செவ்வாய், 12 மார்ச், 2024

இயற்கை அன்னையின் மடியில் - பயணத்தின் முடிவு - பகுதி பதினாறு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



இத்தொடரில் இதுவரை பதினைந்து பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு


லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டு


லான்ஸ்(d)டௌன் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது


லான்ஸ்(d)டௌன் - புலிகள் நடமாட்டம் - பகுதி பத்து


லான்ஸ்(d)டௌன் - நயார் ஆற்றங்கரையில்


லான்ஸ்(d)டௌன் - குழப்பமும் காலை உணவும்


லான்ஸ்(d)டௌன் - ஒரு விபத்தும் ஓட்டுநரின் கோபமும்


கர்ணன் கோயில் - பாண்டேஷ்வர் மஹாதேவ் மந்திர்


ஜைனர்களின் வழிபாட்டுத் தலங்கள்


இயற்கை அன்னையின் மடியில் தொடரின் சென்ற பகுதியில் ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் அஷ்டபத் என்கிற ஜைனர்களின் வழிபாட்டுத் தலம் குறித்த தகவல்களை பார்த்தோம்.  அஷ்டபத் என்பது முதன் முதலாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது இமயமலைப் பகுதியில் என்பதும், அந்த மாளிகையினை பல்வேறு விலை மதிப்புமிக்க கற்களால் கட்டியிருந்தார்கள் என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் கட்டியிருந்தார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.  தவிர பிற்காலத்தில் அவை என்ன ஆனது, யாராலும் கண்டுபிடிக்கமுடியாத அளவில் இருந்தது என்பதையெல்லாம் சென்ற பகுதியில் சொல்ல விடுபட்டு விட்டது.  அதே அஷ்டபத் பாணியில் ஹஸ்தினாபுரத்தில் அமைக்கப்பட்டது தான் சென்ற பகுதியில் நாம் பார்த்த தகவல்கள்.  முதன் முதலாக அமைக்கப்பட்ட மாளிகை இன்று வரை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவில்லை.  முதன் முதலாக அமைக்கப்பட்ட மாளிகை/அஷ்டபத் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அது எப்படி இருந்திருக்கும் என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்தபின்னர் உருவாக்கப்பட்டது தான் தற்போது ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் அஷ்டபத். சென்ற பகுதியில் நண்பர் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு இந்தப் பகுதியில் பதில் சொல்லி இருக்கிறேன் - அவரது சந்தேகம் தெளிந்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் ஜைனர்களின் வேறு சில வழிபாட்டுத் தலங்கள் குறித்து இந்தப் பகுதியில் பார்க்கலாம். 


ஜம்பூத்வீப் ஜைன் தீர்த் மந்திர், ஹஸ்தினாபுரம்







ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் இன்னுமொரு ஜைனர்களின் வழிபாட்டுத் தலம் ஜம்பூத்வீப் ஜைன் தீர்த் மந்திர் என்பது. பெரிய வளாகமாக இந்த இடம் இருக்கிறது என்பதோடு அதில் தனித்தனியாக சில இடங்கள் உண்டு.  ஜம்பூத்வீப் என்ற வார்த்தை உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.  பல இறை சங்கல்பங்களில் இந்த வார்த்தை இன்னும் சில வார்த்தைகளுடன் வருவதுண்டு.  அது போல இங்கே சுமேரு பர்வதம் என்கிற இடமும் இருக்கிறது! சென்ற பகுதியிலும் சொன்னது போல, ஹிந்து மதத்திற்கும் ஜைன மதத்திற்கும் நிறைய தொடர்புகள் இருப்பது இதிலிருந்தும் தெளிவாகிறது. சரி அதைப் பற்றிய ஆராச்சியில் இறங்காமல் இந்த வழிபாட்டுத் தலத்தில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்தெல்லாம் பார்க்கலாம் வாருங்கள். ஜம்பூத்வீப் எனும் இந்த வழிபாட்டுத் தலம் Gகியான்மதி என்கிற ஜைன மதத்தினைச் சேர்ந்த பெண்மணியால் 1972-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1985-ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.  இந்த வழிபாட்டுத் தலத்தில் Gகியான்மதி அவர்கள் கனவு கண்டபடி சிறப்பான பல விஷயங்களை மக்களுக்காக செய்திருக்கிறார். 


