புதன், 24 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி விஸ்வநாதர் கோயில் - பகுதி பதினைந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - புதிய காசி விஸ்வநாத் மந்திர்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சிறிது வயிற்றுக்கும்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கால பைரவர் கோவில்



சென்ற பகுதியில் காசி நகரத்தின் காவல் அதிபதி, காசி அரசாங்கத்தின் சேனாதிபதி என்று சொல்லப்படும் காலபைரவர் கோயில் குறித்து பார்த்தோம் என்றால் இந்தப் பகுதியில் காசியின் ராஜாவான காசி விஸ்வநாதர் குடிகொண்டிருக்கும் கோயில் குறித்த தகவல்களையும் இந்தப் பயணத்தில் அங்கே சென்ற போது கிடைத்த அனுபவங்களையும் இந்தப் பகுதியில் நாம் பார்க்கலாம். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இதற்கு முன்னரும் சென்று வந்திருக்கிறேன் என்பதோடு, கோயில் குறித்த தகவல்கள் பலவற்றை எனது முந்தைய பதிவுகளில், பயணத் தொடராக எழுதும்போது எழுதியும் இருக்கிறேன்.  காசி நகரம் முதலான சில இடங்கள் குறித்த தொடர்களுக்கான சுட்டிகள் கீழே தந்திருக்கிறேன். அந்தத் தொடர்களை உங்களில் யாரேனும் படிக்காமல் விட்டிருந்தால் கீழே உள்ள சுட்டி வழி அனைத்து பகுதிகளையும் படிக்கலாம். 


காசி - அலஹாபாத்


மஹாகும்பமேளா


நதிக்கரை நகரங்கள்


மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழியாக அந்தந்த தொடர்களின் பகுதிகள் அனைத்தும் படிக்க முடியும். விருப்பமிருந்தால் அந்தப் பதிவுகளையும் படிக்கலாம்.  முதல் இரண்டு தொடர்கள், அமேசான் தளத்தில் மின்னூல்களாகவும் வெளிவந்திருக்கிறது. 



காசி விஸ்வநாதர் கோயில் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது.  பல நூறு ஆண்டுகளைக் கடந்து அந்த இடத்தில் கோயில் இருக்கிறது. அந்நிய படையெடுப்புகள், இயற்கை போன்றவற்றால் அழிவுகள் ஏற்பட்டது என்பதும் ஒரு தகவல் தான். இன்றைக்கு மீண்டும் நிறைய மாற்றங்கள் - வளர்ச்சிப் பணிகள், பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சிறு சிறு சந்துகள் வழி (தற்போது கால பைரவர் சன்னதி எப்படி இருக்கிறதோ அப்படியே இருந்தது காசி விஸ்வநாதர் கோயிலும்) செல்லும் படியாக இருந்தது காசி விஸ்வநாதர் கோயில்.  ஆனால் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பது வரவேற்கத்தக்க விஷயம்.  தொடர்ந்து மாற்றங்களும், லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்கான வசதிகளும் அதிகரித்து வருகிறது என்பது நல்லதொரு முன்னேற்றம்.  தற்போது கோயிலுக்கு நான்கு பிரதான வாயில்கள்.  மிகப்பெரிய அலங்கார நுழைவாயில், பக்தர்கள் வரிசையாகச் செல்ல ஏற்பாடுகள், பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் காலணிகளை பத்திரமாக வைத்துச் செல்ல ஏற்பாடுகள் என அனைத்தும் நன்றாக இருக்கிறது. 



