சனி, 9 மார்ச், 2024

காஃபி வித் கிட்டு - 186 - வலிகள் மறந்த நேரம் - உறக்கம் - பக்கத்து வீட்டில் இருப்பவர் - சார் - மதுபனி ஓவியங்கள் - 3-2-3 - பார்பி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஜைனர்களின் வழிபாட்டுத் தலங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை : வலிகள் மறந்த நேரம்


வலிகள் மறந்த நேரம்

🌼💮🌼💮🌼💮🌼💮🌼💮🌼💮🌼💮🌼



ரோஜா வானின் கீழே 

மழையும் மண்ணும் சுகிக்கும் 

இனிய தீண்டலின் இசைவென 

கிளர்ந்து வளரும் பசும்புல் 

ஒற்றைக் குயிலின் கீதம் 

முற்றுப்பெறாமல் 

காற்றில் கனக்கும் ரகசிய வலி

தழை தின்று களைத்த ஆடுகள்

 தம்குட்டிகளுக்கு மடிதந்து 

அயரும் அந்தி 

பனிபோர்த்திய நேரத்தில் 

தனிமை விரட்ட வந்த 

ஓர் ஆட்டை கையணைத்து எடுத்து 

கனிவாய் ஒரு தற்படம் 

கைபேசியில்  பிடித்து

வெள்ளைப்பூவென ஒரு முறுவல் 

வலிகள் மறந்த மௌன ஆறுதல்

 ©® SREEMATHI 

1st MARCH 2017


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் : உறக்கம் இல்லா இரவுகள்


குளியலறையில் ஒரு குழாயிலிருந்து தண்ணீர் சொட்டும் சப்தம்… வீட்டின் வெகு அருகே இருக்கும் மந்திர் மார்க் எனும் பிரதான சாலையில், நொடிக்கு ஒரு முறை செல்லும் வாகனங்களின் ஓசை... திடீரென பதட்டப்பபட வைக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறை வாகனங்கள் எழுப்பும் சைரன் ஒலி... எங்கிருந்தோ குரைக்கும் ஒரு செல்லத்தின் சப்தம்... இரவின் அமைதியைக் குலைக்கும்படி போட்டி போட்டுக் கொண்டு HAYABUSA போன்ற விலையுயர்ந்த bikes கொண்டு வந்து அதீத சப்தத்துடன் ரேஸ் செய்யும் பணக்கார இளம்தாரிகள்... எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருக்கும் இரவுகள்… எப்படியும் உறங்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நானும்........


******


இந்த வாரத்தின் ரசித்த குறும்படம்:  பக்கத்து வீட்டில் இருப்பவர்


பணம், முதலீடு போன்றவை குறித்து பெண் குழந்தைகளுக்கு நம்மில் பலரும் சொல்லிக் கொடுப்பதில்லை. சிறு வயதிலேயே ஆணோ, பெண்ணோ, பணம், சேமிப்பு, முதலீடு குறித்த சில தகவல்களையேனும் சொல்லிக் கொடுப்பது நல்ல விஷயம் - அதிலும் பெண்ணுக்கு எதற்கு இதெல்லாம் என்று இன்றைக்கும் சில பெற்றோர்கள் - குறிப்பாக அப்பாக்கள் நினைப்பது நிதர்சனமான உண்மை.  அது தவறு என்று சொல்லும் ஒரு குறும்படம் கீழே.


மேலே உள்ள காணொளியை பார்க்க முடியவில்லை என்றால், கீழேயுள்ள சுட்டி வழியும் பார்க்கலாம்!


The neighbor we didn't know we needed! | Short Film (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை - சார்


கடவுளை

"சார்!" என்றழைக்கும்

நபர் ஒருவரை

வாழ்வில்

முதல் முறையாக

ஒரு கோவிலில் பார்த்தேன்.

"சார் !

முடியும்னா முடியும்னு சொல்லுங்க

முடியலைன்னாலும் முடியலைன்னு

சொல்லுங்க.

நான் பாட்டுக்கு தினம் வந்து

முட்டிக்கிட்டு இருக்கேன்.

