வியாழன், 22 டிசம்பர், 2016

திரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சியும்….ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 83

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


படம்-1: அகர்தலா - வங்க தேச எல்லையில் கொடியிறக்கம்...

அகர்தலாவில் உள்ள வங்க தேச எல்லையில் மாலை நேரத்தில் நடக்கும் கொடி இறக்க விழாவினைக் காணச் சென்ற போது எங்கள் குழுவில் வந்திருந்த நண்பரைப் பார்த்த உடனே “நீ சசி தானே?” என்று கேட்டார் அங்கே இருந்த கேரளத்தினைச் சேர்ந்த BSF வீரர் ஒருவர்!  அவர் அப்படிக் கேட்டவுடன் எங்களுக்கு மட்டுமல்ல நண்பர் சசிக்கும் அதிர்ச்சி. முகத்தில் கொஞ்சம் பயமும் கூட! இவருக்கு என்னை எப்படித் தெரியும் என்ற கேள்வி அவர் மனதிலும் இருக்க, கேட்டுவிட்டார். நாங்களும் அந்த வீரர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ளக் காத்திருந்தோம்.

படம்-2: அகர்தலா - வங்க தேச எல்லையில் இரு நண்பர்கள்...

நண்பர் சசி பற்றி அவருடைய கேரள நண்பர்களுக்கே தெரியாத விஷயம் ஒன்று அந்த எல்லைப் பகுதிக்குச் சென்ற போது தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம், நண்பர் சசி தன்னுடைய இள வயதில் சில மாதங்கள் – அதாவது இரண்டு மாதங்கள் BSF-ல் பணி புரிந்தது. கேரள அரசாங்கத்தில் பணி கிடைப்பதற்கு முன்னர் இங்கே இருந்தாராம். அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் ஹரியானாவில்! கேரளத்திலிருந்து ஹரியானா வந்த சசிக்கு மொத்தமாய் இந்த வேலை பிடிக்காமல் போக, எப்படியாவது வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று புலம்பிய காலம் அது!

 படம்-3: அகர்தலா - வங்க தேச எல்லை - மீசைக்கார நண்பா......

அந்த இரண்டு மாத காலம் சசியும் நாங்கள் சந்தித்த BSF வீரரும் ஒரே பிரிவில் இருந்திருக்கிறார்கள். அதை இன்னமும் நினைவில் வைத்திருந்து அந்த வீரர் இவரைப் பார்த்த உடனே கண்டுபிடித்திருக்கிறார்! அவர் ஒவ்வொரு விஷயமாக எடுத்துவிட எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம். அந்த விஷயங்கள் நடந்தது பல வருடங்களுக்கு முன்னர்! அத்தனை விஷயங்களையும், இரண்டே மாதம் ஒன்றாய் ஒரு பிரிவில் பணி புரிந்ததையும் நினைவு வைத்திருந்தார் அந்த வீரர்.

படம்-4: அகர்தலா - வங்க தேச எல்லை - நிகழ்வினைப் பார்க்க நின்று கொண்டிருக்கும் வங்க தேச மக்கள்...

எல்லையில் BSF நடத்தும் அந்தச் சிறிய கடையினை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வீரர். பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் நிறைய வீரர்கள் – தமிழகம், கேரளம், ஹரியானா, பஞ்சாப் என எல்லா மாநில வீரர்களும் அடக்கம் – அனைவரிடமும் நண்பரையும் எங்களையும் அறிமுகம் செய்து வைத்து எங்களுக்கு இன்னும் ஒரு முறை தேநீர் கொடுத்து உபசரித்தார். 

படம்-5: அகர்தலா - வங்க தேச எல்லையில்... 
இரு தேச வீரர்கள் சந்திப்பு..

