புதன், 7 டிசம்பர், 2016

மேகாலயா – Mawsmai Limestone Caves….ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 74

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

குகை நுழைவாயில்….

சென்ற பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பூங்கா சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களையும், அங்கே கண்ட காட்சிகள் பற்றியும் எழுதி இருந்தேன்.  கடைசியில் இங்கே சென்றதற்கு பதில் வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கலாம் என்று எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்.... அந்த இடம் தான் இன்று நான் சொல்லப் போகும் இடம்.  அது சிரபுஞ்சியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுண்ணாம்புக்கல் குகைகள்.... 


குகை நுழைவாயில் அருகே நண்பர்களுடன்….

குகைகளுக்குள் நுழையும் முன்னரே காமிராவினை ஆட்டோ மோடில் வைத்து ஓடோடி நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு குகை நுழைவாயிலில் இருந்த படிகள் வழியே சுலபமாகக் கீழே இறங்கிச் சென்று விட்டோம்.  அட இவ்வளவு சுலபமான வழிதானே, என தைரியமாக நடந்து கொண்டிருந்தோம்.  சுண்ணாம்புக்கல் குகைகள் இவை.  பூமியின் கீழே இயற்கையாகவும், தண்ணீரின் ஓட்டத்தால் ஏற்பட்ட அரிப்புகளாலும் சுண்ணாம்புக் கற்களில் பற்பல உருவங்கள் உருவாகி இருப்பதை உங்களால் காண முடியும்.
குகைக்குள் உருவகங்கள்….

ஒவ்வொரு பாறைகளிலும் பல உருவங்கள் – உங்கள் மனதுக்கு எப்படியெல்லாம் தோன்றுகிறதோ அப்படி எல்லாம் நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் – அது இறைவன் உருவமோ, மனித உருவமோ, பறவைகள், விலங்குகள், என எதுவாகவும் இருக்கலாம்.  கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு ஒவ்வொரு உருவமாகப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  எத்தனை எத்தனை உருவங்கள்.  எத்தனை விதமான வடிவங்கள்.  இயற்கையாகவே உருவானவை என்பதால் ஒவ்வொரு உருவமும் இப்படி உருவாக எத்தனை நாட்கள், மாதங்கள் இல்லை இல்லை வருடங்கள் ஆகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே பிரமிப்பு.
குகைக்குள் சில இடங்களில் குனிந்தும் தவழ்ந்தும்...

நுழைவாயிலில் உள்ளே நுழையும்போது அட நடந்தே போகலாம்னு நினைக்கும் அளவுக்கு இருந்தாலும், உள்ளேப் போகப்போக பல இடங்களில் குனிந்தும், தவழ்ந்தும், ஊர்ந்தும் செல்ல வேண்டிய அளவிற்கு இருந்தது அந்தக் குகை. எல்லா இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்தி இருப்பதால் கொஞ்சம் பயமில்லை என்றாலும், மின்விளக்கு இல்லாத சமயத்தில் என்ன ஆகும் என்ற எண்ணமும் வருவதை தடுக்க முடியவில்லை. விதம் விதமான சந்துகளில் புகுந்து வெளிவருவது கொஞ்சம் சவாலாகவே இருந்தது.


குகை உள்ளே பாறைக்குப் பின்னே நண்பர் ….

ஒரு சில இடங்களில் பாறைகளின் மேலே இருந்து வெளிச்சம் வரும் அளவிற்கு சிறிய ஓட்டைகளும், சில இடங்களில் பெரிய இடைவெளியும் இருந்தது. அவை மூலமும் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது.  பல இடங்களில் பாறைகளையும், அவர்களில் இயற்கை வடித்திருக்கும் சிற்பங்களைப் பார்த்தபடியே வந்தாலும், நடுநடுவே எங்களின் மறைத்து வைத்திருக்கும் வாலும் எட்டிப்பார்த்தது. அப்படி எட்டிப் பார்க்க, சில பாறைகள் மீது தத்தித் தாவி ஏறி பாதையை விட்டு விலகி மேலே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கவும் செய்தோம்!


சில இடங்களில் நேராக நடந்த போது….குகைக்குள் நண்பர்களோடு….

சில இடங்களில் குனிந்து சென்றாலும், நிறைய இடங்களில் பத்து பன்னிரெண்டு அடி உயர இடைவெளியும் இருந்தது.  உள்ளே பல இடங்களில் கம்பிகள் கொண்டு பாதைகள் அமைத்திருக்கிறார்கள் – சில சமயங்களில் அந்த இடங்களில் தண்ணீர் வரும் எனவும், அந்தச் சமயத்தில் அவற்றைக் கடக்க இந்த இந்தப் பாலங்கள் பயன்படும் எனவும் தோன்றியது. ஒவ்வொரு இடமாக நின்று நிதானித்து பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  குகைக்குள் எங்களை எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நிறையவே. அதிலும் அடுத்தவர் குனிந்து, ஊர்ந்து சென்றதைப் புகைப்படம் எடுத்து அவருக்குக் காட்டும்போது அப்படி ஒரு சிரிப்பு! குகைக்குள் பல இடங்களில் இப்படி எடுத்துக் கொண்டோம் – மற்றவர்களை நான் எடுக்க, என்னை அவர்கள் எடுத்தார்கள்.   
குகைக்குள் பாலத்தின் மேலே….

