வெள்ளி, 8 மார்ச், 2024

இயற்கை அன்னையின் மடியில் - ஹஸ்தினாபுரம் - ஜைனர்களின் வழிபாட்டுத் தலங்கள் - பகுதி பதினைந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இத்தொடரில் இதுவரை பதினான்கு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு


லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டு


லான்ஸ்(d)டௌன் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது


லான்ஸ்(d)டௌன் - புலிகள் நடமாட்டம் - பகுதி பத்து


லான்ஸ்(d)டௌன் - நயார் ஆற்றங்கரையில்


லான்ஸ்(d)டௌன் - குழப்பமும் காலை உணவும்


லான்ஸ்(d)டௌன் - ஒரு விபத்தும் ஓட்டுநரின் கோபமும்


கர்ணன் கோயில் - பாண்டேஷ்வர் மஹாதேவ் மந்திர்


ஹஸ்தினாபுரம் நகரின் பழமையும், மஹாபாரதக் காலங்களில் இங்கே இருந்த சில கோயில்கள், அவற்றின் இன்றைய நிலை குறித்தும் சென்ற பகுதியில் சில விஷயங்களைப் பார்த்தோம்.  இந்துக்கள் மட்டுமல்லாது ஜைனர்களுக்கும் ஹஸ்தினாபுரம் என்பது மிகவும் பிடித்த, பிரபலமான, பழமையான இடம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அங்கே செல்லும் வரை ஹஸ்தினாபுரத்திற்கும் ஜைனர்களுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து நான் அறிந்ததில்லை.  ஜைனர்களுக்கு - அதாவது ஜைன மதத்தினைத் தொடரும் பலருக்கும் ஹஸ்தினாபுர பூமி மிகவும் புனிதமானது. ஜைனர்கள் பலரும் இந்த ஹஸ்தினாபுரத்திற்கு வருகை தருவதோடு அங்கே நிறைய ஜைன வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தியும் இருக்கிறார்கள். ஜைனர்களுக்கு ஏன் இந்தத் தலமானது புனிதமானது என்பதற்கும் காரணம் இருக்கிறது! எப்படி இந்துக்களுக்கு மஹாபாரதக் காலமும் இங்கே அரசாண்ட பாண்டவர்களும் பிரதான காரணமோ, ஜைனர்களுக்கு இங்கே வருவதற்கான காரணம் அவர்களது மதத்தின் தீர்த்தங்கரர்கள் எனப்படும் குருமார்களில் மூன்று குருமார்கள் இங்கே தான் இருந்தார்கள் என்பதும் ஒரு காரணம். 


ஜைன மதம் குறித்து தகவல்கள் தெரிந்து கொள்ள எனக்கு இதுவரை வாய்ப்புகள் அமைந்ததில்லை. ஜைனர்களின் சில வழிபாட்டுத் தலங்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன் என்றாலும் ஏதோ ஒரு சுற்றுலாவாசி போல மட்டுமே சென்று வந்திருக்கிறேனே தவிர அவர்களது மதம், அதன் சிறப்பு என்ன போன்றவற்றை தெரிந்து கொள்ள இது வரை வாய்ப்பு கிடைத்ததில்லை - நானும் அதிக ஆர்வம் காண்பித்தது இல்லை. நம் மதத்தின் சிறப்புகள் குறித்தோ, பலவித தகவல்கள் குறித்தோ நமக்கு அத்தனை அறிவு இல்லை எனும்போது வேறு ஒரு மதம் குறித்து என்றைக்கு நாம் ஈடுபாடு காட்டப்போகிறோம். மதம் என்பது நாம் தொடரும் ஒரு நல்லவிஷயமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு மதம் நல்லதல்ல, அதைத் தொடர்பவர்கள் மீது வெறுப்பு காண்பிக்கக் கூடாது என்ற எண்ணங்களோ, நினைப்போ எனக்கு வந்ததில்லை. அனைவரும் சக மனிதர்கள் என்ற எண்ணம் தவிர வேறு எந்த நினைப்பும் எனக்குத் தோன்றியதில்லை.  இந்த ஹஸ்தினாபுரம் சென்றபோது பார்த்த சில இடங்கள், ஜைனர்கள் குறித்த சில தகவல்களை தேடிப்பிடித்து படிக்க வைத்தது. இணையத்தில் நிறைய தகவல்கள் இருக்கின்றன என்றாலும் அனைத்தும் நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சில தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள அவை பயன்பட்டன. 


