வியாழன், 15 டிசம்பர், 2016

மீனை எடுத்துவிட்டால் சைவம்….ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 80

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


இந்த சாப்பாடு வேறு! நாங்கள் சாப்பிட்டது வேறு!

ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்து, எங்கள் உடைமைகளை வைத்த பிறகு அந்த இடம் பிடிக்கவில்லை. பார்க்க சுத்தமாக இருந்தாலும், உள்ளே நுழைந்த பிறகு தான் தெரிந்தது கழிவறையில் Flush வேலை செய்யவில்லை என்று. சரி வந்தது வந்துவிட்டோம், முதலில் வெளியே சென்று மதிய உணவினை சாப்பிட்டு விட்டு, அப்படியே வேறு தங்குமிடம் தேடலாம் என்று வெளியே சென்றோம். ஓட்டுனர் ஷாந்தனுவிடம் நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்லக் கூற, அவர் எங்களை ஹோட்டல் ஷங்கர் என்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே உள்ளே நுழைந்தால் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சரி இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் எனும்போது நல்ல உணவகமாகத் தான் இருக்க வேண்டும் என்று நாங்களும் நம்பி உட்கார, ஷாந்தனு நான் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி வெளியே காத்திருந்தார்.  என்ன இருக்கிறது எனக் கேட்க, தாலி [நமது ஊர் மாதிரி தட்டில் சாதம், பொரியல், குழம்பு என கொடுப்பது வடக்கே தாலி என்று தான் சொல்வார்கள், குழம்பு, ரசத்திற்கு பதில் சப்ஜி!] என்று சொல்ல, ஒருவர் எதிரே வைத்திருந்த தாலியில் ஐந்து ப்ளேட் கொண்டு வைத்தார் – ஒவ்வொரு தட்டிலும், சாதம் குமித்து வைத்திருக்க, நடுவே ஒரு மீன் முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது!

மீனுடன் கொண்டு வைத்த சாதம் நண்பர்கள் எடுத்துக் கொள்ள, எனக்கு சைவ சாப்பாடு தான் வேண்டும் என்று சொன்னேன். என் கண்ணெதிரேயே மீனை எடுத்துவிட்டு, அதே சாதம் தட்டுடன் என்னிடம் கொடுத்து, தால் கொண்டு வருகிறேன் என்று சொன்னார் அந்த ஹோட்டல் சிப்பந்தி! எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டேன்.  மீன் இருந்தால் அசைவம், எடுத்து விட்டால் சைவம்! ஒரு நண்பர் ஹைதைக்குச் சென்றிருந்தபோது பிரியாணி கேட்க, முட்டை பிரியாணி மட்டும் தான் இருக்கிறது எனச் சொல்லி, அட உங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வேண்டுமா, இதோ தருகிறேன் என்று சொல்லி, அவர் கண்முன்னரே, முட்டைத் துண்டுகளை எடுத்துவிட்டு, இந்தாருங்கள் வெஜிடபிள் பிரியாணி என்று கொடுத்திருக்கிறார்கள். அவர் தில்லி திரும்பி, ““மதராசி எல்லோருமே திருடர்கள்” என்று சொல்லி இந்த நிகழ்வினைச் சொன்னார்!

வேறு என்னதான் சாப்பிட இருக்கிறது எனக் கேட்க, வேறொன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார் அந்த சிப்பந்தி. சரி என நானே உள்ளே சென்று, சாதம் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மேலே தால் ஊற்றி பேருக்கு சாப்பிட்டேன். வெளியே வந்து பழங்கள் வாங்கி சாப்பிட்டு, இரவு வேறு உணவகம் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன்! நண்பர்கள் சாப்பிட்டு வரும் வரை கொஞ்சம் வெளியே நடந்து சென்று வந்தேன். நண்பர்கள் சாப்பிட்டு வரவும், நான் திரும்பவும் சரியாக இருந்தது.  மீண்டும் தொடங்கியது தங்குமிட வேட்டை.

