திங்கள், 4 மார்ச், 2024

இயற்கை அன்னையின் மடியில் - ஒரு விபத்தும் ஓட்டுநரின் கோபமும் - பகுதி பதிமூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ஆதி மஹோத்சவ் 2024 - சில காணொளிகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******


இத்தொடரில் இதுவரை பன்னிரெண்டு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  


இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று 


கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு


லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு


லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு


லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டு


லான்ஸ்(d)டௌன் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது


லான்ஸ்(d)டௌன் - புலிகள் நடமாட்டம் - பகுதி பத்து


லான்ஸ்(d)டௌன் - நயார் ஆற்றங்கரையில்


லான்ஸ்(d)டௌன் - குழப்பமும் காலை உணவும்



சென்ற பகுதியில் சொன்னது போல, காலை உணவிற்குப் பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. மலைப்பகுதிகளில் மலைச்சரிவுகள் அவ்வப்போது நடக்கும் விஷயம் தான். எங்களது பயணத்திலும் அப்படியான சில மலைச்சரிவுகளை சாலைகளில் பார்க்க முடிந்தது. சாலைகள் அதனால் சற்றே குறுகியதால், சில இடங்களில் ஒரு பக்கம் வாகனங்கள் சென்ற பிறகு மறுபக்கத்திலிருந்து வாகனங்களை பயணிக்க அனுமதிப்பார்கள். சில சமயங்களில் ஒரே இடத்தில் சில மணி நேரங்கள் கூட இருக்க நேர்ந்துவிடுவதுண்டு.  எங்கள் வாகனம் அப்படி பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருந்தது. ஒரு வழியாக எங்கள் வாகனத்திற்கு முன்னர் இருந்த வாகனங்கள் நகர ஆரம்பிக்க எங்கள் வாகனத்தினையும் இயக்கினார் ஓட்டுநர். எங்கள் வாகன ஓட்டுநர் கொஞ்சம் அமைதியாக இருப்பது போலத் தெரிந்தாலும் பல சமயங்களில் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தார். தொடர்ந்து நாங்கள் அனைவரும் தமிழில் பேசிக்கொண்டு வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதால் அவ்வப்போது நான் அவருடன் ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தேன். 


இப்படி பயணித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் முன்னர் இருந்த ஒரு சிற்றுந்து (கார்) கொஞ்சம் மெதுவாகச் செல்ல, எங்கள் ஓட்டுனர் சற்றே கோபத்துடன் ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தார்.  தொடர்ந்து அவர்கள் மெதுவாகவே செல்ல இவரும் ஒலி எழுப்பியதோடு, வெளியே தலையை நீட்டி வேகமாக ஓட்டவும் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கொஞ்சமாக எங்கள் வாகனத்தின் Bumper அவர்கள் வாகனத்தின் Bumper மீது இடித்துவிட்டது. ஏற்கனவே வாகன நெரிசல் இருந்த பகுதி என்பதால் அங்கே ஒன்றிரண்டு நிமிடங்கள் நின்றாலே போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகி விடும் என்பதால் ஒன்றிரண்டு நிமிட சச்சரவுக்குப் பின்னர் அவரவர் வாகனத்தினை இயக்க ஆரம்பித்தார்கள். நெரிசல் மிகுந்த பகுதி தாண்டியதும் வாகனங்களை நிறுத்தி பஞ்சாயத்து வைத்துக்கொள்ளலாம் என்று முதல் வாகனத்தின் ஓட்டுநரும் அதில் இருந்த பயணி ஒருவரும் சொல்லிய பின்னர் அந்த ஓட்டுநர் வாகனத்தினை முன்னே செலுத்தினார்.  எங்கள் வாகனம் ஒரு இடத்தில் அவர்களது வாகனத்தினைத் தாண்டிச் செல்ல பின்னாடியிலிருந்து சத்தம் போட்டபடியே தொடர்ந்தார்கள். அந்த வாகனத்தில் ஒரு இளைஞரும் அவரது குடும்பமும்.



