வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - அயோத்யா ஜி - பகுதி இருபத்தி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்


ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்


பஞ்ச்க்ரோஷி யாத்ரா


சாரநாத் - சில தகவல்கள்


விருந்தினர்களுடன் ஒரு பயணம்


காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருந்த பயணிகளுடன் பேருந்துகளில் ப்ரயாக்ராஜ் சென்றது குறித்து சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவும் அந்தப் பயணம் குறித்த தகவல்களுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்.  ப்ரயாக்ராஜ் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே இருந்தாலும், இத்தனை பெரிய குழுவினை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்று பார்க்க வைத்து, நேரத்தினையும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் மிகவும் கடினம்.  அதனால் பிரதான இடங்களை மட்டுமே பார்த்து புறப்பட வேண்டியிருந்தது.  ப்ரயாக்ராஜ் நகரில் சங்கமத்தில் குளித்து Bபடே ஹனுமான் கோயில் மட்டும் பார்த்து விட்டு அங்கிருந்து பேருந்துகள் ஐந்தும் அயோத்யா ஜி நோக்கி பயணத்தினை தொடர்ந்தன.  எனது பேருந்தில் இருந்த பயணிகள் என்னை மீண்டும் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.  ப்ரயாக்ராஜ் நகரிலிருந்து அயோத்யா ஜி சுமார் 170 கிலோமீட்டர்.  அந்தத் தொலைவினை கடக்கும் பயணத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.  சாதாரணமாக எடுக்கும் நேரத்தினை விட குறைவாகவே நேரம் எடுத்தது என்றாலும் நாங்கள் சென்று சேர்ந்தபோது இரவு எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது.  



படம்: இணையத்திலிருந்து...

காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருந்த பயணிகள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை அயோத்யா/ ஃபைசாபாத் மாவட்ட அதிகாரிகள் செய்திருந்தார்கள்.  ஒரு அழகான கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.  புராண கதைகளை நடன நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சிறப்பாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். எனினும் நேரம் செல்லச் செல்ல ஓய்வு எடுக்கவேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் இருந்தது.  இரவு உணவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க, இரவு உணவை முடித்துக் கொண்டு கலையரங்கத்திலிருந்து புறப்பட்ட பேருந்துகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ஷானே அவத் சென்று சேர்ந்தோம்.  அனைவரும் அவரவர்களுக்கான அறைக்குச் செல்ல, எனக்காக ஒதுக்கப்பட்ட தனியறைக்கு நானும் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டேன்.  அடுத்த நாள் காலையில் எழுந்து விரைவாக புறப்பட வேண்டும்.  நாங்கள் அயோத்யா ஜி சென்று சேர்ந்தது டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி. இன்னும் ஒரு மாத காலமே அயோத்யா ஜியில் ராமர் கோயில் திறக்கப்பட இருந்தது என்பதை உங்களுக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன். 



படம்: இணையத்திலிருந்து...

காலை விரைவாக எழுந்திருந்து தயாராகிவிட்டேன்.  தங்குமிடத்தில் அறையை காலி செய்து கொண்டு லாபியில் காத்திருந்தோம். 200-க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட வேண்டுமே! அனைவரும் ஒரு வழியாக வந்து சேர, ஐந்து பேருந்துகளும் அயோத்யா ஜி ”ராம் லல்லா” என்று பாசத்துடன் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஸ்ரீராமனின் புதிய கோவில் வரை சென்று விட்டோம்.  அடுத்த மாதம் (ஜனவரி) தான் புதிய கோவில் திறப்பு விழா நடக்க இருந்தது என்பதால் ராம் லல்லாவின் விக்ரகம் Make Shift கொட்டகையில் தான் இருந்தது.  அனைவரும் தனி வரிசையில் நின்று பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு (எத்தனை சொல்லியும் ஒரு சிலர் Electronic Gadgets - Bluetooth, Headphone போன்றவற்றை கையில் வைத்திருந்தார்கள் - அவர்களால் கொஞ்சம் தாமதம் ஆனது!) உள்ளே சென்றோம்.  எங்களுக்காக நேரடியாக, வரிசைகளை மாற்றி விட்டு ராம் லல்லாவின் எதிரே கொண்டு நிறுத்தி விட்டார்கள்.  எங்கள் குழுவினர் அனைவருக்குமே சிறப்பான தரிசனம் கிடைத்தது.  என்ன ஒரே ஒரு குறை என்றால் அடர் பனி மூட்டத்தின் காரணமாக எங்களால் புதிய கோவில் நிர்மாணம் செய்ததை பார்க்க முடியவில்லை! பொதுவாக நாங்கள் சென்ற இடத்திலிருந்து கொஞ்சமேனும் புதிய கோவில் கட்டிடத்தினை பார்த்திருக்கலாம்! அடர் பனி காரணமாக அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. 



