அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட திருச்சி பறவைகள் பூங்கா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
கடந்த மாதம் 25-ஆம் தேதி அன்று நெய்வேலி நகரில் அமைந்திருக்கும் மிகவும் பழமையான வில்லுடையான்பட்டு ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மிகவும் பழமையான ஆலயம் அது. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் அன்று, நெய்வேலி நகரின் பல ஆலயங்களிலிருந்தும் பக்தர்கள் காவடிகளைச் சுமந்து இந்த வில்லுடையான்பட்டு முருகன் கோவிலுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் காவடிகள் எடுத்துச் செல்வதை இந்த நாளில் பார்க்க முடியும். விதவிதமான காவடிகள், பால் குடங்கள், அலகுக் காவடிகள் என எத்தனை எத்தனை வகைகள் - பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகம், பங்குனி உத்திரம் ஆகிய இரண்டு விழாக்களுமே அலுவலக வேலை நாளில் இருந்ததால் செல்ல நினைத்தாலும் சென்று வர இயலவில்லை. முடிந்தால் மண்டல பூஜை நடக்கும் 48 நாட்களுக்குள் ஏதோ ஒரு நாள் சென்று வரலாம் என்று யோசித்திருந்தேன்.
ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் சென்று கடலூர் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். தொழுதூர் வரை தேசிய நெடுஞ்சாலை - அதன் பிறகு இருக்கும் சாலை கொஞ்சம் கரடு முரடானது தான் - திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாச்சலம் என்று பயணிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான பேருந்துகள் இப்போது நெய்வேலி நகருக்குள் செல்வதில்லை. மந்தாரக் குப்பம் பகுதியில் இறங்கிக் கொண்டு வேறு பேருந்தில் தான் நகருக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. நாங்கள் இருந்த வீடுகள், ஊருக்குள் இருந்த கடைகள் என பலவும் இடிக்கப்பட்டு விட்டன. எட்டு ரோடு எனப்படும் இடத்தில் இறங்கிக் கொண்டு எங்கள் வீடு இருந்த பகுதி வரை நடந்து சென்றேன்.
நடக்க நடக்க நிறைய மாற்றங்கள் கண்களுக்குப் புலப்பட்டன - பல கட்டிடங்கள் மாறி இருக்கின்றன. புதியதாக சிலைகளும் வந்திருக்கின்றன. முன்பு ஊர் எல்லையில் தான் முந்திரி மரங்கள் இருக்கும் என்றால் இப்போது ஊரின் உள்ளேயே சில சாலைகளின் ஓரங்களில் கூட முந்திரி மரங்கள் பார்க்க முடிந்தது. எங்கள் வீட்டிலிருந்து நானும் தாத்தாவுமாக நடந்து சென்ற பாதை, அவர் என்னை அழைத்துச் சென்ற நூலகம் என ஒவ்வொரு இடமாகப் பார்க்கும்போது அப்படியே பின்னோக்கிச் சென்று, படங்களில் வரும் Flashback போல நிறைய காட்சிகளை மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன். நூலகம் வரை தாத்தாவின் கைபிடித்து நடந்து திரும்பினால் அவர் சில சமயங்களில் வாங்கித் தந்த சூட மிட்டாயின் சுவை இன்னமும் நாவில் நர்த்தனமாடுவது போல ஒரு உணர்வு.
நண்பர்/உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கே அவர்கள் தந்த பருப்பு கொழக்கட்டை, இனிப்பு, காப்பி என ஒரு பிடிபிடித்து, அங்கிருந்து அவர்களின் வண்டியில் நேராகச் சென்றது வில்லுடையான்பட்டு கோவில் தான். இன்னமும் நிறைய வேலைகள் மீதி இருந்தாலும் ஏனோ அவசர கதியில் கும்பாபிஷேகம் நடந்தது போலத் தெரிந்தது. ஆனாலும், அந்த ஆலயத்தின் உள்ளே சென்று முருகனை தரிசித்து சற்றே சில நொடி பிரார்த்தனை - “எல்லோரையும் நல்லபடியா வையப்பா!” என்ற பிரார்த்தனையுடன் அவனை நோக்கிச் சில கணங்கள் One to One சம்பாஷணை. பூவும், விபூதியும் பிரசாதமாகக் கிடைக்க அங்கிருந்து வெளியே வந்து மற்ற சன்னதிகளிலும் தரிசனம் கண்டேன். புதிதாக விதானத்தில் அழகிய ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள். வெளியே தெப்போற்சவம் நடக்கும் குளத்திலும் நிறைய தண்ணீர் இருந்தது. கும்பாபிஷேகம் நடந்த சுவடுகள் நிறையவே இருக்கிறது. படங்கள் பெரிதாக எடுக்கத் தோன்றவில்லை - மனதில் இருந்த ஆலயத்தின் நினைவுகள் அப்படியே இருக்கட்டும் என்ற எண்ணமோ என்னமோ தெரியவில்லை.