ஒரு இடத்தில் வாகன நெரிசல் இருந்த இடத்தில் அந்த வாகனத்தில் பயணித்த இளைஞர் மிகவும் கோபத்துடன் ஓடிவந்து எங்கள் வாகனத்தில் கையால் ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தார். அதற்குள் வாகன நெரிசல் சரியாகவே எங்கள் ஓட்டுனர் முன்னே செல்ல ஆரம்பித்தார். தொடர்ந்து துரத்திக் கொண்டே வந்த காரில் இருந்தவர்கள் உத்திராகண்ட் எல்லைப் பகுதியில் இருந்த ஒரு சிற்றூரில் நெரிசல் மிகுந்த இடத்தில் எங்கள் வாகனத்தினை பிடித்து விட்டதோடு, அவசர தொடர்பு எண்ணான 112-க்கும் அழைத்து விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு உத்திராகண்ட் காவலர்களும் வந்து விட்டார்கள். எங்கள் வாகனம் நின்ற இடம் நெரிசல் மிகுந்த இடம் என்பதால் ”கோட்வாலி” என்று அழைக்கப்படும் காவல் நிலையத்திற்கு இரண்டு வண்டிகளையும் ஓட்டிக் கொண்டு வரச் சொல்லி காவலர்கள் பின்னாலேயே வந்தார்கள். இரு வாகனங்களும் பயணித்து காவல் நிலையத்திற்கு அருகே நிறுத்தி, ஓட்டுநர்கள் மட்டும் காவல் நிலையத்திற்குள் சென்றார்கள். வேறு எவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.


காரில் இருந்தவர்கள் உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஏதோ ஒரு முக்கியப் புள்ளிக்கு வேண்டியவர்கள் என்று தெரிந்ததால் காவல் நிலையத்தில் அவர்களது பேச்சு எடுபட்டது. நாங்களும் எங்களுக்குத் தெரிந்த ஒரு முக்கியப் புள்ளியைத் தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் பேசச் சொன்னோம். அவரும் அங்கே பேசிவிட்டதாகத் தெரிந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு எங்கள் வாகன ஓட்டுனர் இடித்ததால் மற்ற வாகனத்தின் ஓட்டுநருக்கு 1000 ரூபாய் தரவேண்டும் என்று முடிவானது! இந்த விஷயங்கள் எல்லாம் சுமார் 45 நிமிடம் வரை நடந்து கொண்டிருந்தது. எங்களுக்காக அந்த முக்கியப் புள்ளி பேசியிருக்காவிட்டால் இன்னும் அதிகமாக காசு கேட்டிருப்பார்கள் என்று அங்கே இருந்த காவலர்கள் சிலர் மூலம் தெரிந்தது. எங்கள் ஓட்டுநர் தன்னிடமிருந்து காசு போகிறதே என்ற கோபத்தில் இருந்தார் - அதுவும் தான் தப்பே செய்யவில்லை எனும்போது நான் எதற்காக காசு தரவேண்டும் என்று எங்களிடமும் சொல்லிக் கொண்டே இருந்தார். 


என்னதான் பணம் கொடுத்துவிட்டு நகர்ந்தாலும், அந்தப் பணமும் - அவருக்கு நஷ்டம் ஏற்படவேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன் -  நாங்கள் கொடுத்துவிட்டோம் என்றாலும் - தொடர்ந்து கோபத்துடன் அவருக்குள்ளாகவே பேசிக்கொண்டும் சைகைகள் காண்பித்துக் கொண்டும் இருந்தார்.  இதற்கிடையில் எங்கள் வாகனம் உத்திராகண்ட் எல்லையைக் கடக்க இருந்தது. எங்களுக்குப் பின்னர் அந்த காரும் வந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று முறை அந்த கார் ஓட்டுனரைப் பார்த்து, “உங்க ஊருன்னு தானே என்னிடமிருந்து காசு வாங்கின, அடுத்து வரது எங்க ஊரு! அங்கே வந்தப்புறம் உனக்கு இருக்கு!” என்பது போலெல்லாம் சொல்லிக் கொண்டும் அவர் வாகனத்தை முட்டுவது போலும் ஓட்டிக் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் நாங்கள் அனைவரும் அவருக்கு இப்படிச் செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டியிருந்தது.  உத்திரப் பிரதேசம் எல்லைக்குள் வந்த பிறகு ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அந்த வாகனத்திற்காகக் காத்திருந்தார் எங்கள் ஓட்டுநர். இவர் நிற்பதைப் பார்த்த அந்த வாகன ஓட்டுநர் தனக்கு ஆபத்து என்று தெரிந்து வேகமாக முன்னேறினார்.  


