வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ஏக் காவ்ன் மே ஏக் கிஸான் ரகு தாத்தா





தலைப்பை பார்த்ததுமே புரிந்திருக்குமே உங்களுக்கு. ஆமாங்க நான் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவங்களை, அந்த சோகக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆறாம் வகுப்பு ஆரம்பத்திலேயே எங்க வீட்டுக்கு மேல் வீட்டில் உள்ள ஒரு ஹிந்தி கற்பிப்பவரிடம் என்னை முதல் தேர்வான ”பிராத்மிக்” (PRATHMIC) சேர்த்து விட்டார் என் அம்மா.


அதிலிருந்து ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தேர்வாக எழுதித் தேறிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து மேல் வீட்டு டீச்சரிடம் கற்றுக் கொள்ள செல்ல வேண்டும். இதுவே எரிச்சல் என்றால், தப்பாக எழுதினாலோ இல்லை தெரியவில்லை என்றாலோ முட்டி போடச் சொல்வார் அந்த ஆசிரியர். இது பெரிய எரிச்சல். பள்ளிப்படிப்பு தவிர கூடுதலாக படிக்கும் இதிலும் முட்டி போடச் சொல்வது பெரிய கொடுமை… (நீங்க என்ன சொல்றீங்க?)

அந்த ஆசிரியர் அருகிலேயே மர ஸ்கேல் அல்லது குச்சி (எதுக்கா? அடிக்கத் தான்...) வைத்திருப்பார். இதனுடன் ஹிந்தி தமிழ் டிக்‌ஷனரி. ஆமாங்க முக்கால் வாசி நேரம் இதைப் பார்த்து தான் அர்த்தம் சொல்வார். ஏனோ இந்த முட்டி போடுதல், அடி வாங்குவது, எதற்கெடுத்தாலும் டிக்‌ஷனரியை பார்த்து சொல்லுதல் இந்த காரணத்தினாலேயே ஹிந்தியே பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னாலும் மேல் வீடு தான் அருகில் இருக்கிறது என்பதால் வேறு எங்கும் அனுப்பவில்லை.

பரீட்சைக்கு முன்னர் இருமுறை ஏதாவது பள்ளிகளில் செமினார் வைப்பாங்க. அப்பா அழைத்துச் சென்று விட்டு விட்டு இருந்து மாலையில் அழைத்து வருவார். முதல் பரீட்சையன்று தேர்வு எழுதும் செண்டருக்கு சென்றதும் பயமாகி விட்டது. காரணம் அங்கு சிறியவர்கள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை தேர்வு எழுதுவதைக் கண்டதும் எனக்குள் என்னவோ செய்தது. கிடுகிடுவென்று தேர்வினை எழுதி விட்டு வந்து விட்டேன். வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பயத்தில் வாந்தியே எடுத்து விட்டேன். அன்று செளசெள (என்ர ஊர்ல மேரக்காய்) கூட்டு சாப்பிட்டிருந்தேன். அன்று முதல் பல வருடங்களுக்கு செளசெளவே சாப்பிடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் எவ்வளவு என்றெல்லாம் கேட்கக் கூடாது ஜஸ்ட் பாஸ். போதாதா?...

அடுத்து மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்ற இரு தேர்வுகளையும் எப்படியோ படித்து தேறி விட்டேன். அதற்கடுத்த நான்காம் தேர்வான பிரவேசிகாவில் ஒருமுறை தோற்று விடாப்பிடியாக (வீட்டில் விடவில்லை) படித்து மீண்டும் எழுதி தேறினேன். அதோடு எங்க மேல் வீட்டு டீச்சரும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஏரியாவுக்கு போயிட்டாங்க. ”அப்பாடா! தப்பித்தேனா…” என்றால் இல்லையே…

அடுத்த தேர்வான விஷாரத்தில் இரண்டு பிரிவுத் தேர்வு (பூர்வாத், உத்தராத்) இது டிகிரிக்கு ஈடானது. இதை கற்றுக் கொள்ள டவுன் ஹாலில் ”அஞ்சு முக்கு” என்றொரு பிரபலமான இடம் உண்டு. விஜயா பதிப்பகம், நேந்திரம் சிப்ஸ்களின் மணம் என்று பல விஷயங்கள் உண்டு இந்த இடத்தில். என் அப்பாவின் அலுவலகத்தின் அருகில் தான் உள்ளது இந்த இடம். இங்கு சக்தி ஹிந்தி செண்டர் என்ற இடத்தில் என்னை சேர்த்து விட்டார் அப்பா. இங்கு நிறைய பேர் அவரவர்களின் நேரத்திற்கு தகுந்த படி கற்றுக் கொள்ள வருவார்கள்.