அங்கிருந்து நேராக பதினாறாம் பிளாக் பகுதியில் இருக்கும் நடனசபாபதி - நடராஜர் ஆலயத்திற்குச் சென்று அங்கேயும் சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை. அங்கிருந்து சாலைகளில் உலா வந்து நேரடியாக நண்பர் வீட்டிற்குத் திரும்பினேன். மதியம் உணவிற்குப் பிறகு எனது கல்லூரி நண்பர்களைச் சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன். சில பல காரணங்களால் யாரையும் சந்திக்க இயலாமல் போனது. ஏனோ ஒரு வித வெறுமை உணர்வு - எப்படி இருந்த ஊர், எப்படி ஆகிவிட்டதே என்ற வெறுமை. ஏனோ பழைய நினைவுகளை மறக்கக் கூடாது என்று தோன்றிவிட்டது. பல வீடுகள் இடிபாடுடன் இருந்தன. நாங்கள் இருந்த காலத்தில் இருந்த பேருந்து நிறுத்தங்களில் கரையான் பிடித்துக் கொண்டு மண்மேடுகள் போல காட்சியளித்தன. முன்பு மனிதர்கள் நிறைந்திருந்த சாலைகளில் இப்போது எங்கே பார்த்தாலும் வெற்றிடம் போல தோன்றியது.
அதனால் என் நண்பரிடம் என்னைக் கொண்டு பேருந்து நிலையத்தில் விட்டு விடுங்கள் - நான் திருச்சி திரும்ப வேண்டும் - சீக்கிரம் போனால், நாளை அலுவலகத்திற்குச் செல்ல சுலபமாக இருக்கும் என்று புறப்பட்டுவிட்டேன். நேரடி பேருந்து கிடைக்கவில்லை என்றாலும் ஊரை விட்டு உடனே விலகி விட வேண்டும் என்று தோன்றி விட, கிடைத்த பேருந்தில் - விருத்தாச்சலம் வரை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஏறிய பிறகு தான் தெரிந்தது - அது சுற்று வழியில் செல்லும் பேருந்து - மந்தாரக்குப்பம் வழி செல்லாமல் பாப்பான்குளம் எனும் கிராமம் வழிச் செல்லுமாம்! இது வரை அப்படி ஒரு ஊர் இருப்பதே எனக்குத் தெரியாது! பேருந்து ஏதேதோ குறுகிய சாலைகளில் முந்திரி, பலா தோப்புகள் வழியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் வீடுகள் என சென்று கொண்டிருந்தது. பல இடங்களில் சாலையின் இருபுறமும் இருக்கும் முட்செடிகளில் உராய்ந்தபடி பேருந்து முன்னேறியது. சாதாரண பேருந்து எடுக்கும் நேரத்தை விட அதிக நேரம் எடுத்து விருத்தாச்சலத்தில் என்னைக் கொண்டு சேர்த்தது.
