எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 12, 2011

மாமியார் – மருமகள் கோவில்:
[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 8]

அது என்னங்க Saas-Bahu Mandir? அதாங்க மாமியார் [Saas] - மருமகள் [Bahu] கோவில்? அட கேட்க புதுசா இருக்கேன்னுதான் நாங்களும் ஆர்வத்துடன் அங்கு  சென்றோம்

சற்றேறக்குறைய 10-11-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இதுஅப்போதைய குவாலியர் மாகாணத்தினை ஆண்டகச்சபகாடாஸ்அரசர்கள் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டியிருக்கின்றனர்.  அவற்றில் இரண்டு தான் குவாலியர் கோட்டையின் அருகே கட்டப்பட்டு இருக்கும் இந்த Saas-Bahu Mandir. 

இக்கோவிலைப் பார்க்கும் மாமியார்கள் சற்றே பெருமைப் பட்டுக் கொள்ளலாம்ஏனெனில் மருமகள் கோவிலை விட மாமியார் கோவில் தான் அளவில் பெரியது.  அப்ப நாங்க என்ன சும்மாவா, என என்னை சண்டைக்கு இழுக்கும் மருமகள் சங்க உறுப்பினர்களே நீங்களும் பெருமைப்பட விஷயம் இருக்கிறது.

இரு கோவில்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மருமகள் கோவில் தான் இன்றும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.  மாமியார் கோவில் பாவம் சற்றே இடிபாடுகளுடன் காணப்படுகின்றது

சரி இந்த கோவில்களில் என்ன மூர்த்தி வைத்து பூஜித்தார்கள்? மாமியார்-மருமகள்களையா என்று கேட்டால் அதுதான் இல்லை.  இங்கே பூஜிக்கப்பட்டது பகவான் ஸ்ரீ விஷ்ணுவை.  விஷ்ணு பகவான் கோவிலை எதற்கு மாமியார்-மருமகள் கோவில்என்று சொல்கிறார்கள் என்ற சந்தேகம்  உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏற்பட்டது.

பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கு பல பெயர்கள் இருக்கிறதல்லவா.  அதில் ஒரு பெயர்ஷாஸ்த்ர பகுஎன்பதாம்.  இந்த பெயரில் முதலில் அழைக்கப்பட்ட இந்த கோவில்கள், நாளடைவில் மருவிசாஸ்-பகுஅதாவது மாமியார்-மருமகள் கோவில் ஆகிவிட்டதாம்

மிகச் சிறப்பான கட்டமைப்பு கொண்டவை இந்த இரு கோவில்களும்.  பிரமீட் வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இவைகள்  நிறைய தூண்களின் பலத்தில் நிற்கின்றன.


இரண்டு கோவில்களிலுமே சிற்பங்கள் மிக அழகாய் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதுசிற்பங்களின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றியது


மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்கால கோட்டைகளையும் கோவில்களையும் பார்க்க வந்து கொண்டு இருக்கும் வெளி நாட்டவர்கள் இக்கோவில்களையும் பார்க்கத் தவறுவதில்லை. நாங்கள் அங்கு இருந்தபோது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மூன்று பேருக்கு ஒரு பனிரெண்டு வயது சிறுவன் இக்கோவிலின் சிறப்பு பற்றி ஸ்பேனிஷ் மொழியில் விளக்கிக் கொண்டிருந்தான்

அந்த மூன்று பேருக்கு மட்டுமல்ல பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம்.  பள்ளிப் படிக்கட்டைக் கூட மிதிக்காத அச்சிறுவன் பழக்கத்திலேயே ஸ்பேனிஷ், ஃப்ரென்ச், ஆங்கிலம் என நிறைய பாஷைகளை நன்கு பேசுகிறான் என அந்த வெளிநாட்டவர்களே சொல்லி ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.  நம் குழந்தைகளுக்கு திறமை நிறைய கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை வழிப்படுத்தத்தான் ஆள் இல்லை.

என்ன மாமியார்-மருமகள் கோவில் பார்த்துட்டீங்களா? அடுத்ததாய் நாம் செல்லப்போவதுதேலி கா மந்திர்”.  காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்.... 