பல விஷயங்கள் நமக்குப் புரியாததாக இருந்தாலும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த இடம் குறித்த தகவல்களை இணையத்தில் பார்த்து மகிழலாம்.  எங்கள் பயணத்தில் இந்த இடத்திற்கு நாங்கள் சென்று பார்க்க நேரம் இல்லாததால் செல்லவில்லை.  ஆனால் ஒன்று ஹஸ்தினாபுரத்திற்கு வேறு ஒரு பயணத்தின் முடிவில், வழியில் வந்ததால் பெரிதாக ஒன்றும் பார்க்கமுடியவில்லை.  அங்கே சென்ற பிறகு தான் இந்த இடத்திற்கே தனியாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரவேண்டும் என்பதும், அங்கே இருக்கும் இடங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வரவேண்டும் என்பதும் எங்களுக்குப் புரிந்தது. குறிப்பாக ஜைனர்களின் வழிபாட்டுத் தலங்கள் இங்கே நிறையவே இருப்பதால் இதற்கென்றே தனியாக ஒரு முறை இங்கே பயணிக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அவ்வளவாக பார்க்க முடியவில்லை என்பதால் பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியல் - அது நீண்ட பட்டியல்! 🙂- சேர்ந்து கொண்டது!  ஆண்டவன் அழைத்தால், அவன் விரும்பினால் இது போன்ற பயணம் ஏற்பட வழிவகை செய்வான் என்று நினைத்துக் கொள்கிறேன். 


இது போன்ற இன்னும் சில இடங்களுக்கு, வழிபாட்டுத் தலங்களுக்கு பிறிதொரு முறை பயணித்து அவை குறித்து இன்னும் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த இடத்திலிருந்து நாம் புறப்படுவோம் வாருங்கள்.  எங்கள் குழுவிலிருந்த அனைவரும் எங்கள் வண்டி இருந்த இடத்திற்கு ஒவ்வொருவராக வந்து சேர்ந்தபிறகு பார்த்தால் எங்கள் ஓட்டுநர் வாகனத்தின் உள்ளே இல்லை. அவரை அலைபேசியில் அழைத்து வரச் சொன்னோம்.  அவர் வந்து சேர்ந்த பிறகு வண்டியில் அனைவரும் ஏறிக்கொண்டு புறப்பட்டோம். நிறைய சுற்றியதில் குழுவினருக்கு பசி எடுக்க ஆரம்பித்திருந்தது.  ஆனால் அந்தப் பகுதியிலிருந்து நெடுஞ்சாலையைத் தொடும் வரை பெரிதாக உணவகங்கள் ஏதுமில்லை. ஒரு சில கிலோமீட்டர் தாண்டிய பிறகே ஒரு உணவகம் எங்கள் கண்ணில் பட்டது.  அங்கே வண்டியை நிறுத்தி அனைவருக்கும் தேவையான இரவு உணவை அங்கே முடித்துக் கொண்டோம்.  உணவு நன்றாகவே இருந்தது என்றாலும் பெரிதாக ஒன்றும் அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை. பயணக் களைப்பில் அனைவரும் இருந்ததால் ருசித்து, சுவைத்து சாப்பிடும் மனநிலையில் ஒருவரும் இல்லை. 


உணவுக் கடை முடிந்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது.  ஒவ்வொரு குடும்பத்தினரையும் அவரவர் வீடுகளுக்கு அருகே இறக்கிவிட்டபிறகு எங்கள் பயணம் நல்லவிதமாக முடிவடைந்தது.  ஒரு சிறப்பான பயணமாக, மனதுக்குகந்த பயணமாக அமைந்ததில் - நடுவே ஓட்டுநரால் ஒரு சிறு பிரச்சனை உண்டானாலும் - அனைவருக்கும் மகிழ்ச்சி.  மீண்டும் வேறு ஒரு பயணம் விரைவில் செல்வோம் என்று சொல்லிக்கொண்டு அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினோம்.  இது போன்ற ஒரு குழுவுடன் பயணம் செல்வதில் நிறைய வசதிகள் உண்டு - குறிப்பாக பயணத்திற்கான செலவு குறையும். தனியாகப் பயணித்தால் பல சமயங்களில் செலவு அதிகரித்து விடுவது இயல்பு.  சில சிக்கல்களும் உண்டு என்றாலும் குழுவாக பயணிப்பதில் இருக்கும் சிறப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், சிக்கல்கள் பெரிதாகத் தெரிவதில்லை.  இந்தப் பயணம் குறித்து உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உங்களுக்கும் இந்தப் பயணத் தொடர் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பயணத் தொடரில் - அல்லது பயணக் குறிப்புகளுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். 


