எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 28, 2017

குமோர்துலி - ஒன்பது நாள் நவராத்ரிக்கு வருடம் முழுக்க உழைப்பு


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 94

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தயாராகும் குமோர்துலி துர்கா பொம்மை....

சங்கு வளையல்கள் செய்யும் இடத்திலிருந்து நாங்கள் வேறொரு இடத்திற்குச் சென்றோம் என்று சென்ற பகுதியில் சொன்னது நினைவிலிருக்கலாம்.  எனது பெங்காலி நண்பர் எங்களை அழைத்துச் சென்ற இடம் வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உறைவிடம். அங்கே நவராத்ரி சமயங்களில் கால் வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம் இருக்கும்.  நாங்கள் சென்ற சமயம் நவராத்ரி சமயம் இல்லை என்றாலும், அப்போதும் அந்த உழைப்பாளிகள் உழைத்துக் கொண்டிருந்தார்கள்.....  அந்த இடம் குமோர்துலி எனும் இடம்...


குமோர்துலி  தெரு ஒன்றில் நடந்தபோது....

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட பொழுது கொல்கத்தா நகரம் தான் அவர்களது தலைநகரம் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். அப்படி அவர்கள் நம்மை ஆண்டுவந்தபோது கொல்கத்தாவின் மக்களின் இருப்பிடங்களை அவர்கள் செய்யும் தொழில் பொறுத்து பெயரிட்டார்களாம். சரக்கு விற்பவர்கள் இருந்த இடம் சூரிபாரா, கோலாதோலா – எண்ணை வியாபாரிகள் இருந்த இடம், சூத்தர்பாரா – மர வேலை செய்யும் தச்சர்கள் இருந்த இடம், அஹீரீதோலா – மாடு மேய்ப்பவர்கள் இருந்த இடம் என ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பெயர்.  அப்படி ஒரு இடம் குமோர்துலி – இந்த இடத்தில் பெரும்பாலும் மண் பாண்டங்கள் செய்பவர்களும், களிமண் கொண்டு பொம்மை செய்பவர்களும் தான் இருந்தார்கள்.


தயாராகும் குமோர்துலி துர்கா பொம்மை....

இப்போதும் இந்த குமோர்துலி பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் பொம்மைகள் செய்பவர்கள் தான். மண்பாண்டங்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லாத இந்தக் காலத்தில் இவர்களது முக்கிய தொழிலே நவராத்ரி சமயம் கொண்டாடப்படும் துர்கா பூஜாவிற்கான பிரதிமா/பொம்மைகள் தயாரிப்பது தான்.  உலகெங்கிலும் பரவி இருக்கும் பெங்காலிகள் நவராத்ரி சமயத்தில் வெகு விமரிசையாக துர்கா பூஜா கொண்டாடுவது நீங்கள் அறிந்த விஷயம்.  கொல்கத்தாவிலிருந்து இந்த பொம்மைகளை தயாரித்து அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள் இந்த குமோர்துலி கலைஞர்கள். சில கலைஞர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று பொம்மைகள் செய்து தருகிறார்கள்.


வைக்கோலில் தயாராகும் உருவங்கள்....

நாங்கள் சென்றபோதும் இப்படி பொம்மை செய்பவர்களையும், பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்பவர்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாடி… மலைக்க வைக்கும் அவர்களது உழைப்பு, பிரமிக்க வைக்கும் அவர்களது கலைவண்ணம் என ஒவ்வொரு பகுதியிலும் உழைப்பு மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரியும். பொம்மைகள் செய்வது தவிர, பொம்மைகளுக்கான அலங்காரப் பொருட்கள் செய்பவர்கள், சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்பவர்கள், நகை வேலை செய்பவர்கள் என அப்பகுதி முழுவதும், வருடம் முழுவதும் வேலைகள் நடந்த வண்ணமே இருக்கிறது. 


பொம்மைகள் தயாராகும் இடத்தில்....


பிள்ளையார் பொம்மை....

வருடம் முழுவதும் உழைத்தாலும், நவராத்ரி சமயம் தான் அவர்களது உழைப்பின் பலனை முழுவதுமாக அனுபவிக்க வேண்டிய நேரம்.  மற்ற நேரங்களில் சின்னச் சின்ன பொம்மைகள் போன்றவை விற்று கொஞ்சம் காசு கிடைத்தாலும், நவராத்ரி சமயங்களில் தான் நல்ல பிசினஸ் இங்கே. அப்போது தான் முழுவருடத்திற்கான உழைப்பின் ஊதியத்தினை மொத்தமாகப் பெற முடியும். நாங்கள் சென்றபோது அங்கிருந்து சில பிள்ளையார் பொம்மைகளை வாங்கிக் கொண்டார்கள் கேரள நண்பர்கள். பிள்ளையாரில் தான் எத்தனை வகை பொம்மைகள்!


ஒரு உழைப்பாளி.......


பொம்மைகளின் அலங்காரத்திற்கு.... 