ஹஸ்தினாபுரத்தில் இன்றைக்கும் பல ஜைன மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன.  பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருப்பதோடு, அவை தொடர்ந்த பராமரிப்பிலும் இருக்கின்றது என்பது சிறப்பான விஷயம்.  இந்தப் பகுதியில் அப்படியான சில வழிபாட்டுத்தலங்கள் குறித்து நாம் பார்க்கலாம். ஜைன மதத்திற்கும் நமது இந்து மதத்திற்கும் நிறைய ஒருமை இருப்பதை இந்த ஜைனத் தலங்கள் குறித்துப் பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிந்தது. இருவருமே முந்தைய காலத்தில் நடந்த நிகழ்வுகள் தமது மதத்தைச் சார்ந்தது என்று சொல்வதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கௌரவர்கள் என்று நாம் சொல்வதையே அவர்களும் அவர்களது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதை சில இடங்களில் படிக்க முடிந்தது. எது எப்படியோ, இன்றைக்கும் இந்த இடத்தில் இந்து மதத்தினரின் கோயில்களும் ஜைனர்களின் பல வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றன என்பதும், அனைத்துமே சுற்றுலா செல்பவர்களும், இறை நம்பிக்கை கொண்டவர்களும் சென்று பார்த்து, வழிபட்டு வரவேண்டிய இடங்கள் என்பதில் சந்தேகமில்லை. 


அஷ்டபத் தீர்த், ஹஸ்தினாபுரம்



வெளியிலிருந்து எடுத்த படம்...

160 அடி சுற்றளவும், 108 அடி உயரமும் (கொடிமரத்தின் உயரத்தையும் சேர்த்தால் 151 அடி உயரம்), எட்டு மாடிகளும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான வட்ட வடிவமான வழிபாட்டுத் தலமாக இருப்பது அஷ்டபத் தீர்த் என அழைக்கப்படும், ஜைனர்களின் வழிபாட்டுத்தலம்.  நாங்கள் சென்ற சமயம் மாலை நேரமாகிவிட்டபடியால் யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. வெளியிலிருந்து பார்க்கும்போதே அதன் பிரம்மாண்டத்தினை எங்களால் உணர முடிந்தது.  இந்த வழிபாட்டுத் தலத்திற்குள் மொத்தம் 1503 சிலைகள் இருக்கின்றன என்றும் தெரிகிறது. பிரம்மாண்டமான இந்த அஷ்டபத் தீர்த் எனும் வழிபாட்டுத் தலத்தின் பின்னணி என்ன, எதனால் அங்கே கட்டியிருக்கிறார்கள், அதன் சிறப்பு என்ன என்றெல்லாம் நிறைய தகவல்கள் இந்த வழிபாட்டுத் தலத்தின் இணைய தளத்தில் இருக்கின்றன.  ஆங்கில மொழியில் இருக்கும் இந்த தகவல்களை படிக்கும்போதே பிரமிப்பும் வியப்பும் நம்மை ஒருசேர ஆக்கிரமிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 



வழிபாட்டுத்தலத்தின் உள்ளே...
படம்: இணையத்திலிருந்து...

ஜைன மதத்தினைத் தழுவிய ரிஷப்தேவ் பகவான், துறவு காலம் முடிந்த பிறகு தனது 1000 சீடர்களுடன் அஷ்டபத் எனும் மலைப்பகுதிக்கு வந்து ஆறுநாட்கள் உபவாசம் இருந்த பிறகு நிர்வாணம் எனப்படும் மோக்ஷம் அடைந்தார்.  அவரது மூத்த மகனான சக்ரவர்த்தி பரதன், அவர் மோக்ஷம் அடைந்து எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு பிரம்மாண்டமான, அற்புதமான மாளிகை போன்ற ஒரு வழிபாட்டுத் தலத்தினை “Sinhanishadha” என்ற பெயரில் கட்டினாராம். அதனைக் கட்டுவதற்கு பல அபூர்வமான நவரத்தினங்களும் கற்களும் பயன்படுத்தினார் என்றும் அந்த மலை போன்ற மாளிகை 9.225 கிலோமீட்டர் (!) உயரமும், 12 கிலோமீட்டர் அகலமும் (ஆம் கிலோமீட்டர் கணக்கில் தான்! எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் அந்த மாளிகை!) நான்கு புறங்களிலும் பிரம்மண்டமான மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட வாயில்களும் கட்டினாராம்!  மண்டபங்கள், பிரகாரங்கள், அங்கே இருந்த 24 தீர்த்தங்கரர் சிலைகள், அலங்கார விளக்குகள் என பலவும் பிரம்மாண்டமாக இருந்தன என்று தகவல் சொல்கிறது இந்தக் கோயில் குறித்த இணையதளம். கூடவே இந்த பகுதிக்கான காவல் எப்படி இருந்தது, யார் யார் அங்கே வந்து மோக்ஷம் அடைந்தார்கள் (இலங்கையை ஆண்ட ராவணன் கூட இங்கே வந்து அவனது வீணையை வாசித்து, தனது அடுத்த பிறவியில் ஒரு தீர்த்தங்கரராக பிறக்க வழிசெய்து கொண்டானாம்!) என்ற தகவல்களை அங்கே படிக்க முடிந்தது. படிக்கப் படிக்க நமக்கு அந்த பிரம்மாண்டம் கண்முன்னே விரிந்து ஆச்சரியப்பட வைக்கிறது! விருப்பமிருப்பவர்கள் இந்த முகவரியில் அஷ்டபத் குறித்த மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்!



