எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 12, 2016

மேகாலயா – மலையுச்சியும் பெயர்க்காரணமும்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 77

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


மலையுச்சியிலிருந்து ஷில்லாங்க்

பூங்காவிலிருந்து நாங்கள் புறப்பட்டு அடுத்ததாய்ப் பார்த்த இடம் பற்றி சொல்வதற்குள் மேகாலயாவின் புகழ்பெற்ற Living Root Bridges பற்றி பார்த்தோம்.  இப்போது அடுத்ததாய் நாங்கள் பார்த்த இடம் பற்றிச் சொல்கிறேன்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் ஒரு மலையுச்சி – Shillong Peak என்று அழைக்கப்படும் மலையுச்சிக்குத் தான் நாங்கள் சென்றோம்.  இந்த மலையுச்சிக்குச் செல்ல, இந்திய அரசாங்கத்தின் வாயு சேனாவின் அனுமதி வாங்க வேண்டும்.  இந்த மலையுச்சிக்குச் செல்ல ஒரே ஒரு வழி தான் – அந்த வழியில் சுமார் இரண்டு கிலோமீட்டர் வாயுசேனாவின் வசம் இருப்பதால் இந்த அனுமதி தேவைப்படுகிறது.


மலையுச்சியிலிருந்து ஷில்லாங்க்
பனிமூட்டத்தின் ஊடே…

நாங்கள் நுழைவாயில் அருகே வந்து எங்கள் அடையாள அட்டைகளைக் காட்டி அனுமதி வாங்கிக் கொண்டு மலையுச்சியினை அடைந்தோம்.  நாங்கள் அங்கே வந்து சேர்ந்த போதே மாலை நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது.  இருட்டவும் துவங்கி இருந்தது. என்றாலும் மலையுச்சியிலிருந்து ஷில்லாங்க் நகர் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் இங்கே சென்று பார்த்த பிறகு தான் பயணத்தினை தொடர்வது என முடிவு செய்திருந்தோம்.  கடல் மட்டத்திலிருந்து 1965 மீட்டர் உயரத்தில் அமைந்திருகும் இந்த மலையுச்சியிலிருந்து ஷில்லாங்க் நகரம், அங்கே இருக்கும் உமியம் ஏரி என அனைத்தையும் பார்க்க முடியும். 


சுடச்சுட Bபுட்டா [சோளம்]

ஷில்லாங்க் – இந்தப் பெயர் வந்ததற்கும் ஒரு கதை சொல்கிறார்கள்.  Shillong Peak என்பதிலிருந்து ஷில்லாங்க் பெயர் எடுத்துக் கொண்டதாகவும், இல்லை இல்லை இதற்கு வேறு காரணங்கள் உண்டு என்றும் சொல்வதுண்டு.  அதில் ஒரு கதை மட்டும் இங்கே பார்க்கலாம்.

ஷில்லாங்க் நகரின் தெற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊர் Myllium. அதன் அருகே உள்ள கிராமம் Bissi.  அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு கன்னிப் பெண் Lir.  திருமணம் ஆவதற்கு முன்னரே அவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது – அந்தக் குழந்தை U Shyllong – ஆனால் பாவம் பிறந்த குழந்தை இறந்தே பிறக்கிறது.  சோகத்துடன் அக்குழந்தையை தனது தோட்டத்திலேயே புதைத்து விடுகிறாள் Lir. காலம் கடக்கிறது.

சில வருடங்கள் கடக்கிறது. ஒரு நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் அவள் வீட்டு வாசலில் ஒரே சலசலப்பு – மக்கள் பெருந்திரளாக நின்று பேசுவது கேட்கிறது. கண் விழித்து வாயிலைத் திறந்து பார்க்கையில் கிராம மக்கள் அனைவரும் அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் நடுவே ஒரு அழகிய இளைஞன் நின்று கொண்டிருக்கிறான்.  Lir-ஐப் பார்த்து “அம்மா, நான் தான் U Shillong. பல வருடங்கள் முன்னர் என்னை தோட்டத்தில் புதைத்தீர்களே, நான் இப்போது வளர்ந்து உயிருடன் வந்திருக்கிறேன், நான் கடவுளின் அவதாரம். உங்களையும் இந்த ஷில்லாங்க் மக்களையும் இயற்கைப் பேரழிவு, சீற்றங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றிலிருந்து காப்பாற்ற வந்திருக்கிறேன்” என்று சொன்னானாம். U shyllong என்பதற்கு ”இயற்கையாகவே வளர்ந்தவன்” என்ற அர்த்தமும் உண்டு. அதிலிருந்து தான் இந்தப் பகுதி ஷில்லாங்க் என அழைக்கப்படுகிறது என்பது கதை.