இந்தப் பயணத் தொடர் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வழியாக பதிவு செய்யுங்களேன். 


பயணம் நல்லது - ஆதலினால் பயணம் செய்வீர்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


28 கருத்துகள்:

  1. வாசகம் மிக அருமை....

    முதல் படம் செம...கவர்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் முதல் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. நம் நாடு கூட ஒரு காலத்டில் ஜம்புத்வீப் என்று சொல்லப்பட்டதாக எங்கேயோ வாசித்த நினைவு. land of jambu trees நாவற்பழ மரங்கள் நிறைய இருந்ததால் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வதாக வாசித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்..... ஜம்பூத்வீபே என்று சங்கல்பத்தில் வரும். ப்ரபந்தத்தில், நாவலம்பெரிய தீவினில் வாழும் என்று வரும். 'ஒரு காலத்தில்' இல்லை.. இப்போதுமே ஹா ஹா

      நீக்கு
    2. பிர்பந்தத்தில் வரும். அது அப்ப டக்குனு நினைவுக்கு வரலை. ஓ சங்கல்பத்தில் வருமா...

      ஆனா இப்ப தீவு இல்லையே....நெல்லை. அதுவும் நாவப்பழ மரம் எல்லாம் இப்ப அபூர்வ மரமாகி வருதாமே விலை அப்படி விக்கிறாங்க

      கீதா

      கீதா

      நீக்கு
    3. தர்ப்பணம், பூஜை புனஸ்காரம் போன்றவை செய்யும்போது நம்முடைய பூகோள இருப்பிடத்தைக் குறிப்பிடுவது போல இந்த ஜம்புத்வீபே பரதக்கண்டே மேரோ தக்ஷிணே பார்ஸ்வே  என்றெல்லாம் வரும்.

      நீக்கு
    4. நாவற்பழங்கள் நிறைந்த பகுதி - நமது சங்கல்பங்களில் இவை வருகின்றன கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    5. பிரபந்தத்தில் வரும் வரிகள் - இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    6. நாவற் பழங்கள் இங்கே தில்லியில் அதிகம் - பல வீதிகளில் இங்கே இருக்கின்றன கீதா ஜி. சீசனில் நிறைய கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    7. ஆமாம் ஸ்ரீராம் ஜி. எல்லா சங்கல்பங்களிலும் நம் இருப்பிடத்தினைக் குறிக்கும் விதத்தில் இந்த வார்த்தைகள் வருகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பயணம் இனியதாக முடிவடைந்தது மகிழ்ச்சி.

    இந்த இடத்தைப் பற்றி அறிமுகம் கிடைத்துவிட்டது உங்கள் மூலம். படங்கள் அதுவும் அந்த நதி/கால்வாய் படம் ரொம்ப அழகு. இணையத்தில் பார்த்துக்கொள்கிறேன்.

    ஆமாம் ஜி எனக்கும் பார்க்க வேண்டிய இடங்கள்னு நிறைய இருக்கு. Endless.

    ஆமா குழுவாகப் பயணிப்பதில் பயணச் செலவு குறைதல் போன்ற சௌகரியங்கள் உண்டு..அதே சமயம் அக்குழுவினர் நம் அலைவரிசைக்குக் கொஞ்சமேனும் ஒத்திருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருந்ததற்கு நன்றி கீதா ஜி.

      போக வேண்டிய இடங்கள் - பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கிறது - முடிவடைந்த பாடில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. கடைசிப் பகுதி விரைவாக முடிந்துவிட்டது. ஜம்பூத்தீவு - என்று படித்ததும் அட என்று வியப்பு தோன்றியது. பாரத தேசத்தில் உதித்த மதங்கள் எல்லாமே சனாதனக் கொள்கைகளின் மேல் வடிவமைக்கப்பட்டவைதானே.

