திங்கள், 5 டிசம்பர், 2016

பணம் படுத்தும் பாடு – திண்டாடும் பெரியவர்


500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு இப்பதிவை எழுதுகின்றேன் என்றாலும் இந்தப் பதிவுக்கான காரணம் அது அல்ல.  அவை செல்லுபடியாகிற சமயத்திலேயே நடந்த, எனக்குக் கிடைத்த அனுபவம் பற்றிய பதிவு இது!

இவர் அவர் அல்ல!
சமீபத்தில் நான் எடுத்த புகைப்படம் ஒன்றை, இப்பதிவுக்கு பொருத்தமாக இருக்குமே என இணைத்திருக்கிறேன் அவ்வளவே!

ஒரு மாதத்திற்கும் அதிகமாகவே இருக்கும். ஒரு நாள் ஒரு பெரியவரைச் சந்திக்க நேர்ந்தது.  அந்தப் பெரியவருக்கு 85 வயது. நடை தள்ளாடினாலும், இன்னமும் எங்கும் தனியாகச் சென்று வரக்கூடிய அளவில் தான் இருக்கிறார் பெரியவர். பதிவின் வசதிக்காக அவர் பெயர் கோவிந்தன் என்று வைத்துக் கொள்ளலாம்! திரு கோவிந்தன் அவர்களை முதன் முதலாகப் பார்க்கிறேன். தனது வீட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் பயணித்து வந்த அசதி அவர் நடையிலும் முகத்திலும்.  அவரை இருக்கையில் அமர வைத்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்த பிறகு அவராக ஆரம்பிக்கட்டும் என காத்திருக்கிறேன்.

”தண்ணீர் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்த ஒரு வாய் தண்ணீர் கொடுக்கக் கூட என் வீட்டில் யாரும் இல்லை – இத்தனைக்கும் எனக்கு நான்கு மகன்கள், ஒரு மகள்! அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது, கல்லூரியில் படிக்கும் பேரன், பேத்திகள் உண்டு. மனைவி இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. அவளுக்கென்ன? என்னைத் தவிக்க விட்டு சுகமாய்ப் போய்விட்டாள். நான் தான் யாருமில்லாமல் தனிக்கட்டையாகி விட்டேன்.” சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் கண்களில் கண்ணீர். சரி கொஞ்சம் அழுது முடிக்கட்டும், அவரது சோகம் அப்படியாவது கரையட்டும் என ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

சற்றே ஆஸ்வாசப்படுத்திக் கொண்ட திரு கோவிந்தன், அழுது முடித்த பிறகு சொன்ன முதல் வாக்கியம் – ”மன்னித்து விடுங்கள். உங்களையும் கஷ்டப்படுத்தி விட்டேன்”.  பரவாயில்லை சொல்லுங்கள் என அவரிடம் சொல்ல, அவர் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

திரு கோவிந்தன் அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். பணியிலிருந்த காலத்திலேயே குழந்தைகள் அனைவருக்கும் படிப்பறிவு தந்து, அவர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்திய அதே சமயத்தில் சிக்கனமாகவும் இருந்து தலைநகர் தில்லியின் ஒரு முக்கியப் பகுதியில் தனி வீடு ஒன்றையும் வாங்கி இருந்தாராம்.  அந்தக் காலத்திலேயே வாங்கிய அந்த தனிவீட்டிற்கு இன்றைய மதிப்பு மூன்று கோடிக்கும் மேல். எல்லா மகன்களுக்கும் திருமணம் முடித்து வைத்ததோடு, மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவரவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து அவர்களும் கல்லூரியில் படிக்கும் வரை வளர்ந்து விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு திரு கோவிந்தன் அவர்களின் மனைவி இறந்து விட, அதன் பிறகு அவருக்கு தொல்லைகள் ஆரம்பித்திருக்கிறது.  சொந்த வீட்டை விற்று, அந்த காசை வாரிசுகளுக்குப் பிரித்துத் தரவேண்டும் என்ற கோரிக்கைகளோடு அனைத்து மகன்கள்களும் கூற ஆரம்பித்து இருக்கிறார்கள். மகளும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, இவரோ, நான் இருக்கும் வரை இருக்கட்டும். அதன் பிறகு உங்களுக்குத் தானே என்று சொல்ல யாருக்கும் அது பிடிக்கவில்லை.  எங்களுக்குத் தரவில்லை எனும்போது நாங்கள் ஏன் உங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேள்வி கேட்டு அந்த வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