பள்ளியிலிருந்து மாலை வந்ததும் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாகி பேருந்தை பிடித்து 20 நிமிட பயணத்தில் அப்பாவின் அலுவலகம் சென்று விட்டு (எதற்கா? அப்போ தானே எதிர்த்தாற் போல் உள்ள அரோமா பேக்கரியில் ஏதாவது சாப்பிட வாங்கித் தருவார்) அங்கிருந்து இந்த செண்டருக்கு செல்வேன். இங்கு வருபவர்களில் நான் தான் பள்ளி மாணவி. மற்றவர்கள் டிகிரி முடித்து விட்டு வீட்டிலிருப்பவர்கள். அல்லது வேலைக்கு செல்ல முயற்சி செய்பவர்கள். இந்த டீச்சர் நல்லபடியாக சொல்லித் தந்தார். தேர்வும் எழுதி முதல் பிரிவான பூர்வாத்தை தேறினேன்.

அடுத்த பிரிவான உத்தராத்துக்கு தான் திண்டாட்டமாகி விட்டது. நானும் ஒன்பதாம் வகுப்புக்கு சென்றிருந்தேன். பள்ளி நேரத்தையும் ஷிப்ட் முறையில் மாற்றியதால் மாலை 5.30க்கு தான் வீட்டுக்கு வருவேன். அதற்கப்புறம் ஹிந்தி வகுப்புக்கு செல்வது கஷ்டமாகி விட்டது. (இருட்டிய பிறகு வெளியே அனுப்ப மாட்டார்கள் அல்லவா…) சில நாட்கள் காலையில் சென்டருக்கு சென்று வருவேன். அதற்கு பிறகு ஆர்.எஸ் புரத்தில் சில நாள், இப்படி எப்படியோ நானே படித்து இரண்டாம் பிரிவையும் தேறி விட்டேன். இந்த விஷாரத் இரு பிரிவுகளையும் முடித்தவுடன் திருச்சியில் பட்டமளிப்பு விழா வைத்திருந்தார்கள். மூப்பனார் அவர்களின் கையால் வாங்க வேண்டிய சான்றிதழை திருச்சிக்கு செல்ல முடியாத காரணத்தால் தபாலில் பெற்றுக் கொண்டேன்.

இதன் கூடவே DIRECTORATE OF HINDI EDUCATION, DELHI (அப்பவே தில்லியோடு தொடர்பு வந்திடுச்சு பாருங்க.) யிலிருந்து ஆறு மாத டிப்ளமோ கரஸ்ஸில் பண்ணலாம் என்று சேரச் சொன்னாங்க. அதையும் சேர்ந்து தான் வைப்போமே என்று சேர்ந்தாச்சு. அப்பப்போ பாடங்கள் வரும். பேப்பர்ஸும் பூர்த்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். செமினார்கள் இருக்கும். கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு எழுதினேன். எல்லோரும் பெரியவர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த தேர்வு எழுதி தேறினால் INCREMENT  கிடைக்குமாம்.

என் பின்னால் இருந்த ஒருவர் நான் எழுதிய விடைத்தாளை காண்பிக்கும்படிச் சொல்ல, பயந்து போய் என் விடைத் தாளையே எடுத்து கொடுத்து விட்டேன். (கொடுக்காம போனா வெளில வந்து அடிச்சுடுவாங்களோ என்ற பயம் தான்) அவரும் எழுதி விட்டு மரியாதையாக கொடுத்து விட்டார். அந்த டிப்ளமோவையும் முதல் வகுப்பில் தேறி விட்டேன்.

இப்போ நான் பத்தாவது வந்திருந்ததால் அதை காரணம் காட்டி அடுத்த தேர்வான ப்ரவீன் பண்ண முடியாது என்று சொல்லி வீட்டில் தப்பி விட்டேன். நான் D.M.E பண்ணிய பிறகு கூட அப்பா எவ்வளவோ தடவை சொல்லியும் நான் கேட்கவில்லை முடியாது என்று சொல்லி விட்டேன். ஒவ்வொரு தேர்வின் போதும் அங்கிருப்பவர்களை பார்த்தால் எல்லோரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தாலே வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும். ஹிந்தி இலக்கணம் இருக்கே… அப்பப்பா...

சரி இவ்வளவு படித்து என்ன பயனடைந்தேன் என்கிறீர்களா?...