நான்கு வாயில்களில் ஒரு வாயில் நேரடியாக கங்கை நதியில் குளித்து விட்டு படிகள் வழி ஏறினால் கோயிலுக்குள் நுழையும் விதமாக இருக்கிறது. பிரதான வாயிலாக இருப்பது நான்காம் வாசல்.  நான் இப்போதெல்லாம் நான்காம் வாயில் வழியாகவே கோயிலுக்குச் சென்று வருகிறேன். நல்ல வசதியாக இருக்கிறது. தஸாஸ்வமேத படித்துறையிலிருந்து வெளியே வந்தால் இருக்கும் சாலை சந்திப்பு - Gகடோலியா Chசௌக் என்ற பெயர் - அங்கிருந்து சற்று தூரம் நடந்தால் நான்காம் நுழைவாயிலை அடைந்து விடலாம். வழியெங்கும் கடைகள், உணவகங்கள் என கண்களையும் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருக்கின்றன. அதையெல்லாம் கவனிக்காமல் நேரடியாக நான்காம் நுழைவாயிலை நோக்கி நடந்துவிடுவோம் - ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் தரிசனம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்! நுழைவாயிலுக்கு அருகிலேயே ஆலயத்தின் அலுவலகம் உண்டு. அங்கேயோ அல்லது நுழைவாயில் அருகே இருக்கும் Counter-இலோ, விருப்பமிருப்பின் கட்டண தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டு (ஒருவருக்கு 300 ரூபாய்) வாங்கிக் கொள்ளலாம். இப்படியான தரிசனத்திற்கு ”சுகம் தர்ஷன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்! இணையத்தின் மூலமும் இந்த நுழைவுச் சீட்டு வாங்க முடியும்.



வி.ஐ.பி. தரிசனம் செய்வோர்களும் இந்த தனி நுழைவாயில் (நான்காம் நுழைவாயிலின் ஒரு பகுதி) வழியே தான் உள்ளே செல்கிறார்கள். சாதாரண நாட்களில் இரண்டு இடங்களிலும் (நான்காம் நுழைவாயிலில் இருக்கும் இரண்டு வழிகளிலும்) ஒரே அளவு தான் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. கட்டணமின்றி கூட தரிசனம் செய்து கொள்ளலாம்.  எனது இந்தப் பயணத்தில் சில வி.ஐ.பி. மனிதர்களை கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால் நானும் தனி வழியே கூட்டத்தில் நிற்காமல் நேரடியாக கர்ப்பக்கிரகம் அருகே சென்று விட்டேன்.  சில நிமிடங்கள் நின்ற பிறகு கர்ப்பக்கிரகம் உள்ளேயும் செல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.  சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் எங்கள் கைகளால் செய்யவும் முடிந்தது என்பதில் பெருமகிழ்ச்சி.  சில நிமிடங்கள் மட்டுமே அங்கே இருக்க முடிந்தது என்றாலும் எங்கள் கைகளால் அபிஷேகம் செய்து, இறைவனையும் தொட்டு வணங்க முடிந்தது என்பதில் மனதில் உற்சாகமும் அமைதியும் ஒரு சேர உண்டானது. பொதுவாக இந்த மாதிரி வசதிகளை நான் விரும்புவதில்லை என்றாலும் எனக்கு இட்ட பணி அது போல இருந்ததால் வேறு வழியில்லை.  



கோயில் வளாகத்தில் மொத்தம் நான்கு நுழைவாயில் வழியாகவும் உள்ளே வர முடியும் என்பதால் மொத்தம் நான்கு வரிசை - கர்ப்பக்கிரகத்தின் நான்கு பக்கங்களிலும் கதவுகள் இருப்பதால் நான்கு வரிசையும் அவரவர் வரும் பக்கத்திலிருந்து இறைவனைக் கண்டு பிரார்த்தனை செய்ய முடியும்.  வடக்கில் எல்லா கோயில்களிலும் சிவபெருமானுக்கு தங்கள் கைகளாலேயே அபிஷேக நீரை அர்ப்பணிக்க முடியும் என்பது ஒரு வசதி. கர்ப்பக்கிரகம் உள்ளே அனைவரும் சென்று வர அனுமதித்தால் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாது என்பதால் பக்தர்கள் கொண்டு வரும் அபிஷேக நீர்/பால் போன்றவற்றை இறைவனுக்குச் சேர்க்க ஒரு வசதி செய்திருக்கிறார்கள்.  நான்கு புறத்திலிருந்தும் வெளியேயிருந்து சரிவான ஒரு அமைப்பு - அதில் பக்தர்கள் கொண்டு வரும் திரவியங்களை சமர்பித்தால் நேரடியாக சிவபெருமான் மீது விழும் படி செய்திருக்கிறார்கள்.  நேரடியாக தமது கைகளாலேயே இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து கொள்ள முடிந்தால் அதுவும் மகிழ்ச்சி தரும் விஷயம் தானே. 



