எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 23, 2016

ஃப்ரூட் சாலட் 188 – கடவுள் எங்கே - டிஜிட்டல் உலகம் - இரண்டாம் அழகி


இந்த வார செய்தி:

டிசம்பர் 5 ம் தேதி மாலை, முதல்வர் தன் இறுதி மூச்சுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தருணம், பிரளயத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட பறவைகள் போல மொத்த மக்களும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். என் கூட்டை நோக்கி விரையும் முன், என் கூட்டு பறவைகளுக்கான அடுத்தநாள் அத்தியாவசிய உணவை வாங்க கே.கே.நகர் அய்யப்பன் கோயில் அருகில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன். ஆனால் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல் கலவரமும் கவலையும் ஒரு சேர அங்காடியின் ஒவ்வொரு அங்குலமும் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. நானும் சில உணவு பொருட்களை தேடி அதில் நீந்த தொடங்கினேன். தீடிரென ஒரு குரல் அயர்ச்சியும் அன்புமாக என்னை நோக்கி ஒலித்தது.

"அண்ணே, இது உங்களுதா ?" என கையில் ஒரு தங்க பிரேஸ்லெட் சகிதம் பணியாளர் சீருடையில் ஒரு பெண்.

"ஐயயோ, இவன் என் ஓனர் இல்லை, கொடுத்திறாதே" என அவள் கையில் கத்தி கதறிய ப்ரேஸ்லெட்டை பார்த்தேன், கண்டிப்பாக மூன்று பவுனுக்கு குறையாமல் இருக்கும்.

“இல்லைம்மா, என்னுது இல்லை ! ஏன் என்ன ஆச்சு ?”

"யாரோ இதை கீழ போட்டாங்கன்னே, யார்னே தெரில!!" என தங்கம் தொலைத்து விட்ட அதன் உரிமையாளரை தேடி அந்த கூட்டத்தில் தானும் தொலைந்து போனாள். எட்டி பார்த்தேன், இன்னொரு அண்ணனிடம் விசாரித்து கொண்டிருந்தாள் , இப்படியே பல அம்மாக்கள், தம்பிகள் என அவைவரிடமும் விசாரணை நடந்தேறியது, ஆனால் அடுத்தவர் தங்கத்தை தத்தெடுக்க யாரும் தயாராய் இல்லை.

'இதென்னடா எனக்கு வந்த சோதனை என தங்கம் இவளை பார்க்க, கண்டுபிடிச்சிடலாஞ்சாமி, கவலைப்படாத' என இவளும் ஒன்றாக தங்க வேட்டையை தொடர்ந்தனர். அப்போதுதான் 'முதல்வர் இறந்துவிட்டார்' என்ற தந்தி டிவியின் வதந்தி பலபேருக்கு பயத்தில் வாந்தி பேதியை வர வைத்தது. வாங்கியதை அப்படியே போட்டுவிட்டு மக்கள் வீட்டுக்கு விரைய தொடங்கினர், தொலைதொடர்பு நெருக்கடியால் ‘பில்லிங்’ நிறுத்தப்பட்டு கடையின் ஷட்டர் பாதி சாத்தப்பட்டது. அப்போதும் விடா முயற்சியாய் தக்காளி மூட்டைக்கு பக்கத்தில் நின்று தங்கம் யாருதுங்க என கேட்பவளை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியுமாய் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது, "என்னுதுங்க.. ஏங்க அது என்னுதுங்க” என்ற ஒரு மெல்லிய குரலுடன் நன்றியும், நாணமுமாய் அதன் உரிமையாளர் தங்கத்தை நோக்கி விரைந்தார். சிறு விசாரணைக்கு பின் அவரிடம் ப்ரேஸ்லெட்டை கொடுத்துவிட்டு அவரைவிட அளவற்ற மகிழ்ச்சியுடன் திரும்பிய பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன்.

“இவ்வளவு களேபரத்திலும் அந்த தங்கத்தை கொடுத்தே ஆகணும்னு எப்படிம்மா உனக்கு தோணுச்சு ?”

"இல்லைண்ணே, ஒரு குண்டுமணி தங்கம் வாங்கிறது எவ்வளவு கஷ்டம்னு யாருக்கு தெரியுமோ இல்லையோ, எனக்கு நல்லா தெரியும்" என தன் வெறும் கைகளை ஆட்டி சொன்னபோது கண்களில் கண்ணீர் பனிக்க ஒன்றை உணர்ந்தேன், வறுமையில் நேர்மை என்பது தங்கத்தை விட விலைமதிப்பற்றது, பிரகாசமானது, பரிசுத்தமானதும் கூட..

