செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சாப்பிட வாங்க - பல்லே பல்லே சோலே


வட இந்தியர்கள் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நிறைய சப்ஜி [Side Dish] செய்வார்கள். அதில் முக்கியமான சப்ஜிகளில் இந்த சன்னா மசாலாவும் ஒன்று. இதற்கு காபூலி [Kabooli] சன்னா, பெரியதாக இருக்கும் வெள்ளைக் கொண்டக் கடலை கிடைத்தால் நன்றாக இருக்கும். அப்படிப் பட்ட சன்னா மசாலா செய்முறையை தெரிந்து கொள்வோமா?


தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டக் கடலை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்
தனியாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – ½ டீஸ்பூன்
சோலே மசாலா – ½ டீஸ்பூன் (இப்போதெல்லாம் கடைகளிலேயே கிடைக்கிறது.)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
சீரகம் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
எலுமிச்சைசாறு – புளிப்பு சுவை பிடித்தால், கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு சேர்க்க விருப்பமுள்ளவர்கள் இரண்டு பல் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். நான் பெரும்பாலும் சேர்ப்பது கிடையாது.

செய்முறை:

ஒரு கப் கொண்டக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் மேலே கொடுக்கப் பட்ட பொருட்களில் உள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றுடன் பிடித்தால் பூண்டு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் செய்வது போல குக்கரில் நேரிடையாக செய்யப் போகிறோம். அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். பின்பு அதில் அரைத்து எடுத்த வெங்காய-தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி, சோலே மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்படி வதக்க குக்கரின் மூடியை திருப்பிப் போட்டு மூடி வைத்தால் இந்த க்ரேவி நம் மேல் தெளிக்காமலும், கிச்சன் டைல்ஸ் மேலும் தெளிக்காமலும் இருக்கும்.

க்ரேவி நன்றாக வதங்கியதும் ஊற வைத்திருந்த கொண்டக் கடலையை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (மூழ்கும் வரை) குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் (மிகவும் குறைந்த தணலில்) 25 நிமிடங்கள் வைத்து அடுப்பை நிறுத்தவும். சிறிது நேரங்கழித்து குக்கரைத் திறந்து விருப்பமிருந்தால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளைப் போட்டு அலங்கரிக்கவும். சுவையான சன்னா மசாலா தயார்.

நான் முதலில் கொண்டக் கடலையை தனியாக வேக வைத்து க்ரேவி செய்து அதில் கலந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு என் தோழி ஷோபனாதான் க்ரேவியிலேயே கொண்டக்கடலையை  வேக வைக்கும் முறையை சொல்லிக் கொடுத்தார். அவருக்கு என் நன்றி. இப்பொழுதெல்லாம் என்னவருக்கு நான் கொடுக்கும் மதிய உணவில் சோலே கொடுத்தால் அதை சாப்பிடும் அவரது அலுவலக நண்பர்கள் பஞ்சாபிகள் செய்தது போலவே இருக்கிறது என்கிறார்களாம். நீங்களும் செய்து உங்களவரை அசத்துங்களேன்!!!.  சாப்பிட்டு உங்களவர் “(B)பல்லே (B)பல்லே” என ஒரு பஞ்சாபி பாங்க்ரா நடனமே ஆடுவார்!!!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

ஆதி

40 கருத்துகள்:

  1. பல்லே பல்லே என்றதும் பஞ்சாபியர் நடனம் நினைவுக்கு வருகிறது! குட் மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஓ... பஞ்சாப் பாங்ரா நடனத்தின் காரணத்தால் வந்த பெயர்தானா அது? கடைசியில் படித்துத் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. சுவையான மசாலா. எங்கள் வீட்டில் செய்யும்போது கொண்டைக்கடலையை எடுத்து விட்டு கிரேவி மட்டுமே போட்டுக்கொள்வேன். என் இளையவன் கொண்டக்கடலை மட்டும் போட்டுக்கொள்வான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... இரண்டு பேரின் சுவையும் தனித்தனி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    ஆ இன்று ஸ்ரீராம் முந்திக் கொண்டார். நான் அபிராமி அன்னையின் அங்கியைப் பார்த்துட்டு இருந்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      இன்றைக்கு ஸ்ரீராம் முந்தி விட்டார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஹா ஹா ஹா ஹா பல்லே பல்லே நு பஞ்சாபி பாங்க்ரா ஆடிக் கொண்டே சோலே செஞ்சீங்களா ஆதி!!!