அதற்குள் கொடியிறக்க விழாவும் துவங்க, நாங்கள் இந்தியப் பகுதியில் நின்று கொண்டு [உட்காரும் வசதி வெகு குறைவு – வா[g]கா அளவு இங்கே நடக்கும் விழா அத்தனை பிரபலம் இல்லை என்பதால் வசதிகள் குறைவு] கொடி இறக்க விழாவினைப் பார்த்தோம். வீரர்கள் நடப்பதும், கொடியை இறக்குவதும், BSF Band இசைப்பதும் அத்தனை அழகு. நமது வீரர்களிடம் இருந்த மிடுக்கும், கம்பீரமும் ஏனோ வங்க வீரர்களிடம் இல்லை என்று தோன்றியது! நமது வீரர் ஒருவருடைய மீசை இந்தியப் பகுதியில் இருந்த பலருக்கும் பிடித்திருந்தது!

படம்-6: அகர்தலா - வங்க தேச எல்லையில்...
இந்திய வீரர்கள் அணிவகுப்பு...

கொடியிறக்கத்திற்குப் பிறகு கொடியினை அழகாக மடித்து ஒரு வீரர் அதிகாரியிடம் கொடுக்க, இரண்டு பக்க வீரர்களும் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, இரண்டு பக்கத்திலிருந்தும் மக்களும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு விழா இனிதே முடிந்தது. அதிகாரிகள் சென்ற பிறகு வங்க தேச வீரர்களிடமும் இந்திய வீரர்களிடமும் நாங்கள் பேசினோம். எல்லைப் பகுதி என்றாலும் பாகிஸ்தான் எல்லை போல, இங்கே அத்தனை பதட்டமோ, கெடுபிடிகளோ இல்லை. ஆனாலும், இந்த எல்லை வழியாகவும் நிறைய ஊடுருவல்கள் – வேலை தேடி வருபவர்கள் உண்டு!

படம்-7: அகர்தலா - வங்க தேச எல்லையில்....
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!...

எல்லைப் பகுதி பற்றியும், வீரர்களின் அன்றாட வாழ்வு பற்றியும், அவர்களது பிரச்சனைகள் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  எல்லையில் இருப்பதால் பல சமயங்களில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. பணியும் ரொம்பவே கடினமான ஒன்று. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடிவதில்லை. பாகிஸ்தான் எல்லையை விட இந்த எல்லைப் பணி கொஞ்சம் சுலபமானது என்றாலும் அதிக வருடங்கள் இங்கே இருக்க முடியாது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் இவர்கள் – பணிமாற்றம் ஆகிவிடும்.

படம்-8: அகர்தலா - வங்க தேச எல்லையில்....
தொப்பி...  தொப்பி....

அந்த வீரர் மற்றும் வேறு சில வீரர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு, நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் வந்து விட்டது.  பல வருடங்கள் கழித்துப் பார்த்த அந்த கேரள நபரிடம் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அதெல்லாம் சரி தலைப்பில் பகோடா என எழுதிவிட்டு, அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்! அந்த வார்த்தை ஒரு ஹிந்தி வார்த்தை!

படம்-9: அகர்தலா - வங்க தேச எல்லையில்.... 
தேசியக்கொடி அதிகாரியிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பு...

ராணுவம், பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அது பிடிக்காமலோ அல்லது அதன் கடுமையான உழைப்பு தரும் அயர்ச்சியாலோ, சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது வழக்கம்.  அப்படி ஓடிவிடுபவர்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தை – [B]பகோ[D]டா! Baagnaa என்றால் ஓடுவது – அதிலிருந்து உருவான வார்த்தை தான் இந்த பகோடா! நண்பர் சசியைப் பார்த்தவுடன் அந்த கேரள வீரர் சொன்ன வார்த்தை தான் பகோடா! 

படம்-10: அகர்தலா - வங்க தேச எல்லையில்...
வங்கதேச வீரர்கள்...