எப்போது பார்த்தாலும், ஒரே வேண்டுகோள், வீட்டை விற்று, சொத்தைப் பிரிப்பது மட்டுமே.  இவர் ஒத்துக் கொள்ளாததால், இவர் மீது பிள்ளைகள் மற்றும் மகளும் சேர்ந்து கொண்டு வழக்கு பதிவு செய்து விட்டார்கள். வழக்கு நடந்து கொண்டிருந்த வருடங்களில் இவரை பல விதமாக மிரட்டவும் செய்திருக்கிறார்கள் – போலீஸ் கொண்டும், அடியாட்கள் கொண்டும் மிரட்டல்கள் விடும் அளவிற்கு நடந்திருக்கிறது. இவரின் நிலைபார்த்த ஒரு நீதிபதி மனம் இரங்கி மகன்களையும் மகளையும் கண்டித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அவர் சம்பாதித்த சொத்தை அவர் விருப்பப்படிதான் விற்க முடியும், நீங்கள் தலையிட முடியாது என்று தீர்ப்பு வழங்கி, அவருக்கு தொல்லை தரக்கூடாது என எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.

வழக்கு முடிந்த பிறகு பெற்ற மகன்களின்/மகளின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டது. அவருக்கு முன்பு கிடைத்த விஷயங்கள் கூட கிடைக்கவில்லை. பேரன் பேத்திகளின் அன்பு கூட கிடைக்க விடாமல் தடுத்துவிட்டார்கள்.  யாருமே அவரை கவனித்துக் கொள்ளவில்லை. அவரது சொந்த வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலை.  அவ்வப்போது மிரட்டல்கள்.  பார்த்த திரு கோவிந்தன் அந்த வீட்டை விற்று, அவருக்கு ஒரு Gated Community-ல் சிறியதாய் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, மீதி பணம் முழுவதையும் வங்கியில் போட்டு விட்டார். யாரையும் தனது வீட்டிற்குள்ளே விடுவதில்லை. தனியே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு வசிக்கிறார்.  அவருக்கு இப்போதைய தேவை ஒன்றே ஒன்று தான் – தான் உயிருடன் இருக்கும் வரை அவரை கவனித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தன் சொத்து முழுவதையும் தானம் செய்து வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

இவரும் அவர் அல்ல!
நான் எடுத்த புகைப்படம் ஒன்றை, இப்பதிவுக்கு பொருத்தமாக இருக்குமே என இணைத்திருக்கிறேன் அவ்வளவே!


முதியோர் இல்லங்கள், ஆஸ்ரமங்கள் என எங்கே சென்றாலும், தன்னை வைத்துக் கொள்ள அவர்கள் சொல்லும் விலை – மிக மிக அதிகம் – சேரும்போதே எல்லா சொத்தையும் இல்லத்தை நடத்துபவர்களுக்கு, ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்து விடுங்கள், உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்களாம். இவர் அதற்கு சம்மதிக்க வில்லை என்பதால் எங்கும் சேர முடியவில்லை. ஏதாவது நல்ல இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

நானும் எனக்குத் தெரிந்த சில இடங்களைச் சொன்னேன். முதல் முறையாகப் பார்க்கும் என்னிடம் இவ்வளவு பேசினாலும், அவருக்கு என் மீதும் அத்தனை நம்பிக்கை இல்லை.  சில நிமிடங்கள் பேசிய பிறகு அவரது வீட்டிற்குச் செல்கிறேன் என்று புறப்பட்டார்.  பணம் எப்படியெல்லாம் படுத்துகிறது என்ற நினைவு தான் அன்று முழுவதும் எனக்கு.  பெற்ற மகன்களும், மகளும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என வருத்தப்பட்டாலும், அவர்கள் சொல்வது என்ன என்பது நமக்குத் தெரியாததால் ஒன்றும் சொல்வதிற்கில்லை.  ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம் – அதிகமாய் பணம் இருந்தாலும் பிரச்சனை தான்.

புறப்பட்ட அவரிடம் தைரியமாக இருங்கள், நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனாலும், அவர் சென்ற பிறகும், இத்தனை நாட்கள் ஆனபிறகும் 85 வயது பெரியவர், நிறைய பணம் இருந்தும், கண்ணீரோடு அவர் கஷ்டங்களைச் சொன்னது மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது.  இன்னும் சொல்லாத கஷ்டங்கள் எவ்வளவோ….