ஏன் வரேன்னே தெரியலை சார்!"

என்றவர்

என் பார்வையை உணர்ந்து

சற்றே கம்மிய குரலில்

கடவுளுக்கும் எனக்கும் 

பொதுவாகச் சொன்னார்.

"முடியலை சார்!"


- Bபோகன் சங்கர்


******


பழைய நினைப்புடா பேராண்டி : மதுபனி [MADHUBANI] ஓவியங்கள்


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மதுபனி [MADHUBANI] ஓவியங்கள் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


நேற்று நானும் நண்பர் பத்மநாபன் அவர்களும் தில்லியின் ஜன்பத் பகுதியில் இருக்கும் ஒரு கிராமிய கலை மற்றும் உணவு திருவிழா சென்றிருந்தோம். இப்போதெல்லாம் ஏதாவது கண்காட்சி என்று சொன்னால், அதுவும் கிராமிய/பழங்குடிகளின் கண்காட்சி என்று சொன்னால் அத்தனை மக்களை ஈர்க்கமுடியாது என்பதாலோ என்னவோ உணவினையும் தலைப்பில் சேர்த்து விட்டார்கள் போல!


அங்கே சில கிராமிய/பழங்குடி மக்கள் பழக்கத்தில் இருந்த ஓவியங்களை கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைத்திருந்தார்கள். பல இடங்களிலிருந்து வந்திருந்தாலும், இன்றைக்கு நாம் பார்க்கப்போவது மதுபனி ஓவியங்கள் மட்டுமே. மதுபனி [MADHUBANI] எனும் நகரம் பீஹார் மாநிலத்தில் இருக்கிறது. மிதிலா அல்லது மைதிலி என்ற மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கும் இடம் இது. மதுபனி என்பதன் அர்த்தம் தேன் நிறைந்த காடு!


பெரும்பாலான மதுபனி ஓவியங்கள் இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர், சிவன், சரஸ்வதி, துர்க்கை போன்றவர்களையும் இயற்கை அழகினையும் காண்பிப்பவை. பெரும்பாலும் பெண்களால் தான் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன என்றாலும் ஆண்களும் வரைவதில் வல்லவர்கள் தான். முதன் முதலில் இந்த ஓவியங்களை வரைந்தது மிதிலையின் மன்னரான ஜனக மஹாராஜா காலத்தில் என்றும், அவரது மகள் சீதையின் திருமணத்தின் போது இந்த ஓவியங்களை வரைய வைத்தார் எனவும் சொல்வார்கள்.


முழு தகவல்களும் படிக்க, மேலே உள்ள சுட்டி வழி பதிவினைப் படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த கண்டுபிடிப்பு : 3-2-3



இரு சக்கர வாகனங்களை நமக்கு நன்றாகவே தெரியும். அதைப் போலவே மூன்று சக்கரங்கள் கொண்ட ஆட்டோ, சரக்கு வண்டிகள் என்பதும் தெரியும்.  ஆனால் ஒரே வண்டியில் இரண்டுமே இருந்தால்….  ஆம் அப்படி ஒரு வண்டி ஹீரோ தயாரிப்பில் வெளிவர இருக்கிறது. மூன்று பட்டன்களை மட்டும் இயக்கி மூன்று சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் என்று மாற்றிக் கொள்ளக் கூடிய வகையில், இரண்டையும் தன்னகத்தே கொண்ட ஒரு வாகனம் - Surge S32 என்ற பெயரில் வர இருக்கிறது!  எப்படி இயக்கலாம், வாகனத்தில் என்னென்ன சிறப்பு என்பதெல்லாம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள சுட்டி வழி தெரிந்து கொள்ளலாம்!  மேலும் இந்தத் தளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்!