எங்கெங்கு பார்த்தாலும் பொம்மைகள், பொம்மைகள், பொம்மைகள்! ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்து பொம்மைகள் தயார் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வைக்கோல் கொண்டு ஒரு பெரிய உருவம் தயாரித்து, ஆங்காங்கே பொம்மைக்கான வடிவங்களைக் கொண்டு வந்து, கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் களிமண் கொண்டு, அந்த வைக்கோல் வடிவங்களில் பூசி, பொம்மைகளை உருவாக்கி, அதைக் காயவைத்து, அதன் பிறகு வண்ணங்கள் பூசுவது, அலங்காரங்கள் செய்வது, ஜிகினாக்கள் கொண்டு அழகு செய்வது, நகைகள் செய்து அணிவிப்பது என ரொம்பவும் நுணுக்கமான வேலைப்பாடு. 


கார்த்திக் எனும் முருகனுக்கு வண்ணப் பூச்சு....

சில உழைப்பாளிகளுடன் ஹிந்தியில் பேசி அவர்களைப் பாராட்ட, வேலை செய்த வண்ணமே நன்றி கூறினார்கள். வாய் மட்டும் எங்களுடன் உரையாடிக்கொண்டிருக்க, வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். அக்டோபர் நவம்பரில் வரும் நவராத்ரி தவிர, மார்ச்-ஏப்ரல் மாதம் வரும் வசந்த நவராத்ரி சமயத்திலும் சில பூஜைகள் செய்வதுண்டு. தவிர பெங்காலிகள் மார்ச்-ஏப்ரல் சமயத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அந்த சமயத்திலும், சரஸ்வதி பிரதிமாக்களை வைத்து பூஜிக்கிறார்கள். அதற்கான பிரதிமாவினையும் இந்த குமோர்துலி கலைஞர்கள் தயாரித்துத் தருகிறார்கள். 


லிக்கர் சாய் குடிக்கக் காத்திருந்தபோது....

வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் இந்த உழைப்பாளிகளுக்கு வணக்கம் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம். அந்தப் பகுதியில் இருந்த ஒரு ஒரு தேநீர் கடையில் மீண்டுமொரு முறை தேநீர் அருந்தினோம். அங்கே இருந்த பெண்மணியிடம் தேநீர் கேட்க, அவர் “லிக்கர் சாய்?” எனக் கேள்வி கேட்க அதிர்ந்து போனோம். அது பற்றி முன்னரே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.  கட்டஞ்சாயைத் தான் பெங்காலிகள் லிக்கர் சாய் என்று சொல்கிறார்கள்!  நானும் கொஞ்சம் லிக்கர் சாய் குடித்து, லிக்கர் அல்ல லிக்கர் சாய் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லி இந்தப் பகுதியை முடிக்கிறேன்! அடுத்த பகுதியில் நாங்கள் சென்ற இடம் எந்த இடம் என்பதைச் சொல்கிறேன்….

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 comments:

 1. லிக்கர் சாய் படித்ததும் போதை ஏறி விட்டது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. என்ன ஒரு கலைநயம் மிக்க பொம்மைகள், அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பாவம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறதா? புகைப்படங்கள் அழகு.

  4 வருடங்கள் முன்பு, இங்கு நடந்த ஒரு எக்சிபிஷனில் பெங்கால் பொம்மைகள் என்று சிறிய சிறிய பொம்மைகள், மீன் விற்பவர், காய் விற்பவர், கிராமத்து வீடுகள் வண்டி இழுப்பவர், என்று வித விதமாகப் பொம்மைகள் தத்ரூபமாக வைத்திருந்தனர். ஒரு பொம்மையின் விலை 120 ரூபாய். டிஸ்கவுண்டில் கிடைத்தது...90, 80 என்று. அவர்களிடம் வினவிய போது இந்தப் பெயர் குமோர்துலி என்றார்கள். அப்போது எனக்குச் சரியாக விளங்கவில்லை. இப்போது நீங்கள் சொல்லுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்ததுஜி. மிக்க நன்றி...தொடர்கின்றோம் ஜி.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. என்னே கைவண்ணம்... அசர வைக்கிறது...!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. கொல்கத்தா மண் பொம்மைகள் கனம் இல்லாமல் ஆனால் மிக அழகாயிருக்கும்.
  கண்கள்,மூக்கு எல்லாம் மிக அழகு.நவராத்திரி பொம்மை செய்யும் கலைஞர்களை
  பற்றி அறிந்து கொண்டோம் நன்றி.
  படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. உழைப்பாளிகள்! பகிர்விற்கு நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   Delete
 7. இந்த கைத் தொழில் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது இங்கு மட்டும்தான் என படுகிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. ஆஹா.... முருகன் அழகு....
  லிக்கர் சாய்... சூப்பரு...
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 9. கைவண்ணங்கள் அத்தனையும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 10. உழைப்பாளிகளின் கை வண்ணம்.. நேரில் கண்டதைப் போலிருக்கின்றது..
  காலம் அவர்களையும் வாழ வைக்கட்டும்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. வண்ணமயமான பொம்மைகள் செய்பவர்களின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான கலைஞர்கள் இந்தத் தொழிலை விட முடியாமல் செய்து வருபவர்கள் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 12. கலைநயம் செறிந்த உழைப்பாளர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. ஆள் உயர பொம்மைகள்!! லால் சாய், லிக்கர்சாய், ப்ளாக்டீ , கட்டஞ்சாயா... எத்தனையெத்தனை பெயர்கள்:) லிக்கர் சாய் என்றதும் ஏதோ போதை வஸ்து என தான் சட்டென மனசு நினைக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன் துரை.....

   Delete
 14. கையிலே கலை வண்ணம் கொண்டோர் பற்றித் தெரிந்து கொண்டேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....