வியாழன், 7 மார்ச், 2024

தினம் தினம் தில்லி - பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ஹஸ்தினாபுரம் - கர்ணன் கோயில் - பாண்டேஷ்வர் மஹாதேவ் மந்திர்  பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



புதிய அருங்காட்சியகம் - வெளிப்புறத் தோற்றம்...

தினம் தினம் தில்லி பதிவுகள் வரிசையில் இன்றைக்கு மீண்டும் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். பிரதான் மந்த்ரி எனும் ஹிந்தி வார்த்தைக் கோர்வை உங்களுக்கும் தெரிந்திருக்கும்! அதென்ன சங்க்ரஹாலய்?  அருங்காட்சியகம் எனும் தமிழ் வார்த்தைக்கான ஹிந்தி வார்த்தை தான் சங்க்ரஹாலய்! அதாவது பிரதம மந்திரி அருங்காட்சியகம்! அப்படி என்றால் இன்றைய பிரதம மந்திரியின் பெருமை சொல்லும் இடமா, அது குறித்து எனக்குத் தெரிந்து கொள்ள அவசியமில்லை என்று நினைத்து பதிவை விட்டு ஓட வேண்டாம்! கொஞ்சம் பொறுங்கள்! உங்களுக்கே தெரியும் இங்கே அரசியல் பேசப்படுவதில்லை.  இந்த அருங்காட்சியகம் நம் அன்னை தேசம் பாரதத்தில் இது வரை இருந்த அனைத்து பிரதம மந்திரிகள் குறித்த பல தகவல்களை, அவர்கள் குறித்த நற்செய்திகள் மற்றும் அவர்கள் உபயோகித்த பொருட்கள், அவர்களுக்குக் கிடைத்த பரிசுகள் என பலவற்றை நமது தேசத்தில் உள்ள மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகம். எங்கே இருக்கிறது, இங்கே செல்வதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா? இங்கே என்ன வசதிகள் இருக்கிறது, எந்த நாட்களில், எந்த நேரத்தில் பார்க்கலாம் என்கிற தகவல்களை வரும் பத்திகளில் பார்க்கலாம்!



தீன் மூர்த்தி சிலைகள்...

(TH)தீன் மூர்த்தி (B)பவன் என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்த தகவல்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவரது அறைகள் என அவர் குறித்த தகவல்கள் மட்டுமே இருந்து வந்தது.  இந்தக் கட்டிடம் எப்போது கட்டப்பட்டது என்கிற தகவல்களை முதலில் பார்த்துவிடுவோம். 30 ஏக்கர் பரப்பளவில் அழகிய புல்வெளிகள், பூச்செடிகள் என அமைந்திருக்க, அதன் நடுவே அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் தில்லியில் பாரம்பரிய கனாட் ப்ளேஸ், பட்டோடி ஹவுஸ் போன்றவற்றை வடிவமைத்த கட்டிடக் கலைஞர் Robert Tor Russell அவர்களால் வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆங்கிலேய ராணுவத்தின் Commander-in-Chief வசிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. அப்போது இந்தக் கட்டிடத்தின் பெயர் Flagstaff House என்பதாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தக் கட்டிடம் பிரதம மந்திரி தங்குவதற்கான வீடாக மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு இங்கே 16 வருடங்கள் தங்கியிருந்தார்.


இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜோத்பூர், ஹைதிராபாத் மற்றும் மைசூர் லான்ஸர்ஸ் என்ற பெயர் கொண்ட படையில் இருந்த இந்திய வீரர்களின் நினைவைப் போற்ற, ஆங்கிலேயச் சிற்பி Leonard Jennings என்பவரால் வடிவமைக்கப்பட்ட மூன்று வீரர்களின் சிற்பங்கள் இந்தக் கட்டிடத்தின் அருகே உள்ள சதுக்கத்தில் நிறுவப்பட்டது. அந்த மூன்று சிற்பங்களைக் குறிக்கும் விதத்தில் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியின் வீடாக இருந்த, ஆங்கிலேயர்கள் வடிவமைத்த Flagstaff House என்ற அந்தக் கட்டிடத்தினை தீன் மூர்த்தி பவன் என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினார்கள். பண்டிட் நேருவின் மறைவுக்குப் பிறகு, அவர் பதினாறு வருடங்கள் தங்கிய இடம் அவரது நினைவிடமாக மாற்றியது அன்றைய காங்கிரஸ் அரசு.  அதே கட்டிடத்தில் நேரு குறித்த புத்தகங்கள் உடன் மற்ற புத்தகங்களும் வைத்து ஒரு நூலகமும் ஆரம்பிக்கப்பட்டது. அதே வளாகத்தில் Nehru Planetarium ஒன்றும் இயங்குகிறது. ஆனால் முப்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் பெரும்பகுதி பயன்படாமல் வெறும் தோட்டமாக மட்டுமே இருந்தது. 



வாஜ்பேயி அவர்களுக்குக் கிடைத்த கைக்கடிகாரம்...


அருங்காட்சியகத்தின் உள்ளே...


