திங்கள், 25 பிப்ரவரி, 2019

மேஜையில் உதித்த மண்டையோடு – சுதா த்வாரகநாதன்




ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஒரு பதிவில் மகள் பற்றி எழுதி இருந்தேன்.  இன்றைக்கு மகன் பற்றி எழுதப் போகிறேன்.
 
மகன் ப்ளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் கீழே வரும் பிரபல மருத்துவமனை ஒன்றில் இடம் கிடைக்க அங்கேயே MBBS வகுப்பில் சேர்ந்தான். முதல் வருடம் வீட்டிலிருந்தே கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதம் ஆகியிருக்கும் – நான் அலுவலகத்தில் இருந்தபோது மகனிடமிருந்து அழைப்பு – “எனக்கு இன்றைய வகுப்புகள் முடிந்து விட்டன. நான் வீட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன்” என்று சொன்னதும், “வீட்டுச் சாவி இருக்கிறது அல்லவா” என்றதற்கு ”அதெல்லாம் இருக்கும்மா…. நான் வேற ஒரு விஷயம் சொல்றதுக்குதான் கூப்பிட்டேன்” என்றான் – அவனது குரலில் மகிழ்ச்சி ததும்பியதை உணர முடிந்தது. ஏதோ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்திருப்பான் என நினைத்தபடியே மேலே கேட்டேன்.

சீனியர் மாணவர் ஒருவரிடம் சொல்லி வைத்ததில் அவனுக்கு ஒரு மண்டையோடு மற்றும் சில எலும்புகள் கிடைத்தன என்பதை மகிழ்ச்சி ததும்ப அவன் சொல்ல, நான் “என்னது மண்டையோடா?” என்று அலுவலகத்தில் இருந்ததை மறந்து அலற, பக்கத்தில் உள்ளவர்கள் “க்யா ஹுவா?” என்று அலற ஒரு வழியாக சமாளித்தேன். சமாளித்துக் கொண்டு, மகனிடம் இப்போது எங்கே இருக்கிறாய், நண்பர்களின் ஹாஸ்டல் அறையிலேயே அவற்றை வைத்துவிட்டு வீட்டுக்கு வா என்று சொல்ல, மகனோ, நான் ஏற்கனவே வீட்டிற்கு அருகே வந்து விட்டேன் என்றான். சரி, சரி அவற்றை வீட்டிற்குள் வைக்காதே, வெளியே செருப்புகள் வைக்கும் அலமாரி இருக்கிறதே அதில் வை, நான் வீட்டிற்கு வரும் வரை அவற்றை உள்ளே கொண்டு வராதே என்று சொல்லி வேலைகளில் மூழ்கினேன்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி, அழைப்பு மணியை அழுத்த, மகன் ஓடி வந்து கதவைத் திறந்தான். நான் அக்கடாவென சோஃபாவில் உட்கார, கதவைத் திறந்த மகன், நேரே வெளியே சென்று பெரிய பையை வீட்டிற்குள் எடுத்து வந்தான். “இங்கே பாருங்கம்மா – இதான் மண்டையோடு, இங்கே பாரு முழங்கை எலும்பு” என ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்தான். நான் கொஞ்சம் அருவருப்புடன் “ஏண்டா இதை உன் நண்பர்களின் ஹாஸ்டல் அறையில் வைக்கக் கூடாதா?” எனக் கேட்க, அங்கே வைத்தால் நான் எப்படிம்மா படிக்க முடியும், எவ்வளவு கஷ்டப்பட்டு என் சீனியர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வந்தேன் தெரியுமா?” என்றான். ஒவ்வொன்றாக மேஜையின் மீது எடுத்து காட்சிப்படுத்தினான். பெண்கள் புடவைகள் வாங்கியபின் வீட்டிற்கு வரும் தோழிகளிடம் ஒவ்வொன்றாய் எடுத்துக் காண்பிக்கும் காட்சி என் மனதில் ஓடியது!

