வெள்ளி, 22 மார்ச், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


கடந்த புதன் அன்று எனது வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது நினைவில் இருக்கலாம். இந்தப் பயணத் தொடரின் முதல் பகுதியை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டி வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


சென்ற பகுதியின் இறுதியில் சொன்னது போல பயணத்திற்கு முன்பதிவு செய்ய முடியாமல் இருந்தது.  கடைசி வழி தத்கால் மூலம் முன்பதிவு செய்வது தான் என்று இருந்தேன்.   சரி தத்கால் மூலம் முன்பதிவு செய்ய முயற்சிக்கலாம் என்று காத்திருந்த சமயம் இணைய தளத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது… 


வந்தே பாரத் இரயிலில் பயணம்….



18 டிசம்பர் 2023 அன்று மாலை மூன்று மணிக்கு வாரணாசி நகரிலிருந்து தலைநகர் தில்லி நோக்கி இரண்டாவது வந்தே பாரத் இரயில் துவங்கப் போகிறது என்பது தான் அந்த மகிழ்ச்சியான செய்தி… 


20 டிசம்பர் முதல் வாரத்தின் ஆறு நாட்கள் இந்த இரண்டாவது வந்தே பாரத் இரயில் இயங்கும் என்று தெரிய வந்தது… ஆஹா… நல்ல விஷயம் தான். நமக்காகவே இந்த இரண்டாவது வந்தே பாரத் இரயில் தொடங்கி இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஏதோ ஒரு விதத்தில் இறைவன் நம்மை வாரணாசி நோக்கி வரவழைக்கிறார் என்றும் தோன்றியது.


19 ஆம் தேதி முதல் இந்த இரயிலுக்கு முன்பதிவு செய்யலாம் என்று தெரிந்தது. நான் பார்த்தபோது தில்லியிலிருந்து வாரணாசி செல்லவும் அங்கேயிருந்து தில்லி திரும்பவும் இடம் நிறையவே இருந்தது. சரி என முன்பதிவு செய்து விட்டேன். ஏற்கனவே தில்லி - வாரணாசி - தில்லி என ஒரு வந்தே பாரத் இரயில் இயங்கிக் கொண்டிருக்கும் போது இன்னுமொரு வந்தே பாரத் இரயில் அவசியமா? அத்தனை பயணிகள் மற்ற இரயில்களை விட கட்டணம் அதிகமான இந்த இரயிலில் பயணிக்க விரும்புவார்களா என்ற எண்ணம் வந்தது. பொதுவாகவே இந்த மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் அதிகம் தான் என்பதால் சரியாகவே திட்டமிட்டு இருப்பார்கள் என்று தோன்றியது. பயணிக்கும் போது தெரிந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது… 


தொடங்கியது காசி பயணம்…..


வெள்ளிக்கிழமை வரை அலுவலகத்தில் தொடர் வேலைகள்… மனதுக்கும் உடலுக்கும் அதீத அயர்ச்சி… ஒவ்வொரு நாளும் பதினைந்து மணி நேரம் அலுவலகத்தில் உழைப்பு… வீட்டிலும் சமையல், சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவும் வேலை, தோய்க்கும் வேலை என தொடர் வேலைகள்… பயணம் குறித்து எதுவுமே யோசிக்க முடியவில்லை. சனிக்கிழமை (இன்று) மாலை 03.00 மணிக்கு புது தில்லி இரயில் நிலையத்திலிருந்து வாரணாசி நோக்கி பயணம் செய்ய வேண்டும். காலை பத்தரை மணிக்கு தான் என் உடைகளை எடுத்து முதுகுச் சுமையில் வைக்க ஆரம்பித்தேன்! 


எனது வீடு புது தில்லி இரயில் நிலையத்திலிருந்து 15 நிமிட தொலைவில் இருப்பதால் 02.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் கூட போதும். அப்படி இருக்க அலைபேசியில் ஒரு தகவல்….. நான் செல்ல வேண்டிய இரயில் வாரணாசியில் இருந்து 02.00 மணிக்கு தில்லி வந்து பயணிகளை இறக்கிவிட்டு, சுத்தம் செய்யப்பட்ட பிறகு 03.00 மணிக்கு தில்லியில் இருந்து வாரணாசி நோக்கி புறப்படும். ஆனால் அந்த இரயில் வருவது தாமதம் ஆவதால் மாலை 03.00 மணிக்கு பதிலாக 04.25 மணிக்கு புறப்படும் என்ற தகவல் குறுஞ்செய்தி ஆக வந்தது. ஆகவே மெதுவாக வீட்டில் இருந்து புறப்பட்டு புது தில்லி இரயில் நிலையம் வந்து சேர்ந்த போது மணி 02.45. 


