வெள்ளி, 26 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வரம் தரும் வாராஹி கோயில் - பகுதி பதினாறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - புதிய காசி விஸ்வநாத் மந்திர்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சிறிது வயிற்றுக்கும்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கால பைரவர் கோவில்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி விஸ்வநாதர் கோயில்


வாரணாசி நகருக்குச் செல்லும் போது பார்க்க வேண்டிய கோயில்கள் வரிசையில் நிச்சயமாக இருக்க வேண்டிய கோயில் ஒன்று - வாராஹி தேவி கோயில்.  பொதுவாக சுற்றுலாவாக வரும் பக்தர்கள் இந்த வாராஹி அம்மன் கோயில் குறித்து அறிந்திருப்பதில்லை. ஆந்திர தேசத்தைச் சேர்ந்த பயணிகள் மட்டுமே இங்கே அதிக அளவில் வருகிறார்கள்.  நம் ஊர் பயணிகள் அதிகம் செல்வதில்லை என்றே தெரிகிறது. பொதுவாக பயணம் வரும்போது நிறைய இடங்களை நாம் பார்க்க நினைத்தாலும் முடிவதில்லை. ஒரு குழுவாக வரும்போது பயண ஏற்பாடு செய்தவர் இருக்கும் நேரத்தைப் பொறுத்து எங்கே எங்கே செல்ல வேண்டும் என்பதை பயணிகளுக்கு சொல்வார்.  அதனால் பிரதானமாக பார்க்க வேண்டிய கோயில்கள் என ஒரு சிலவற்றை மட்டுமே சொல்லி விட்டு, மற்ற கோயில்களை விட்டுவிடுவது வழக்கம். அப்படி விட்டு விடும் கோயில்களில் ஒன்று தான் வாராஹி அம்மன் கோயில்.  இந்தக் கோயிலை தரிசிக்க முடியாமல் போவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு - கோயில் திறந்திருக்கும் நேரம்! பக்தர்கள் தரிசனத்திற்கு காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும் என்பதால் இந்தக் கோயிலை பலர் பார்ப்பது இல்லை. 


எங்கே இருக்கிறது கோயில்?  கங்கையின் படித்துறைகளில் ஒன்றான மன் மந்திர் Gகாட் அருகே இந்த கோயில் அமைந்திருக்கிறது.  காசி விஸ்வநாத் ஆலயத்தின் முதலாம் நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்து பல சந்துகளைக் கடந்தால் நம்மால் இக்கோயிலைச் சென்றடைய முடியும். ஆனால் இங்கே செல்வதற்கு நாம் பலரிடம் கேட்க வேண்டியிருக்கும் - சரியான வழிகாட்டி பலகைகள் இல்லாததால் உள்ளூர் மக்களிடம் கேட்டுக் கேட்டு மட்டுமே கோயில் வரை நம்மால் சென்று சேர முடியும். கடந்த சில ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் வாரணாசி நகரில் வந்திருந்தாலும் மாற வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது என்பதற்கு இந்த விஷயம் ஒரு எடுத்துக்காட்டு.  இது போன்ற பிரபலமான இடங்களுக்கு சரியான வழிகாட்டி பலகைகள் இல்லாதது/இருந்தாலும் அவை சரி வர பராமரிக்கப்படாதது ஒரு பெரிய குறையாக இருக்கிறது.  வாரணாசி நகரின் காவல் பொதுவாக கால பைரவரின் வசம் இருந்தாலும், நகரின் இரவு நேரக் காவல் வாராஹி அம்மன் வசம் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை இங்கே உண்டு. அப்படியான சிறப்பு வாய்ந்த கோவிலுக்குச் செல்லும் வழி சரியாக வழிகாட்டி பலகைகள் இல்லாமல் இருப்பது ஒரு குறைதான். 