திருமணம் முடிந்து தில்லி வந்து இறங்கியதிலிருந்து இப்போ வரை ஹிந்தியில் எழுதிய எந்த பெயர்ப் பலகையையும் உடனே படித்து விடுவேன். வேறு எதற்கும் உபயோகமாக வில்லை. பேச்சு வழக்கு என்பது நாளாக ஆகத் தான் வந்தது. பல மாநிலத்தவர்கள் இங்கிருப்பதால் ஒவ்வொருவரின் ஸ்டைலில் அவர்கள் பேசும் ஹிந்தியை புரிந்து கொள்வதற்கே நாளானது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

40 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    ஹிந்தி கற்றுக்கொண்ட அனுபவமா?

    பதிலளிநீக்கு
  2. பாக்யராஜ் அந்தக் காட்சியை வைத்ததிலிருந்து இந்த வரிகள் ரொம்ப பேமஸ் ஆகிவிட்டது!! நானும் ஹிந்தி கற்றுக்கொண்டேன். மதிமா முடித்து ராஷ்ட்ரபாஷா போகும் முன்பாக ஹிந்தி ஆசிரியருடன் ஒரு சண்டை. என் பாஸின் அக்காவிடம் அவர் வாலாட்டி விட்டார். அப்படியே அப்புறம் ஹிந்தி நின்று போனது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாக்யராஜ் படம் வந்த பிறகு.... உண்மை. மிகவும் பிரபலமான வரிகள்.

      நான் தில்லி சென்ற பிறகு தான் ஹிந்தி, பேச, எழுத, படிக்கக் கற்றுக் கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமான அனுபவங்களாய் இருந்திருக்கின்றன. ஆமாம், ஹிந்தி கற்றுக்கொண்டதனால் பெரிய உபயோகம் எதுவும் இல்லை. நான் நேஷனல் சேனலில் மற்றும் தியேட்டரில் ஹிந்திப் படங்கள் பார்த்துக் கற்றுக்கொண்ட ஹிந்தியே அதிகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி கற்றுக் கொண்டதனால் பெரிய உபயோகம் எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது ஸ்ரீராம். ஹிந்தி தெரிந்து இருந்தால், மொழிப் பிரச்சனை இன்றி இந்தியா முழுதும் சுற்றி வரலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ராமாயணம், மகாபாரதம் சீரியல் வந்த நேரங்களில் ஊர் முழுவதும் ஆயுஷ்மான்பவ என்றெல்லாம் சொல்லி அலைந்து கொண்டிருந்தார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயுஷ்மான் பவ.... ஹாஹா... அதன் பல வசனங்கள் பேசுவார்கள்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம் அதே போல எதற்கெடுத்தாலும் வசனங்களில் "பரந்து" வருமே....இஃப் அண்ட் பட் இல்லாமல் மகாபாரத வசனமே இல்லைனு சொல்லும் படி....பரந்து...அதிகம் பயன்படுத்தப்பட்ட சீரியல்னு நினைக்கிறேன்...

      கீதா

      நீக்கு
    3. ஹாஹா பரந்து... என்ற வார்த்தை பலரும் பயன்படுத்தி நம்மையும் படுத்தினர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. ஹிந்தி கற்றுக்கொண்ட அனுபவங்கள் அருமை.
    தலைப்பு பாக்கியராஜ் படத்தில் வரும் காட்சியை நினைவு படுத்துகிறது.

    //பள்ளிப்படிப்பு தவிர கூடுதலாக படிக்கும் இதிலும் முட்டி போடச் சொல்வது பெரிய கொடுமை… (நீங்க என்ன சொல்றீங்க?)//

    நீங்கள் சொல்வது உண்மை. கூடுதலாக படிக்கும் கல்வி மகிழ்ச்சியுடன் படித்தால்தான் நன்றாக இருக்கும். அங்கும் பள்ளி போல் தண்டனைகள் என்றால் சில குழந்தைகள் படிக்காமல்கூட விட்டுவிடும் .நீங்கள் தொடர்ந்து படித்தற்கு பாராட்ட வேண்டும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முட்டி போடச் சொல்வது கொஞ்சம் அதிகம் தான் - அதுவும் இப்படி கூடுதல் வகுப்புகளில்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. ஹிந்தி மொழி கற்கும் சமயத்தில் நடந்த சம்பவங்கள் வேடிக்கையாக இருந்தது. நான் தில்லி வரும் சமயம் ஹிந்தி புத்தகம் ஒன்று வாங்கி முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தில்லி வந்த புதிதில் அனுபவப் பாடமாகத் தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன். பிறகு எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  7. எங்களுக்கெல்லாம் பள்ளியிலேயே ஹிந்தியும் ஒரு பாடம். எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி இருந்தது. அப்போத்தான் ஹிந்தி அரக்கிக்காகப் போராட்டம் எல்லாம் நடந்து ஹிந்தி ஆசிரியரான எங்க அப்பாவைப் பள்ளி மாணவர்கள் பலரும் அரிவாளும், கம்பும் எடுத்துக்கொண்டு வெட்டுவதற்காக வீட்டுக்கு வந்து ஒரே அமர்க்களம். அப்புறமாத் தமிழக அரசுகளின் தயவால் பள்ளிகளில் இருந்து ஹிந்தி அரக்கி ஒழிந்தாள். ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகள் மூலமும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மூலமாகவும் ஹிந்தி அரக்கிப் பள்ளிகளில் பிரவேசித்தாள். தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார சபா மூலம் ஹிந்தி கற்றுக்கொள்பவர்கள் லக்ஷக்கணக்கில் ஆனார்கள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி அரக்கி..... :)