நட்புடன்

வெங்கட்
புதுதில்லி58 comments:

 1. மாமியார்- மருமகள் கோவில் பற்றி பகிர்ந்து , விவரமாக அதன் பெருமைகளை பேலன்ஸ் செய்துவிட்டீர்கள்….
  சிறுவனின் ஸ்பானிஷ் மற்ற மொழித்திறமைகள் வியக்க வைக்கிறது..
  உங்கள் சுற்றுலா..எங்களுக்கான சுற்றுலா தொடர வாழ்த்துகள்….

  ReplyDelete
 2. //அது என்னங்க Saas-Bahu Mandir?//

  க்யூன்கி சாஸ் பி கபி பஹூ தி! :-))

  //ஏனெனில் மருமகள் கோவிலை விட மாமியார் கோவில் தான் அளவில் பெரியது.//

  அதானே பார்த்தேன்! ஏதாவது உள்குத்து இல்லாமலா கட்டியிருப்பாய்ங்க? :-))

  //மாமியார் கோவில் பாவம் சற்றே இடிபாடுகளுடன் காணப்படுகின்றது.//

  எல்லாம் நியூக்ளியஸ் ஃபேமிலியாலே வந்த பிரச்சினையோ?

  அருமையான பதிவு வெங்கட்ஜீ! :-)

  ReplyDelete
 3. //இரு கோவில்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மருமகள் கோவில் தான் இன்றும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாமியார் கோவில் பாவம் சற்றே இடிபாடுகளுடன் காணப்படுகின்றது. //

  இளம் வயது மருமகளைத்தானே யாருமே உண்மையில் பராமரிக்க விரும்புவார்கள். வாழ்க்கையில் ஏற்கனவே இடிபட்ட, அடிபட்ட, அனுபவப்பட்ட மாமியார்கள் இடிபாடுகளுடன் கூடிய இந்தக்கோயில் போலத்தான் என்றும் என்பதை சுட்டிக்காட்டுகிறதோ! என்னவோ.

  நல்லதொரு சுவையான பதிவு. Voted 3 to 4 Indli. vgk

  ReplyDelete
 4. ”ஷாஸ்த்ர பகு” என்பது சாஸ்-பகு ஆகிவிட்டதா? காலப்போக்கில் எப்படியெல்லாம் மாறிப் போகிறது!அருமையான பகிர்வு,வெங்கட்!

  ReplyDelete
 5. சாஸ்-பகு பெயர் காரணம் அருமை. அழகிய படங்கள்.

  //நம் குழந்தைகளுக்கு திறமை நிறைய கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை வழிப்படுத்தத்தான் ஆள் இல்லை.//

  உண்மைதான்.

  நல்ல பயண அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. நானும் மத்யப்பிரதேஷில் 5 வருடங்கள் இருந்திருக்கேன் இதுவரை கேள்விப்படாத விஷயங்கள் சொல்லி வரீங்க நல்லா இருக்கு.

  ReplyDelete
 7. அந்த சிறுவனை நினைத்தால் சந்தோஷமாய் இருக்கிறது. மூன்று மொழிகளா??

  ReplyDelete
 8. நிறைய புதுப்புது விஷயங்களை அழகாக அறிமுகப்படுத்துகிறீர்கள். இதற்காகவே உங்களை அடிக்கடி டூர் அடிக்கச் சொல்லலாம் போலிருக்கிறது.(அதுக்காக நான் sponsor-லாம் செய்ய முடியாது.)

  (இந்த ”கச்சபக்காடாஸ்” அரசர்களைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இவர்கள் பொழுது போக்கிற்கு “கச்சா - பக்கா”ன்னு டாஸ் விளையாட்டு அதாவது நம்ம “மங்காத்தா” விளையாடியிருப்பாங்களோ?)

  ReplyDelete
 9. அட வெங்கட் என்ன புதுசு புதுசா சொல்றீங்க ம்ம்ம் அசத்தல், போட்டோக்களும் சூப்பர்...!!!