மலையில் பழங்கள்

இந்தத் தகவல்களை ஒரு பதாகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  அதையும் படித்துவிட்டு முன்னேறினால் View Point இருக்கிறது. அங்கிருந்து ஷில்லாங்க் நகர் முழுவதும் கண்டுகளிக்கமுடியும்.  பெரும்பாலான சமயங்களில் பனிமூட்டம் இருக்கும். அப்படி இருக்கும் சமயங்களில் ஷில்லாங்க் நகரை பார்ப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். இருந்தாலும், பனிமூட்டமும், அங்கிருந்து காணக்கிடைக்கும் இயற்கை எழிலும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.  ஷில்லாங்க் செல்லும்போது தவறவிடக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.  நகரத்தின் அழகையும், இயற்கையையும் ரசித்து, அங்கே இருந்த சில கடைகளில் ஒன்றில் தேநீர் அருந்தி சிறிது நேரம் அங்கே செலவிட்டோம். 


Bபுட்டா சுடுவதை காமிராவில் சுடும் நண்பர்கள்….


ஷில்லாங்க் மார்க்கெட் – முயல்கள் விற்பனைக்கு!

நாங்கள் கண்ட காட்சிகளை எங்கள் காமெராக்களில் சிறைபிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  எங்கள் ஓட்டுனர் ராஜேஷ் சீக்கிரம் கௌஹாத்தி சென்று விட வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார்.  நாங்களோ, இல்லை ஷில்லாங்க் நகரில் கொஞ்சம் ஷாப்பிங் செய்து விட்டு செல்லலாம் என அவரை ஷில்லாங்க் நகருக்குள் வண்டியை ஓட்டச் சொன்னோம்.  அவரும் வேண்டா விருப்பாக வண்டியை நகருக்குள் செலுத்தினார்.  நானும் நண்பர்களும் நினைவுக்காகவும், சில பரிசுப் பொருட்களும் வாங்கிக் கொண்டு ஷில்லாங்கிலிருந்து கௌஹாத்தி நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம்.  த்ரில்லான பயணம் அது.  உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தோம்….  அது பற்றி அடுத்த பதிவில்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

18 comments:

 1. ஆகா
  அற்புதப் பயணம்
  தொடருஙகள் தொடர்கிறோம்
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. அருமையான படங்கள். ஷில்லாங்க் பெயர்க் காரணம் அறியாத தகவல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 3. உயிருடன் வந்தவர் கதை? பெயர்க்காரணம் அறிந்தேன். பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. இயற்கையின் எழில் கொஞ்சுகின்றது - பதிவில்!..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. ஷில்லாங்க் பெயர்க் காரணம் ஆச்சிரியபட வைக்கிறது.
  மக்காசோளம் சுட்டு சாப்பிடுவது குளிருக்கு அருமையாக இருக்கும்.
  படங்கள் செய்திகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. குளிருக்கு இதமாய் மக்காச்சோளம். உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. காண ரம்மியமாக இருக்கிறது ஷில்லாங்க்!உடலில் ஊடுருவும் பனியைதான் தாங்கமுடியாது போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒன்றும் அதிக குளிரில்லை! :) பனிவிழும் பிரதேசங்களை விடவா குளிர் இருந்துவிடப்போகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. பெயர்க்காரணம் .ஒவ்வொரு ஊருக்கும் இப்படிக் கதைகள் ஏதாவது இருக்கும் போல சுவாரசியம்தான். அழ்கு ஊர்! தொடர்கின்றோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கதை..... உண்மை தான்!

   Delete
 9. ஊருக்கான பெயர்காரணம் நல்லாருக்கு ...
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....