திங்கள், 29 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர் - பகுதி பதினேழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - புதிய காசி விஸ்வநாத் மந்திர்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சிறிது வயிற்றுக்கும்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கால பைரவர் கோவில்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி விஸ்வநாதர் கோயில்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வரம் தரும் வாராஹி கோயில்



வாரணாசி நகரில் சுமார் ஒன்பது நாட்கள் இருக்கப் போகிறேன் என முகநூலில் எழுதிய போது அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் என சில புதிய கோயில்கள் பற்றிய தகவல் இணையத்திலிருந்தும் வேறு இடங்களிலிருந்தும் கிடைத்தது. நெய்வேலி நட்பான ஸ்ரீமதி ரவி முகநூல் மெஸன்ஜர் வழி ஒரு கோயில் குறித்த தகவல் அனுப்பி இருந்தார்.  அந்தக் கோயில் தான் மல்லிகார்ஜுன மகாதேவ் மந்திர் என்று அழைக்கப்படும் கோயில்.  ஒரு நாள் அங்கே சென்று வரலாம் என இணைய வழி தேடியபோது வழியும் கோயிலின் சிறப்புகளும் தெரிந்தது.  சரி என புறப்பட்டு விட்டேன்.  நான் தங்கியிருந்த BHU வளாகம் இருக்கும் லங்கா என்கிற இடத்திலிருந்து மல்லிகார்ஜுன மகாதேவ் மந்திர் இருக்கும் சிக்ரா (சிக்டா) என்ற பெயர் கொண்ட பகுதிக்கு பேட்டரி ரிக்‌ஷாவில் பத்து ரூபாய் கொடுத்து சென்று விட்டேன்.  வாரணாசி நகரில் இந்த ரிக்ஷாக்கள் நல்ல வசதி. இடமும் பெயரும் தெரிந்து, ஹிந்தியும் தெரிந்து விட்டால் இது போன்ற ஷேரிங் ரிக்ஷாக்களில் சுலபமாகச் சென்று வந்து விடலாம். இல்லை எனில் கொஞ்சம் கடினம் தான்.  








சிக்ரா சென்று சேர்ந்து கோயிலுக்கு சற்று அருகே ஒரு இடத்தில் ஓட்டுனரிடம் விசாரித்து இறங்கிக் கொண்டேன். சற்றே நடந்தால் மல்லிகார்ஜுன மகாதேவ் மந்திர் நுழைவாயில் வந்து விட்டது.  நுழைவாயிலில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகை ஸ்ரீ திரிபுராந்தகேஷ்வர் மகாதேவ் ஜி ஸ்ரீ மல்லிகார்ஜுன் மகாதேவ் மந்திர் என்று நமக்குத் தகவல் தெரிவிக்கிறது. அதனுள் நுழைந்து படிகள் மீது ஏற வேண்டும். பக்கவாட்டில் அழகிய ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள். இந்த கோயில் சற்று மேடான பகுதியில் இருக்கிறது - சிறு குன்றாக ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும்.  கோயிலுக்குச் செல்ல மொத்தம் 84 படிகள்! அந்தக் காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. வாரணாசி நகரில் இருக்கும் சிவன் கோயில்களில் உயரமான இடத்தில் இருக்கும் கோயில் இந்தக் கோயில் தான். 84 படிகள் ஏறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சுலபமாக ஏறிவிடலாம்.  படிகளும் சில இடங்களில் சிறிய சந்து போல இருக்கிறது.  கோயில் நோக்கிச் செல்லும் போது பக்கத்தில் இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் கீழே தெரிகிறது. ஒரு காலத்தில் இந்தக் கோயில் தவிர வேறு கட்டிடங்கள் இங்கே இருந்திருக்காது. இப்போது கோயில் பல கட்டிடங்களுக்கு நடுவே இருக்கிறது! 