  ReplyDelete
 10. நேரில் சென்று பார்க்க இயலா என போன்றாருக்கு
  நல்ல பதிவு நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. அட புதுசா இருக்கே...

  பெயர் மருவி வந்த விளைவை பார்த்தீர்களா?//

  எது எப்படியோ

  இந்த கோவிலைப்பற்றிய அழகாக

  பிரமிக்க தகுந்த படங்களும்

  விளக்கிய உங்கள் பதிவு..

  அருமை.

  ReplyDelete
 12. மாமியார் மருமகளுக்கும் மருமகள் மாமியாருக்கும் கோயில் கட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

  நல்ல பயணப் பதிவு வெ.நா... :-)

  ReplyDelete
 13. Old : க்யோங்கி சாஸ் பி கபி பஹு தீ...
  Latest : க்யோங்கி ச்சாஸ் பி கபி தஹி தீ..

  ReplyDelete
 14. // ”தேலி கா மந்திர்”. //

  அங்க கெடைக்குற 'தேலிலாம்' என்வைரான்மேண்டல் நார்ம்சுக்கேத்தமாதிரி இருக்குமா ?

  ReplyDelete
 15. சாஸ் பகு கோவில்களின் அழகைக் கண்டு வியந்து கொண்டே வந்த நான் கடைசியில் பள்ளி செல்லாமலேயே பல மொழி பேசும் சிறுவனைப் பற்றி அறிந்து அசந்து போனேன். கற்றலிற் கேட்டல் நன்று என்பதை மெய்ப்பித்து விட்டான். சிறப்பான பகிர்வு. தொடரட்டும் தங்கள் பணி.
  அன்புடன் ருக்மணி சேஷசாயி

  ReplyDelete
 16. நம் குழந்தைகளுக்கு திறமை நிறைய கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை வழிப்படுத்தத்தான் ஆள் இல்லை.//

  அருமயான பகிர்வு. பாராட்டுக்கள்

  ReplyDelete
 17. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  பிரம்மாண்டமான கட்டிட அமைப்பு வியக்க வைக்கிறது.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. கோவிலைப்பற்றிய உங்கள் பதிவு அருமை...

  ReplyDelete
 19. @ பத்மநாபன்: ஆமாம் பத்துஜி! நாங்கள் சென்றபோது அச்சிறுவன் மூன்று ஸ்பெயின் நாட்டு பெண்களிடம் பேசிக்கொண்டு இருக்க, நாங்கள் எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்து, அந்த பெண்களிடம் அச்சிறுவன் பேசுவது குறித்து கேட்டோம். அவர்களும் ஆச்சரியத்துடன் அச்சிறுவன் மிகச் சரியாக பேசுவதாகச் சொன்னார்கள்... நிறைய விஷயம் இருக்கிறது அச்சிறுவனிடம்.. அதை நன்றாக உபயோகப்படுத்த தான் முயல்வார்களா என்று தெரியவில்லை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!

  ReplyDelete
 20. # சேட்டைக்காரன்: க்யூன்கி சாஸ் பி கபி பஹூ தி! :-)) அதானே....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை....

  ReplyDelete
 21. @ வை. கோபாலகிருஷ்ணன்: காரணம் எதுவாக இருப்பினும், இரண்டுமே பராமரிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. # சென்னை பித்தன்: ஷாஸ்த்ர - பகு தான் சாஸ்-பகு ஆகிவிட்டது.... காலத்தின் போக்கில் எத்தனை வார்த்தைகள் அப்படியே மாறி விட்டது.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 23. @ ராம்வி: நிறைய விஷயங்கள் நம் பழையகால கட்டிடங்களில் கொட்டிக் கிடக்கிறது... ஒவ்வொன்றாய் நமக்கு தெரிந்து கொள்ளத்தான் முடிவதில்லை....அதில் ஒன்று தான் இந்த ஷாஸ்த்ர பகு - மருவி சாஸ்-பகு ஆன கதை...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 24. # லக்ஷ்மி: நீங்க மத்தியப் பிரதேசத்தில் எங்க இருந்தீங்கம்மா? நான் சொல்லிக் கொண்டு இருப்பது குவாலியரில் இருக்கும் இடங்கள். இன்னும் இரண்டு இடங்கள் ஷிவ்புரி மற்றும் ஓர்ச்சா... அவையெல்லாம் வந்து கொண்டு இருக்கு...