Convert Scooter Into Three Wheeler | Surge S32 Convertible | Bharat Mobility Expo 2024 #surge #hero - YouTube


******


இந்த நாள் இனிய நாள் : பார்பி



பார்பி பொம்மைகள் யாருக்குத் தான் பிடிக்காது! பொதுவாக அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பார்பி பொம்மைகளை பிடிக்கும் என்றாலும் சில ஆண் குழந்தைகளுக்கும் இந்த பார்பி வகை பொம்மைகளை பிடிக்கும்.  முதன் முதலாக பார்பி பொம்மைகள் தயாரிக்கப்பட்ட வருடம் 1959! நாள் 9 மார்ச்!  மார்ச் 9-ஆம் தேதி தேசிய பார்பி டே ஆக அமெரிக்காவில் கொண்டாடுகிறார்களாம். Ruth Handler என்பவரால் உருவாக்கப்பட்ட பார்பி பொம்மைகளுக்கு அவர் வைத்த முழுப் பெயர் என்ன தெரியுமா? Barbara Millicent Roberts என்பது தானாம்.  பார்பி குறித்து இன்னும் பல செய்திகள் இந்தத் தளத்தில் இருக்கின்றன.  முடிந்தால் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


34 கருத்துகள்:

  1. நாம் கடக்கும் ஒரு நிமிட சந்தோஷங்களை சொல்லும் முதல் கவிதை.  வேறு காரணங்களால் உறக்கம் வராத இரவுகளில் மட்டுமே நாம் கேட்கும், உணரும் இரவின் சத்தங்கள்...  நேற்று நானும் சிவனுக்கன்றி எவனாலோ விழித்திருந்தேன் ஓரிரவு முழுதும்!  புண்ணியம் கிடைக்கும், கேட்கவேண்டும் சிவனிடம்!  போகன் சங்கர் கவிதை அதிஅற்புதம். கண்டுபிடிப்பு கார் ஆச்சர்யப்படுத்துகிறது.  வாழ்க புதிய கண்டுபிடிப்புகள்.  பார்பி பொம்மைகள் - சிறுவயது ஆசைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் அருமை. வாசிக்கும் போது ஆஹா! பின்பற்றணுமே அந்த விட வேண்டியவைகளை!!

    போகன் சங்கரின் இற்றை - அட்டகாசம். சிரித்துவிட்டேன். வடிவேலு நினைவுக்கு வந்தார்!!!. மிகவும் ரசித்தேன்

    சார் என்பதைத் தவிர்த்து மற்றவை பெரும்பாலானவர் மனதில் ருவதுதான் இல்லையா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் போகன் சங்கர் அவர்களின் இற்றையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கவிதை - வலிகள் மறந்த நேரம். ரசித்தேன். உண்மைதான் இப்படியான சில மணித்துளிகள் வலிகளை நினைவுக்கு வராமல் சின்ன சின்ன சந்தோஷங்களைத்தருகிறதுதான்.

    Surge S32 //

    அட! தளத்திலும் பார்த்தேன். வியப்பு! இப்படி நிறைய இனி வரும் என்றே தோன்றுகிறது. மகளிர்மட்டும் படத்தில் கிரேஸி மோகன் சொல்லும் வசனம் நினைவுக்கு வருது technology has improved so muchhan.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை, எஸ்32 வாகனம் போன்றவை குறித்த உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. ஆட்டுக் குட்டி செல்ஃபி அழகு. ஆனால் வளர்ப்புப் பிராணிகளோடு கொஞ்சுவதை, அது முகத்தில் நக்குவதையெல்லாம் காணும்போது மனம் அருவருப்படையும்.

