சனி, 7 ஜனவரி, 2017

திரிபுரா – நீர்மஹல் – தமிழர்கள் கைவண்ணம்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 87

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


நீர்மஹல், திரிபுரா

சென்ற பகுதியில் சொன்னது போல இன்றைக்கு நாம் திரிபுராவிலும் தனது திறமையைக் காட்டிய தமிழர்கள் பற்றியும் அங்கே இருக்கும் ஒரு அற்புதமான இடம் பற்றியும் பார்க்கப் போகிறோம். திரிபுராவின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ருத்ரசாகர் ஏரி.  இந்த பெரிய ஏரியின் நடுவே இருக்கும் ஒரு தீவில் அமைந்துள்ளது நீர்மஹல் என அழைக்கப்படும் ஒரு அழகிய திரிபுராவை ஆண்ட ராஜாவின் கோடை வாசஸ்தலம்.

நீர்மஹல், திரிபுரா - வேறு ஒரு படம்....

மஹாராஜா bபீர் bபிக்ரம் கிஷோர் மாணிக் என்பவர் கோடைக் காலத்தினைக் கழிக்க அமைத்த ஒரு அற்புதமான இடம் தான் இந்த நீர்மஹல். 1930-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த நீர்மஹலுக்கு, படகில் தான் செல்ல வேண்டும். ருத்ரசாகர் ஏரியில் பயணம் செய்யும்போது பல பறவைகளும் அழகிய பூக்களும் பார்த்து பரவசம் அடைய முடியும். ஹிந்து முஸ்லீம் கட்டிடக் கலைகளைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக கட்டியிருக்கிறார் அந்த மஹாராஜா.  Marble மற்றும் Sandstone பயன்படுத்தி அழகாய் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தினை கட்ட அவர் தேர்ந்தெடுத்தது Martin and Burn Co. என்ற நிறுவனம். பெயரிலிருந்தே வெளிநாட்டு நிறுவனம் என்பது புரியும்.

நீர்மஹலுக்குச் செல்ல படகு தயார்.....

பூப்பூக்கும் ஓசை...  அதைக் கேட்கத்தான் ஆசை...
நீர்மஹல், திரிபுரா.....

இந்த நீர்மஹலுக்குச் செல்ல, ருத்ரசாகர் ஏரியின் கரையிலிருந்து படகில் பயணிக்க வேண்டும்.  எங்கள் ஐந்து பேர் தவிர வேறு ஒரு குழுவினர் அந்தச் சமயத்தில் வர அவர்கள் தனிப்படகிலும் நாங்கள் தனிப்படகிலும் புறப்பட்டோம். ஏரியின் பெரும்பகுதிகளில் கொடிகள் படர்ந்து, பூக்களும் பெரிய பெரிய இலைகளும் மிதக்க, அவற்றுக்கு நடுவே படகில் பயணித்தது ஒரு அற்புத அனுபவம்.  படகு செல்லச் செல்ல, பறவைகள் பறக்க, இலைகள் தண்ணீருக்குள் நடனமாட, தூரத்தில் பார்க்கும்போது நீர்மஹலின் பிரம்மாண்டம் நம்மை வசீகரிக்க அற்புதமான பயணமாக இருந்தது.

படகில் இருந்தபடியே ஒரு குளியல்....
நீர்மஹல், திரிபுரா....

 மீன் பிடிக்க வாரீயளா....
நீர்மஹல், திரிபுரா....

பெரும்பாலான படகோட்டிகள் வங்க தேசத்தவர்கள். படகோட்டுவதும், சிறு படகுகளில் சென்று ருத்ரசாகர் ஏரியில் மீன்பிடிப்பதும் தான் அவர்களுக்கு பிரதான தொழில். ஒரு படகோட்டி, படகை நடுவில் நிறுத்தி, குளித்துக் கொண்டிருந்தார்! பறவைகளையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே நீர்மஹல் அமைந்திருக்கும் தீவிற்க்குச் சென்று சேர்ந்தோம்.  படகுப் பயணத்திற்குத் தனிக் கட்டணம் வாங்கிக் கொண்ட பிறகு, நீர்மஹல் சுற்றிப் பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

ருத்ரசாகர் ஏரியில் ஒரு பறவை....
நீர்மஹல், திரிபுரா.....

இலைகள்... படகுகளாய்.....
நீர்மஹல், திரிபுரா....

