வியாழன், 14 மார்ச், 2024

கதம்பம் - துண்ட மாங்காயும், நெல்லிக்காய் ரசமும் - அமுதம் விளையும் (வாசிப்பனுபவம்)


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட The Concept of Work From Home - பொறாமை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


துண்ட மாங்காயும், நெல்லிக்காய் ரசமும் - 10 மார்ச் 2024:



இங்கு வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது! பசியும் இல்லை! சாப்பிடவே பிடிக்கலை! சரி! குக்கரில் சாதமும் பருப்பும் வைத்ததும்  சந்தையில் வாங்கிய மாங்காய் தான் இருக்கே என்று நறுக்கி உப்பு, காரம் சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து இன்ஸ்டண்ட் ஊறுகாய் தயார் செய்தேன். 


எனக்கு ஊறுகாயின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மோர் சாதத்துக்கு குழம்பு அல்லது இட்லி மிளகாய் பொடி தொட்டுக் கொண்டு கூட சாப்பிட்டு விடுவேன்! அதுவும் வருடக்கணக்கில் வைத்துக் கொள்ளும் நாள்பட்ட எண்ணெய் மிதக்கும் ஊறுகாயின் மேல் ஈடுபாடே கிடையாது! சட்டென்று செய்யும் துண்ட மாங்காய், நெல்லிக்காய், மாங்காய் தொக்கு, இஞ்சிப்புளி, பசுமஞ்சள் ஊறுகாய் போன்றவை இருந்தால் போட்டுக் கொள்வேன்!


இன்றைக்கு ரசம் மட்டும் போதும் என்றதும் உப்பில் ஊறிய நெல்லிக்காய் இருந்தது நினைவுக்கு வந்தது! காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையுடன் நெல்லிக்காயும் மென்று சாப்பிடுவேன்! நெல்லிக்காயுடன் மிளகு சீரகம், தக்காளியும் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து நெய்யில் தாளித்தால் நெல்லிக்காய் ரசம் ரெடி! இதை சூப் போலவும் குடிக்கலாம்! சுவையாக இருக்கும்!


இன்றைய சமையல் இப்படி...🙂


*******


வாசிப்பனுபவம் - அமுதம் விளையும் - ரமணிசந்திரன் - 12 மார்ச் 2024:



கதையின் நாயகி மானசி 22 வயதே ஆன இளம்பெண்! எதனாலோ தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஆதரவற்றவர்கள் ஆசிரமம் மூலம் ஒரு இடத்தில் பணிக்குச் சேர்கிறாள்! நான்கு வயது குழந்தையான இந்துவை பார்த்துக் கொள்ளும் வேலை தான் அவளுக்கு தரப்படுகிறது!


கதையின் நாயகனான உமாகாந்தன் தான் குழந்தை இந்துவின் தகப்பன்! தொழிலதிபரான உமாகாந்தனுக்கு ரஞ்சனி என்ற தங்கை இருக்கிறாள்! இருவரும் பிசினஸில் பிஸியாக இருக்க மனைவியின் மறைவுக்குப் பிறகு உமாகாந்தனுக்கு குழந்தையை பார்த்துக் கொள்வது சிரமமாக இருக்கவே ஆசிரமத்தில் சொல்லி மானசியை பணியில் அமர்த்துகிறார்கள்!


சில நாட்களிலேயே மானசியும் இந்துவும் நெருக்கமாகி விடுகிறார்கள். குழந்தை பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் மானசியும் தன் படிப்பான ஃபேஷன் டிசைனிங்கை தொடர்கிறாள்! தன்னுடைய குணத்தால் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறாள்! அந்த வீட்டில் உள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் சரி செய்கிறாள்!


இப்படிச் செல்லும் கதையில் மானசி எதற்காக மறைந்து வாழ்கிறாள்? அவளின் பின்னணி என்ன? உமாகாந்தனுக்கும் மானசிக்கும் இடையே எப்படிப்பட்ட சூழலில்  காதல் உண்டானது? என்பதையெல்லாம் இந்த நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்!


எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் கதைகளில் நாயகன் என்பவர் வசதியான இடத்து பிள்ளையாக ஆறடி உயரத்தில் உயர்ந்த மனிதனாக இருப்பார்! நாயகி தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருப்பவளாக இருப்பாள்! தோட்டம், சமையல், அழகுக்கலை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவளாக இருப்பாள்! இவரின் எழுத்து வாசிக்க தொய்வு இல்லாத நடையுடனும், இயல்பாகவும் இருக்கும்!


சமீபத்தில் நான் கிண்டிலில் வாசித்த நூல் தான் அமுதம் விளையும்!  மென்மையாக செல்லும் கதையாக இருந்தது! காதலும் கம்பீரமும் இணைந்த கதை! குறை என்று சொல்ல வேண்டுமென்றால் மின்னூலாக வடிவமைக்கும் போது  பதிப்பகத்தில் அத்தனை மெனக்கெடுவதாக தெரிவதில்லை! ஆங்காங்கே எழுத்துப்பிழைகள்! ஒரு சில இடங்களில் குத்துமதிப்பாக சொற்றொடரை புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது! 