வாராஹி அம்மன் கோயிலின் சிறப்பு குறித்து இதற்கு முன் வெளியிட்ட ”நதிக்கரை நகரங்கள்” தொடரின் ஒரு பகுதியாக எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவினை வாசிக்க விரும்பினால் இங்கே வாசிக்கலாம். அந்தப் பதிவில் சொல்லாத சில விஷயங்களும் இங்கே பார்க்கலாம் வாருங்கள்.  


காசி அற்புதமான நகரம்.  இங்கே கேட்டது எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.  நமக்குத் தெரிய வேண்டியது, எங்கே எதனைக் கேட்க வேண்டும் என்பது தான்! ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதை, கௌரவம், பணம் என பல விஷயங்கள் தேவையாக இருக்கிறது - அந்த தேவை இல்லாதவர் யார் இருக்கிறார்கள். வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கிறது, நோய் நொடி படுத்துகிறது என்று அதற்கான தீர்வைத் தேடி இது நாள் வரை எங்கெங்கோ அலைந்து, எங்குமே கிடைக்காத விஷயங்கள் காசி நகரில் குடி கொண்டிருக்கும் வாராஹி தேவியின் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து, அவளிடத்தில் சரணடைந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை. வாராஹி தேவி இந்த இடத்தில் உக்ர ரூபத்தில் இருப்பதால் கோவிலில் அதிக நேரம் பக்தர்களால் இருக்க முடியாது என்றும் நேரடியாக தேவியை தரிசித்தால் அவளது பார்வையின் உக்ரத்தினை நம்மால் தாங்க முடியாது என்றும் சொல்கிறார்கள். அதனால் ஒரு சிறு துளை வழியே தான் நாம் தேவியை தரிசிக்க முடியும். 


ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு கோயில் திறக்கப்பட்டு கோயிலில் பூஜை செய்பவர்கள் மட்டுமே கீழே பாதாளத்தில் உள்ள கர்ப்பக்கிரகத்தின் உள்ளே சென்று தினப்படி பூஜைகள் செய்து முடித்த பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள்.  மேலே உள்ள துவாரத்தின் வழியே வாராஹி தேவியின் பாதகமலங்களையும் பக்கவாட்டில் திருமுகத்தையும் மட்டுமே பக்தர்களால் பார்க்க முடியும். வாராஹி தேவியின் மூர்த்தி ஸ்வயம்பு ரூபம் என்றும் இந்தக் கோயில், எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் இல்லை என்றும் இங்கே உள்ள பூஜாரிகளால் சொல்லப்படுகிறது.  கோயில் சக்தி பீடங்களில் ஒன்று என்பதும் மாதா சதி தேவியின் பற்கள் இங்கே காசி நகரில் விழுந்த இடத்தில் தான் இந்த வாராஹி தேவியின் கோயில் இருக்கிறது என்பதையும் முந்தைய பதிவில் (நதிக்கரை நகரங்கள் தொடரில்) சொல்லி இருப்பது நினைவில் இருக்கலாம். மா வாராஹி தேவி காசி நகரின் பாதுகாப்பினை க்ஷேத்ரபாலிகா ரூபத்தில் தன்னிடத்தில் வைத்திருக்கிறார் என்பதும் ஒரு நம்பிக்கை. 