சுமார் 5.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஏரியின் நடுவே அமைந்திருக்கும் தீவில் இந்த நீர்மஹல் கட்டப்பட்டது. இதை கட்டிமுடிக்க அப்போது ஒன்பது வருடஙக்ள் ஆனதாம். இந்த மாளிகையில் ராஜகுடும்பம் தங்குவதற்கு 15 அறைகள், தாழ்வாரம், சதுரங்கம் விளையாட ஒரு அறை தவிர மக்களைச் சந்திக்க ஒரு பெரிய கூடமும் அமைக்கப்பட்டிருக்கிறது.  அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள் இந்த நீர்மஹலை! நீர்நிலைக்கு நடுவே அமைந்திருப்பதால் நீர்மஹல்!

கும்பகோணம் சிற்பிகளில் ஒருவர்....
நீர்மஹல், திரிபுரா...

 எல்லா மீனையும் பிடிச்சுட்டாங்களோ....
நீர்மஹல், திரிபுரா....

அதெல்லாம் சரி, பதிவின் தலைப்பில் தமிழர்களின் கைவண்ணம் என எழுதிவிட்டு தமிழர்கள் பற்றி, இதுவரை ஒன்றுமே சொல்லவில்லை என நீங்கள் கேட்பதற்குள் நானே சொல்லி விடுகிறேன்.  1930-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த நீர்மஹல் தனது பொலிவினை இழந்து பல இடிபாடுகள் உருவாக, திரிபுரா அரசாங்கம் இதனை மீண்டும் பொலிவூட்ட நடவடிக்கைகள் எடுக்க, இந்த நீர்மஹலை புனரமைக்கும் பணி, நமது தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சிற்பிகளுக்குக் கிடைத்திருக்கிறது. 

பூக்களும் பறவையும்....
நீர்மஹல், திரிபுரா....


நாங்களும் நால்வர் அணி தான்!
நீர்மஹல், திரிபுரா....

நாங்கள் சென்ற சமயத்தில் தமிழகத்திலிருந்து வந்திருந்த சுமார் 50 சிற்பக் கலைஞர்கள் நீர்மஹலைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  அவர்கள் கைவண்ணத்தில் மிக அழகாகவே புனர்நிர்மாணப் பணிகள் நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. நாங்கள் சென்றபோது பணிகள் முடிவடையாத நிலையில் தான் பார்க்க முடிந்தது.  மீண்டும் ஒரு முறை சென்று பார்க்க வாய்ப்பு அமையுமா என்பது சந்தேகம் தான்.

நான் பறக்கப்போறேன்... பறக்கப் போறேன்!
நீர்மஹல், திரிபுரா....

நீர்மஹல் அருகே இருக்கும் அழகிய பூந்தோட்டத்தினை ரசித்து அங்கே வந்திருந்த தமிழ் சிற்பிகளிடம் பேசிவிட்டு அங்கிருந்து மீண்டும் படகில் பயணித்து கரை வந்து சேர்ந்தோம்.  அங்கே என்ன செய்தோம், அங்கிருந்து எங்கே பயணித்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

32 கருத்துகள்:

  1. அருமையான படங்கள் சகோதரா..
    பதிவும் நன்றாக உள்ளது ரசித்தேன்:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.

      நீக்கு
  2. அழகு.. அழகு..
    காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. அழகான இடம் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தகவல் அற்புதம் தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. really appreciable...
    nice post
    i should pack up my things and go this place now.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

      நீக்கு
  7. அருமையான படங்கள்,அழகான இடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  8. இதைப் போன்றே,ஜெய்ய்ப்பூரில் ஜல் மகால் பார்த்த நினைவு வருதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெய்பூர் ஜல் மஹால் வேறு வடிவத்தில் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  9. அழகான இடம்...
    அழகான படங்கள்...
    எல்லாமே அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரி்வை சே. குமார்.

      நீக்கு
  10. ஃ போட்டோ எல்லாம் அழகாக உள்ளன.
    நீர்மஹல், திரிபுரா - வேறு ஒரு படம்....ரொம்பவே வித்யாசமான கோணம் ,அதனால் அழகாக இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  11. நீர்மஹல் ரம்மியமாக உள்ளதே!! பறவைகள் அழகு! பூ, படகு எல்லாமே அழகு! எல்லா படங்களும் வழக்கம் போல் அருமை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. உங்களது முதல் வருகையோ.... மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குயில் தோப்பு....

      நீக்கு
  15. ஜெய்பூரில் இருக்கும் ஜல்மஹலுக்குப் போய் வர முடியுமா தெரியவில்லை. நாங்கள் போகவில்லை நீரின் நடுவே இருப்பதால் கொசுத்தொல்லைகள் இருக்குமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  16. நீர்மஹல், திரிபுரா...அழகு...

    நீர்மஹலின் உட்புறம் எடுத்த படங்களை பதிவிட வில்லையா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உட்புறம் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் புகைப்படங்கள் எடுத்தாலும் வெளியிடவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....