கோயிலின் சிறப்பு என்ன:  நம் எல்லோருக்குமே பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் குறித்த சில தகவல்களேனும் தெரிந்திருக்கும். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு இடத்தில் இருக்கின்றன. எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமெனில் அந்தந்த இடங்களுக்கு நாம் பயணிக்க வேண்டியிருக்கும்.  ஆனால், மகாதேவர் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் நகரமாகவே அறியப்படும் காசி மாநகரில் வசிப்பவர்களுக்கு ஒரு வசதி - ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க விரும்பினால் காசி நகரிலேயே அவர்களால் இந்த பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்க முடியும். காசி மாநகரில் பன்னிரெண்டு இடங்களில் இந்த ஜோதிர்லிங்கங்களுக்கான கோவில்கள் இருக்கின்றன.  அவை என்ன, எங்கே இருக்கின்றது, போன்ற தகவல்களை வரும் பகுதி ஒன்றில் சொல்கிறேன். இப்போது, பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக, காசி நகரில் அமைந்து இருக்கும் மல்லிகார்ஜுன மகாதேவ் மந்திர் குறித்த தகவல்களைப் பார்க்கலாம். 



கோயிலை அடைய இருக்கும் 84 படிகள் நாம் ஏறுவதன் மூலம், நாம் 84 லட்சம் பிறவிகளிலிருந்து முக்தி பெறமுடியும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ராமாயண காலத்தில் இருந்த மஹரிஷி ஷ்ருங்கி அவர்களின் ஆசிரமம் இந்த இடத்தில் தான் இருந்தது என்றும் காலப் போக்கில் பல முனிவர்கள் இங்கே வந்து தியானம் செய்ததாகவும் சொல்கிறார்கள்.  ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்கம் போலவே இங்கேயும், அதே பெயரில் ஸ்ரீ மல்லிகார்ஜுன் மகாதேவ் ஜி ஸ்வயும்பு லிங்கமாக உருவானது என்றும் இங்கே கோவில் வளாகத்தில் இருக்கும் கிணற்றில் கிருஷ்ணா நதியின் நீர் வருகிறது என்றும், இங்கே தவம் கொண்டிருந்த ரிஷி முனிவர்கள் பாதாள கங்கையும் இங்கே வரவழைத்ததாகவும் நம்பிக்கை. இன்றைக்கும் கோயிலின் கீழே இருக்கும் சுரங்கப்பாதையில் பாதாள கங்கை ஓடிக் கொண்டிருப்பதாகவும், அந்தச் சுரங்கப் பாதை வழியே தினமும் காசி விஸ்வநாதர் இங்கே வந்து இரவில் உறங்கி காலையில் தனது ஆலயத்திற்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது. சுரங்கப்பாதை கால ஓட்டத்தில் மறைந்துவிட்டது என்றும் சாதாரண மானிடர்களால் பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள். 


கிருஷ்ணா மற்றும் பாதாள கங்கையின் நீர் எடுத்து தான் தினமும் இந்தக் கோயிலில் இருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறதாம்.  காசியில் இந்தக் கோவிலில் இருக்கும் மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கத்தை தரிசிப்பதன் மூலம், பக்தர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணியத்தை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. வாரணாசியில் அமைந்துள்ள மல்லிகார்ஜுன மகாதேவ் ஜி கோயிலில் சிவபெருமான் தவிர அன்னை காளி, ஹனுமான் ஜி மற்றும் விநாயகர் சன்னதிகளும் இருக்கின்றன.  இங்கே இருக்கும் காளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள் இங்கே வந்து காளி மாதாவை வேண்டிக்கொண்டு, வெள்ளி நாக்கு காணிக்கையாக செலுத்தினால் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை. அதனால் இன்றைக்கும் பலர் இங்கே வந்து வெள்ளி நாக்கு சமர்ப்பிக்கிறார்கள்.  தவிர திருமணம் தொடர்பான பிரச்சனைகள், தீராத வழக்குகள் என அனைத்தும் இந்த காளி அம்மனை வேண்டிக்கொண்டால் நீங்கும் என்று கூறப்படுகிறது. 