படம்: இணையத்திலிருந்து...


படம்: இணையத்திலிருந்து...

அனைவருக்கும் ராம் லல்லாவின் சர்க்கரை மிட்டாய் பிரசாதமும் கிடைத்தது.  அங்கிருந்து பொடி நடையாக ஹனுமான் Gக(d)டி கோவில் சென்றடைந்தோம்.  நாங்கள் சென்ற சமயத்தில் இந்தக் கோவிலிலும் நிறைய கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இங்கேயும் தனி வரிசையில் எங்கள் குழுவினரை அனுப்பி விட்டார்கள். மற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்க, எங்கள் குழுவினர் விரைவாக உள்ளே சென்று தரிசனம் முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். எங்களால் முடிந்தவரை விரைவாகச் சென்று ஹனுமனின் தரிசனம் கண்டோம்.  சிறப்பான தரிசனம் கிடைத்ததோடு, ஹனுமனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட லட்டு பிரசாதமும் எனக்குத் தனியாக தந்தார்கள்.  அதை குழுவில் இருந்த, என்னுடன் ஒரே பேருந்தில் பயணித்த மற்ற பயணிகளுடன் பகிர்ந்து கொண்டேன்.  இப்படி பிரசாதம் பகிர்ந்து உண்ணுவதில் மனதுக்கு நிம்மதியும் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  இரண்டு கோயில்களிலும் சிறப்பான தரிசனம் கிடைத்தபிறகு, தரிசனத்தினை ஏற்பாடு செய்திருந்த காவல்துறை/தனிப்படை நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளைச் சொன்னோம் - குறிப்பாக CRPF-இல் பணிபுரியும் தமிழ் நண்பர்கள் மிகச் சிறப்பாக எங்களை வழிநடத்திச் சென்றார்கள். 


ஒரு பெரிய குழுவினை வழிநடத்திச் செல்வதில் கொஞ்சம் நஞ்சமல்ல, நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. குழுவினரில் சிலர் அங்கே இங்கே சென்றுவிட்டால், கடைத்தெருக்களில் நின்று பொருட்களை பார்க்க ஆரம்பித்துவிட்டால், மொத்த திட்டமும் ஆட்டம் கண்டுவிடும். ஆனால் கடைகளைப் பார்க்காமலும் குழுவினரை அழைத்துச் செல்ல முடியாது. தமிழகத்திலிருந்து வந்திருக்கும் பயணிகள், நினைவுக்காக ஏதேனும் வாங்கிச் சென்றே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடும். அத்தனையும் சமாளித்து அவர்களை வழிநடத்தி, பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு கோயில் வளாகத்தினை விட்டு நகர வேண்டும். இத்தனை கஷ்டங்களுக்கு நடுவே, இன்னும் ஒரு கஷ்டமாக, கோயில் திறப்பு விழா ஏற்பாடுகளை கண்காணிக்க மாநிலத்தின் முதல்வர் வர இருந்தார் என்பதால் பாதுகாப்பு சோதனைகள் வேறு அதிகரித்து விட்டது. அவர் வருவதற்கு முன்னர், அந்த இடத்திலிருந்து நாங்கள் நகர்ந்து விடவேண்டும் - இல்லாவிட்டால் அவர் வந்து செல்லும் வரை காத்திருக்க நேரிடலாம் என்பதால் வேகவேகமாக அனைவரையும் அங்கிருந்து புறப்படச் செய்தார்கள். 