ஏதோ, வங்க தேச எல்லையில் நாங்கள் வெங்காய பகோடாவோ, காலி ஃப்ளவர் பகோடாவோ சாப்பிட்டதாக எண்ணியிருந்தால் கம்பெனி பொறுப்பேற்க முடியாது! சரி நண்பர்களே, அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 கருத்துகள்:

 1. நண்பர்கள் சந்திப்பு மகிழ்வினைத் தருகின்றது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. புல்லரித்தது வெங்கட்ஜி! அருமையான நிகழ்வு! நம் வீரர்கள் மிடுக்கானவர்கள் என்பது உங்கள் படத்திலிருந்தே தெரிகிறது. இரு வீரர்களின் படமும் கொடுத்திருப்பதால்...

  எப்படி இருந்திருக்கும் உங்கள் நண்பர் சசி அவர்களுக்கு! அந்த வீரரின் மனதில் இவரைப் பற்றிய நினைவுகள் இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது என்றால் அதுவும் இரண்டே மாதப் பழக்கம்...வியப்புதான்! இல்லையா வெங்கட்ஜி?!!! மகிழ்வான தருணங்கள்!!! அரிய தருணங்கள்...

  உங்கள் பயணக் கட்டுரைகள் எல்லாமே சுவாரஸ்யம் மிக்கவைதான்! அருமை ஜி! தொடருங்கள் தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே சில நிமிடங்கள் வரை இரண்டு பேருக்குமே பேச முடியாத சூழல். ஓடி வந்து விட்டார் என நாங்கள் கூட கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அவரும் அன்று மாலை வரை அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 3. திரிபுரா பகோடா!..

  நானும் அப்படித்தாங்க நினைத்து விட்டேன்..
  ஆனால் - அதற்குக் கம்பெனி பொறுப்பேற்காதாமே!?.. (!?)

  நம்முடைய வீரர்களுக்கே உரிய மிடுக்கும் கம்பீரமும் -
  வேறெவர்க்கும் இல்லை.. இல்லவே இல்லை!..

  ஜய்ஹிந்த்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கம்பெனி பொறுப்பேற்காது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. "பகோடா" என்ற பெயரைப் படித்ததும் அங்குபார்த்த வழிபடும் கோவில் ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். 'பகோடா'வை உணவுடன் லிங்க் செய்து நினைக்கவில்லை (சப்ஜெக்ட் வேறு என்பதால்). தெரியாத விஷயங்கள் பல தெரிந்துகொண்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகோடா - புத்த மத கோவில்களும் இப்படி அழைக்கப்படுகின்றன.... அப்படி நினைப்பார்கள் என எனக்குத் தோன்றவில்லை - எழுதும்போது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. அகர்தலாவில் உள்ள வங்க தேச எல்லையில் மாலை கொடி இறக்க விழாவை நேரே பார்த்தமாதிரி இருந்தது.
  படங்கள் எல்லாம் அழகு, அருமை.
  நண்பர் பேரை நினைவு வைத்து அழைத்தது வியப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 6. தொடர்ந்து பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 7. நான் பயிற்சி முடித்த பல ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் என்னிடம் வந்து சகஜமாகப் பேச ஆரம்பித்தார் எனக்கு அவர் யாரென்று சுத்தமாக நினைவிருக்கவில்லை. நானும் பேசி முடித்துப் போகும் முன் அவர் யாரென்று கேட்டேன் வந்ததே கோபம் அவருக்கு ...!பயிற்சியில் பல இடங்களுக்குப் போவோம் அப்படிப்ோன ஒரு இடத்தில் அவர் இருந்திருக்கிறார் எனக்கு நினைவில்லாமல் அசடு வழிந்து வாங்கிக் கட்டிக் கொண்டது இதைப் படித்ததும் நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உங்கள் அனுபவமும் அருமை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 10. நம் வீரர்களின் அழகும் கம்பீரமும் மனதில் பெருமிதத்தை உண்டாக்கியது. இந்த மாதிரி அபூர்வமான அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு அன்பு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 11. பகோடாவிற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப.கந்தசாமி ஐயா.

   நீக்கு
 12. இது போன்ற விபரங்களையும் படங்களையும் உங்கள் பகிர்வின் மூலமாக பார்க்க முடிவதில் சந்தோஷம் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....