இந்தக் கோயில் காலை 6:00 மணி முதல் 11:30 மணி வரையும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். இருப்பினும், கோயிலில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கோயிலில் தரிசனம் மற்றும் வழிபாட்டு நேரமும் நீட்டிக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு அருகேயே ஷீத்லா மாதா கோவிலும் இருக்கிறது என்றாலும் நான் அங்கே செல்லவில்லை.  கோயில் வளாகத்தில் ஒரு முதியவர் அமர்ந்து இருந்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கோயில் குறித்த சிறப்புகளை சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரிடம் பேசியதற்கு கட்டணமாகவோ என்னவோ என்னிடம் காசு ஏதேனும் கொடுக்கலாமே என்று கேட்க நானும் முதியவராக இருக்கிறாரே என ஐம்பது ரூபாய் கொடுத்தேன்.  அடுத்த அவரது ரியாக்‌ஷன் - அந்த தொகை போதாது என்பது தான். இருப்பதிலேயே பெரிய நோட் - அதாவது ஐநூறு ரூபாய் வேண்டும் என்றார்! அதற்கு காரணமாக ”உடம்பு முடியல இப்பல்லாம், கோயிலில் தான் பல வருடங்களாக சேவை செய்யறேன், உன்ன மாதிரி யாராவது காசு கொடுத்ததான் உண்டு” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  சரி முதியவர் ஆயிற்றே என இன்னும் கொஞ்சம் சேர்த்து கொடுத்தேன். 



அலைபேசியில் படங்கள் எடுப்பதைப் பார்த்து, ”என்னையும் படம் பிடி” என்று கோரிக்கை வேறு வைத்தார்.  சரி என அவரையும் படம் பிடித்துக் கொண்டேன்.  ”முன்பெல்லாம் காசி விஸ்வநாதர் தினம் இங்கே வருவார், ஆனா இப்போதெல்லாம் வருவதில்லை - அந்தக் காலம் மாதிரியா இருக்கு ஊர்? எல்லாம் மாறிட்டே இருக்கே!” என்றும் குறைபட்டுக் கொண்டார்.  கிட்டத்தட்ட அறுபது வருடமாக இந்தக் கோயிலில் தான் இருக்கிறாராம். ”வேறு போக்கிடம் ஏதும் எனக்கில்லை, மல்லிகார்ஜுன மகாதேவை விட்டால் எனக்கு யார் இருக்கா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  எல்லா வடக்கர்கள் போல இவரும் வாயில் பான்/குட்கா குதப்பிக் கொண்டிருந்தார்! ”இரண்டு நாளா ஜுரம், நீ குடுத்த காசுல டாக்டர் கிட்ட போய் காமிச்சு மருந்து வாங்கிக்கிறேன்” என்றும் சொன்னார்! ”சரி உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னதோடு, ”இந்த பான்/குட்கா பயன்பாட்டை தவிர்க்கலாமே” என்று சொன்னதற்கு, ”பழகிப்போச்சு, சாகற வரைக்கும் உட முடியாது!” என்று அசால்டாக சொன்னார்! “உனக்கு இது தேவையா?” என எனக்கு நானே கேட்டுக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றேன்.