கோயில் வளாகத்திற்குள்ளேயே பிள்ளையார், அனுமன், அன்னபூரணி, காசி விசாலாக்ஷி, லக்ஷ்மிநாரயணர் போன்ற தனி சன்னதிகளும் உண்டு. ஒவ்வொரு சன்னதியிலும் நமக்குத் தெரிந்த விதத்தில் பிரார்த்தனை செய்து கொள்ள முடியும். பிரதான சன்னதியான காசி விஸ்வநாதர் சன்னதியில் காசி விஸ்வநாதரை மட்டும் தரிசித்துக் கொண்டு வெளியே வந்துவிடாமல் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வர வேண்டியது அவசியம். எல்லா இடங்களிலும் பிரார்த்தனை செய்து கொண்டு வளாகத்தில் இருக்கும் ஏதேனும் காலி இடத்தில் கொஞ்சம் அமர்ந்து கொள்ளலாம் - அதிக அளவு கூட்டம் இல்லாது இருந்தால்! கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் இப்படி அமர்ந்து கொள்வது சாத்தியமில்லை.  இதற்கு முந்தைய பயணங்களிலும் கூட சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து பிரார்த்தனை செய்து கொள்ள முடிந்தது. இந்த முறை அதிக நேரம் அமர்ந்து கொள்ள முடியவில்லை - ஒன்று அதிக பக்தர்கள் கூட்டம், தவிர என்னுடன் இரண்டு முக்கிய புள்ளிகள் வந்திருந்தார்கள். அவர்களை தரிசனம் முடித்து அனுப்பி வைக்கும்வரை என் இஷ்டப்படி நடந்து கொள்ள முடியாது! 



என்னுடன் வந்திருந்த மேலும் இரண்டு பேர் வந்திருந்தார்கள் - அவர்களில் ஒருவர் முதியவர் - கோயில் குறித்த பல விஷயங்களை அறிந்த விற்பன்னர்.  காசி விஸ்வநாதரை தரிசித்த பிறகு கோயில் கர்ப்பக்கிரகம் அருகேயிருக்கும் தாழ்வாரத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.  கோவிலுக்கு வந்தால் சிறிது நேரமேனும் கீழே உட்கார்ந்து இருந்த பிறகு அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று சொல்லி அதற்கான காரணமும் சொல்லிக் கொண்டிருந்தார்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது தீய எண்ணங்களை எல்லாம் காசி விஸ்வநாதரை வேண்டி விட்டுவிட, அந்த தீய எண்ணங்களுக்கான தேவதைகள் அங்கே உலா வந்து கொண்டிருப்பார்களாம். அவசர அவசரமாக இறைவனை தரிசித்து வெளியே செல்லும் பக்தர்களை பிடித்துக் கொள்வார்களாம் - இவன் தான் நமக்கு சரியான ஆள் என்று.  அப்படி இல்லாமல் கோயிலில் சிறிது நேரமேனும் அமர்ந்து விட்டால், “இந்த ஆள் நமக்கு சரிப்பட்டு வர மாட்டான்” என்று விட்டு விலகிவிடுவார்களாம்! அதனால் என்ன ஆனாலும் கோயில் வளாகத்தில் சில நிமிடங்களேனும் அமர்ந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதானே, நல்லது வேண்டி வந்து விட்டு, கோயிலிலிருந்து வெளியே வரும் போது தீய எண்ணங்களுடன் எதற்கு வெளியே வர வேண்டும்!



இப்படி நிறைய விஷயங்களை அவரிடம் பேசினால் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.  ஆனால் அவருக்கு அதிக நேரம் இல்லை. காசி தமிழ் சங்கமத்தில் அவர் பேச வேண்டியிருந்த காரணத்தால் அதிக நேரம் அவருடன் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை. கோயில் வாசல் வரை வந்து அவரை அனுப்பிய பிறகும் கோயில் வளாகத்தில் இன்னும் சில நிமிடங்கள் இருக்க வேண்டியிருந்தது. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. கோயிலுக்கு வரும்போது உங்களிடம் அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச், Air Buds, பென் ட்ரைவ் என எந்த விதமான பொருட்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். அதனால் அனைத்தையும் பாதுகாப்பு அறையில் வைத்துவிடுவது நல்லது. இதைத் தவிர, சீப்பு, பேனா போன்றவை கூட இங்கே அனுமதிப்பது இல்லை என்பதை அங்கே செல்லும் போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வரிசையில் நின்று பாதுகாப்புச் சோதனை செய்யும் இடம் வரை சென்று விட்டு இதற்காக மீண்டும் வெளியே வந்துவிட்டால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும்.  