வெளியே!


அருங்காட்சியகம் எதற்காக?


அழகிய சிலையொன்று...


பரிசுப் பொருட்களில் ஒன்று...


மற்றுமொரு பரிசுப்பொருள்...


புதிய அருங்காட்சியகம் - வித்தியாசமான கோணத்தில்...

அங்கே இருக்கும் தோட்டத்தில் ஒரு அழகிய புதிய கட்டிடம் ஏற்படுத்தப்பட்டு ஏப்ரல் 2022-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த அனைவருடைய காலகட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள், அவர்கள் செய்த பயணங்கள், அவர்களுக்குக் கிடைத்த பரிசுகள் என பலவற்றை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். Museum of Indian Prime Ministers, பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய் என்ற பெயர்களில் இங்கே இயங்கி வரும் இந்த அருங்காட்சியகம் தில்லி வரும் பல சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் ஒரு இடமாக அமைந்திருக்கிறது.  ஆங்கிலேயர்கள் வடிவமைத்த கட்டிடத்தில் பெரிதாக மாற்றங்கள் ஏதும் செய்யாமல், நேருவின் நினைவுகளை அப்படியே வைத்திருப்பதோடு, மற்ற பிரதம மந்திரிகள் பரிசாகப் பெற்ற விலை மதிப்பில்லா பொருட்களையும் அங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  புதியதாகக் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தின் வடிவமைப்பும் மிக அழகு! மேலே இந்தியாவின் கொடியில் இருக்கும் சக்கரமும் உள்ளே இருக்கும் வடிவமைப்பும் பார்க்க பிரமிப்பு.  



விரும்பிய பிரதமருடன் நிழற்படம்...


காட்சியகத்தில் இருக்கும் பல விஷயங்கள் Interactive வகையைச் சார்ந்தவை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு தொடுதிரை வசதி கொண்ட திரை இருக்கிறது. அதனைத் தொட்டு அந்த இடத்தில் காட்சிப் படுத்தியிருக்கும் விஷயத்தினைக் குறித்த தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. பழமையான விஷயங்களை ஒவ்வொன்றாக நாம் தெரிந்து கொள்ளும் வசதி பல சமயங்களில் நமக்கு உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு நமது அரசியலமைப்புச் சட்டம் எப்படி உருவானது, அதில் இருக்கும் விஷயங்கள் என்னென்ன, எப்போதெல்லாம் மாற்றம் செய்யப்பட்டது போன்ற தகவல்களை நாம் தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கே இருக்கும் தொடுதிரையைத் தொட்டு நாம் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.  ஒவ்வொரு பிரதம மந்திரியும் தனது ஆட்சிக் காலத்தில் எடுத்த நடவடிக்கைகள், தொடங்கிய திட்டங்கள் என பல விஷயங்கள் நம் கைச் சொடுக்கில் தெரிந்து கொள்ள முடியும் என்பது ஒரு நல்ல வசதி தானே.  ஆராய்ச்சியில் ஈடுபடும் பல மாணவர்கள் இப்படியான விஷயங்களை தேடிக் கொண்டிருக்கலாம்! இணையத்தில் இருக்கும் விஷயங்களின் நம்பகத்தன்மை நமக்குத் தெரியாது எனும்போது, இங்கே இருக்கும் தகவல்கள் நம்பகத்தன்மை அதிகம் கொண்டது என்பதும் கூடுதல் வசதி. 


இங்கே இருக்கும் இன்னுமொரு கூடுதல் வசதி குறித்தும் பார்க்கலாம்.  இதுவரை நமது தேசம் கண்ட பதினைந்து பிரதம மந்திரிகளில் (ஜவஹர் லால் நேரு, குல்சாரி லால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜிவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்மராவ், அடல் பிஹாரி வாஜ்பேயி, தேவ கௌடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோஹன் சிங் மற்றும் நரேந்திர மோடி) உங்களுக்குப் பிடித்தவர் யாராகவும் இருக்கக்கூடும்.  அவரைச் சந்தித்து அவருடன் ஒரு நிழற்படம் எடுத்துக்கொள்ள உங்களுக்கு ஆசை இருக்கலாம் - அது சாத்தியமானது அல்ல! ஆனால் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தால் உங்கள் ஆசை நிறைவேற ஒரு வாய்ப்பு இருக்கிறது! ஆமாம் இங்கே நீங்கள் விரும்பிய பிரதம மந்திரியுடன் நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம் - கணினி மூலம்! இது நமது ஊரில் திருவிழாக்களில் விரும்பிய திரைப்பட நட்சத்திரங்களுடன் படம் எடுத்துக் கொள்வது போன்ற விஷயம் தான் என்றாலும், அருங்காட்சியகத்திற்கு வரும் பலரும் இப்படி படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியடையலாம் என்பது நல்லது தானே.