சில தங்குமிடங்கள் பார்த்தபிறகு ஒரு இடம் எங்கள் தேவைக்கேற்ப இருந்தது. சரி என உடனேயே இரண்டு அறைகளை எங்களுக்காக தேர்ந்தெடுத்து, ஒரு நாளுக்கான வாடகையும் கொடுத்தோம். சிறிது நேரத்தில் வருகிறோம் எனச் சொல்லி முதலில் தங்கிய அறையைக் காலி செய்யலாம் என்று சென்றோம்.  நாங்கள் எடுத்த முடிவு நல்லது என்பது அங்கே சென்ற போது தெரிந்து கொண்டோம்.  நாங்கள் அங்கே சென்று அறையைத் திறந்து கொண்டிருந்தபோது அதிக மேக்கப் போட்ட இரண்டு பெண்மணிகள் வந்து “வேண்டுமா, எத்தனை பேர்?” என்று கேட்க, வேகவேகமாக வேண்டாம் எனச் சொல்லி கதவை மூடினோம்.

சில நிமிடங்களுக்குள் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அறையை காலி செய்து இரண்டாவதாக ஏற்பாடு செய்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  நாங்கள் வந்தபோது தான் அந்த இரண்டாவது ஹோட்டலில், சீருடை அணிந்த ஒரு பெண்ணும், ஒரு இளைஞனும் தங்குமிடம் தேவை எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் – கணவன், மனைவியாம்! ஹோட்டல் சிப்பந்தி, கல்யாணப் பத்திரிக்கை கேட்க, அவர்கள் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதை ஒரு நகல் எடுத்துக் கொண்டு தான் தங்குவதற்கு அறை கொடுத்தார் அந்த சிப்பந்தி. 

அவர்கள் சென்றபிறகு அச்சிப்பந்தியிடம் “கல்யாணப் பத்திரிகை இருந்தால் தான் அறை கிடைக்குமா?” என்று கேட்க, ஆணும் பெண்ணும் மட்டும் வந்தால் நிச்சயம் தேவை என்று சொல்லி, நிறைய பிரச்சனைகள் இருப்பதைச் சொன்னார். இப்படி வாங்கிக் கொள்ளாமல் தங்குமிடம் கொடுத்தால் போலீஸ் சோதனை செய்து மாட்டிக் கொள்வது இங்கே நிறைய நடக்கிறது என்றும் சொன்னார். நாங்களும் அந்த விவரங்களைக் கேட்டுக் கொண்ட பிறகு அறைக்குச் சென்று உடைமைகளை வைத்துவிட்டு பார்க்க வேண்டிய இடங்களுக்குச் சென்று வரலாம் என புறப்பட்டோம். 

என்ன இடங்களுக்குச் சென்றோம், என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 கருத்துகள்:

 1. அசைவத்தை எடுத்துவிட்டால் சைவம்தான்
  தொடருங்கள் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. இப்படித் தான் - புலால் விரும்பாதவர்களுக்கு வரும் சோதனைகள்...

  அதற்கு மேலும் - வேறு மாதிரி சோதனை என்றால்,
  கதவைத் திறந்து கொண்டு ஓட்டம் பிடிக்க வேண்டியது தான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. என்னுடன் ஒரு குஜராத்தி சுவாமி நாராயணன் அவர்களின் தீவிர follower விற்பனை அதிகாரியாக வேலைபார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் பொதுவாக தமிழ்நாட்டு பிராமணர்களைவிட சைவ உணவில் தீவிரமானவர்கள். ஒரு உணவகத்தில் நான் எதுவுமே சாப்பிடாமல் இருந்தபோது அவன் சப்பாத்தியும் குழம்பும் சாப்பிட்டான். இங்கதான் வெஜ்ஜே கிடையாதே என்றதற்கு குழம்புல உள்ள சிக்கனை எடுத்துவிட்டேன். இப்போ அது வெஜ் குழம்புதானே என்றான். இன்னொரு சைனீஸ் உணவகத்தில் வெஜ் ஃப்ரைடு ரைஸில் முட்டையைப் போட்டிருந்தார்கள். அது வெஜ்தான், வேண்டாமென முட்டையை எடுத்துடலாம் என்றான். எல்லாம் நாம் எடுத்துக்கொள்வதைப் பொறுத்துத்தான் இருக்கிறது போலும்.

  தாலி படம் அட்டகாசமா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”எல்லாம் நாம் எடுத்துக்கொள்வதைப் பொறுத்துத் தான் இருக்கிறது போலும்”. அதே தான்.

   தாலி படம் - இதுவும் திரிபுரா உணவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. சோதனைகளுக்குப் பிறகு அமைந்த இடம் நல்ல இடம். அதுவரை மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. மீனை எடுத்து விட்டால் சைவம். அதானே! (ஏனோ காமேஸ்வரன் நினைவு வந்து விட்டார்!)

