வெள்ளி, 29 மார்ச், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - சில தகவல்கள் - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட GPT 1997- 2000 batch பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்




BHU Entrance Gate...

வாரணாசி நகருக்கு வந்தே பாரத் இரயில் மூலம் சென்றடைந்தது குறித்து கடந்த பதிவுகளில் பார்த்தோம்.  இரவு 11 மணிக்கு வாரணாசி சென்றடைய வேண்டிய வந்தே பார்த் அதி விரைவு இரயில், தில்லியிலிருந்து தாமதமாக புறப்பட்டு தாமதமாகவே சென்றடைந்தது குறித்தும் எழுதி இருந்தேன்.  வாரணாசி நகரில் எங்கே தங்குவது என்ற குழப்பமோ, தங்குவதற்கு இடம் தேடுவதோ அவசியமில்லாமல் பயணித்த ஒரு அனுபவம் இது. முன்னரே நண்பர் அங்கு அலுவல் சம்பந்தமாக மாதத்தின் நடுவிலேயே சென்றுவிட்டதால் தங்குமிடம் தேடவேண்டிய கஷ்டம் இல்லாமல் போனது. தில்லியிலிருந்து பயணிக்கும் போதே அவரிடம் இரயில் தாமதம் ஆவது குறித்து பேசியிருந்தேன் என்பதால் அவர் கவலை வேண்டாம் வண்டி அனுப்புகிறேன் - எனது தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்து விடு என்று சொல்லி இருந்தார்.  அவர் காசி நகரில் இரண்டாம் முறையாக நடந்து கொண்டிருந்த காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வுக்காக தில்லியிலிருந்து அங்கே சென்று டேரா! 



காசியில் இருக்கும் பிரபலமான பல்கலைக்கழகமான பனாரஸ் ஹிந்து யுனிவர்சிடியின் தங்குமிடங்களில் ஒன்றில் அவர் தங்கியிருந்தார்.  நான் சென்று சேர்ந்தபோது நள்ளிரவுக்கு மேல்! வெளிக்கதவு திறந்திருந்ததால் நேரடியாக உள்ளே சென்றேன் - இரவுப் பணியில் இருந்தவர் அப்போது தான் கொஞ்சம் அசந்திருப்பார் போலும் - அதனால் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன் நண்பர் தங்கியிருந்த முதலாம் மாடிக்குச் சென்று அவரது அறைக் கதவைத் தட்டினேன்! பிறகு பயண அலுப்பு காரணமாக உடல் கெஞ்ச, உடனடியாக படுக்கை தான்!  நண்பரும் பணிச்சுமை காரணமாக அலுப்பில் மீண்டும் உறக்கத்திற்குத் திரும்பினார். காலையில் மெதுவாக எழுந்திருந்தால் போதும் என்று இருவரும் பேசிக் கொண்டு உறக்கத்தைத் தழுவினோம்! காசி நகரில் முதலாம் இரவு நல்லபடியே சென்றது.  காலையில் பொறுமையாக எழுந்திருந்து தங்குமிடத்தின் பால்கனி பகுதிக்குச் சென்று பார்க்க பனாரஸ் பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டம் தெரிந்தது. டிசம்பர் மாதம் என்பதால் வெளியே அடர்ந்த பனிமூட்டம் - அந்தப் பனியிலும் நடைப்பயிற்சி செய்யும் மனிதர்கள். குளிர் அதிகமாக இருக்க உள்ளே வந்துவிட்டேன். 




வாரணாசி நகருக்கும் தமிழகத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. நம் ஊர் மக்கள் காசி எனும் வாரணாசி நகருக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றாக, காசியில் உறையும் காசி விஸ்வநாதரை தரிசிக்க ஆசைப்படுவதும், பயணிப்பதும் உண்டு. அதே போல வட இந்தியர்களில் பலர் இங்கேயிருந்து புறப்பட்டு நமது தமிழகத்தின் இராமேஸ்வரம் நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்தத் தொடர்பு இன்றைக்கு நேற்றைக்கு உருவானது அல்ல! ஆயிரக் கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் பழக்கம்.  இந்தத் தொடர்பினைக் கருத்தில் கொண்டு நமது இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சகம் 2022-ஆம் வருடத்தில் 17 நவம்பர் 2022 முதல் 16 டிசம்பர் 2022 வரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்வினை முதல் முறையாக நடத்தினார்கள். தமிழகத்திலிருந்து குழுக்களாக தமிழ் மக்களை அழைத்து வந்து காசியில் தங்க வைத்து காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியா நகரங்களில் புனிதத் தலங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.  