பொதுவாக 03.00 மணிக்கு மூன்றாம் நடைமேடையில் இருந்து இந்த இரயில் புறப்படும். ஆனால் இன்று பன்னிரெண்டாம் நடைமேடை. புது தில்லி இரயில் நிலையத்தின் பஹாட் கஞ்ச் பக்கத்திலிருந்து (முதலாம் நடைமேடை பக்கம்) பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு மேம்பாலம் வழி பன்னிரெண்டாம் நடைமேடைக்கு வந்து சேர்ந்தேன். வாரணாசியில் இருந்து வர வேண்டிய வந்தே பாரத் இரயில் 03.15 மணிக்கு வந்து சேர்ந்தது (ஒண்ணே கால் மணி நேரம் தாமதம்)! அதன் பிறகு கதவுகள் பூட்டப்பட்டு சுத்தம் செய்யும் பணி முடிந்த பிறகு வாரணாசி நோக்கிச் செல்லும் பயணிகள் உள்ளே செல்ல வேண்டும். 


ஒரு வழியாக 04.15 மணிக்கு இரயிலுக்குள் நுழைந்து எனக்கான ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தேன். 04.35 மணிக்கு எங்கள் இரயில் புறப்பட்டது. வாரணாசி நோக்கிய எனது பயணம் எப்படி இருந்தது, கிடைத்த அனுபவங்கள் என்ன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். தொடர்ந்து பயணிப்போம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


15 கருத்துகள்:

  1. நான் ஒரே முறை சென்று வந்திருக்கிறேன்.  நீங்கள் அடிக்கடி அங்கு சென்று வருகிறீர்கள்.'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கில் இருப்பதால் இப்படியான சில இடங்களுக்கு நிறைய முறை பயணம் செய்ய முடிகிறது - அது தான் காரணம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இன்னும் வந்தே பாரத்தில் பயணம் செய்யலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷதாப்தி இரயிலில் பயணம் செய்ததுண்டா? அதைவிட இது இன்னும் கொஞ்சம் வசதிகளுடன் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    2. இன்று ஷதாப்தியில் பெங்களூரிலிருந்து சென்னை வந்தேன். உணவுலாம் வேண்டாம்னுட்டேன், நல்லாருக்காது என்ற எண்ணத்தில்.

      நீக்கு
    3. உணவின் தரம் ஓகே. இன்னும் முன்னேற்றம் செய்யலாம். எல்லாம் காண்ட்ராக்ட் வருடக்கணக்கில் கொடுத்துவிட்டாலும், அவர்கள் தரும் உணவின் தரத்தினை அவ்வப்போது சரிபார்ப்பதும் அவசியம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. பயணத் தகவல்கள் சுவாரஸ்யமாக ஆரம்பித்து இருக்கிறீர்கள்.

    தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வர இருப்பதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாரணாசி பயண விபரங்கள், வந்தே பாரத் ரயிலின் நேரங்கள், மற்றும் தாங்கள் தங்களின் அலுவலக/ வீட்டு வேலைகளை முடித்து விட்டு சென்ற அனுபவங்களுடன் பதிவு நன்றாக துவங்கியுள்ளது. மேலும் பயணத்தின் இனிமையான விபரங்களை அறிய தங்கள் பயணத்துடன் தொடர்கிறேன். நாங்கள் இன்னமும் செல்லாத இந்த இடங்களைப்பற்றி தகவல்களை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. இரண்டாவது ரெயில் சேவை இறையருளால் உங்களுக்காகவே தொடங்கப்பட்டதுதான்.

    வருகிறோம் பயணத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் நீங்களும் தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  7. சார் உங்களுடைய phone number வேண்டும் ஏதாவது தெரிந்துகொள்ள

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....