இப்படியான இன்னும் சில விஷயங்களும் இங்கே உண்டு. இந்த அருங்காட்சியகத்திற்கு நீங்கள் வந்து பார்வையிட்டீர்கள் என்ற அத்தாட்சியையும் (பிரதமரின் கையொப்பமிட்ட கடிதம்) நீங்கள் பெற முடியும்! இது போன்ற இன்னும் சில விஷயங்களும் இங்கே உண்டு.  ஆனால் இங்கே ஒரு விஷயத்தினை தெளிவு செய்து விடுகிறேன். இப்படியான வசதிகள் அனைத்திற்கும் கட்டணம் உண்டு! ஒரு விதத்தில் கட்டணம் வைப்பதும் நல்லது தான் - அதன் மூலம் அரசிற்கு வருமானம் வருகிறது - அந்த வருமானத்தைக் கொண்டு இங்கே இருக்கும் பல ஊழியர்களின் சம்பளம், கட்டிடத்தையும், வளாகத்தினையும் பராமரிக்க வேண்டிய பணம் என அனைத்திலும் கொஞ்சமேனும் கிடைக்குமே! நுழைவுக் கட்டணம் ரூபாய் 100/-. நுழைவுச் சீட்டு வாங்கும்போதே இது போன்ற சேவைகளுக்கும் (பட்டியல் அங்கேயே இருக்கிறது) நீங்கள் சீட்டு வாங்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது என்பதால் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வாங்கி விடலாம்!  இத்தனை பெரிய வளாகத்தினை அரசு நிர்வகிக்க கொஞ்சமேனும் வருவாய் கிடைத்தால் நல்லது தானே! முன்பு இங்கே எந்த வித வருவாயும் அரசுக்கு இல்லாமல் இருந்தது - செலவுகள் மட்டுமே அதிகமாக இருந்தது. தற்போது வருமானத்திற்கு வருமானமும் கிடைக்கிறது என்பது நல்லதே!


திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும்.  இந்த வழியே நிறைய பேருந்துகள் செல்கின்றன.  தவிர மெட்ரோ நிலையமும் அருகில் தான். மெட்ரோ நிலையத்திலிருந்து ஒரு பேட்டரி பேருந்தும் சில சமயங்களில் இயக்குகிறார்கள்.  இந்த இடம் குறித்த பல தகவல்களையும், இங்கே இருக்கும் வசதிகள் குறித்தும், படங்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால் அவர்களது இணைய தளத்திலும் பார்க்கலாம். ஆனால் நேரில் பார்ப்பது தனிவித அனுபவம் என்பதால் தில்லி வரும் வாய்ப்பு இருந்தால், நீங்களும் இந்த பிரதம மந்திரி அருங்காட்சியகத்திற்குச் சென்று பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே.  இந்தப் பதிவில் இணைக்கப்பட்டு இருக்கும் படங்களைத் தவிர இங்கே எடுத்த படங்கள் அதிகம் என்பதால் வரும் ஞாயிறில் தனிப்பதிவாக அந்தப் படங்களை வெளியிடுகிறேன். தினம் தினம் தில்லி வரிசையில் வேறு ஒரு தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள், படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. வாசகம் அருமை

    பிரதம மந்திரி அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்த உணர்வு கிடைத்தது உங்கள் பதிவு மூலம்.

    நிறைய விஷயங்கள் நீங்களே சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பிரதான மந்திரி அருங்காட்சியகத்தின் உள்ளே சென்ற பார்த்த உணர்வு, டச் ஸ்க்ரீன் வசதி இருக்கிறதா! எல்லாம் அருமை. மற்ற படங்களையும் காண ஆவல். எந்த மெட்ரோ ஸ்டேஷன் அருகே என்ற்று சொன்னால் உபயோகமாக இருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உத்யோக் பவன் மெட்ரோ நிலையத்தில் இறங்கலாம். அங்கிருந்து ஒரு பேருந்தில் (604, 620) பிடித்துச் செல்லலாம் அல்லது ஒரு ஆட்டோவில் பயணிக்கலாம் (50 ரூபாய் கேட்பார்கள்).

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  5. ஜி, அருமையான இடம். படங்களும் ஒவ்வொன்றைப் பற்றிய தகவல்களும் நல்ல விவரமாக அருமை.

    //காட்சியகத்தில் இருக்கும் பல விஷயங்கள் Interactive வகையைச் சார்ந்தவை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு தொடுதிரை வசதி கொண்ட திரை இருக்கிறது. அதனைத் தொட்டு அந்த இடத்தில் காட்சிப் படுத்தியிருக்கும் விஷயத்தினைக் குறித்த தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.//

    நல்ல விஷயம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு

  6. சிறப்பான பதிவு..

    பிரதம மந்திரி அருங் காட்சியகத்திற்குச் சென்று வந்த உணர்வு..

    நவீன தொழில் நுட்பங்களுடன் அருங்காட்சியகம்.

    பயனுள்ள விஷயங்கள்..
    ஆர்வம் உள்ள இளைய தலைமுறையினர் மிகவும் விரும்புவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. அருங்காட்சியகம் மிகவும் நன்றாக இருக்கிறது. தகவல்கள் படங்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருங்காட்சியகம் குறித்த தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....