எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 5, 2016

பிறந்த நாளும் மறதியும் – நானிருக்க பயமேன்…. – நண்பேன்டா!

முகப் புத்தகத்தில் நான் - 5

பிறந்த நாளும் மறதியும் – 31 March 2016

பிறந்த நாள்….  அதுவும் என் பிறந்த நாளே மறந்து விடும் எனக்கு, அடுத்தவர்களின் பிறந்த நாள் நினைவில் இருக்குமா?  பல முறை மறந்து திட்டு வாங்கிக் கொள்வேன் – வேற யாரிடம்! :) 

இது பற்றி எனது மனைவி சென்ற வருடம் எழுதிய முகப்புத்தக இற்றையின் ஒரு பகுதியை அப்படியே இங்கே தருகிறேன்…

”காலைல எழுந்ததிலிருந்து ஏன் என்னையே பார்க்கற….
சுத்தி சுத்தி என் பின்னாடியே வர,
இன்னிக்கு ஆஃபீஸ் உண்டு தெரியுமா?
சமைக்கறதா ஐடியா இருக்கா?
இல்லை கேண்டீன்ல பார்த்துக்கணுமா??
எதாவது சொல்லேன்…...
இன்னிக்கு என்ன தேதி?
ஏய்! நான் என்ன கேட்கிறேன்…. நீயென்ன சொல்ற….
இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?
இன்னிக்கு என்ன??
கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்…...
குட்டிம்மா உங்கம்மாவுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு???
காலைல வேலையப் பார்க்காம…...
அப்பா, அம்மாவுக்கு இன்னிக்கு ”ஹாப்பி பர்த்டேப்பா…. அது கூட மறுந்துடுத்தாப்பா…..

மறப்பது மட்டுமல்ல, திருமண நாளும், பிறந்த நாளும் ஒரு குழப்பம் – இரண்டையும் மாற்றி சொல்லி அசடு வழிந்ததும் உண்டு! இப்போதெல்லாம் அலைபேசியில் Reminder Set செய்து வைத்துக் கொள்கிறேன். இந்த முறை மனைவியின் பிறந்த நாள் அன்று ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலியில் இருந்தேன்.  அங்கிருந்து வாழ்த்துச் சொல்லி விட்டேன். 

இந்த முறை மறக்காமல் இருக்க வேண்டுமே என வருடத்தின் ஆரம்பத்திலேயே அனைவரது பிறந்த நாளையும் Reminder Set செய்து வைத்தேன்.  நான் மறந்தாலும், என் மகள் மறப்பதில்லை. மகள் அம்மாவின் பிறந்த நாளுக்கு அளித்த வாழ்த்து அட்டை பற்றி சொன்னார்! அந்த வாழ்த்து கீழே….


நானிருக்க பயமேன் – 1 April 2016


ஹோலி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை – எங்கேயாவது பயணிக்கலாம் என முன்பே முடிவு செய்து இருந்தேன்.  நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லூ, மணாலி மற்றும் மணிகரன் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடிவு செய்தோம்.  கொட்டிக் கிடக்கும் பனியும், பொங்கி ஓடும் பியாஸ் நதியும் ஆஹா…  எத்தனை இன்பம்….. பயணம் பற்றிய கட்டுரைகள் பிறகு! இப்போது இன்றைய விஷயத்திற்கு வருவோம்.

எப்படி நமது மாநிலத்தில் தேனிலவு என்றால் ஊட்டி, கொடைக்கானல் என பயணிப்பார்களோ, வடக்கில் தேனிலவு என்றால் ஷிம்லா, குஃப்ரி, மணாலி என பயணிப்பது வழக்கம்.  குல்லூ – மணாலியிலும் நிறைய தேனிலவு ஜோடிகளை பார்க்க முடிந்தது.  பியாஸ் நதி சுழித்து ஓடிக் கொண்டிருக்க, அங்கே நின்று கால்களை நனைத்தவாறு நதியின் போக்கினையும் இயற்கையையும் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.  பியாஸ் நதியின் படுகையில் பெரிய பெரிய கற்களும் பாறைகளும் உண்டு! நான் நின்று கொண்டிருந்த இடத்தில் நதியின் உள்ளே ஒரு பெரிய பாறை…  அதைச் சுற்றிலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!அங்கே ஒரு இளம் ஜோடி….  சீக்கியரும் அவரது மனைவியும் கரையோரத்தில் நின்றிருக்க, அந்தப் பெண் நதியில் கால் வைத்து உள்ளே சென்று அந்தப் பாறையின் மேல் ஜோடியாக நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்.  தண்ணீரின் வேகத்தினைப் பார்த்த ஆண்மகனுக்கு தயக்கம்.  “என்னய்யா இப்படி பயப்படற….  நானிருக்க பயமேன்!” என்றுச் சொல்லிச் சொல்லியே உசுப்பேத்தி விட அந்த இளைஞர் முதலில் மெதுவாக பாறையின் மேல் சென்று விட்டார்.  அந்தப் பெண்ணும் சிறிது நேரத்தில் அங்கே செல்ல, புகைப்படங்கள் எடுக்கப்பட்டன!