மேற்கூரை...
படம்: இணையத்திலிருந்து...

நாங்கள் இங்கே சென்றபோது மாலை நேரம் ஆகிவிட்டதால் உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி தரவில்லை என்பதில் வருத்தம் உண்டு. உள்ளே சென்று அந்த பிரம்மாண்டத்தினை அனுபவிக்க முடியவில்லையே என்பது அப்போது தெரியாவிட்டால் கூட, இந்த இடம் குறித்த தகவல்களை இணையத்தில் படித்துத் தெரிந்து கொண்டபோது வருத்தம் மேலிட்டது என்பது உண்மை.  இனி அடுத்த முறை இந்தப் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வரவேண்டும் என்று மனதின் ஓரத்தில் ஒரு முடிச்சு போட்டு வைத்திருக்கிறேன் - வாய்ப்பு கிடைப்பதும் கிடைக்காததும் அவன் செயல் - அது ஈசனோ, மஹாவீரனோ! யார் வாய்ப்பு கொடுத்தாலும் மகிழ்ச்சியே!  ஹஸ்தினாபுரத்தில் ரிஷப்தேவ் பகவான் அவர்களுக்காகக் கட்டப்பட்ட அஷ்டபத் போலவே ஒரு அஷ்டபத் கட்டவேண்டும் எனத் தீர்மானித்து பூமி பூஜை போட்ட நாள் 31 ஜனவரி 1996 அன்று! அஷ்டபத் கட்டிமுடித்து மக்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்ட நாள் 02 டிசம்பர் 2009 - அதாவது சற்றேறக்குறைய 13 வருடங்கள் ஆகியிருக்கிறது இந்த பிரம்மாண்டமான வழிபாட்டுத் தலத்தினை கட்டி முடிக்க! 


இந்த அஷ்டபத் எனும் வழிபாட்டுத் தலத்தினை நீங்கள் காணவிரும்பினால், அதற்கும் மேலே குறிப்பிட்ட தளத்திலேயே வழி இருக்கிறது. வழிபாட்டுத் தலம் குறித்த தகவல்களை ஒரு காணொளியாக வெளியிட்டு இருக்கிறார்கள். YouTube-இலும் இந்தக் காணொளி இருக்கிறது. அதற்கான சுட்டி கீழே! ஹிந்தி மொழியில் இருக்கிறது இந்தக் காணொளி என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்! மொழி புரியாவிட்டாலும் வழிபாட்டுத் தலத்தின் உள்ளே பார்க்க முடியுமே என்பதால் பார்க்கலாம்! 


अष्टापद | आकर्षण लेकिन चौंका देने वाले रहस्य | 151 फिट ऊँचा जैन तीर्थ मंदिर | हस्तिनापुर | (पार्ट-4) (youtube.com)


காணொளியைப் பார்த்து மேலும் பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  தொடர்ந்து வரும் பகுதிகளில் அங்கே இருக்கும் வேறு சில ஜைனர்களின் வழிபாட்டுத் தலங்கள் குறித்து சொல்கிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. ஹஸ்தினாபுரத்துக்கும் ஜைனர்களுக்குமான தொடர்பு பற்றி படித்தபோது வியப்பு வந்தது.  நீங்கள் சொல்லி இருக்கும் அந்த கிலோமீட்டர் கணக்கிலான பிரமாண்ட மாளிகை இன்னமும் இருக்கிறதா?  அது விலை உயர்ந்த கற்களோடு?  அதனுடன் கூட இப்போது புதிதாக ஒன்று கட்டப்பட்டிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விக்கான பதிலை அடுத்த பகுதியில் எழுதி இருக்கிறேன் ஸ்ரீராம்! :) இங்கேயே சேர்த்திருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. ஜைனர்களின் தொடர்பு ஆச்சர்யம்தான். புஷ்கரும் ஜைனமத்த் தொடர்புடையது. வாழ்க்கையில் நாம் தெரிந்திருக்காத்து மிக மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றவை கைமண் அளவு - என்பது ஒவ்வொரு பயணத்திலும் தெரிந்து கொள்கிறேன் நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை.

