எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 23, 2017

கொல்கத்தா எனும் கல்கத்தா


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 92

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.மஞ்சளழகி....

திரிபுராவின் தலைநகர் அகர்தலாவிலிருந்து விமானம் மூலமாக நாங்கள் சென்று சேர்ந்த இடம் கொல்கத்தா எனும் கல்கத்தா நகரம். ஏற்கனவே அலுவலக விஷயமாக கொல்கத்தா சென்றிருந்தாலும், எங்கேயும் சுற்றிப் பார்க்கவில்லை! வேலை முடிந்து உடனே தில்லிக்கு திரும்பிவிட்டேன். இம்முறை கொல்கத்தாவில் இரண்டு நாட்கள் இருப்பதாகத் திட்டம். அதனால் என்னன்ன இடங்கள் பார்க்க வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்திருந்தோம்.  அங்கே எங்களுக்குத் தங்க வேண்டிய இடம் தேட வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது!


வலது கோடியில் பெங்காலி நண்பர்....

தில்லியில் பணிபுரியும் என்னுடைய பெங்காலி நண்பர் அந்த சமயத்தில் சொந்த விஷயமாக கொல்கத்தா சென்றிருந்தார். அவரிடம் முன்னரே நாங்கள் வரும் தேதியையும், எந்த விமானத்தில் வருவோம் என்பதையும் சொல்லி வைத்திருந்தோம். அவர் தனது தெரிந்தவர் மூலமாக விமான நிலையத்தின் அருகிலேயே ஒரு தங்குமிடத்தினை எங்களுக்காக முன்பதிவு செய்திருந்தார். அது மட்டுமல்லாது எங்கள் விமானம் தரையிரங்கும் சமயத்தில் விமான நிலையத்திற்கு வந்து கொல்கத்தாவின் பிரபல மஞ்சள் வண்ண Taxi ஏற்பாடு செய்து தங்குமிடம் வரை வந்து, நாங்கள் ஓய்வெடுக்கும் வரை காத்திருந்து, எங்களுடைய திட்டங்களையும் கேட்டுக் கொண்டபின் தனது இல்லத்திற்குச் சென்றார். செல்வதற்கு முன்னர் அன்றைய தினம் எங்களுக்குத் தேவையான வாகனமும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.


ட்ராம்....

அறையில் சற்றே ஓய்வெடுத்து, மதிய உணவினை தங்குமிடத்திற்கு அருகில் இருந்த ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்ட பிறகு தான் நாங்கள் அன்றைய சுற்றுலாவினைத் தொடங்கினோம்.  வழியில் நண்பரின் வீட்டிற்கு அருகே அவரையும் அழைத்துக் கொள்வதாகத் திட்டம்.


மீன்பிடி படகு......

கொல்கத்தா நகரம் – முந்தைய கல்கத்தா நகரம் – இன்னமும் அப்படியே இருக்கிறது. மனிதர்களை அமர வைத்து, மனிதர்களே இழுக்கும் வாகனங்கள், ரிக்‌ஷாக்கள், ட்ராம், அதே மஞ்சள் வண்ண டாக்சிக்கள், சர்க்குலர் ட்ரையின், எங்கு பார்த்தாலும் மனிதர்களின் எண்ணிலடங்கா கூட்டம், ஆங்காங்கே “சொல்பே நா, கர்போ நா” முழக்கங்கள் என அப்படியே இருக்கிறது – மாற்றங்களை விரும்புவதே இல்லை என்று நினைத்தாலும், புதிய நகராக நிர்மாணம் செய்திருக்கும் New Kolkatta வானளாவிய கட்டடங்களும், அகன்ற சாலைகளும், அழகிய பூங்காக்களும் கொண்டு இருந்தது. 


மீன் வாங்கலையோ மீனு....

பழைய கொல்கத்தா அதே குறுகிய சாலைகள், நீக்கமற நிறைந்திருக்கும் சாக்கடைகள், எங்கு பார்த்தாலும் துப்பி இருக்கும் பான் கறைகள் – சிவப்பு பிடிக்கும் என்பதற்காக இப்படி துப்பி வைக்க வேண்டாம்! – கங்கைக் கரை, அதில் ஓடும் ஜெட்டி என அப்படியே இருக்கிறது.  சாலையின் ஓரங்களில் கங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் பைப்புகள் மூடப்படாமல் கொட்டிக்கொண்டே இருக்க, அவை விழும் கால்வாய்களில் ஓடும் தண்ணீர் கங்கைக்கே செல்கிறது! தண்ணீர் குழாய்களை யாராவது மூடி வைத்தால் தண்ணீர் மிச்சமாகுமே என்றால் யார் அதைச் செய்வது என்று கேட்க ஆரம்பிக்கிறார்கள்.


தக்ஷிணேஸ்வர் காளி கோவில்..... 


தக்ஷிணேஸ்வர் காளி கோவில்..... 


முறத்தில் காளி...... 


கொல்கத்தா நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நிறைய இருந்தாலும், நாங்கள் முதலில் சென்றது தக்ஷிணேஸ்வர் காளி கோவில். கங்கைக் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக்கோவிலைக் கட்டியது ராணி ராஷ்மோணி – கட்டிய வருடம் 1855! அதாவது 162 வருடங்கள் ஆகிவிட்டது இக்கோவில் கட்டப்பட்டு! தனது கணவரின் ஆசையான இக்கோவில் கட்டமுடியாது கணவர் இறந்து விட, அவர் விட்டுச் சென்ற சொத்துகளைக் கொண்டு, இந்தக் கோவிலை மிகச் சிறப்பான முறையில் கட்டிய ராணி ராஷ்மோணி, கோவில் கட்டிய பிறகு ஐந்து வருடஙகள் ஒன்பது மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். தனது சொத்து முழுவதும் கோவிலை நிர்வாகம் செய்யும் Trust வசம் ஒப்படைத்த பிறகு தான் இறந்தார் ராணி ராஷ்மோணி.