அம்மா, இது தான் தோள்பட்டை எலும்பு [Collar Bone] – இதோ பாரு இங்கே தான் இந்த எலும்பு இப்படி இருக்கும் என அவன் தோள் அருகே வைத்துக் காண்பித்தான். இது முழங்கை எலும்பு [Humerus bone], இது மணிக்கட்டு எலும்பு [Radius ulna], முழங்கால் எலும்பு [Femur bone] என ஒவ்வொரு எலும்பாக எடுத்து அது எந்த இடத்தில் இருக்கும் என்பதைச் செய்து காண்பிக்க, எனக்கு “ஒட்டியாணம், காசுமாலை…” என ஒவ்வொன்றாய் எடுத்துக் காண்பிக்கும் சந்திரமுகி பட ஜோதிகா நினைவுக்கு வந்து பயமுறுத்தினார். எனக்கோ, இது எவன்/எவளுடைய எலும்போ என்ற அசூயையும் ஒரு வித பயமும் மனதில் வந்தது. “டேய் இதில் என்னடா படிக்க இருக்கு, பார்த்துட்ட இல்ல, திருப்பிக் கொடுத்துடலாமே” என்று அழாக் குறையாகக் கேட்டேன்.  போம்மா, எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி வந்தேன் தெரியுமா, ஒவ்வொரு எலும்பிலும் ஒரு புத்தக அளவு படிக்க இருக்கிறது – எந்தெந்த இடத்தில் எலும்புகள் திசுக்களோடு சேர்ந்திருக்கும் என பேச ஆரம்பித்தான்.

நானோ, அழாத குறையாக, எவ்வளவு நாள் தான் இந்த மண்டையோடு மற்றும் எலும்புகளை நம் வீட்டில் வைத்திருக்கப் போகிறாய்? என்று கேட்க, குறைந்த பட்சம் ஒரு வாரம் வைத்திருப்பேன் என்றான். சரி சரி, முதல் ஹால் வரை தான் இவற்றுக்கு அனுமதி, உள்ளே கொண்டுவரக் கூடாது என்று சொல்லி வேலைகளைப் பார்க்க உள்ளே சென்று விட்டேன். திரும்பவும் ஏதோ வேலையாக ஹாலுக்கு வர, படித்துக் கொண்டிருந்த மகன், “அம்மா, இந்த மண்டையோடு, எலும்புகளை ஏன் வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என திரும்பவும் கேட்க, “பேசாமல், இந்த மண்டையோடு கூட இந்த எலும்புகளை பெருக்கல் குறி போல் வைத்து வாசல் கதவுக்கு மேல் மாட்டிவிடு, ஒருத்தரும் நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்க” என்று சொன்னேன். சாப்பிடுவதற்கு முன்னர் எல்லாவற்றையும் வெளியே கொண்டு வைத்து விட்டு, அவன் குளித்து வந்த பிறகு தான் இரவு டிஃபன்.

மறு நாள் மாலை அலுவலகத்திலிருந்து மாலை வீட்டிற்கு வரும்போது ஹாலில் உள்ளே சிறு மேஜையின் மீது மண்டையோடு ஜம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தது! பூ ஜாடி இல்லாக் குறையைத் தீர்க்க மண்டையோடு – அது என்னைப் பார்த்து சிரிப்பது போல வேறு இருக்க டென்ஷன் ஆனேன்! கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் இதே கதை தான் ஓடிக் கொண்டிருந்தது வீட்டில். வீடே எதோ மந்திரவாதி வீடு போல இருந்தது. யாராவது நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் என்ன நினைப்பார்களோ என்ற கவலை வேறு எனக்கு. ஒரு வழியாக ஒரு வாரம் பத்து நாட்களுக்குப் பிறகு அவற்றைக் கல்லூரிக்கு எடுத்தச் சென்ற பிறகு தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. 