      சில விஷயங்களை எதிர்க்கும் போது அதிகம் வளர்ச்சி பெற்று விடுவது இயல்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கர்ந்தை ஜெயக்குமார் ஜி.

      நீக்கு
  9. ஹிந்திப்படங்கள், வடநாட்டு உடை, வடநாட்டு உணவுகள் எனப் பிரபலம் ஆனதும் எண்பதுகளில் தான், தொலைக்காட்சிகள் தயவில். அதுவும் ராமாயணம், மஹாபாரதம் சீரியல்களில் முன்னெல்லாம் ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பு என்பதால் அதற்காகவே ஹிந்தி கற்றுக்கொண்டவர்கள் உண்டு எனக் கேலியாய்ச் சொல்வார்கள். பின்னர் வந்த தொண்ணூறுகளில் மொழி பெயர்க்கிறேன் பேர்வழி என முழி பெயர்த்துத் தொடர்கள் வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழி பெயர்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது இப்பொழுது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. ஹிந்தி சினிமா, ரேடியோ கேட்டு ஹிந்தி கற்றுக்கொள்ள முடியுமா? என்னவோ ஹிந்தி சிறிய வயதில் கற்றுக்கொள்ளாமலேயே வீணடித்துவிட்டேன்.

    உத்தராத் முடித்தும் பேச்சுமொழி வரலையா? ஆனால் அதற்குள் ஏகப்பட்ட வினைச்சொற்கள் வெகாபுலரி (குறைந்த பட்சம் ஆயிரக்கணக்காக) வந்திருக்குமே... அது போதாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் ஹிந்தி படித்தாலும் பேச்சு மொழி பழகப் பழகத்தான் வரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. இந்தி கத்துக்கிட்டீங்களா?! அப்ப நீங்க ஆண்டி தமிழன்.

    டைப்பிங்க, இந்தி கத்துக்கிட்டா வேலை கிடைக்கும்ன்னு அப்ப சொல்வாங்க. பேங்க் வேலைக்கு இந்தி தெரிஞ்சிருக்கனும்ன்னும் சொல்வாங்கல்ல!! நான் டைப்பிங்க மட்டும் போனேன். இந்தி பக்கம் போகலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. You highlighted the experience nicely. Understanding Hindi does not take much time. But speaking fluent Hindi is impossible. Hindi is widely spoken. While travelling in India it will help you to interact and enjoy the trip.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி ஜி.

      நீக்கு
  14. நான் பள்ளியில் படிக்கும்போது ஹிந்தி கட்டாய பாடமானால் தேர்வில் பாசாக வேண்டுமென்றில்லை மா நே ஹம்கோ ஜன்ம தியா ஹை உசி கா தூத் பீகர் ஹம் படே ஹுவே ஹை இதுதான் நான்படித்த ஹிந்தி வகுப்பில் சரியாக ஹிந்திபடிக்காதவர்களை சுவரோடு சேர்த்து நிற்கச் சொல்லுவார் ஒரு சமயம் வகுப்பில் எல்லோரும் சுவரோடு சேர்ந்து இருப்போம் அந்தக் காலத்திலேயே ஹிந்தியைக் கட்டாய பாடமாக்க நிறைய பாடு பட்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    ஹிந்தி அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய மொழி. இந்தியா முழுவதும் செல்லுமிடங்களில் இந்த மொழி பயன்படும். நான் படிக்கும் காலங்களில் பள்ளிகளில் தடைசெய்து விட்டனர். தங்களைப் போல் தனியாகவும் கற்று கொள்ளவில்லை. விடாப்பிடியாக கற்று தேர்ந்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இங்குள்ள பள்ளிகளில் கண்டிப்பாக கற்று தருகின்றனர்.அது ஒரு அனுகூலம். தங்கள் அனுபவ பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. ஹிந்தி மொழி தெரிந்து கொண்டால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சமாளிக்க முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  16. ஹா ஹா ஹா ஹா ஆதி நானும் அப்படித்தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன். ராஷ்ட்ர பாஷாவில் நான் ராஷ்ட்ரபாஷா தேர்வு வரை பாஸானேன். அப்புறம் கற்க முடியவில்லை. இதற்கே நாங்கள் சம்மர் வெக்கேஷனில் எங்கள் கிராமத்திலிருந்து கஸின்ஸ் எல்லோரும் சேர்ந்து நடை தான். பஸ்ஸுக்கு காசு தரமாட்டார்கள் இது எக்ஸ்ற்றாவாச்சே ஹிந்தி ஃபீஸ் கட்டனுமே....வீட்டுலதான் கற்றுக் கொள்ள அனுப்பியதும் என்றாலும் லீவில் வகுப்பு தொடங்கும் அப்புறம் பள்ளி தொடங்கியதும் ஸ்கூலில் இருந்து நாகராஜாகோவில் க்ராமம் வரை நடந்து செல்லனும் அங்குதான் டீச்சர் வீடு. நல்ல டீச்சர்.