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை….
நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

42 கருத்துகள்:

 1. தந்தையின் சொத்துகளில் பிள்ளைகள் உரிமை கோரா முடியாது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னது இவர் வழக்கில்தானோ? பாவம் அவர்.

  தம சப்மிட் செய்யப்படவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர் வழக்கு அல்ல.... அது வேறு.

   த.ம. சப்மிட் செய்து இருக்கிறது இப்போது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பணம் பாடாகப் படுத்துகின்றது.. உண்மைதான்.. ஆனாலும்,
  இந்தப் பாதகர்கள் பண்பை பாசத்தை எல்லாம் பாடாகப் படுத்துகின்றார்கள்..

  இதேபோல எனது உறவினர் ஒருவருக்கு நேர்ந்திருக்கின்றது..

  இனியும் உறவுகள் திருந்துவதற்கில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. ரொம்ப வருத்தத்துக்கு உரிய விஷயம். 70+ வயதானவர்களைப் பார்த்துக்கொள்ளும் மனநிலை இங்கு அபூர்வம். பணம் வேறு இல்லைனா? நம் பதிவுலகைச் சேர்ந்தவர்கள் முதியோர் இல்லம், Gated community பற்றிச் சரியான தகவல் அளிக்கலாமே. படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லியில் இருக்கும் அந்தப் பெரியவருக்கு, தலைநகரிலோ அல்லது NCR பகுதியிலோ, ஹரித்வார்/ரிஷிகேஷ் பகுதியிலோ தான் முதியோர் இல்லம் தேவை. நமது பதிவுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் என்பதால் அங்கே உள்ள இல்லங்களைச் சொல்லலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. முகப்புப் படத்தில் நாலு குழந்தைகளும் கள்ளம் கபடமற்ற சிரிப்புடன் அருமை. யாருக்கு எந்தமாதிரியான வாழ்க்கை விதிக்கப் பட்டிருக்கோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருக்கு எந்த மாதிரியான வாழ்க்கை விதிக்கப் பட்டிருக்கோ.... அதே தான். ஒவ்வொரு சிறுமியும் அத்தனை சிரிப்புடன் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்க வேண்டும்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. பணமா...பாசமா....

  மிகவும் கொடுமையான கேள்வி.... அந்த முதியவரின் நிலையே பலருக்கும்...இந்த நிலை என்று மாறுமோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 7. என் சொந்தக்காரர் ஒருவர் தம் மனைவி இறந்த பின், தாம்பரம் அருமே ரிடயர்மென்ட் கம்யூனிட்டி சேரலாம் என்று நினைத்தார். தேவையான வசதிகள் நிறைந்தது. ஆனால் அதற்கும் டிபாசிட் கட்டி வெயிடிங் லிஸ்ட்!!
  இந்தக் காலத்தில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ளணும் என்பதைத் தன் கடமையாக யாரும் நினைக்கவில்லை!! என் (அம்மாவின்) சொந்த அனுபவமே நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வீடுகளில் இது போன்ற நிலை இன்று இருப்பது கொடுமையான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   நீக்கு
 8. இது வெறும் பணம் படுத்தும் பாடு மட்டுமல்ல. நீங்கள் சொல்லிச் செல்லும் பெரியவரும் தான் நினைத்ததே நடக்க வேண்டும் என்று நினைப்பவர் போல் இருக்கிறதுமுதியோர் இல்லங்களும் இலவசம் அல்ல. விலை என்று குறிப்பிடுவது எவ்வளவு தெரியவில்லை. இவரும் நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. No lunch is free.... இது அவருக்குப் புரிந்திருப்பது போல தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 9. இப்படி அல்லாடும் முதியவர்கள் பல பேர்கள். ‘உப்புத் தாத்தா’ என இவர் போன்றதொரு நபரைப் பற்றி பகிர்ந்திருந்தேன் முன்னர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உப்புத் தாத்தா - படித்த நினைவில்லை. சுட்டி கொடுங்களேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 10. மனம் கனக்கச் செய்யும் பதிவு
  பணம் இருந்தாலும் பிரச்சனைதான்
  என நினைக்க ,,, என்ன சொல்வது
  எனத் தெரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 11. பாசமில்லா பிள்ளைகளுக்கு சொத்தை தர மறுப்பது நியாயமே !பணம் இருப்பதால் அவருக்கு ஒரு முதியோர் இல்லம் கிடைக்காமல் போகாது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 12. இன்றைய சோகமான தொடர்கதை முதியவர்களுடையது மட்டுமே! நல்ல வேளை இந்த முதியவர் புத்திசாலித்தனமாக இருந்து விட்டார். ஆனாலும் தன்னிரக்கமும் தனிமையும் இவரை அனுதினமும் கஷ்டப்படுத்துக்கிறது என்பதற்கு சாட்சி தான் அந்தக் கண்ணீர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரை கஷ்டப்படுத்துகிறது என்பதற்கு சாட்சி - கண்ணீர்.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 13. பல கதைகள் இருக்கின்றன இதுபோல
  உண்மையில் சொத்து பலருக்கு சோதனைகளைத்தான் தருகிறது.
  அவர்கள் வாழ்நாளில் அவர்கள் ஈட்டிக் கொள்ளவேண்டியதுதான் என்கிற பக்குவம் சமூகத்திற்கு வந்துவிட்டால் நல்லது