“சரி தவற விட்ட தங்கத்தை இவ்வளவு நேர்மையா, சாதாரணமா திருப்பி கொடுத்திருக்கியே! உன் பேரு என்னம்மா ? "

“செல்வகுமாரி' ண்ணே”.


நல்ல மனம் கொண்ட செல்வகுமாரிக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து. முகப்புத்தகத்தில் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட திரு ஹரி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

”ஓடாத, விழுந்துடுவ” என எச்சரிக்கப்படும் குழந்தையை விட, ‘கவனமாக ஓடு’ என ஊக்கப்படுத்தப்படும் குழந்தையே, வாழ்க்கையை சரியான கோணத்தில் பார்க்க கற்றுக் கொள்கிறது.   

இந்த வார குறுஞ்செய்தி:

பழகும் வரை உண்மையாய் இரு. பழகிய பின் உயிரையும் கொடு….

இந்த வார WhatsApp Message:சோகமே உருவாய் ஒரு தாய் அமர்ந்திருக்க, அவரது சிறு பெண், அம்மாவைப் பார்த்து சொன்னாள் – “அம்மா, இந்த உலகத்திலேயே நீ தான் ரெண்டாவது அழகி!” 

அம்மா கேட்டாள் – “செல்லம், யாருடா அந்த முதலாவது அழகி?”

அதற்கு மகள் சொன்ன பதில் – “அதுவும் நீ தான்மா…  ஆனா சோகமா இருக்காம, சந்தோஷமா இருக்கும்போது!”

இந்த வார கார்ட்டூன்:

இந்த வாரத்திற்கு இரண்டு கார்ட்டூன்! இரண்டுமே ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டவை தான் – ஒன்று தமிழில் மற்றது ஹிந்தியில்….ஹிந்தி தெரியாதவர்களின் வசதிக்காக…. அதன் மொழிபெயர்ப்பு – ”கட்டணக் கழிவறை – Digital Payment தான்! உரிமையாளர் சொல்கிறார் – “நெட் ஒர்க் வரல, அது வர வரைக்கும் கொஞ்சம் தடுத்து நிறுத்தி வை!” எதை என்பதை சொல்ல வேண்டுமா!

இந்த வார காணொளி:
காமிரா கண்கள் வழியாகவே பார்த்துப் பார்த்து இயற்கையாக பார்க்க மறந்து விடுகிறோம்!


படித்ததில் பிடித்தது:

கடவுள் எங்கே? எப்படி?

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய்.

அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

''அம்மா!நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.

அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.

உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.
உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

38 comments:

 1. வறுமையில் நேர்மை போற்றுதலுக்கு உரியது ஐயா
  போற்றுவோம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. தங்கத்தைத் திரும்பத் தந்த தங்கத்துக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 3. செல்வகுமாரி எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்ந்திட வாழ்த்துவோம்.

  இற்றை வாட்சப் செய்தி அருமை.

  கார்ட்டூன் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு...மக்களின் சலிப்பு...

  காணொளி மிகவும் ரசித்தோம்...உண்மைதான்...அருமையான செய்தி...(துளசி: என் போன்றவர்க்கு சில சமயங்களி ப்ல காட்சிகள் நேரில் காணக் கிடைக்காத போது இது போன்று படங்கள் உதவத்தான் செய்கின்றன. உதாரணம் தங்களின் படங்கள் ஜி)

  பபிக நல்லதொரு நேர்மறையான செய்தியைச் சொல்லுகிறது.

  வழக்கம் போல் அனைத்தும் அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு புகைப்படங்கள் ஒரு வரம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 4. காணொளி மிகவும் ரசித்தேன். உண்மைதான். நான் நேரில் பார்க்கும் போது அப்படியே வியந்து பிரமிப்புடன் நின்றுவிடுவேன். பார்த்துக் கொண்டே இருப்பேன் அமைதியையும் அழகையும் ரசித்துக் கொண்டே...ஆனால் அவ்விடத்தை விட்டு நகரும் போது ஐயோ இந்தக் காட்சி இடம் எல்லாம் இனி வர இயலுமோ இயலாதே என்று உடன் மூன்றாவது விழியான கேமாராவிற்குள் அடக்கிவிடும் ஆர்வம் மேலிட க்ளிக்கித் தள்ளிவிடுவேன் ஜி! பல இடங்கள் சென்று பார்க்க முடியயதவர்களுக்கும் உதவத்தான் செய்கிறது டிஜிட்டல் உலகம்!!! நீங்கள் யான் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம் என்று எங்களுக்கு எத்தனைக் காட்சிகளைக் காட்டுகிறீர்கள்...பிரமிப்புடன் பார்க்கின்றோம்...என்றாலும் நேரில் பார்த்து மனது லயித்துக் கொண்டாடுவது தனி சுகம்தான் ஜி...