முதல் நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்த அதே இடத்தில் காலை உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.  சிறப்பான உணவு - IRCTC குழுவினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அனைவரும் உணவு உட்கொண்ட பிறகு, அந்த வளாகத்திலேயே சில தற்காலிக கடைகள் திறக்க வைத்து பயணிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடும் செய்திருந்தார்கள். தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கமத்திற்காக வந்திருந்த மக்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான நினைவுப் பரிசுகளை, பொருட்களை வாங்கிக் கொண்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம். இந்த ஏற்பாடுகளை செய்ததால் அங்கேயே அதிக நேரம் ஆகிவிட்டது.  அதன் பிறகு மதிய உணவுக்காக வேறு ஒரு இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த இடம் ஸ்வாமி நாராயண் மந்திர்.  அழகான கோவில் - ஆனாலும் மதிய உணவு நேரமாதலால் கோவில் மூடியே இருந்தது.  மதிய உணவை அங்கே வைத்து Buffet முறையில் அனைவருக்கும் கொடுத்தார்கள்.  பயணிகள் மட்டுமல்லாது, பாதுகாப்புக்காக எங்களுடன் வந்திருந்த காவலர்கள், மருத்துவ வசதிகளைத் தருவதற்காக வந்திருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் உண்டனர்.  இந்தப் பயணத்தில் பெரும்பாலான நேரம் ஆம்புலன்ஸ் ஒன்றும் கூடவே வந்தது. பயணிகள் சிலருக்கு அவசரத் தேவையாக இருந்த மருந்துகளை ஹிந்தியில் பேசி வாங்கித் தர முடிந்தது. 


ஒரு வழியாக மதிய உணவை முடித்துக் கொண்டு அயோத்யா மாவட்ட அலுவலர்களுக்கு நன்றி சொல்லி மீண்டும் வாரணாசி நோக்கிய பயணத்தினை தொடங்கினோம். மீண்டும் அதே போல காவல் துறையினர் முதல் வண்டியாகச் செல்ல மற்ற ஐந்து வண்டிகள் பின்தொடர்ந்தது.  ஐந்து வண்டிகளுக்குப் பின்னர் இன்னுமொரு காவல்துறை வண்டி! இப்படியாக வாரணாசி சென்று தமிழ் காசி சங்கமம் பயணிகள் அனைவரும், வாரணாசியில் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு நான் தங்கி இருந்த பனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா வந்து சேர்ந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்த ஒரு இளைஞர் - அதே பல்கலைக்கழகத்தில் சுற்றுலா குறித்த இளங்கலை படிப்பு படிக்கிறார் - இந்தத் தமிழ் சங்கமத்தில் உதவுவதோடு படிப்பின் ஒரு பகுதியாகவும் செயல்படுவதற்காக இணைத்திருந்தார்கள்.  அவரும் என்னுடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. நானும் அவரும் சேர்ந்தே பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பினோம்.  சுற்றுலாத் துறையில் படிப்பதற்கான ஆர்வம் குறித்து அவருடன் நிறைய பேசினேன்.  முடிந்தால் தனிப்பதிவாக பின்னர் எழுதுகிறேன்.

 

இந்த வாரணாசி பயணத்தில் கிடைத்த மேலும் பல அனுபவங்களை தொடர்ந்து எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

16 ஆகஸ்ட் 2024


14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. உங்கள் கூட பயணித்தவர்களுக்கு உங்கள் அனுபவங்கள் பயனானது போலவே எங்களுக்கும் எப்போதும் பயன் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. அயோத்தியாவில் நிறைய படங்கள் எதிர்பார்த்தேன். நீங்கள் சென்றிருந்தபோது தற்போதுள்ள பார இராமர் சிலை அமைந்திருந்திருக்காதே.