  வருந்தவைத்த கதை
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போல பல கதைகள். உண்மை தான். ஒவ்வொன்றையும் கேட்கும்போது மனதில் ஒரு வித கலக்கம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 14. கவர் படம் குழந்தைகள் அருமை தோழர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவர் படம் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி மது. சமீபத்தில் எடுத்த படம் இது.

   நீக்கு
 15. சொத்து இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஒன்றும் இல்லதவராக இருந்தால் அவரது நிலை எப்படி இருந்திருக்குமோ? வேதனையாகத் தான் உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 16. முதுமையில் கொடுமை தனிமை!. பலருக்கு இன்று அப்படித்தான் நேருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 17. மனம் மிகவும் வேதனை அடைந்தது. இப்போது முதியோர் இல்லங்கள் பெருகிவரும் காரணம் இதுதான் என்றாலும் ஜி..பணம் இருந்தால் இப்படி என்றால் இல்லாவிட்டாலும், குழந்தைகள் சொத்தே சேர்த்து வைக்கவில்லை உன்னைப் பார்த்துக் கொள்ளக் கூட பணம் இல்லை என்று சொல்லி அவதூறு பேசி விலக்கி வைத்துவிடுகிறார்கள் ஜி! இருந்தாலும் கஷ்டம். இல்லை என்றாலும் கஷ்டம்தான் ஜி..ஒன்று மட்டும் உறுதி ஜி. பெற்றோராக இருக்கும் போது நம் குழந்தைகளை நாம் எப்படி நடத்துகின்றோமோ அப்படித்தான் அவர்கள் பின்னாளில் நம்மை நடத்துகிறார்கள்..என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது..படிப்பு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தல் என்பதற்கும் மேலாக குழந்தைகளுடன் அன்பாக நட்புடன் இருப்பது...அப்படி இல்லாத பெற்றோரைக் கூட கடமைக்காகவேனும் பார்துக் கொள்ளும் குழந்தைகளும் இருக்கிறார்கள்தான்.....பெற்றோரும் தங்கள் சில பிடிவாதங்களை விட்டுக் குழந்தைகளுடன் மிகவும் அன்புடன் சினேகத்துடன், பேரக் குழந்தைகளுடன் ஒட்டி உறவாடி அவர்களுக்கு இணையாக இருந்தால் பிரச்சனைகள் ஒருவிதம் தீரும். இதையும் மீறி உதறித் தள்ளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்தான்...

  மேலே உள்ள முகப்பில் உள்ள குழந்தைகள் படம் அழகு வெங்கட்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பிரச்சனைகள். என்ன சொல்ல. பிள்ளைகள் இப்படி என்றால், பெற்றவர்களும் தங்கள் கொள்கையில் பிடிப்பாக இருந்து, விட்டுக் கொடுப்பதில்லை.....

   முகப்பில் உள்ள குழந்தைகள் படம் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 18. கடைசி காலத்தில் பெற்றோர் எதிர்பார்ப்பது அன்பும் அரவணைப்பும் மட்டுமே.மகளும் சேர்ந்து விற்க சொல்வது துயரம் தான், ஆனால் அவரின் மறுபக்கத்தில் வேறு கசப்பான அனுபவங்கள் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 20. இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில் இதுதான் நிலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகர்ப்புறங்களில் இது அதிகமாகத் தான் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   நீக்கு
 21. பாவம்... இப்போது பணம்தான் பாசத்தை நிர்ணயிக்கிறது என்பது வேதனை...
  அந்தப் பெரியவர் இறுதிக்காலத்தில் கஷ்டப்படுகிறாரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....