    முகேஷ் அம்பானியின் மகன் யானைகளை வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கும் காணொளி கண்டேன் (அவர் ரேஞ்சுக்கு அது... 70கோடி பெருமான அட்டு வாட்சை அவர் கட்டியிருந்தார். சந்தனம் மிஞ்சினால்..) ஆனால் அவர் தெளிவாகச் சொன்னார்.. அவை என்ன இருந்தாலும் விலங்குகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்ப்புப் பிராணிகள் - எல்லோராலும் வளர்க்க முடியாது - எல்லையும் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. உறக்கம் வராத இரவுகள்.. ஒரு சில இரவுகள் அப்படி ஆகிவிடுகின்றன. ஒன்று, பயத்தில், அதிர்ச்சியில். இரண்டு பழைய கால நினைப்பு. என்ன செய்ய? வாழ்வில் இதுவரை அப்படிப்பட்ட பத்து இரவுகளைக் கடந்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறக்கம் வராத இரவுகள் - சில சமயங்கள் இப்படி அமைந்து விடுகின்றன. நம் கையில் இல்லாத விஷயம் தானே உறக்கமும் வேறு சிலதும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  6. பார்பி பொம்மை பற்றிப் படித்ததும், பார்பி பொம்மையைப் போலவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்ட ரஷ்யப் பெண் நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்பி பொம்மையப் போல மாற்றிக்கொண்ட ரஷ்யப் பெண் - எனக்கும் நினைவுக்கு வந்தார் நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. மதுபனி ஓவியங்கள் பகுதி மீண்டும் படித்தேன். ஆச்சர்யம் என்னவென்றால், அவர்கள் பலரும் இன்னும் இருந்தும் எந்தப் பதிவையும் படித்துக் கருத்தெழுதுவதில்லையே... வாழ்க்கையில் விரக்தியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஒருவரின் கருத்து வரலைன்னதும் ஏன் வாழ்க்கையில் விரக்தின்னு எதிர்மறையாக நினைக்கணும்? அதுவும் நாமாக assume செய்து கொண்டு? ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வேலை பொறுப்பு என்று காலம் மாறாதா! அவர்களின் வாழ்க்கைப் பயணம் திசை திரும்பியிருக்காதா, அவர்கள் செய்யும் தொழிலில் வேலைப்பளு இருக்கலாம் நேரப் பிரச்சனை என்று. இல்லை அவர்களுக்கான சப்ஜெக்ட் இல்லையாக இருக்கலாம்...கருத்து போடவில்லைனாலும் வாசிப்பாங்களா இருக்கலாம்.

      கீதா

      நீக்கு
    2. விரக்தி என்பதை, எழுதி எழுதி என்னத்தக் கண்டோம் என்ற பொருளில் சொன்னேன். தவறான அர்த்தம் வரும்னு தோணலை. நிறைய பின்னூட்டங்கள் எழுதுபவருக்கு உற்சாகத்தையும், மாற்றிக்கொள்ள வேண்டுமானால் அதற்கான உத்வேகத்தையும் கொடுக்கும். பிரச்சனை என்னன்னா திரட்டி ஒன்று இல்லை. நான் தொடர்ந்துகொண்டிருந்த பல பிளாக்குகள் அட்ரசே என்ன என்று தெரியலை.

      நீக்கு
    3. மதுபனி குறித்த பழைய பதிவு படித்தமைக்கு நன்றி நெல்லைத்தமிழன். அன்றைக்கு பதிவுகளில் கருத்துரைத்த பலர் இன்றைக்கு பதிவுலகம் பக்கம் வருவதேயில்லை - அவர்களில் பலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் - அல்லது முகநூல் பக்கம் மட்டுமே இருக்கிறார்கள். இத்தனை பெரிய பதிவுகளை படிக்க விருப்பம் இல்லை என்றும் தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி

      நீக்கு
    4. விரக்தி என்று சொல்வதிற்கில்லை தான் கீதா ஜி. எத்தனையோ வேலைகள், அவர்களது விருப்பங்கள் மாறியிருக்கலாம், அல்லது வேறு தளங்கள் பிடித்தவையாக மாறியிருக்கலாம் - குறிப்பாக முகநூல், ட்விட்டர் (இப்போதைய X).