    பலமுறை அயோத்யாதரிசனம் வாய்த்திருக்கிறது. புதிய கோவிலில் அக்டோபரில்தான் வாய்க்கும்.

    குழுவை நடத்திச் செல்வது மிக்க் கடினம். பலரின் மனதில் காசு கொடுத்து வந்திருக்கிறோம், எங்களிஷ்டப்படி இருப்போம் என்ற மனநிலை அதிகம்.எனக்கு ஒரு தடவை அகமதாபாத் அக்‌ஷர்மாம் கோவிலில் குழுவை (45 பேர்) lead செய்து எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியில் வந்துவிடவேண்டும் என்ற வாய்ப்பு கொடுத்தபோது எனக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு எல்லோருக்கும் முன்னால் ஒருவர் வெளியில் சென்றுவிட, அவரைத் தேடி வளாகத்துக்குள்ளேயே அரைமணி நேரம் அல்லாடினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதீத குளிர் - பனிமூட்டம் - படங்கள் எடுக்க முடியவில்லை நெல்லைத் தமிழன்.

      அயோத்யா எனக்கு இரண்டு முறை செல்லும் வாய்ப்பு அமைந்தது. மீண்டும் செல்ல எப்போது வாய்ப்பு கிடைக்குமோ ராம் லல்லா அறிவார்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. வெங்கட்ஜி பயண ஏற்பாடுகளைச் செய்திருந்த மத்திய அரசின் ஏற்பாடுகளைப் பற்றி வாசித்து அசந்துவிட்டேன்! என்ன மாதிரியான ஏற்பாடுகள்! ஆம்புலன்ஸ் முதற்கொண்டு CRPF, IRCTC ஏற்பாடுகள் என்று அனைத்தும் வாவ்! போட வைத்தன. செம அருமையான ஏற்பாடு வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் கீதா ஜி. பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. என்னுடன் பயணித்த ஒரு இளைஞர் - அதே பல்கலைக்கழகத்தில் சுற்றுலா குறித்த இளங்கலை படிப்பு படிக்கிறார் - இந்தத் தமிழ் சங்கமத்தில் உதவுவதோடு படிப்பின் ஒரு பகுதியாகவும் செயல்படுவதற்காக இணைத்திருந்தார்கள்.

    அந்த இளைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! நம்ம ஊர் சுற்றுலா இன்னும் சிறப்பாக வேண்டும் ஒவ்வொரு முறை சுற்றுலா பற்றி நான் இணையத்தில் பல இடங்களைப் பற்றி வாசிக்கும் போதும் தற்போது மத்திய ஆட்சி அமைந்ததும் இதை முதல் கூட்டத்தில் முன் வைத்த சுதா மூர்த்தி அவர்கள் நினைவுக்கு வருகிறார். அவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யாருமே முன் வைக்காத இரு விஷயங்களை அவர் முன் வைத்தது ஆகச் சிறப்பு. மக்களவை உறுப்பினர்களாக வாக்களிப்பில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை விட இப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் சுதா மூர்த்தி அவர்கள்தான் என் அறிவிற்கு எட்டியவரை மிகச் சிறந்த இரு விஷயங்களை முன் வைத்தார் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலா குறித்த படிப்பு - பயனுள்ளதாக அமையும் என்றே தோன்றியது.

      சுதா மூர்த்தி - நல்லதைச் செய்ய வேண்டும். ஆனால் அவரையும் அரசியல் விளையாட்டில் இழுத்து விட்டார்கள் சில நாட்களாக! வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. உங்களது பயணம் மற்ற பயணிகளுக்கு பயனாக இருந்திருக்கும்.

    சுவாரஸ்யமான தகவல்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வாசகம் அருமை.
    பேருந்துதில் செல்லும் போது பயண அனுபவங்களை அனைவருக்கும் சொன்னது அருமை.
    படங்கள் அருமை.
    பனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயாவில் படிக்கும் மாணவர் நட்பு உங்களுக்கும், அவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....