கோயில் குறித்த நிறைய தகவல்கள், கோயிலை நிர்வகிக்கும் Shri Kashi Vishwanath Temple Trust, கோயிலின் சிறப்புகள், கோயில் நடத்தும் தங்கும் விடுதிகள், கோயில் வரலாறு, கோயிலில் நடக்கும் சிறப்பு விழாக்கள், கோயிலுக்கு எப்படி பணம் (Donation) தருவது என நிறைய விஷயங்கள் சொல்வதற்கு உண்டு. அனைத்தையும் இங்கே சொல்ல வேண்டாம் என்பதால் அந்த தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக கோயிலின் இணைய தளத்தினை கீழே தந்திருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் அந்தத் தளத்தில் சென்று படித்துத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தளத்தின் வழி காசி விஸ்வநாதரை நேரடி ஒளிபரப்பிலும் பார்க்க முடியும் என்பது கூடுதல் வசதி. என்னால் அங்கே சென்று பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமில்லாமல் நேரடி ஒளிபரப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பூஜைகளை/காட்சிகளை காண முடியும் என்பதும் ஒரு விதத்தில் நல்ல வசதி தானே! 


Shri Kashi Vishwanath Official Web Portal


கோயில் குறித்த தகவல்கள், எனது அனுபவங்கள் போன்றவற்றை இங்கே தந்ததில் - சிலருக்கேனும் அவை பயன்பட்டால் - எனக்கும் மகிழ்ச்சி. மேலும் தொடர்ந்து காசி/வாரணாசி குறித்த தகவல்களை வரும் பகுதிகளில் பார்க்கலாம். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

24 ஜூலை 2024


14 கருத்துகள்:

  1. இப்படியான முன்னேற்றங்கள் காணுவதற்கு முன் 2019 ல் இங்கு சென்று வந்தேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு முறை செல்லும்போதும் மாற்றங்கள் இருக்கின்றன என்பது தான் உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பல தகவல்களும் முன்பு நீங்கள் சொல்லியிருந்த நினைவு இருக்கிறது. புகைப்படங்கள் கூடவே. வாசிக்கும் போது நினைவு வந்தது. பெரியவர் ஒருவர் உங்களுடன் வந்து பேசியவை இப்பதிவில்.

    பக்தர்களுக்கு இப்படியான வசதிகள் நல்லதே. ஒவ்வொன்றும் அனுபவத்தில் அறிந்துதானே அவங்களும் மேம்படுத்துவாங்க..எனவே மாற்றங்கள் வந்து கொண்டே இருக்க வாய்ப்பு இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. வாசகம், ஆமாம் தானே என்று எண்ண வைத்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  4. வாசகம் அருமை.
    கோவில்படங்கள், விவரங்கள் எல்லாம் மிக அருமை.
    அனைவருக்கும் உதவும்.
    சுகம் தர்ஷன்” முன்பு கிடையாது. பணம் கட்டினாலும் வரிசை இருக்கும் தானே?
    காசி விஸ்வநாதர் தரிசனம் இன்று கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      சுகம் தர்ஷன் கட்டணம் கட்டினாலும் வரிசை உண்டு - சற்று குறைவாக இருக்கலாம் - அவ்வளவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. பதிவில் நிறைய தகவல்கள் சிறப்பு ஜி.

    இன்றைய வாசகம் அருமை, உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட வாசகம் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  6. காசி விஸ்வநாதர் ஆலயத்தைப் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. எப்போதேனும் போகும் வாய்ப்பு கிடைத்தால் இத்தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. பக்தர்களுக்கான பல வசதிகளும் செய்திருப்பது சிறப்பு. நான்குவாசல்களாலும் சென்றுவருவதால் கூட்டத்தை சமாளிக்க முடியும்.

    காசி யாத்திரை செல்பவர்களுக்கு பல நல்ல தகவல்களையும் தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....