விருத்தாச்சலத்தில் சிறிது நேரத்திற்குப் பிறகே திருச்சி வரை செல்லும் பேருந்து கிடைத்தது. ஏறி அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளிலும், ஊர் தற்போது இருக்கும் நிலை குறித்த சிந்தனையிலும் நேரம் போனது. பொதுவாக இது போன்ற பயணங்களில் தொடர்ந்து முகநூலில் எதையாவது எழுதி, பயணம் குறித்த கதைகளை எழுதி வெளியிடுவதுண்டு. ஆனால் இந்தப் பயணத்தில் எதையுமே எழுதத் தோன்றவில்லை. மனது எனது முந்தைய நெய்வேலி வாழ்வினை - எனது இருபது வயது வரையான வாழ்க்கையையும் அந்த பசுமையான நினைவுகளையும், அப்போதைய நெய்வேலி நகரையும் எண்ணியபடியே இருந்தது. எதற்காக Planned City ஆக இருந்த நெய்வேலி நகருக்கு இந்த நிலை? கொஞ்சம் கொஞ்சமாக அந்த தொழில் நகரம் இப்படி மாறியதற்கு என்ன காரணம்? என்னதான் நிலக்கரி கிடைப்பது குறைவென்றாலும், ஒரு பெரிய நிறுவனம் - பல இடங்களில் அடுத்தடுத்த முன்னேற்ற ஏற்பாடுகள் இருக்க, ஆரம்ப காலத்தில் இருந்த நகரை, அதன் கட்டுமானங்களை ஏன் அழிய விடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
என்னவோ போடா மாதவா? இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் என்ன காரணம் என்று யார் நமக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற சிந்தனைகளுடன் வீடு திரும்பினேன். நெய்வேலி பயணத்தில் எடுத்த படங்களும் காணொளிகளும் உங்கள் பார்வைக்கு இங்கே இணைத்திருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
9 ஏப்ரல் 2026











வில்லுடையான்பட்டு ஆலய தகவல் புதிது. திருவிழா எப்படி இருக்கும் என்பதை உங்கள் எழுத்துகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. எனக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி. நான் கூட்டத்தில் போய் தரிசனம் செய்யாமல் தனி நாளில் சென்று வர நினைப்பேன்.
பதிலளிநீக்குசிறியதாக இருந்தாலும் அழகாக இருக்கும் அந்த ஆலயம். பங்குனி உத்திர திருவிழாக்கள் மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்தவை.
நீக்குஅதிக கூட்டம் இப்போது எனக்கும் அலர்ஜி தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
முந்திரிப்பழம் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் பார்க்கிறேன். ஒரு காலத்தில் முந்திரிக் காட்டின் நடுவேதான் குதஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் க்வார்ட்டர்ஸ். அதன் நடுவேதான் வாழ்ந்தோம்.
பதிலளிநீக்குஇன்னும் பழுக்க நாளாகும். அந்தப் பழங்களை, அப்பாவின் அலுவலக வளாகத்திலிருந்து எடுத்து வருவார். அது ஒரு கனாக்காலம். உங்கள் நினைவுகளையும் தூண்ட இப்பதிவு உதவியிருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
அழகான படங்கள் நெய்வேலியில் அழகாய்ச் சொல்கின்றன. பழுதற்ற சாலைகள் கவர்கின்றன. குடந்தையிலிருந்து திரும்பி வரும்போது NLC வாயிலைத் தாண்டி வருவோம். அந்த வாயில் என்னைக் கவரும்,
பதிலளிநீக்குபழைய நுழைவாயில் Simple ஆக இருந்தாலும் அழகு. India Gate, Gateway of India போல பழைய நுழைவாயிலை Arch Gate என்று அழைத்தோம். அதை இடித்து இப்போது வேறு வடிவத்தில் வைத்திருக்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
அந்தப் பாழடைந்த பேருந்து நிறுத்தத்தில்தான் பேருந்தில் ஏறியிருப்பீர்கள் போல. காணொளி சொல்கிறது!!
பதிலளிநீக்குஆம் அங்கிருந்தும் சில சமயங்களில் நெய்வேலி நகரின் உள்ளே இருக்கும் நகர பேருந்துகளில் பயணித்திருக்கிறேன். அப்போது நெய்வேலி நிர்வாகமே உள்ளூர் பேருந்து வசதிகளை தந்தார்கள் - 10 பைசா, 15 பைசா, 25 பைசா டிக்கெட்டுகள் தான். தற்போது அந்த வசதிகள் இல்லை - தமிழக அரசுப் பேருந்து தான் இயங்குகிறது. ஆனால் அப்போது இருந்த பல தடங்களில் இப்போது பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அதனால் அப்போதிருந்த பேருந்து நிறுத்தங்களும் கவனிப்பாரின்றி பாழடைந்து கிடக்கின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
எங்கே கோவில் படங்களைக் காணோம் என்று நினைக்கும்ப்;போதே உங்களின் விளக்க வரிகள் வந்து விட்டன! உங்கள் பழைய நினைவுகள் படித்தபோது நெகிழ்ச்சி. என் பள்ளிக் காலங்களும் மனதில் ஓடின.