    எங்க வீட்டுல ரொம்பப் பிடித்த டிஷ் இது. நானும் உங்களைப் போல கொ க வை க்ரேவியி நன்றாக வதங்கியதும் அதிலேயே வேக வைத்துவிடுவேன். அது இன்னும் டேஸ்டைக் கொடுக்கும் ஈசி வழி பாருங்க அப்படிச் செய்து பாத்து அப்புறம் அதன் சுவை நன்றாக இருக்கவே அப்படியே செய்ய தொடங்கிட்டேன்...

    சூப்பரா இருக்கு நீங்க செஞ்சுருக்கறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பிடித்த சப்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  6. பல்லே பார்த்ததுமே எனக்கு என் கசினுக்கு பாங்க்ரா டான்ஸ் வேடம் மாறு வேஷத்துக்கு நான் போட்டுவிட்ட நினைவு அவளுக்குப் பரிசும் கிடைத்தது...கல்லூரியில் அவள் படித்த போது...எல்லாம் திருமணத்துக்கு முன்..ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  7. இங்கே அவ்வளவு பிடித்தம் இல்லை. குழந்தைகள் வந்தால் பண்ணுவேன். இந்த வெள்ளைக் கொ.க. சாட்டுக்கும் அதிகம் பயன்படுத்தலாம். பஞ்சாபியர்கள், ராஜஸ்தானியர்கள் இதை வேக வைக்கையில் டீ பாக் அல்லது டீத்தூளை ஒரு துணியில் கட்டிப் போடுவார்கள். ஊற வைத்த கொண்டைக்கடலை கொஞ்சமும் அரைக்கையில் சேர்ப்பார்கள், மாதுளை முத்துக்கள் அதிகம் சேர்ப்பார்கள். நான் பல சமயங்களிலும் அரைத்து விடாமல் தக்காளி, வெங்காயம் வதக்கிட்டுப் பின்னர் தக்காளியை ப்யூரி எடுத்துச் சேர்த்துடுவேன். முறைப்படி பண்ணினால் புளி எல்லாம் விட்டு வெல்லம் எல்லாம் போடணும்.ஜீரகப்பொடி வறுத்துக் கடைசியில் சேர்ப்போம். எப்போவானும் அம்மாதிரி விரிவாகப் பண்ணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா உணவுப் பொருட்களை செய்வதிலும் நிறைய வகைகள் உண்டு. அவரவர்களுக்குப் பிடித்த விதத்தில் செய்து கொள்வது தான் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    அழகான முதல் படமே கண்ணை ஈர்க்கிறது.
    செய்முறைகளுடன் பஞ்சாபி பல்லே சப்ஜி சூப்பராக உள்ளது. வேக வைத்த கொண்டைக்கடலையைதான் இந்த வெங்காய தக்காளி கிரேவியுடன் சேர்த்துக் செய்து கொண்டிருந்தேன். (தக்காளியின் புளிப்பில் கடலை வேகா விட்டால் என்ன செய்வது என்ற பயம்.) இந்த முறையில் இனி செய்ய வேண்டும்.
    செய்முறைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  9. உங்கள் மூலமாக ஒரு புதிய சிற்றுண்டி. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. நானும் கொண்டைக்கடலையை வேகவச்சுதான் சேர்க்குறேன். இனி இப்படி செஞ்சு பார்க்கிறேன்.

    சோலே மசாலா உட்பட எந்த மசாலாவையும் கடையில் வாங்கும் பழக்கமில்லைங்க அண்ணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. நானும் கொண்டைக்கடலையை வேகவச்சுதான் செய்வேன் ...இந்த வாரம் இந்த முறையில் செஞ்சு பார்த்து படத்தோடு வரேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. சோலே பட்டூராவில் வரும் சைட் டிஷ் தானே எனக்கும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. //இப்பொழுதெல்லாம் என்னவருக்கு // - இந்த வரியைப் படிக்கும்வரை வெங்கட் எழுதினது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்... செய்முறை நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. இன்று எங்கள் வீட்டில் சன்னாவும் சப்பாத்தியும். நான் கீதா அக்கா சொல்லியிருக்கும் முறையிலதான் செய்வேன்.
    சன்னாவை தனியாக வேக வைக்காமல் சேர்த்தால் வாயு தொல்லை வராதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாயுத் தொல்லை இருந்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  17. மீயும் பல்லே.. பல்லே.. :) சொல்ல வைக்கப் போகிறேன்ன் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள்.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  18. இது மாதிரி நீங்க சொல்லித்தான் செய்ய ஆரம்பிச்சேன் ஆதி :) 2011 னு நினைக்கிறன் அப்போலேருந்து இப்படி கிரேவியோட வேக வைச்சிதான் செய்றேன் ..செம ருசி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  19. நல்லா இருக்கே கிரேவி.
    முன்பும் நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்து இருக்கிறேன் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  20. எனக்கு வெறுமனவே சாப்பிட பிடிக்கும் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....