  


வெளியே வந்து காசி விஸ்வநாதர் கோவில் இருக்கும் பகுதிக்குச் செல்லும் போது பார்த்தால் எதிரே ஒரு கோயில் - நம் ஊர் போல கோபுரம் மட்டும் தெரிய, உள்ளே சென்று பார்க்கலாம் எனச் சென்றேன். அங்கே கிடைத்த வரவேற்பு வேறு மாதிரி இருந்தது.  அது ஏதோ தனியார் கோயிலாம்.  நகரத்தார் குடும்பத்திற்குச் சொந்தமானது என்றும் வெளி மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொன்னார் அங்கே இருந்தவர்.  ”சரி வந்தது வந்து விட்டீர்கள், இறைவனை தரிசித்து விட்டு விரைவில் செல்லுங்கள், சொந்தக்காரர்களுக்குத் தெரிந்தால் திட்டுவார்கள்” என்று சொல்ல, சில படிகள் ஏறி, தரிசனம் செய்து விட்டு உடனே வெளியேறி விட்டேன்.  இப்படியும் ஒரு அனுபவம்! பெரிய தோட்டம், ஓரத்தில் கோயில் என அழகாக இருந்தாலும் வெளிமனிதர்களுக்கு அனுமதி இல்லை என்பது சற்றே வருத்தமாகவே இருந்தது. பயணத்தில்  தொடர்ந்து கிடைத்த அனுபவங்கள் மற்றும் தகவல்களை வரும் பகுதிகளில் பார்க்கலாம். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

29 ஜூலை 2024


18 கருத்துகள்:

  1. சாமியையே விலைக்கு வாங்கி சொந்தமாக வைத்திருக்கிறார்கள் போல....  :))  மல்லிகார்ஜுன கார்கே..  மன்னிக்கவும் மல்லிகார்ஜுன மஹாதேவ் பற்றிய விவரங்கள் வழக்கமான புராணக்கதையாக இருந்தாலும்  அறிந்தேன்.  படிக்கட்டுகள், முதியவர் தவிர, அந்தக் கோவிலில் வேறேதும் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்குள் படங்கள் எடுக்க முடியவில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்... பழைமையான கோயில் தரிசனம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

    இந்தப் பகுதியைப் பற்றிப் படிக்கும்போது, ப்ரயாக்ராஜில் ஆனந்தபவனுக்கு எதிரில் இருக்கும் ஆசிரமங்களின் நினைவு வந்தது. கட்டிடங்களுக்குள் ஒடுங்கி இருக்கிறது அந்த புராண காலத்து ஆசிரமங்கள். எப்படித்தான் இடங்களை அபகரித்துக்கொள்கிறார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனந்த பவன் அருகே இருக்கும் ஆஸ்ரமங்கள் - சந்துக்குள் சென்று பார்க்க வேண்டியிருந்தது - அத்தனை ஆக்கிரமிப்புகள்! வேதனை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. வாசகம் மிக அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  5. மல்லிகார்ஜுன மஹாதேவர் கோயில்/ ஜோதிர்லிங்கம் தகவல்கள் அறிந்து கொண்டோம். கோயிலும் கோயிலைச் சார்ந்த நம்பிக்கைகளும் தான் எத்தனை எத்தனை! ஒவ்வொரு கோயிலுக்கும் இப்படியான நம்பிக்கைகள்.

    ஆச்சரியம் இப்படித் தனியார் கோயில் அமைத்து அவங்களுக்கு மட்டும் என்று இருப்பது வருத்தமான விஷயம்.

    முதியவர் ..ம்ம்ம் பல இடங்களில் இப்படித்தான் ஏதேனும் ஒன்றை வாயில் போட்டு குதப்புகிறார்கள் இல்லைனா புகைக்கிறார்கள் பைசா கேட்டே பிழைக்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. கோவிலும் சாமியும் மட்டும்தான் அனைவருக்கும் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்! விவரமாக மகாதேவ் கோவிலைப் பற்றி சொன்னது அருமை.
    விஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  8. பதிவு அருமை.
    காசி பற்றிய விரிவான செய்திகள்.
    முதியவர்கள் நிறைய பேர் சிறு வயதிலேயே குடும்ப பொறுப்பை துறந்து காசிக்கு வந்தவர்களாக இருப்பார்கள்.

    பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களையும் காசியில் ஒரு வாரமாவது தங்கினால் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....