      நீங்கள் சொல்வது போல சிலர் கருத்துக்களை பகிராமல் வாசிக்கலாம். என்றாலும் முன்பு வாசித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் - இப்போதைய பதிவுகளை பார்க்கும் நபர்கள் (பக்கப் பார்வைகள் மிகமிகக் குறைவு - சில பதிவுகளின் பக்கப் பார்வைகள் 100-ஐக் கூடத் தாண்டுவதில்லை!)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    5. திரட்டிகள் இல்லாதது பெரிய குறை தான். ஆனாலும் இப்போது எழுதுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. எல்லோரும் ஒன்றிரண்டு வரிகள் ட்விட்டரிலும் முகநூலிலும் எழுதி தங்கள் ஆர்வங்களை குறுக்கிக் கொண்டு விட்டார்கள் - இவற்றில் ஒவ்வொரு நாளும் பத்துப் பதினைந்து இடுகைகள் வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  8. மதுபானி ஓவியங்கள் பதிவு பார்த்து கருத்திட்ட நினைவு. ஏனென்றால் ஒரு காலத்தில் once upon a time என்று ஆரம்பித்தால்.....வரைந்ததுண்டு, ராஜ்புட், மதுபானி என்று. போய் பார்க்கிறேன்.

    பார்த்தேன், கருத்தும் உங்கள் பதிலும் பார்த்தேன், ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுபனி ஓவியங்கள் - பழைய பதிவில் உங்கள் கருத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன கீதா ஜி. பதிவு வெளியிட்டு நான்கு வருடங்கள் கழித்து படித்திருக்கிறீர்கள் :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. உறக்கம் வராத இரவுகள்...யதார்த்தம்.

    பார்பி - ஒரு காலத்தில் பெண் குழந்தைகளின் கனவுக்கன்னி. இப்போது எப்படி என்று தெரியவில்லை.

    குறும்படம் மிகவும் ரசித்தேன். உண்மை நம் குழந்தைகளுக்குச் சேமிப்பு முதலீடு குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். மகனுக்கு நான் சொல்லியதுண்டு. சொல்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறக்கம் வராத இரவுகள், பார்பி, குறும்படம் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. நானும் குறும்படத்தை ரசித்தேன் வெ.நா அவர்களே. உங்களை போல் அன்றாடம் எழுத இயலுமா என தெரியவில்லை. எழுத்தின் மீதான உங்களின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.

      தினம் தினம் எழுதுவது - பெரிய வேலை தான். நடுவில் சில மாதங்கள் ஒன்றுமே எழுதாமல் இருந்தேன். இப்போதும் கடந்த சில நாட்களாக எழுத இயலவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. எல்லா பகுதிகளும் அருமை. பார்பி பொம்மை, மதுபனி ஓவியம் பற்றிய பதிவில் தகவல்கள், கவிதை, கடவுளை சார் என்று அழைக்கும் இற்றை, எல்லாமே'

    குறும்படம் மிகவும் அருமையான கருத்தைச் சொல்லும் படம். புதிய கண்டுபிடிப்பு 3-2-3 ஆச்சரியம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  12. மனதில் உதித்தது பிடித்தது.

    வலிகள் மறைந்த நேரம் படமும் கவிதையும் மனதை தொடுகிறது.

    மதுபனி ஓவியம்,குறும்படம் என அருமை.

    மூன்று சக்கரம் இரண்டுசக்கரம் ஒரு பட்டனில் மாறுவது நல்ல கண்டு பிடிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி வெளியிட்ட தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  13. அனைத்தும் அருமை.
    வாசகம் அருமை.
    வலிகள் மறந்த நேரம் கவிதை அருமை.
    உறக்கம் வராத இரவுகளை நிறைய சந்திக்கிறேன் அடிக்கடி.
    காணொளி அருமை. பெண் குழந்தைகளுக்கு அனைத்தும் சொல்லி தரவேண்டும்.
    பழைய நினைவுகள் பகிர்வு அருமை.
    முடியலை சார் கவிதை அருமை.
    எல்லாம் ரசித்து படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. கவிதை, கவிதைக்கான படம், முகநூல் இற்றையின் பகிர்வு அருமை. தொகுப்பு நன்று. இரவில் தூங்கும் முன் சில நிமிடங்கள் தியானம் (Guided meditation) செய்து பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Guided meditation - தங்கள் யோசனைக்கு நன்றி ராமலக்ஷ்மி. முயற்சித்துப் பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தொகுப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....