  இந்த உலகத்துலேயே நீதான் அழகி! என் மகனுடனான நாட்களை மலரும் நினைவுகளாக்கியது. நான் எந்த ஒரு வருத்தமான நிகழ்வுக்கும், வீட்டில் எத்தனைப் பிரச்சனைகள் இருந்தாலும் சோர்ந்து உட்காருவது இல்லை. முகத்தில் காட்டவும் மாட்டேன். ஆனால் சிந்தனைகளின் ரேகைகள் முகத்தில் ஓடத்தானே செய்யும்! அதற்கே என் மகன், "அம்மா சிரிம்மா அம்மா சிரிம்மா" என்று என் முகத்தைக் கைகளில் பிடித்து உதடுகளை விரித்துவிடுவான். அம்மா நீ அழகா இருக்கமா என்று சொல்லிக் கொண்டே ....அப்படியே சிந்தனைகளைப் புறம்தள்ளிச் சிரித்துவிடுவேன். அவனது முகமும் ஒளிர்ந்துவிடும்....

  மகனிடம் வெங்கட்ஜி மாமா இதைப் பகிர்ந்திருந்தார் என்று சொன்னேன் ஜி. இப்போது தொலை தூரத்தில் இருந்தாலும் அவன் கேட்பதுண்டு....

  மிக்க நன்றி வெங்கட்ஜி

  கீதா

  ReplyDelete
 5. நல்ல தொகுப்பு. நேர்மையான பெண்மணி செல்வக்குமாரியைப் பாராட்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. அம்மா என்றாலே அழகு தான்.... உங்கள் நினைவுகளையும் இப்பகிர்வு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி.

  தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

  ReplyDelete
 7. படித்ததில் எனக்கும் பிடித்தது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. நேர்மை = செல்வகுமாரி

  கார்ட்டூன்கள் = செம...!

  கடவுள் கதை அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. very interesting fruit salad!! increases positive thinking!! thanks

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 10. செல்வகுமாரிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  //தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.//
  உண்மைதான்.
  அனைத்தும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. #அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது#
  மீனுக்கு தண்ணீரை திமிங்கலம்தானே அடையாளம் காட்டியது ?மனிதன் ,கடவுளை காட்டு என்று இன்றைய சாமியார்களிடம் போனால்,அவனையே விழுங்கி விடுவார்களே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 12. அனைத்து தகவல்களும் சிறப்பு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

   Delete
 13. எல்லாவற்றையும் ரசித்தேன். கடவுள் எங்கே? என்ற கதை எனக்கும் பிடித்துப் போயிற்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 14. ரசித்தேன். ஹரி சொல்லியிருக்கும் சம்பவத்தை நானும் எடுத்து வைத்திருக்கிறேன். நல்ல மனங்கள் வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. Wow! Wow! Wow! வறுமையில் செம்மையுடன் வாழும் செல்வகுமாரியை போற்றுவோம்!.கார்ட்டூன்கள் அருமை!ஹிந்தி புரியாவிட்டாலும் ரசிக்க முடிந்தது. கடவுள் கதை சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 16. இந்தவார ஃப்ரூட் சலாடுக்கு உங்களுக்கு ஒரு பூங்கற்றை வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 17. உலகமே ஜெயலலிதா,சசிகலா, மோடின்னு பேசிட்டிருக்கும் போது மத்த நல்ல விஷயங்களும் இருக்குன்னு தொடர்ந்து சொல்லிட்டிருக்கீங்க.. சூப்பர் ஜி... சூப்பர் ஜி...நல்ல தொகுப்பு!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஒரு நண்பன்.

   Delete
 18. அருமை அண்ணா...
  முதல் செய்தி முகநூலில் வாசித்தேன்...
  அந்தப் பெண் பாராட்டுக்குறியவர்....

  சிலவற்றை முகநூலில் பார்த்தாலும் எல்லாமே அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 19. ஃப்ரூட் சாலட் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனை.. ஒவ்வொரு சுவை.. வாழ்க்கையை பாசிடிவாக பார்க்க உதவும் வகையில் அனைத்தும் அருமை.. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

   Delete
 20. செல்வகுமாரிதான் முதல் அழகி ! சல்யூட்...! அருமையான உரைநடையை ரசித்தேன்..! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத்....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....