    //இனி அடுத்த முறை இந்தப் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வரவேண்டும் என்று மனதின் ஓரத்தில் ஒரு முடிச்சு போட்டு வைத்திருக்கிறேன் - வாய்ப்பு கிடைப்பதும் கிடைக்காததும் அவன் செயல் - அது ஈசனோ, மஹாவீரனோ! யார் வாய்ப்பு கொடுத்தாலும் மகிழ்ச்சியே! //

    கண்டிப்பாய் வாய்ப்பு கிடைக்கும் வெங்கட். போய் வந்து மீண்டும் ஒரு அழகிய பதிவு போடுவீர்கள்.

    படங்கள் எல்லாம் மிக அருமை.
    முதல் படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவு வழி வெளியிட்ட படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. ஜைனர்களின் தொடர்பு ஆச்சர்யம்தான். வாழ்க்கையில் நாம் தெரிந்திருக்காதது மிக மிக அதிகம்...

    அன்பின் நெல்லை அவர்களது கருத்து சரிதான்...

    ஜைனர்கள்
    இங்கிருந்து சென்றவர்கள் தானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றது கைமண் அளவு என்பதை அவ்வப்போது புரிய வைத்துக் கொண்டே இருக்கிறது கிடைக்கும் அனுபவங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
    விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. ஜைன மதத்தைப் பற்றி சொல்லும் போது ஜைன மதம் இந்து மதத்திலிருந்து பிரிந்து போன ஒன்று என்றும், இந்துமதத்திலிருந்துதான் ஜைனமதம் பிறந்தது என்றும் சொல்லப்படுவதை வாசித்திருக்கிறேன். இந்த ரிஷபநாதர்தான் முதல் தீர்த்தங்கரர் என்று வாசித்ததாகவும் நினைவு. ரிஷபநாதர் என்பவர் ஒரு வேளை ரிஷபம் என்றால் காளைதானே? அப்படிப் பார்க்கும் போது புத்தமதம் இந்துமதத்திலிருந்து தோன்றியது என்று சொல்லப்படுவது போல் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்து மதத்திலிருந்து - இந்தப் பெயர் கூட பிரிட்டிஷார்காலத்தில் இடப்பட்ட பெயர் என்றும் சொல்லப்படுகிறதே...அதற்கும் முன்னர் கூட நான் நாட்டில் உள்ள மக்கள் பின் பற்றியிருந்த மதமாக இருக்கலாம். அது வேறு சில காலங்களில் பிரிவாக மாறிய ஒன்றாக இருக்கலாம். ஜைனமதம் இந்துமதத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அவர்களது வழிபாட்டு முறைகளும் கோயில்களும் எல்லாம் புத்த மதத்தை விட இந்துமதத்தோடு சேர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. எப்படியோ அதைப் பற்றிய விவரங்கள் சிந்திக்க வைத்தது.

    தகவல்கள் மிகவும் சுவாரசியம். படங்கலும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்து மதத்திலிருந்து பிரிந்ததாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் இதில் வேறுபட்ட சில கருத்துக்களும் உண்டு. பதிவு குறித்த தங்களது விரிவான எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. ஹஸ்தினாபுரத்தைப் பற்றி புதிய தகவல்கள். ஆச்சரியமாகவும் இருக்கிறது. நீங்க்ள் குறிப்பிட்டிருக்கும் சுட்டியை சேமித்துக் கொண்டேன். வாசிக்கிறேன் ஜி.

    படங்கள் இணையத்திலிருந்து போட்டவையும், நீங்கள் எடுத்த வெளிப்புறப் படமும் செம அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. அஷ்டபத் படங்களும் நிறைந்த தகவல்களும் கண்டோம்.

    அஸ்தினாபுரம் ஜைனமதத்தினரின் தொடர்புகள் என பல விடயங்கள் அறிந்தோம்.

    இலங்கை அரசன் இராவணனின் கதையும் எமக்கு தெரிந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....