பதிலளிநீக்குபெரிதாக படங்கள் எடுக்கவேயில்லை - பதிவில் சொல்லி இருப்பது போல. பழைய நினைவுகள் நிச்சயம் மறக்க முடியாதவை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இடங்கள், பொருள்கள், ஏன் மனிதர்களும் மாறிக்கொண்டே வருகிறார்கள். ஆனால் நம் மனதில் அவை ஈர நினைவுகளாய் குளிர்ந்து கொண்டே இருக்கும்தான்.
பதிலளிநீக்குமாற்றங்கள் மட்டுமே மாறாதது - உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
முந்திர மரம் பார்த்ததே இல்லை. பார்க்க ஆசை.
பதிலளிநீக்குஒரு முறை நெய்வேலி பக்கம் சென்று வாருங்கள் - நிறையவே பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
பழைய இடங்களுக்குச் சென்றால் நமக்கு வரும் உணர்வுகளே தனி. பிறருக்கு விளக்க இயலாது.
பதிலளிநீக்குஉண்மை தான். அந்த உணர்வுகள் விளக்கமுடியாதவையே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
பல கோயில்களில் வேலை முடிவதற்குள் கும்பாபிஷேகம் நடந்துவிடும். இது காரணமாகத்தான் என நினைக்கிறேன் (கிரஹப் பிரவேசம் போல)
பதிலளிநீக்குஇருக்கலாம். வீடு கிரஹப் பிரவேசங்கள் கூட முழுவதும் வேலை முடிந்த பிறகு செய்வதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
முதலில் பதிவைப் பார்த்ததும் டக்கென்று தேதியைப் பார்த்துக் கொண்டேன் இன்றைய பதிவுதானே என்று ஹாஹாஹாஹா...காரணம் முன்னர் நெய்வேலி சென்று வந்தது பத்தி எழுதியிருந்தீங்க இல்லையா உங்கள் நண்பர்களுடன்...அது நினைவுக்கு வந்துவிட்டது.
பதிலளிநீக்குகீதா
ஆமாம் சில மாதங்களுக்கு முன்னரும் அங்கே சென்று வந்தேன். அந்த முறை நண்பர்களையும் பார்த்து வந்தேன் என்றால் இந்த முறை யாரையும் பார்க்கவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
கொல்லாம்பழ மரம் பார்த்ததும் நாரோயில் நினைவு வந்துவிட்டது. படம் அழகு.
பதிலளிநீக்குமரம் பார்த்ததும் கல்லூரி நினைவு அங்கும் இப்படி அடர்ந்து இருக்கும் அந்தத் தோட்டத்துக்குள்தான் நாடகம் rehearsal எல்லாம் செய்வோம்! சாப்பிடுவதும் அங்குதான்.
கீதா
செம்மண் பூமியில் இப்படி தோட்டத்துக்குள் ஆடி ஓடிய நேரங்கள் மகிழ்ச்சியை அதீத அளவில் தந்தவை. மறக்க முடியாத காலங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
அது போல நெய்வேலி township சென்ற நினைவும் வந்தது. படங்கள் அழகாக இருக்கின்றன. சாலைகள் சுத்தமாகவும் இருக்கின்றன. நூலகம் படமும் அட நல்லா பெரிசா இருக்கிறதே என்று தோன்றியது.
பதிலளிநீக்குகீதா
அழகான சாலைகள், பெரிய நூலகம், விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் என பல விஷயங்கள் மறக்க முடியாதவை தான் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தெப்போற்சவம் நடக்கும் வில்லுடையான்பட்டு கோவிலின் குளம்...//
பதிலளிநீக்குபிரமாதமாக இருக்கிறது. படம். நேரிலும் பார்க்க அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன்
கீதா
குளம் பார்க்க அழகு தான் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
காணொளிகள் பார்த்தேன் ரசித்தேன்.