  திரிபுரா ஹோட்டலிலும் தெருப்புறாக்களா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமேஸ்வரன் - I mean what I mean! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   நீக்கு
 6. முழித்தமீன் தப்பியது. ஹா..ஹா.
  சைவர்களுக்கு வரும் சோதனை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழித்த மீன் தப்பியது! வேறு வயிற்றுக்குள் போயிருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி!

   நீக்கு
 7. பயண அனுபவம் சில சங்கடங்களை கொடுத்து இருக்கிறதே!
  சைவசாப்பாட்டுக்கு நாங்களும் பயணம் போன போதெல்லாம் அலையத்தான் செய்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி மட்டுமே இருந்தால் ஸ்வாரஸ்யம் கிடையாதே... சில சங்கடங்களும் தேவையாக இருக்கிறது! பல ஊர்களில் சைவ சாப்பாடு கிடைப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 8. மீன் வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் வைக்க வேண்டியதுதானே ?வைத்து விட்டால் உங்களைப போன்றவர்கள் மட்டுமே வேண்டாம் என்பார்கள் ,மீனை விற்க இது வியாபாரத் தந்திரம் போலிருக்கிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியாபாரத் தந்திரம்! இருக்கலாம். அங்கே அனைவருமே/பெரும்பாலானவர்கள் மீன் சாப்பிடுபவர்கள் - பெங்காலிகள் போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. முன்னரே இணையத்தில் பார்த்து வைத்துக் கொள்ளாததில் வந்த சிக்கல்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. இணையத்தில் எல்லா இடங்களிலும் தங்கும் இடம்பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலான இடங்களில் உள்ள தங்குமிடம் பற்றி இணையத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 12. மீனை எடுத்து விட்டால் சைவம்.. கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 13. சுவாரஸ்யமான அனுபவங்கள் ஆனால் அதே சமயம் கவனமாக இருக்க வேண்டிய நிகழ்வுகள்! பயணத்தில் எத்தனைவிதமான அனுபவங்கள். உணவிலிருந்து தங்குமிடம் வரை அதுவும் பெண்கள் வந்து கேட்பது வரை என்று....தொடர்கின்றோம்..

  கீதா: மீனை எடுத்து விட்டால் சைவம்....ஹஹஹ கமலின் படம் மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது சாம்பாரில் மீன்... மீன் வாட் ஐ மீன்.....

  இப்படித்தான் பல இடங்களில் இரண்டும் கலந்த உணவகங்களில் சற்றுக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது ஜி. முட்டை சைவம்தான் என்று சொல்லப்படுவதன் காரணம் அதாவது பெண் கோழி ஆண் கோழியுடன் இணைவதற்கு அனுமதிக்கப்படாமல் பெண் கோழி இடும் முட்டைதான் சந்தைக்கு வருகிறது என்றாலும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் முட்டைகளை அந்த வகையில் சேர்த்துக் கொள்ள முடியாது. வீட்டில் வளர்ப்பவர்களுக்கு இந்தக் கருத்து தெரியாது. பலருக்கும் தெரிவதில்லை. எனவே சைவம் சாப்பிடுபவர்களும் முட்டையைச் சேர்த்துக் கொள்வதுண்டு. இது அவர்களது நிலைப்பாடு.

  ஆனால் பழக்கம் இல்லாதவர்கள், எனக்கும் பழக்கம் இல்லாததால் சாப்பிடுவது கஷ்டம்தான்....அதனாலேயே பேக்கரியில் ஏதேனும் எப்போதாவது வாங்கினாலும் கூட பச்சைக் கலர் டாட் இருக்கிறதா என்று பார்த்துத்தான் வாங்குவது வழக்கம். கேக் உட்பட....

  ஆனால் பயணம் மேற்கொள்ளும் போது உணவில்லாமல் செல்வதற்கும் மனதைத் தயார்ப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் இல்லைஅய ஜி?!!! இல்லையென்றால் பல இடங்கள் பார்க்க முடியாதே...நீங்கள் கொடுத்திருக்கும் படம் சுண்டி இழுக்கிறது!!!

  சரி திரிபுரா சைவ உணவைச் சுவைத்தீர்களா இல்லையா...ஆவலுடன் தொடர்கின்றோம்

  பதிலளிநீக்கு
 14. பச்சை டாட்! :) நான் பார்ப்பதில்லை!

  தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

  பதிலளிநீக்கு
 15. மீனை எடுத்துவிட்டால் சைவம்...
  பெரும்பாலும் ஓட்டல்களில் இதுதான் நிலை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....