம் இருக்கிறதே... தனி சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வானொலி புத்தகம் பார்த்த நினைவு இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. படங்களே வரலை. என்னனு பாருங்க வெங்கட். வானொலி எல்லாம் எங்க அப்பாவைப் பொறுத்தவரை ஆடம்பரம். தினசரி கூட வாங்க மாட்டார்! :) வாங்கிக்கொண்டிருந்தது சில வருடங்கள் ஆனந்தவிகடன் மட்டுமே. அதுவும் நாலணா ஆனதும் நிறுத்திட்டார். :) அக்கம்பக்கம் தயவில் தான் வானொலிப் பாடல்கள் எல்லாம் கேட்போம். யார் வீட்டிலானும் போட்டால் அங்கேயே போய் உட்கார்ந்துப்போம். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிச்சித்திரம் என்னும் பெயரில் திரைப்படங்களின் வசனச்சுருக்கங்களைத் தொகுத்து வெளியிடுவாங்க! அன்னிக்குப் பலர் வீட்டுகளில் வானொலியைப் பெரிசா வைப்பாங்க! பல சமயங்களிலும் தெருவில் போகிறவர்கள் கூட நின்று கேட்டதுண்டு. சென்னை வானொலி 2 பின்னர் விவித் பாரதி வந்த பின்னர் தான் அண்ணா வேலைக்குப் போய் ஒரு ட்ரான்சிச்டெர் வாங்கிக் கொடுத்தார். பின்னர் அது தான் காலை எழுந்திருக்கும்போது. அப்பாவுக்குக் கேட்காமல் சத்தம் குறைத்து வைக்கணும்.:) சில சமயம் முக்கியமான செய்திகள், நிகழ்ச்சிகள் எனில் அப்பாவே போடச் சொல்லுவார். அப்போ ஏதோ எவரெஸ்ட் மேலேயே ஏறின சந்தோஷம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் பதிவாயின், படங்களோடு அப்படியே காபி பேஸ்ட் செய்திருந்தால் படங்கள் வராது. படங்களை தனியே இறக்கி மீண்டும் ஒட்டவேண்டும்!!!

   நீக்கு
  2. paste கொடுத்தால் படங்களோடு வந்துடும். ஆனாலும் கொஞ்சம் பிரச்னைகள் இருக்கும். paste as plain text கொடுத்தால் படங்கள் வராது. படங்களைத் தனியே காப்பி செய்து வெளியிடலாம். பிரச்னை இருப்பதில்லை. எனக்கு இது தான் சரியா வருது.

   நீக்கு
  3. சில சமயத்தில் Blogger இப்படி படுத்தும்! சரி செய்து விடலாம்!

   நீக்கு
 7. வானொலி நினைவுகளை இங்கே தந்ததில் ம்கிழ்ச்சி.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

  பதிலளிநீக்கு
 8. HTML அப்படியே காப்பி செய்தது தான். என்ன பிரச்சனை என தில்லி திரும்பியதும் பார்க்கிறேன். தற்போது சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கிறேன். நான்கு முறை நேரம் மாற்றி விட்டார்கள்.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்/கீதாம்மா.

  பதிலளிநீக்கு
 9. வானொலி நினைவுகள் அருமை
  ஒரு நாளைக்க பத்து அல்லது பதினைந்து கேசட்
  வியப்பாகத்தான் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. கணினி on செய்வதற்கு முன் on செய்வது வானொலி... பண்பலை இல்லாவிட்டால் வேலை ஓடாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. என் வீட்டில் ஒரு பாட்டுப்பெட்டிஇருக்கிறது என்மனைவி எழுந்ததும் ஆன் செய்து விடுவாள் ஒரு மணிநேரத்துக்கு அதிகமாகவே சுலோகங்கள் ஒலிக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. ரேடியோ பெட்டி கிடைப்பது குதிரைக்கொம்புலாம் இல்ல அண்ணி. பிளிப்ஸ் ஷோரூம்ல கிடைக்குது. இப்பலாம் ஹோம் தியேட்டரில்கூட ரேடியோ வருது. அதில்லாம ஆன்லைனில்கூட கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 13. பதின்ம வயதில், வீட்டில் இருக்கும் சாமி பாட்டு கேசட்டை எடுத்து இளையராஜா பாடல்களாக மாற்றிக்கொண்டு வந்து அப்பாவிடம் திட்டு வாங்கியதை நியாபகப் படுத்திவிட்டிர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

   நீக்கு
 14. //உங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்//

  வானொலி பற்றி முன்பு பதிவு போட்டு இருக்கிறேன்.
  காலை எழுந்தவுடன் வானொலி கேட்கும் பழக்கம் இப்போதும் இருக்கிறது.
  இப்போது ரேடியோ சிட்டி கேட்கிறேன். காலை 5 முதல் 7 வரை.
  அன்றைய நாள் விசேஷங்கள், சொல்வார்கள். கோவில் பற்றி சொல்வார்கள், இடை இடையே பாடல் நல்ல பக்தி பாடல்கள் வைப்பார்கள்.

  கல்யாணம் ஆன புதிதில் அதுதான் எனக்கு தனிமையை போக்கும் ஒரு தோழி. அம்மா வீட்டில் நிறைய பேருடன் இருந்து விட்டு சத்தமே இல்லாத வீட்டில் இருப்பது மனதில் வெறுமையை கொடுக்கும். அப்போது அதுதான் உற்ற துணை கணவர் வரும் வரை. அப்புறம் இருவரும் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு வானத்து நடசத்திரங்களை பார்த்துக் கொண்டு பாட்டு கேட்போம்.
  அப்போதும் குடித்தனம் மாடி வீடுதான். கீழ்வீட்டில் வீட்டு உரிமையாளர் இருந்தார்கள், மாடியில் இரண்டு போர்ஷன், ஒன்று வீதியை வேடிக்கை பார்க்கலாம், அந்த பகுதியில் நாங்கள் இருந்தோம். திருவெண்காடு கோவிலை தரிசனம் செய்யலாம் தினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. பாடல் பிரியரா நீங்கள்? அருமை....!!!! பள்ளித் தோழியே வந்து போனாயா? என்று உங்கள் பதிவைப் பார்த்து பாடத் தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்பூரணி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....