  உங்கள் வார்த்தைகள் என்னை ஊக்குவிக்கின்றன அம்மா. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 25. @ அமுதா கிருஷ்ணா: ஆமாம். நாங்கள் இருக்கும்போதே மூன்று மொழிகள். அதுவும் ஆங்கிலம் வெளிநாட்டவர்களின் உச்சரிப்பிலியே.... ஸ்பேனிஷ்-உம் நன்றாக பேசுவதாக ஸ்பெயின் நாட்டவர்களே சொன்னபோது அச்சிறுவன் முகத்தில் தெரிந்த சந்தோஷம்... அப்பப்பா...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. # ஈஸ்வரன்: அட உட்டா இங்கேயும் மங்காத்தா ஆடுவீங்க போல... ஸ்பான்சர் செய்யுங்க, இன்னும் நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம் நானும்... நீங்களும்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

  ReplyDelete
 27. @ MANO நாஞ்சில் மனோ: அங்கு செல்வதற்கு முன்னர் எனக்கும் இதுவெல்லாமே புதியது தான் மக்கா....

  நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..

  ReplyDelete
 28. # புலவர் சா இராமானுசம்: தங்களது வார்த்தைகளுக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
 29. @ மகேந்திரன்: எத்தனையோ பெயர்கள் இப்படி மருவி இருக்கக்கூடும்.... நமக்குச் சொல்லத்தான் யாரும் இல்லை...

  தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 30. # RVS: இருந்திருக்கலாம்... யாரையாவது அப்படிச் செய்ய சொல்லிப் பார்க்கலாம் :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மன்னை மைனரே...

  ReplyDelete
 31. @ மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன்: ச்சாச் பி கபி தஹி தீ! அட எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா.... :)

  தேலிகா மந்திர்-ல தேல் கிடைக்காது நண்பரே... அடுத்த பகுதி வரை காத்திருங்கள்....:)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 32. # ருக்மணி சேஷசாயி: //கற்றலிற் கேட்டல் நன்று என்பதை மெய்ப்பித்து விட்டான்.//

  உண்மை தான் அம்மா..... கேட்டுக் கேட்டே கற்றுக்கொள்வது என்பது தான் சிறந்தது...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா..

  ReplyDelete
 33. @ இராஜராஜேஸ்வரி: வழிப்படுத்த வழியில்லை... உண்மை....

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. # ரத்னவேல்: தங்களது தொடர்ந்த வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 35. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 36. ஸாஸ் பகு சண்டைபிடிக்காம இருக்க நல்ல அழகா அறிமுகப்படுத்தி இருக்கீங்களே கோவிலை.:))

  அந்தப்பையன் ஆச்சரியம் . வழிப்படுத்த ஆளில்லை என்பது தான் :((

  ReplyDelete
 37. # முத்துலெட்சுமி: இரண்டு பேர்கிட்ட இருந்தும் தப்பிக்க வேண்டாமா? :)

  நிச்சயம் ஆச்சரியம் தான் அப்பையன்... கேட்பதிலேயே கற்றுக் கொண்டு இருக்கிறார்.... வழிப்படுத்த ஆளில்லை என்பது நிச்சயம் சோகம்தான்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. ஸாஸ் பஹு பெயர்க்காரணம் வந்த கதை சுவாரஸ்யம் :-))

  அந்தச்சிறுவனைப்பத்தி சொல்லியிருந்தீங்க. உண்மைதான் நம்ம பூமியில் பட்டை தீட்டப்படாத வைரங்கள் எவ்வளவோ கிடக்குது. தீட்டினா ஜொலிக்கும்.