முதலாம் வருடம் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறிய பிறகு சென்ற வருடமும் சுமார் 15 தினங்களுக்கு (டிசம்பர் 17, 2023 - டிசம்பர் 30, 2023) காசி தமிழ் சங்கமம் 2.0 நடந்தது. ஏழு குழுக்களாக பயணிகள் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு புனித யாத்திரை முடிந்து மனதில் திருப்தியுடன் திரும்பினார்கள். இந்த யாத்திரைக்கான செலவு அத்தனையும் - போக்குவரத்து, தங்குமிடம், உணவு - என அனைத்து செலவும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டது! அதாவது பயணிக்கும் குழுவினருக்கு ஆன சொந்த செலவு - 0/- மட்டுமே! அவர்களாகச் செய்யும் செலவுகள் அவரவர் விருப்பம். இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக கல்வி அமைச்சகத்தின் ஒரு பிரிவின் சார்பில் நண்பர் சென்றிருந்தார்.  முதல் வருட நிகழ்விலும் நண்பர் ஒரு மாதத்திற்கும் மேலாக காசியில் தங்கியிருந்து நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருந்ததால் இந்த முறையும் அவரது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று 20 நாட்களுக்கும் மேலாக வாரணாசியில் தங்க அவருக்கு வாய்ப்பு. முதல் முறையும் என்னை அழைத்து இருந்தார். இந்த முறையும் அழைப்பு வந்தது - சரியான வாய்ப்பாக இருக்க புறப்பட்டுவிட்டேன். 



காசி தமிழ் சங்கமம் குறித்தும், வாரணாசிக்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு குறித்தும் இன்னும் விரிவாக வரும் பகுதிகளில் ஆங்காங்கே எழுதுகிறேன். முதல் முறை காசி தமிழ் சங்கமம் பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி வளாகத்திலேயே நடந்தது என்றால் இந்த முறை நிகழ்ச்சி வாரணாசி நகரின் கங்கைக்கரையில் புதிதாக புனரமைக்கப்பட்ட நமோ Gகாட் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். சமீப வருடங்களில் இந்த Gகாட் பகுதி பிரபலமாக இருந்து வருகிறது. பல சுற்றுலா பயணிகள் இங்கே வந்து செல்கிறார்கள். மிகப்பெரிய அளவில் கைகூப்புவது போன்ற சிற்பம் ஒன்று இங்கே அமைத்திருக்கிறார்கள். அதைத் தவிர பயணிகள் கரையோரத்தில் படங்கள் எடுத்துக் கொள்ளவும், நிகழ்ச்சிகள் நடத்தவும் இந்த இடத்தில் வசதிகள் இருக்கின்றன என்பதால் இந்த வருடத்தின் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு இங்கே தான். ஒவ்வொரு நாளும் பல விற்பன்னர்கள் இங்கே சொற்பொழிவு ஆற்றுவதோடு, தமிழகம் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் கலைஞர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 