நதியின் பிரவாகம் மிக அதிகம். ஒரு நொடி தடுமாறினாலும் ஆளை அடித்துச் செல்லும் வேகம் – உள்ளூர் மக்களே அந்த வெள்ளத்தைக் கண்டு பயப்பட, வெளி ஊர்களிலிருந்து வந்திருந்த பலரும் நதியின் போக்கு தெரியாது உள்ளே இப்படி வருவதைப் பார்க்க முடிந்தது.  பாறை மேல் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு தன்னிலை மறந்திருந்த அந்த இளம் ஜோடியைப் பார்த்து வேகமாக ஓடிவந்த ஒரு உள்ளூர் பெண்மணி, அவர்களை ”முதலில் கரைக்கு வாங்க, விழுந்தா உடம்பு கூட கிடைக்காது!” என்று திட்டிக் கொண்டிருந்தார்…….

அந்தப் பெண்ணோ “நானிருக்க பயமேன்!” என்ற எண்ணத்தினை பிரதிபலித்துக் கொண்டிருந்தார்!

நண்பேன்டா! – 2 April 2016

அலுவலகத்தில் இருக்கும் Coffee Board சென்று, தினமும் ஒரு காபியாவது குடிக்காமல் இருந்தால் எனக்கு அன்றைய பொழுது புலர்ந்ததற்கு அர்த்தம் இல்லாத மாதிரித் தோன்றும். அங்கே இருக்கும் நாராயணன் எனும் பெயர் கொண்ட கன்னடக்காரர் தேனீயைப் போல உழைத்துக் கொண்டே இருப்பார். அதிகாலையில் வந்தால் வீடு திரும்புவது ஏழரை மணிக்கு மேல் தான்.  அத்தனை சுறுசுறுப்பு, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது மட்டுமல்லாது, முகத்தில் எந்தவித அலுப்போ, சலிப்போ என்றைக்குமே பார்த்ததில்லை. அவ்வப்போது அவரிடம் பேச்சுக் கொடுப்பதுண்டு.

இன்றைக்கு அவர் கையில் கன்னடத்தில் பச்சை குத்தியிருந்ததைப் பார்த்து அது என்ன எழுதி இருக்கிறது என்று கேட்டேன் – அப்போது அவர் சொன்ன விஷயம் தான் இன்றைக்கு சொல்லப்போவது.  அவர் கையில் ”[B]போரையா” என்று பச்சை குத்தி இருக்கிறதாம். அது அவருடைய பால்ய கால நண்பனின் பெயர். நண்பரின் பெயரை இவர் பச்சை குத்திக் கொள்ள, அந் நண்பர் அவரது கையில் “நாராயணன்” என இவரது பெயரை பச்சை குத்திக் கொண்டாராம். அத்தனை இணை பிரியாத நட்பு! அதுவும் பத்து வயதில்…. அதைச் சொன்ன பிறகு அவரது முகத்தில் சற்றே கலக்கமும் ஒரு சோகமும்…..  சோகத்திற்கான காரணத்தையும் அவரே சற்று நேரத்தில் சொன்னார்.

நண்பர் போரையா வீட்டில் நான்கு சகோதரர்கள். ஒரு தீபாவளி சமயம்.  சகோதரர்கள் அனைவரும் அவர்கள் வீட்டில் இருந்தபோது பட்டாசு வெடித்துச் சிதற வீட்டில் தீப்பிடித்து விட, அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு வெளியே ஓட முயற்சித்து இருக்கிறார்கள் – பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்து அனைவரும் கட்டிக் கொள்ள, ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.  கட்டிப்பிடித்த நிலையில் கருகிய சடலங்களைத் தான் மீட்க முடிந்ததாம். என் பெயர் பச்சை குத்திக் கொண்ட நண்பன் இறந்து விட்டான். அவன் மறைந்து விட்டாலும், அவன் நினைவு என் கைகளில் மட்டுமல்ல நெஞ்சிலும் பதிந்து விட்டது என்று சொல்லி, பனித்த கண்களை துடைத்துக் கொண்டார்.

இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த நண்பரை, அவரது நினைவுகளை மறக்க முடியவில்லை நாராயணன் அவர்களால்…..  அவர்களது நட்பு பற்றி கேட்ட எனக்கு அதைப் பற்றி சிந்திக்காது இருக்கமுடியவில்லை…..

என்ன நண்பர்களே, எனது சமீபத்திய முகப் புத்தக இற்றைகளை ரசித்தீர்களா?

நாளை வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 comments:

 1. ஆம். ஃபேஸ்புக்கில் படித்திருக்கிறேன்.

  :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. முகநூலில் தங்களுடன் இணைப்பில்லாததால் படிக்க முடியவில்லை. தளத்தில் படித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. எல்லோர் வீட்டிலும் இதை மறந்து விடுவார்கள்.....தான் :)
  இந்த வருடம் ஞாபகமாக சொல்லி விட்டீர்கள்...
  நல்ல நட்பு...
  தம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி மது.

   Delete
 5. அருமை, அனைத்தையும் ரசித்தேன்.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 6. ரிமைன்டர் வைத்துத் தப்பித்துவிட்டீர்கள் அண்ணா :)
  ரோஷினியின் வாழ்த்தை முகநூலில் பார்த்திருந்தேன்..அழகான வாழ்த்து.
  யாமிருக்கப் பயமேன் - பயம்தான்.
  நண்பேண்டா நெகிழவைக்கும் விஷயம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 7. பதிவு அருமை!..

  அதென்ன !..

  தங்கள் மகளின் கையெழுத்து என்னுடையதைப் போலவேயிருக்கின்றது.. ஆச்சரியம்!.. நானும் இப்படித்தான் கீழிறங்கும் எழுத்துக்களை அதிகமாக சுழித்தும் மேலேறும் எழுத்துகளை கொடி போல் வளர்த்தும் எழுதுவேன்..

  காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. அட... உங்கள் கையெழுத்தும் இப்படித் தான் இருக்குமா! மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 8. முகபுத்தகத்தில் படித்தேன்.பிறந்தநாள் பற்றி ஆதி எழுதியது, நீங்கள் ரோஷ்ணி பிறந்த தினத்தைப்பற்றி எழுதியது எல்லாம்,அருமையாக இருக்கிறது.
  நட்பின் பிரிவு வேதனை, காலத்தால் மறக்க முடியாத ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 9. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 10. If you forget your dear"s birth day you will be mistaken as not caring. நமக்கு ஈடு பாடில்லாததை மறப்போம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. எனக்கு எப்பொழுதுமே எதுவுமே மறதி கிடையாது ஜி ஆனால் அடுத்தவர்கள் கடன் தந்தால் மறந்து விடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. தங்களின் முகப் புத்தக இற்றைகளை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

   Delete
 13. மறந்தால் தானே நினைப்பதற்கு என்று சமாளிக்க வேண்டியதுதான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. முகநூலில் படித்து விட்டேன். சுவாரசியமான தொகுப்பு.செல்பி மோகம் ஏற்படுத்தும் ஆபத்துகளை உனாராமல் இருப்பது ஏன்தான் தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 15. நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல
  நவீன சாதனங்கள் கொஞ்சம்
  நம்மை காப்பாற்றி வருவது நிஜம்

  தங்கள் பெண்ணின் வாழ்த்து அட்டை
  மிகப் பிரமாதம்.

  குணாலி நதியின்
  புகைப்படம் அருமை

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete

 16. நல்ல அனுபவப் பகிர்வு
  பச்சை மனதில் குத்துகிறது

  ஆழம் தெரியாமல் காலை விடுவதும் அப்புறம் வைரல் வீடியோ ஆவதும் இயல்பே நமக்கு

  தெரியாத ஊர்ல தண்ணியில் கால் வைக்காதே என்ற பழமொழியை அடிக்கடி சொல்வார் அப்பா

  நல்ல பதிவு தொடர்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 17. மூன்றும் மூன்று விதமாய்...
  நாராயணன்... மனசு கஷ்டமாயிருச்சு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....