ராணி ராஷ்மோணி நினைவிடம்/கோவில்...

இக்கோவிலின் முதல் பூஜாரி திரு ராம்குமார் சட்டோபாத்யாய் – இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மூத்த சகோதரர். கோவில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு வருடத்திற்குள் திரு ராம்குமார் சட்டோபாத்யாய் அமரர் பதவி அடைய கோவிலின் முழுப் பொறுப்பும் ராமகிருஷ்ண பரமஹம்சர் வசம் வந்தது. அதற்குப் பிறகு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை சிறப்பாக நிர்வாகித்து, பல சமுதாய முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார் ராம கிருஷ்ண பரமஹம்சர்.


கோவில் வளாகக்கடைகள் - கடைகளில் விற்கப்படும் பழங்கள்....

கோவில் வளாகத்தில் நவரத்னா கோவில் [லக்ஷ்மிநாராயணர்], ஜ்யோதிர்லிங்கங்களான பன்னிரெண்டு லிங்கங்களுக்கும் தனிக்கோவில், விஷ்ணு கோவில் என தனிக்கோவில்கள் உண்டு.  மிகச் சிறப்பான இக்கோவில் பார்த்து கோவிலின் அழகிய கலை வடிவத்தினைக் கண்டு ரசித்த பின் அங்கிருந்து புறப்பட்டோம்….. அடுத்ததாய்ச் சென்ற இடம், அங்கே கிடைத்த அனுபவங்கள் வரும் பகுதியில்….

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

20 comments:

 1. என்ன ஒரு பாக்கியம் தக்ஷிணேசுவர காளிகோவிலில் தரிசனம் செய்வதற்கு. ராமகிருஷ்ண பரமஹம்சர் பூஜை செய்த இடம். அவர் ஆராதித்த க்ருஷ்ண விக்ரஹம் இங்கா இருக்கிறது? இங்குதானே அவர், விவேகானந்தருக்கு கடவுளைத் தொடு உணர்ச்சியின்மூலம் காட்டியது.

  ReplyDelete
  Replies
  1. பழமையான கோவில். ராமகிருஷ்ண பரமஹம்சர் கிட்டத்தட்ட 30 வருடங்கள் இதே கோவிலில் தான் இருந்தார். அந்தக் கோவிலில் நாங்களும் 30 நிமிடங்களுக்கு மேல் இருந்தோம்....

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 2. பகிர்வுக்கு நன்றி தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. நான் பார்க்க நினைத்த கல்கத்தாவை உங்கள் பதிவின் மூலமாக கண்டேன்.நன்றி

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்....

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. Replies
  1. தஙகளது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. ராணி ராஷ்மோணி அவர்களின் மாண்பு என்றும் போற்றப்படும்...

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. அருமையான பயணம் கல்கத்தாவுடன் முடிவடைகிறது...கல்கத்தாவைப் பற்றி செய்தித்தாள்களில் வாசிப்பதுதான் அதுவும் கொஞ்சமேகொஞ்சமாக...இப்போது தங்கள் பதிவின் வழி அறிய முடிகிறது. எங்கள் மாநிலமும் இதுவும் நண்பர்களாயிற்றே!! அரசியல்ரீதியாக. தொடர்கிறோம்.

  கீதா: கல்கத்தா எப்போதோ சிறு வயதில் பார்த்தது. இப்போது உங்கள் பதிவின் வாயிலாக மீண்டும் ஒரு பார்வை. பயணம் கல்கத்தாவுடன் முடிவது போல் தோன்றினாலும் அடுத்து உங்கள் வேறு பயணக் குறிப்புகளையும் வாசிக்க ஆவலுடன் தொடர்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. அரசியல்ரீதியாக நண்பர்கள்! ஆமாம். கேரளமும் மேற்கு வங்கமும் எப்போதுமே நண்பர்கள் தானே!

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. கல்கத்தா என்றதும் ஓடோடி வந்தேன். நாங்களும் முதல்லே தக்ஷிணேஸ்வர் காளியைத் தான் பார்த்தோம். பின்னர் வருகிறேன், இப்போ வேலை. :)

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது வாருங்கள்....

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 8. தக்ஷிணேஸ்வர் காளி கோவில்....கொதிக்கிற வெயிலில் காலை கீழே வைக்க முடியாமல் சுற்றிப் பார்த்தது நினைவுக்கு வருகிறது :)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நினைவுகளை மீட்டெடுத்திருக்கிறது இப்பகிர்வு என்பதில் மகிழ்ச்சி.

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்றது இல்லை. ட்ராம் வண்டியைப் பார்க்கும் போது அதில் அப்போதைய மெட்ராசிலும் பம்பாயிலும் பயணித்த நினைவுகள் வருகிறது பெங்காலிகள் எமோஷனல் டைப் என்று நினைத்ததுண்டு

  ReplyDelete
  Replies
  1. ட்ராம் உங்கள் நினைவுகளை மீட்டெடுத்தது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. ட்ராம், மஞ்சள் டாக்ஸி, சர்க்குலர் ட்ரெயின் :) ட்ராம் வண்டிய பார்த்ததும் அதில் பயணிக்க ஆசை வருகிறது... அந்த ஊர்ல பஸ்லாம் கிடையாதா?

  ReplyDelete
  Replies
  1. பஸ் இருக்கிறது விஜயன். பஸ், ட்ராம், சர்க்குலர் ட்ரெயின், மெட்ரோ என அனைத்தும் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன் துரை.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....