இந்தக் குகைகள் மிக நீளமானவை என்றாலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவது 150 மீட்டர் தொலைவு மட்டுமே.  அதற்கு மேல் குகைக்குள் செல்வது சற்றே ஆபத்தானது – உள்ளே நுழைந்து வெளியே வர முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது! அந்த 150 மீட்டர் தூரத்தினை நின்று நிதானித்துப் பார்க்கவே நிறைய நேரம் எடுத்துக் கொள்ளலாம். நின்று நிதானித்து, உருவங்களைப் பார்த்து, உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு பலப் பல உருவங்களாக நினைத்து மகிழலாம்.  மேகாலயா சென்றால், பார்க்க விடக்கூடாத இடங்கள் இரண்டு – ஒன்று இந்த மாஸ்மை சுண்ணாம்புக்கல் குகைகள், மற்றது மரங்களின் வேர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலங்கள் – இந்த பாலங்கள் பற்றிய தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். 
குகைக்குள் சில குறுகிய பாதைகள்….
குகையை விட்டு வெளியே வரும்போது….

உள்ளே சென்றதை விட வெளியே வரும் போது ரொம்பவே கஷ்டப்பட்டு வெளியே வரவேண்டியிருந்தது.  குனிந்து வெளியே வந்த பிறகு முகத்தில் என்ன ஒரு சிரிப்பு! யாருக்கு முன்னாடியும் இப்படிக் குனிந்தது இல்லை! இங்கே குனிந்து தானே ஆகவேண்டும்! இந்த குகைகள் போலவே மேகாலயாவில் நிறைய குகைகள் உண்டு என்றாலும் இவையே அதிக பிரபலமானவை.  நாங்களும் இங்கே மட்டுமே சென்று வந்தோம்.

என்ன நண்பர்களே குகை பற்றிய விவரங்களும், இன்றைய பகுதியில் வெளியிட்ட படங்களும் பிடித்திருந்ததா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

22 கருத்துகள்:

 1. தங்களுடன் சுண்ணாம்புக்கல் குகைக்குள் பயணித்தது வித்தியாசமான அனுபவம்..

  நல்ல விவரங்களுடன் அழகிய படங்கள்.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 2. மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது. ஒத்த மனதுடைய நண்பர்களுடன் இந்த மாதிரி இடங்களுக்கு சென்று ரசிப்பதில் கிடைக்கும்ஆனந்தமே அலாதி. கடைசி புகைப்படத்தில் அது அப்பட்டமாய் தெரிகிறது. நைனிடால் அருகே இது போன்ற ஒரு குகைக்குச் சென்றிருக்கிறோம்.

  சுதா த்வாரகாநாதன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நைனிதால் அருகே இருக்கும் குகை - நானும் ஒரு முறை சென்றிருக்கிறேன்.

   ஒத்த மனதுடைய நண்பர்களுடன் செல்வது ஆனந்தமே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   நீக்கு
 4. வித்தியாசமான மறக்க முடியாத அனுபவம்தான் ஐயா
  தங்களால் நாங்களும் கண்டோம்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. அனுபவம்புதுமை. குகையின் உள்ளே வெப்பம் அதிகமோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெப்பம் அதிகமில்லை.... சாதாரணமாகத் தான் இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 7. நுழைந்து பார்த்து விட வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது படங்களைப் பார்க்கையில் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது சென்று பார்த்துடுங்க....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 8. வாவ்!! பிரமித்துப் போனோம்!! ஆம் இங்கு முதலில் சென்றிருக்கலாமோ என்று நீங்கள் சொல்லியிருந்ததன் பொருள் புரிகிறது. இயற்கையின் விந்தையே விந்தைதான்! இல்லையா ஜி! அருமை...படங்கள் மிக மிக அருமை..

  கீதா: Stunned! வெங்கட் ஜி! ஐயோ எப்படிப்பட்ட ஓர் இடம்! கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம். குறித்துக் கொண்டுவிட்டேன். இதே போன்று அராக்கு வேலியில் - விசாகப்பட்டினம் - உண்டு....நீங்களும் சென்று வந்திருக்கிறீர்கள் இல்லையா...ரசித்துப் பார்த்தோம்...அருமை அருமை வார்த்தைகள் இல்லை இயற்கையின் விந்தையை வியந்து போற்றிட!!

  பதிலளிநீக்கு
 9. இயற்கை பல விஷயங்களை நமக்குத் தந்திருந்தாலும், நாம் அதை அனுபவிக்கத் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் சோகம்.

  அராக்கு வேலி இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் சென்று வந்தேன். நல்ல இடம். மழைக்காலத்தில் - சீசனில் சென்றால் இன்னும் ரம்மியமாக இருந்திருக்கும். அங்கே உள்ள குகைகள் Bபோரா குகைகள்... இன்னும் அவ்விடங்கள் பற்றி எனது பக்கத்தில் எழுதவில்லை.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

  பதிலளிநீக்கு
 10. இந்தியாவில் இப்படியொரு குகை இருப்பதை இப்போதுதான் அறிந்தேன்! படங்களும் தகவல்களும் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவில் இப்படி நிறைய குகைகள் உண்டு சுரேஷ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 11. படங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கிறது.
  நாங்களும் பயணித்தது போன்ற அனுபவம் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 12. சுண்ணாம்பு குகை அருமை.இயற்கையின் பல அற்புதங்களில் இப்படி தானக உருவாகும் குகைகளும்.
  அமெரிக்காவில் இது போன்ற குகைகளை பார்த்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....