    கிராமத்திலிருந்து நாங்கள் வயக்காடு வழியாக நடந்து செல்வோம் காலையில் சென்றால் மதியத்திற்கும் மேல் தன வீடு வருவோம்.

    ராஷ்ட்டிரபாஷாவுக்கு மேல் கற்க முடியாமல் போய்விட்டது. தொடங்கியதே 9 ஆம் வகுப்பு லீவில்தான் அதனால் தான்.

    கற்கும் ஹிந்தியும் பேச்சு வழக்கும் ரொம்பவே வித்தியயசம். அதுவும் நீங்க சொல்லிருப்பது போல பல மாநிலங்களின் வித்தியாசங்கள் புரிய நாள் ஆகும். நான் இந்த அரைகுறை ஹிந்தி வைத்துதான் இப்ப பங்களூரில் பிழைப்பை ஓட்டுகிறேன். கன்னடாவும் கற்க முயற்சி செய்கிறேன் கூகுள் உதவியுடன்.

    ஹிந்தி தெரிந்தால் மிக மிக மிக நல்லது. எந்த மாநிலம் சென்றாலும் ஈசியாக இருக்கும்...

    நீங்கள் ஹப்பா ப்ரவீணுக்கு முன்பு வரை போயிருந்திருக்கீங்களே..!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஹிந்தி தெரிந்தால் பெரும்பாலான மாநிலங்களில் சமாளித்து விடலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  17. நான் ஹிந்தி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. பிறந்து வளர்ந்தது எல்லாம் மிக மிக சிறிய கிராமம் தேனி அருகில்...அப்புறம் கல்லூரி வந்த சமயம் ஹிந்தி எதிர்ப்பு...என்று வாய்ப்பு இல்லாமல் போச்சு.

    சகோதரி நீங்கள் இவ்வளவு தூரம் கற்றுருக்கிறீர்களே பாராட்டுகள்!

    வெங்கட்ஜி உங்களுக்கு நெஸசிட்டி இஸ் தி மதர் ஆஃப் இன்வென்ட்ஷன் என்பது போல் நல்லதொரு வாய்ப்பு இல்லையா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தமிழகத்தில் இருந்த வரை ஹிந்தி கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. வகுப்புகள் நடந்தாலும் என்னை அனுப்பியதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  18. உங்களுடைய சோக கதை மாதிரியே என்னிடமும் அந்த சோக கதை இருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், நான் வெறும் ராஷ்ட்ரபாஷாவிலேயே கோட்டை விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      நீக்கு
  19. ஹா ஹா ஹா! எனக்கு ஏனோ ஹிந்தி கற்றுக் கொள்ள சிறு வயதில் தோன்றியதே இல்லை. டிகிரி முடித்தப் பிறகு 30 நாட்களில் ஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி? புத்தகம் வாங்கி கற்றுக் கொண்டேன். அதனால் எழுத்துக்கூட்டி படித்து விடுவேன். மஸ்கட்டில் அரசு வேலையில் சேர்ந்த பொழுது,"வாட் இண்டியன் யூ ஆர்? யூ டோண்ட் நோ ஹிந்தி, யூ டோண்ட் நோ மலையாளம்." என்று அந்த ஊர் ஓமானியர்கள் கேலி செய்த பொழுது அவமானமாக உண்ர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி ஓகே..... மலையாளம் தெரிந்தால் தான் இந்தியன் என்பது கொஞ்சம் அதிகம் தான். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....