இந்தக் கதையை என் உறவினர் பெண்ணிடம் சொல்ல [அவளும் ஒரு மருத்துவர் தான்], முதலாம் ஆண்டு அனாடமி படிக்கும்போது எலும்புகள் மண்டையோடு பற்றி எல்லாம் படிக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லி அவள் படித்த கதையையும் சொன்னாள். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த போது, படிப்பதற்காக இப்படி எலும்புகள் தேவைப்பட, கல்லூரி வாட்ச்மேனிடம் சொல்ல, அவர் சுடுகாட்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்தார் என்று சொன்னாள். படித்து முடித்தபின், அதை அறையிலேயே வைத்துக் கொள்ள பயம். அடுத்த வருடம் ஜூனியர்கள் வரும் வரை அறையில் வைத்துக் கொள்ள முடியாது என்பதால், தேர்வு முடிந்த பிறகு, ஒரு நாள் இரவு சாப்பாடு முடித்து, தோழிகளுடன் சேர்ந்து ஹாஸ்டல் மைதானத்திற்குச் சென்று பெரிய குழி தோண்டி எலும்புகள், மண்டையோடு போன்றவற்றை புதைத்து வைத்த கதையை சிரித்தபடியே சொன்னாள்…..

மகன் இப்போது MD முடிக்கப் போகிறார். மேஜை மீது அமர்ந்து என்னைப் பார்த்த மண்டையோடு பற்றி இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என்றாலும் அப்போது கலவரம் தான்!

விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

சுதா த்வாரகநாதன்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங். மண்டையோட்டு மந்திரவாதி ( !! ) கதை பயமுறுத்துகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      மண்டையோட்டு மந்திரவாதி! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தோழி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியா? நான் மருத்துவக்கல்லூரிக் குடியிப்பில் வசித்திருக்கிறேன். ஆண்கள் ஹாஸ்டலுக்கு பாரடைஸ் என்று பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு எழுதியவரின் உறவினர் அந்தக் கல்லூரியில் தான் படித்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    மண்டை ஓட்டைப் பார்த்ததுமே ஏதோ த்ரில்லர் போலனு தோனுது வரேன். இன்னிக்கு மீ லேட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ...ஸோ காப்பி ஆத்திட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. ஹ ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடில...ஸாரி, ஒட்டியாணம், காசுமாலை, ஹா ஹா ஹா

    மகனின் நினைவு ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  5. படிக்கையில் நல்ல நகைச்சுவையாக இருந்தாலும் நேரில் பார்க்கையில் திக் திக் திக் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் திக் அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. ஒரு மருத்துவம் படிக்கும் மாணவர் வீட்டில் நடக்கும் சம்பவம் ரசிக்கும்படி இருந்த்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  7. மருத்துவப் படிப்போன்னால் மண்டையோடு வீடு வருமா. திகில் தான். அழகாகப் போகிறது கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. அட..என்ன ஆர்வம்

    படிக்க வெகு சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. மண்டைஓடு மேஜையில் என்றால் கொஞ்சம் பயம் தான்.
    அனுபவத்தை அருமையாக சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. Nice post. This post helped to understand how the students encountering the anatomy of humans to become a great and efficient doctor.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  13. ஒரு முறை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிய்ல் எக்சிபிஷன் நடந்தது அதிலொருஇறந்த உடலை காட்டி அதன் பாகங்களை விளக்கிக்காட்டினார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அனுபவங்களையும் சொன்னதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. ஸ்வாரஸ்யமான பதிவு! என் மகனும் இப்படித்தான் செய்வானோ என்று எண்ணிப் பார்த்துக் கொண்டேன். அவனும் இப்போது மருத்துவம் இரண்டாவது வருடம். ஆனால் ரஷ்யாவில். அங்கு எப்படி அனாட்டமி கற்றுக் கொடுக்கிறார்கள் என்றும் இவனும் மண்டை ஓடு எலும்புகள் தேடுகிறானோ என்று கேட்க வேண்டும்!!!!!!!

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஷ்யாவில் மண்டை ஓடு எலும்புகள் தேடுகிறானோ எனக் கேட்க வேண்டும்... ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்கள் முதல் வருகையோ பெயர் அறியா நண்பரே.... மகிழ்ச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....