பதிலளிநீக்குஊருக்குள் இருந்த கடைகள் என பலவும் இடிக்கப்பட்டு விட்டன. //
மாற்றங்கள் என்பதைத் தவிர்க்க முடியாதே! சில மாற்றங்கள் ஏற்க கஷ்டமாக இருக்கும் சில மகிழ்ச்சியாக இருக்கும். அதில் ஒன்று நம் மனம் படிப்படியாக evolve ஆகிக் கொண்டே செல்வது மிகவும் மகிழ்ச்சியான மாற்றம்.
கீதா
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை என்பது தெரிந்தே இருந்தாலும் பல சமயங்களில் இந்த மாற்றங்களை மனது ஒத்துக் கொள்வதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
இப்படிப் போகும் போது பழைய நினைவுகள் வந்து போகும். அதில் சில நலல்வற்றை வெளியில் சொல்வதே சிரமமாக இருக்கும் மனதின் அனுபவத்தை வார்த்தைகளுக்குள் அடங்காத ஓரு அடக்க முடியாத ஓர் உணர்வு. (ஆ! இதை நான் வேறு ஒன்றில் பயன்படுத்தியிருக்கிறேனே!)
பதிலளிநீக்குகீதா
உண்மை தான். சொல்ல முடியாத, வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வுகள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
ஏனோ ஒரு வித வெறுமை உணர்வு - எப்படி இருந்த ஊர், எப்படி ஆகிவிட்டதே என்ற வெறுமை. ஏனோ பழைய நினைவுகளை மறக்கக் கூடாது என்று தோன்றிவிட்டது. //
பதிலளிநீக்குபுரிந்து கொள்ள முடிகிறது ஜி.
எனக்கும் இதேதான் எங்கள் ஊரைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த போது தோன்றிய ஒன்று. கூடவே இப்போது இருந்த பசுமையை நான் மறக்காத மறக்கக் கூடாது என்று எப்போதும் இருப்பவற்றைப் படம் பிடித்தேன். இவையும் மாறிவிட்டால்!!? ஒரு சிலதான் அப்போது போடேன் எங்கள் தளத்தில் இன்னும் இருக்கின்றன அவற்றையும் எழுதிப் போட வேண்டும். ஆயிற்று 4, 5 வருடங்கள்...
கீதா
தங்களது எண்ணங்களையும் எழுதுங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
முந்திரி, பலா தோப்புகள் வழியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் வீடுகள் என சென்று கொண்டிருந்தது. //
பதிலளிநீக்குகாணொளியில் முந்திரி தோப்புகள் தெரிந்தன...ரசித்துப் பார்த்தேன்.
எதற்காக Planned City ஆக இருந்த நெய்வேலி நகருக்கு இந்த நிலை? கொஞ்சம் கொஞ்சமாக அந்த தொழில் நகரம் இப்படி மாறியதற்கு என்ன காரணம்? //
நான் முதன் முதலில் நெய்வேலிக்குச் சென்ற போது பார்த்து வியந்த ஒரு விஷயம் முதல் வரிதான்...Planned city காரணம் நமக்குத் தெரிந்த்டதுதான் ஜி. ஆனால் நம் மனம் சின்ன வயதில் பதிந்தவற்றை அந்தப் பசுமையை அழிக்க மறுப்பதால். நாம் அதிலேயே இருக்க விரும்புவதால் புதியவற்றை ஏற்க மறுக்கிறது அவ்வளவுதான். எனக்கும் இதுதான் தோன்றியது. நான் சென்றிருந்த போது. எங்கள் ஊருக்கு.
ஒரு வேளை உங்கள் வாழ்க்கை அங்கேயே இருந்திருந்தால், மெதுவாக மெதுவாக ஏற்பட்ட இந்த மாற்றங்கள் இத்தனை வெறுமையை ஏற்படுத்தியிருக்காதோ என்றும் தோன்றியது. காரணம் ஒவ்வொரு மாற்றமும் மெல்ல மெல்ல மனதில் ஏறியிருக்கும்...
எனக்கு எங்கள் ஊருக்குப் போயிருந்த போது அப்படித் தோன்றியது.
கீதா
அங்கேயே இருந்திருந்தால் மாற்றங்கள் ஏற்படுவதை அதிகம் உணர்ந்திருக்க மாட்டேன் என்றும் சொல்லலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.