மீண்டும் இவர் அவரைத் துரத்த, நாங்கள் அனைவரும் ஓட்டுநரிடம் எவ்வளவு பேசினாலும் அவரது கோபம் தீரவில்லை. அடுத்த ஒரு வளைவில் எங்கள் முன்னர் சென்ற காரின் ஓட்டுநர் U-turn எடுத்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாகச் சென்று விட்டார்.  இவர் அதன் பிறகு தான் கொஞ்சம் சாந்தமானார்.  ஆனாலும் அந்த வாகன எண் குறித்துக் கொண்டு விட்டேன், என்னிக்கு இருந்தாலும், எங்கே பார்த்தாலும் அடிக்காமல் விடமாட்டேன், பணத்தை திருப்பி வாங்காமல் விடமாட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார். எத்தனை சொன்னாலும் அந்த கோபமும் பழிவாங்கும் உணர்வும் அவரிடமிருந்து அகலவில்லை. ஒரு எல்லைக்குப் பிறகு நாங்களும் அவரிடம் இது குறித்து பேசாமல் எங்களுக்குள் பேசிக் கொண்டே பயணித்தோம்.  இது போன்ற பயணங்களில் நமக்கு அமையும் வாகன ஓட்டி சரியானவராக இல்லாவிட்டால் பயணிக்கும் அனைவருக்கும் கஷ்டம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலான பிறகு தான் ஓரளவுக்கு நிதானத்து வந்தார் எங்கள் ஓட்டுநர் அனில் திவாரி. 


மனித மனம் ரொம்பவே குழப்பமானது. தனக்கு தவறு என்று பட்டுவிட்டால் எந்த வித செயலுக்கும் தயாராக இருப்பதை இந்த ஓட்டுநரின் நடவடிக்கைகள் எங்களுக்கு உணர்த்தின. எவ்வளவு சொன்னாலும், அதிலும் பண விரயமும் அவருக்கு இல்லாத போதும், தொடர்ந்து ஒரு பழிவாங்கும் உணர்வுடன் இருந்தது சரியல்ல என்று எங்களுக்குத் தோன்றியது. அதை அவரிடம் எடுத்துச் சொல்லவும் செய்தோம்.  ஆனாலும் அவர் அந்த எண்ணங்களிலிருந்து விலகுவதாக இல்லை. இந்தப் பயணம் இது வரை சிறப்பாக இருந்தாலும், மகிழ்ச்சியான நேரத்தில் ஒரு சிறு இடைஞ்சலாக, ஒரு கரும்புள்ளியாக இந்த நிகழ்வு அமைந்து விட்டது. இப்படியாக ஒரு வித கலக்கத்துடன் பயணித்து நாங்கள் சென்று சேர்ந்த இடம் என்ன, அங்கே என்ன விசேஷம் போன்ற தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. நமது கட்டுப்பாட்டை மீறி சில விஷயங்கள் நடந்து விடும்போது பார்வையாளர்களாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  சிரமமான அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் பார்வையாளராக மட்டுமே இருக்க நேர்ந்து விடுகிறது. சிரமமான அனுபவம் தான். தேவையில்லாததும் கூட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அது சரி... மனுசன்னா கோபம் இல்லாம இருக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நெல்லை, நினைச்சேன்....மனுசன்னா கோபம் வரக் கூடாதுன்னு யார் சொன்னது. வரும் தான். ஆனால் அதை வெளிப்படுத்தும் விதமும், அதை அடக்கும் அல்லது சமாளிக்கும் விதமும் அவசியம். அது மனதுள் புகைந்து கொண்டு வன்மத்தோடோ, பழி உணர்ச்சியோடோ இருக்கக் கூடாது என்பதுதான். அது தலை காட்டும் போது நம்ம தலைக்குள்ள என்ன நடக்குதுன்னும் அத்தனையும் பாழாகும் என்பதும் ஒரு நாளின் இனிமையே கெட்டுவிடும் என்பதும்...

      கோபம் வந்தாலும் இந்த ஓட்டுநர் போல ஓட்டுவது ...அதுவும் அவரை நம்பி அந்த வண்டியில் சவாரி செய்பவர்கள், அவர் குடும்பம் என்று எவ்வளவு விளைவுகள்....இது எல்லாருக்கும் பொருந்தும்.குடும்பம்ன்ற வண்டி ஓட்ட!!

      கீதா

      நீக்கு
    2. நீங்க சொல்றதைப் பார்த்தால் நாம் எல்லாரும் துர்வாசரா மாறிடவேண்டியதுதான். சட் என்று பிடி சாபம், அப்புறம் மறந்துட்டு அடுத்த கோபத்துக்குக் காத்திருக்கவேண்டியது.