நான் ரசித்து வாசித்த இந்த நூலை வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


14 கருத்துகள்:

  1. "துண்ட மாங்காய்"   எனக்கு இந்த பதம் புதிது!  ஆம், வெயில் இங்கும் கொளுத்துகிறது.  வெயிலால் மோர் சாதம் தவிர வேறெதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துண்ட மாங்காய் - நெய்வேலி பகுதியிலும் இப்படிச் சொல்வதுண்டு. வெய்யில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது - இங்கேயும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒரேயடியாக மூளையைக் கசக்கும் கதைகள், சோக முடிவுகள், புதிர் என்றெல்லாம் படிக்கும்போது சில எளிமையான காதல் கதைகள் மனதுக்கு இதமாக இருக்கும். சிக்கலில்லாத கதைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கலில்லாத கதைகள் - பல சமயங்களில் இப்படியானவையே பிடித்திருக்கின்றன எனக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நெல்லிக்காய் ரசமா? புதிய ரெசிப்பி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லிக்காய் ரசம் - நன்றாகவே இருக்கும் துளசிதரன் ஜி. முடிந்தால் சுவைத்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. ஆஹா நெல்லி ரசமா...சூப்பர். நானும் நெல்லை ரசம் இரு வாரங்கள் முன் செய்தேன்.

    நம் வீட்டில் ஊறுகாய் போடுவது இல்லை. வருஷம் ஆகிவிட்டது. யாரும் ஊறுகாய் தொட்டுக் கொள்ளும் பழக்கம் இல்லாததால்.
    துண்டம் மாங்கா/ instant மாங்கா ஊறுகாய்கள் அப்பப்ப யாராச்சும் வீட்டுக்கு வந்தா போடுவேன்,

    ஆனால் வீட்டில் உறவுகளுக்கு வருடக் கணக்காக இருக்கும் ஊறுகாய் போட்டுக் கொடுப்பது வழக்கம். நெல்லை, ஆம்தே காய் (காட்டு மாங்கா) இங்கு கிடைக்கும் சின்னதா பாக்க கிளாக்கா மாதிரி....ஆவாக்காய், மாகாளி இப்படிப் போடுவதுண்டு.

    அல்லாமல் வீட்டிற்குப் போடுவதில்லை. எனக்குப் பிடிக்கும் ஆனால் தவிர்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் பல வீடுகளில் இப்படி வருடக்கணக்கில் ஊறுகாய் போடும் வழக்கம் குறைந்து விட்டது. என் பெரியம்மா விஜயவாடாவில் இருந்தவரை இப்படி நிறைய ஊறுகாய் போடுவார்கள் - ஆவக்காய், தக்காளி ஊறுகாய் என கிலோ கணக்கில் போட்டு எல்லோருக்கும் தருவார்கள். நானும் கூட அங்கே செல்லும் சமயங்களில் ஊறுகாய்காக கடுகு, மிளகாய் போன்றவற்றை இடித்துக் கொடுத்திருக்கிறேன்.

      இப்போது நானும் கூட ஊறுகாய் சாப்பிடுவது மிகவும் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. இப்ப இங்கும் பெரும்பாலான தினங்களில் வெள்ளரிக்காய் . கிச்சடியாக, இல்லைனா மோர் சாதத்தில் கலந்து என்று. எப்படியேனும் சேர்த்துக் கொள்வது.

    //எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் கதைகளில் நாயகன் என்பவர் வசதியான இடத்து பிள்ளையாக ஆறடி உயரத்தில் உயர்ந்த மனிதனாக இருப்பார்! நாயகி தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருப்பவளாக இருப்பாள்!//

    டிட்டோ. அதேதான். நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது என் தோழிகள் mills & boon வாகிப்பவர்கள் அவர்கள் சொல்வது ரமணிச்சந்திரன் அவர்களின் கதைகளும் அப்படித்தான் இருக்கும் என்று. நான் ரமணிச் சந்திரன் அவர்களின் கதைகள் ஒன்றோ இரண்டோ வாசித்திருப்பேன் அவ்வளவுதான் அதுவும் தோழிகள் சொன்னதால். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்று...முதலில் இருவருக்குள்ளும் எதிர் எதிர் துருவங்கள் சண்டைகள் என்று பின்னர் இணைவார்கள். அதன் பின் வாசித்ததில்லை கதைகளின் பெயரும் மறாந்து போச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சந்திரன் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    அனைத்தும் அருமை. முகநூலில் வாசித்தேன்.

    //எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் கதைகளில் நாயகன் என்பவர் வசதியான இடத்து பிள்ளையாக ஆறடி உயரத்தில் உயர்ந்த மனிதனாக இருப்பார்! நாயகி தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருப்பவளாக இருப்பாள்! //

    லட்சுமி அவர்களின் கதாநாயகியும் அப்படித்தான். நிறைய திறமைகளை கொண்டவள்
    ஏழமை, தான்மானம் கொண்டவள்.

    ரமணி சந்திரன் கொஞ்சம் லட்சுமி மாதிரிதான் எழுதுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும், பதிவில் வெளியிட்ட தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. இங்கும் வெய்யில்தான். வெய்யிலுக்கு தயிர்சாதம்,மோர்தான் நன்றாக இருக்கும்.

    படிக்கும் காலத்தில் ரமணிசந்திரன், கதைகள் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....