  கன்யாகுமரியிலும் இப்படித்தான், நாலஞ்சு பாஷை தெரிஞ்சவங்களை சர்வ சாதாரணமா பார்க்கலாம் :-)

  ReplyDelete
 39. @ அமைதிச்சாரல்: பட்டை தீட்டப்படாத வைரங்கள்.... உண்மையான வார்த்தைகள். இந்தியா எங்கும் இப்படிப்பட்ட வைரங்கள் நிறைய இருக்கிறது... தீட்டத்தான் ஆளில்லை.....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. அட ராமா...... ஷாஸ்த்ர பகு இப்படி சண்டை மூட்டிட்டாரே மாமியாருக்கும் மருமகளுக்கும்!!!!!

  கைடு சிறுவனுக்கு மனமார்ந்த பாராட்டுகள். எவ்வளவு இயல்பா எளிதா குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியுது பாருங்க!!!!!

  ReplyDelete
 41. # துளசி கோபால்: ஆமாங்க! சண்டையைத் தவிர்பதற்குள் நமக்கு தொண்டை வரண்டு போச்சு! :)

  சிறுவனுக்குள் அத்தனை திறமை.... கற்றலில் கேட்டல் - முன்னுதாரணம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.

  ReplyDelete
 42. நாலுபேர் வாய்கடந்து போனால்
  சமுத்திரம் கூட மூத்திரம் ஆகிப் போகிப் போகும் என
  கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்
  இந்த மாமியார் மருமகள் கோட்டைப் பெயர் விளக்கம் படிக்க
  எனக்கு அந்தப் பழமொழி நினைவுதான் வந்து போனது
  அந்தச்சிறுவன் குறித்து நீங்கள் சொன்ன விஷயமும்
  ஆச்சரியமாக இருந்தது
  பயணம் சூப்பராகப் போகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. //நம் குழந்தைகளுக்கு திறமை நிறைய கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை வழிப்படுத்தத்தான் ஆள் இல்லை// சரியாய்ச் சொன்னீர்கள்!

  ReplyDelete
 44. @ ரமணி: அட என்னவொரு பழமொழி.... நமது பழமொழிகளில் எத்தனை அர்த்தம் பொதிந்து இருக்கிறது.

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், தமிழ்மண வாக்கிற்க்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. # கே.பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 46. நல்ல பயண அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 47. @ மாலதி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....

  ReplyDelete
 48. படங்கள் அருமையாக உள்ளது.சிறுவனின் திறமை ஆச்சரியமாக உள்ளது.அடுத்து தேலி கா மந்திரில் என்ன பெயர் மருவி உள்ளதோ ? காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 49. # திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தேலி கா மந்திரில் என்ன விசேஷம்... இன்றோ நாளையோ வெளியிடுவேன்... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 50. மாமியார்-மருமகள் கோவில் என்றதும் மாமியார் லக்ஷ்மிக்கும் மருமகள் சரஸ்வதிக்குமான கோவில் என்று நினைத்தேன். இதுவரை நான் கேள்வி படாத செய்திகள், பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 51. @ தானை தலைவி: நான் அப்படி யோசிக்கவே இல்லையே :) புதிய யோசனையாக இருக்கிறது... தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 52. ஆகா ... கண்டுகொண்டோம்.

  ReplyDelete
 53. # மாதேவி: கண்டுகொண்டமைக்கு நன்றி சகோ...

  ReplyDelete
 54. சாஸ் பகு கோவில்களின் அழகைக் கண்டு வியந்து கொண்டே வந்த நான் கடைசியில் பள்ளி செல்லாமலேயே பல மொழி பேசும் சிறுவனைப் பற்றி அறிந்து அசந்து போனேன். கற்றலிற் கேட்டல் நன்று என்பதை மெய்ப்பித்து விட்டான். சிறப்பான பகிர்வு. தொடரட்டும் தங்கள் பணி.
  அன்புடன் ருக்மணி சேஷசாயி

  --
  ருக்மணி சேஷசாயி

  ReplyDelete
 55. @ ருக்மணி சேஷசாயி: ஆமாம் அம்மா, அச்சிறுவனின் திறமை அதிசயிக்க வைத்தது....

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 56. @ அருள்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருள்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....