    தனியாகப் பயணிப்பதற்கும் குழுவாகப் பயணிப்பதற்கும் வேறுபாடு உண்டு. கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி பகுதி - விரைவாக முடிந்து விட்டது - இருக்கலாம். முடிந்த வரை தகவல்களை வெளியிட்டு இருக்கிறேன்.

      காம்ப்ரமைஸ் - பல சமயங்களில் செய்ய வேண்டியிருக்கும் - அதுவும் தெரியாத நபர்களுடன் பயணம் செய்வதாக இருந்தால். இந்தக் குழுவில் அப்படியான பிரச்சனைகள் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  5. படங்களுடன் அருமையான தகவல்கள் ஜைன மத கோவில்கள் 72-85ல் கூட கட்டியிருக்கிறார்கள் என்பது அந்த மதத்தவர்கள் இப்போதும் கூட அந்த மதத்தின் வழி முறைகளையும் சடங்குகளையும் இப்படிக் கோயில்களை நிறுவி செம்மையாகப் பின்பற்றுவதை அறிய முடிகிறது.

    நீங்கள் சொன்னது போல குழுவாகச் செல்லும் போது சிறப்புதான் கூடுதல். தனியாகச் செல்லும் போதும் நல்ல அனுபவங்கள் கிடைத்தாலும் குழுவாகச் செல்லும் போது கூடுதல் மகிழ்ச்சிதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  6. இன்று மிகவும்
    சிறப்பான பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. நாவலந்தீவு என்று தேவாரத்திலும் இடம் பெற்றுள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவலுக்கு மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  8. சிரமம் எடுத்து எனக்கு பதில் சொல்லி இருப்பதற்கு நன்றி.  காணாமல்போன அந்த அஷ்டபத் என்ன ஆகி இருக்கும்?  பூமியில் புதையுண்டிருக்குமா?  காலச்சக்கரம் நரசிம்மா வசம் கேஸை ஒப்படைத்தால், விடையும், அருமையான ஒரு நாவலும் கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணாமல் போன அஷ்டபத் - என்ன ஆகியிருக்கும்! நிறைய ஆராச்சியாளர்கள் தேடியிருக்கலாம். காலச்சக்கரம் நரசிம்மா அவர்களிடம் கேஸ் ஒப்படைக்கச் சொல்லி இருப்பதும் நல்லதே!

      நீக்கு
  9. பயணம் செய்தே ஆகவேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த இடம் இருப்பது புலனாகிறது.  ஆனால் ஆசை இருக்கும் அளவு வாய்ப்பு அமைவதில்லை.  ஒரு வாய்ப்பு அமையுமாயின் இந்த டிஅத்தையும், இதுபோன்ற இன்னும் சில முக்கிய மற்றும் எழில் கொஞ்சும், தவிர்க்க முடியாத இடங்களையும் பார்க்க ஆவல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் பெரிது தான் ஸ்ரீராம் ஜி. அனைத்து இடங்களுக்கும் சென்று பார்க்க முடியாது என்பதும் நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஜைன வழிபாட்டு தலம் பற்றி அறிந்து கொண்டேன். அங்கு இன்னமும் பார்க்க முடியாத இடங்கள் என இருக்கின்றனவா? ஆம்.. எங்கு சென்றாலும் இது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள்தான். நம் குறிப்பிட்ட நேரங்களும், அங்குள்ள கால சூழ்நிலைகளும் சுற்றிப்பார்க்க வேண்டிய சில பகுதிகளை ஒத்தி வைத்து விடும்.

    /இது போன்ற இன்னும் சில இடங்களுக்கு, வழிபாட்டுத் தலங்களுக்கு பிறிதொரு முறை பயணித்து அவை குறித்து இன்னும் விரிவாக எழுதுகிறேன்/

    எழுதுங்கள். படிக்க நாங்கள் காத்திருக்கிறோம். இந்தப் பயணம் நன்றாக முடிந்தமைக்கு இறைவனுக்கு நன்றி. இது நாள் வரை இப்பயணம் குறித்த பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி சில விஷயங்களை படிக்கும் சிலருக்கேனும் தெரிவிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே. அடுத்த பயணம் குறித்த தகவல்கள் இனிமேல் தான் எழுத வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. உங்கள் பயணத்தில் நாங்களும் ஹஸ்தினாபுரம் ஜைன வழிபாட்டுதலம் கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....