காலை மெதுவாக எழுந்திருந்து நண்பர் தமிழ் சங்கமம் நடக்கும் இடத்திற்குப் புறப்பட நானும் அங்கே செல்வதற்கு அவருடன் வாகனத்தில் சென்று விட்டேன். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது நமோ Gகாட். அந்த இடத்திற்குச் செல்லும் சாலைகள் எல்லாம் சரியாக இல்லை. சாலை போடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் ஒரே புழுதி! புழுதியில் புகுந்து புறப்பட்டு சங்கமம் நடக்கும் இடத்திற்குச் சென்று சேர்ந்தோம்.  வாரணாசி முழுவதுமே நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நிறைய முன்னேற்றங்கள் நடந்த வண்ணமே இருக்கிறது. மிகமிகப் பழமையான நகரம், மக்களும் நகரத்தினை தூய்மையாக வைத்திருப்பதில் அக்கறை காட்டாதவர்களாக இருந்திருக்க, அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது, தூய்மைப்படுத்துவது, நகரத்தின் கட்டுமானப்பணியை அதிகப்படுத்தி வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது என்பது போன்ற வேலைகளை ஓரிரு ஆண்டுகளில் செய்து விட முடியாது. நீண்ட கால வேலை அது! அப்படியான வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது என்பதை நகரத்தினை பார்க்கும்போதும், அங்கே உள்ள மனிதர்களிடம் பேசும்போதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படி சிலரிடம் பேசியது குறித்தெல்லாம் அவ்வப்போது இந்தத் தொடரில் எழுதுகிறேன். 



நமோ Gகாட் பகுதியில் கங்கை...

இங்கே இந்தத் தொடர் குறித்து மேலும் சில விஷயங்களை முன்னரே சொல்லி விடுகிறேன்.  நான் இந்தப் பயணத்தினை ஒரு சுற்றுலா பயணம் போல ஏற்படுத்திக் கொள்ளவில்லை - அங்கே இருக்கும் வாழ்க்கை, மனிதர்கள், இடங்கள் என அனைத்தும் உணர்வு பூர்வமாக ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட பயணம். சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தால் புதிய இடங்கள், கோயில்கள் என்றே சென்றிருப்பேன்.  Leisurely Trip என்றும் சொல்லலாம்! நினைத்த நேரம் புறப்பட்டு கங்கைக் கரையோரம் நடை, அங்கே இருக்கும் மனிதர்களுடன் உரையாடல், கங்கையின் கரைகளில் இருக்கும் படித்துறைகளில் அமர்ந்து காணக்கிடைக்கும் காட்சிகளையும் சூழலையும் ரசிப்பது என்றே பயணத்தின் பெரும்பாலான நாட்களில் செய்தேன்.  நடுநடுவே சில கோயில்களைத் தேடித்தேடிச் சென்றும் பார்த்து வந்தேன்.  அந்த அனுபவங்களும் மற்ற விஷயங்களும் தொடர்ந்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.  அது வரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.


தொடர்ந்து பயணிப்போம்…


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


8 கருத்துகள்:

  1. லக்ஷ்மன் தாஸ் தங்குமிடம் மற்றவர்களுக்கும் சாத்தியமா இல்லை காசி தமிழ் சங்கம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு மாத்திரம்தானா? மற்றவர்களுக்குமெனில் எவ்வளவு ஆனது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யுனிவர்சிட்டி மாணவர்களின் பெற்றோர்கள், அரசு அதிகாரிகள் தங்கலாம். மற்றவர்களுக்கு கிடைப்பது கடினம். கட்டணம் மற்ற தனியார் இடங்களை விடக் குறைவு என்றாலும் கிடைப்பது கடினம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. நான் நமோ Gகாட்லாம் அறிந்திருக்கவில்லை. ஆனால் வாரணாசி கோவில் சந்துகளுக்குள் என் அனுபவம் வித்தியாசமானது. அதுபற்றி நான் தொடர் எழுதும்போது குறிப்பிடுகிறேன். உணவு எங்க சாப்பிட்டீங்க என்பதையெல்லாம் சொல்லுவீஙன்னு நினைக்கிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களை படிக்க காத்திருக்கிறேன். இந்தத் தொடரில் சில தகவல்கள் வரலாம் - உணவு குறித்தும்! எழுதுவது தான் கடினமாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. வித்தியாசமான பயணம். நோக்கம் நூறு சதவிகிதம் திருப்தியாக அமைந்ததா? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் சென்ற நோக்கம் திருப்தியாகவே இருந்தது - சில குறைகள் இருந்தாலும் மகிழ்ச்சியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....