      நீக்கு
    3. வித்தியாசமான அனுபவம் தான் நெல்லை.

      //மனுசன்னா கோபம் இல்லாம இருக்க முடியுமா?// முடியாது! ஆனால் கோபத்தினை கட்டுப்படுத்தவும் தெரியவேண்டும். இல்லையெனில் பிரச்சனையில் முடியலாம் - இந்தப் பதிவில் சொன்னது போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    4. கோபத்தினை கட்டுப்படுத்தவும் தெரிய வேண்டும் - உண்மை. விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
    5. எல்லோரும் துர்வாசரா மாறிட வேண்டியது தான் - ஹாஹா... அனைவராலும் துர்வாசராக மாறிவிட முடியுமா என்ன!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. வாசகம் அருமை, வாசகம் போலவே உங்கள் பதிவிலும் பயணத்தில் கார் ஓட்டி வந்தவரின் கோபம் பற்றி சொல்லி இருப்பது பொருத்தம்.

    இது போன்ற பயணங்களில் நமக்கு அமையும் வாகன ஓட்டி சரியானவராக இல்லாவிட்டால் பயணிக்கும் அனைவருக்கும் கஷ்டம்.//
    நல்லவேளை பெரிய பிரச்சனை ஆகவில்லை. இறைவனுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      /நல்லவேளை பெரிய பிரச்சனை ஆகவில்லை// - ஆமாம். அம்மா இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. இன்றைய பதிவுக்கு ஏற்ற வாசகம்! அருமையான வாசகம். ஒருவர் கோபப்படும் போது அமைதிகாத்தல் நல்ல விஷயம்.

    வாகனம் ஓட்டும் போது, கோபம் என்பது முற்றிலும் கூடாது. அது விபத்தில் முடிய வாய்ப்புண்டு. இந்த முறை அப்படியான ஒரு ஓட்டுநர் அமைந்திருந்தது சங்கடமான விஷயம். நல்ல காலம் விபத்து எதுவும் ஏற்படாமல் எல்லாரும் பாதுகாப்பாக வந்தது Thank God!
    முன்னால் சென்ற கார் மெதுவாகச் சென்றது என்ற கோபத்தில் இவர் ஓட்டியதால்தான் அப்படி பம்பர் இடித்திருக்கிறது. என்ன சொன்னாலும் தவறு இந்த ஓட்டுநர் மேல்தான். அவர் நியாயப்படுத்துவதும் அந்தக் கோபம் தணியாமல் ஒரு வெறி உள்ளில் இருப்பதும் நல்லதில்லை. இனி இப்படியான ஓட்டுநர் அமையாமல் இருப்பது நல்லது ஜி.

    அவர் கோபத்துடன் வண்டி ஓட்டியதை மனதில் நினைத்துப் பார்த்தப்ப எனக்கு பக் பக் என்றிருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுக்கு ஏற்ற வாசகம் - நன்றி கீதா ஜி.

      இவரின் தப்பு தான் என்றாலும் அதை ஒத்துக் கொள்ளக் கூடிய மனநிலையில் அவர் இல்லை என்பதே வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. ரைவரின் அவசரத்தால் எல்லோருக்கும் சிரமம் வந்துள்ளது.

    ரைவர் சரியான முன்கோபியாக இருக்கிறாரே. தானே அவர்களுக்கு இடித்து தவறு செய்துவிட்டு அதை மறந்து மீண்டும் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருக்கிறாரே. நீங்கள் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இப்படியும் மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சில மனிதர்கள்... இவர்களால் சில அனுபவங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  6. பொதுவாக ஓட்டுநர்கள் சற்று கோபக்காரர்களாகவே இருப்பார்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. நீங்கள் கொடுத்திருக்கும் வாசகத்துக்கு ஏற்ப நிகழ்வு. கோபம் முட்டாள்தனத்திலும் வன் மனதில் வெறியுடனும் தொடங்கி உங்கள் அனைவரது இனியய பயணம் வருத்தத்தில் இடையில் ஒரு கரும் புள்ளி போன்ற போலீஸ் ஸ்டேஷன் நிகழ்வுடன் என்று உங்கள் எல்லோருக்கும் ஒரு டென்ஷன் வருத்தம் என்று முடிந்து அப்படியோ வேறு எந்த பாதிப்பும் இல்லாமல் அடுத்த இடத்தை அடைந்திருக்கிறீர்கள்.

    அடுத்து இனிதே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....