காசி நகரத்தினை அழிவிலிருந்து காப்பதும், பேய், பிசாசு போன்ற துர் ஆவிகளிடமிருந்தும் தேவி வாராஹி என்றும் துர்கா தேவி அசுரர்களுடன் போர் புரிந்த சமயத்தில் வாராஹி தேவியே அவரது சேனாதிபதியாக, படைத்தளபதியாக இருந்தார் என்றும் சில கதைகள் உண்டு. வாராஹி தேவி உட்பட 64 யோகினிகள் காசி நகருக்கு வந்து காசி நகரின் அழகில் மயங்கி இங்கேயே தங்கி விட்டதாகவும் காசி காண்டத்தில் தகவல்கள் இருப்பதாக இந்தக் கோயில் குறித்த தகவல்கள் சொல்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஜனவரி/ஃபிப்ரவரி மாதத்தில் சஷ்டி திதியில் விசேஷ அலங்காரங்களும், பூஜைகளும் வெகு சிறப்பாக வாராஹி தேவிக்கு நடைபெறுகிறது. தவிர நவராத்திரி சமயத்தில் சப்தமி அன்று வாராஹி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் சமயத்தில் தேவியை தரிசிப்பது சாலச் சிறந்தது என்றும் அதிக பயன் தரக்கூடியது என்றும் உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு தினமும் கோயிலின் கர்ப்பக்கிரகம்/வளாகம் பூஜைக்குப் பிறகு பூட்டி விடுகிறார்கள். அதன் பிறகு நக்ஷத்திர தேவதைகளும் கோயிலுக்கு வந்து வாராஹி தேவிக்கு பூஜைகள் செய்வதாகவும் ஒரு ஐதீகம் இருக்கிறதாம். 


மாலை வேளைகளில் கோயில் வளாகம் மூடியிருக்கும் சமயத்தில் யக்ஷ, யக்ஷிணிகள், பூதம், ப்ரேதம், பைசாசம் போன்றவையும் கோயில் வளாகத்திற்கு வந்து வாராஹி தேவியை தரிசனம் செய்து செல்லும் என்றும் அவற்றைப் பார்த்துவிட்டால் மனிதர்களுக்கு தீங்கு நேரிடும் என்றும் அதனாலேயே கோயில் அந்த நேரத்தில் திறப்பதில்லை என்றும் சொல்வதுண்டு. தப்பித்தவறி கோயில் வளாகத்தில் யாரேனும் தங்கிவிட்டால் அவர்ளை வாராஹி தேவியைத் தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர்களுக்கு துர்மரணம் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் இப்படியான நம்பிக்கைகள் இருக்கின்றன. அதை நாம் கேள்விகள் கேட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. நம்பிக்கை இருப்பவர்கள் அதை நம்பிக்கையோடு தொடரட்டும் - அப்படி இல்லை எனில் தள்ளி போகட்டும். இந்த விஷயங்களில் கேள்வி கேட்பது எந்த விதத்திலும் சரியில்லை. 


கோயிலில் காலை வேளைகளில் செய்யப்படும் பூஜை, புஷ்பாஞ்சலி அர்ச்சனை, ஆரத்தி ஆகியவற்றை காண நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் காண்பவர் அனைவரையும் உணர்வு பூர்வமாக உற்சாகம் கொள்ள வைக்கும் என்றும் சொல்கிறார்கள்.  பூஜை சமயத்தில் நான்கு வேதங்கள் பயன்பாட்டுடன் பூஜைகள் நடக்கின்றன.  தென்னிந்தியாவிலிருந்து, அதிலும் குறிப்பாக ஆந்திரா/தெலுங்கானா பிரதேசங்களிலிருந்து வாராஹி தேவியை தரிசிக்க வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனது இந்தப் பயணத்தின் போதும் நிறைய தெலுங்கு மொழி பேசும் மக்களை கோயிலுக்குச் செல்லும் வழியிலும் கோயிலிலும் பார்க்க முடிந்தது. உள்ளூர்வாசிகளைப் போலவே இவர்களும் வாராஹி தேவி மீது அதீத பக்தியை வைத்திருக்கிறார்கள்.  பகவான் விஷ்ணுவின் வராக அவதாரத்திற்கான அவதார சக்தியாக வாராஹி தேவி இருப்பதாகவும் நம்பிக்கை உண்டு. 


இப்படியான சிறப்பு மிக்க வாராஹி தேவி கோவிலுக்கு, வாரணாசி பயணத்தில் நிச்சயம் சென்று வாருங்கள்.  அனைவருக்கும் வாராஹி தேவியின் பூரண அருள் கிடைக்க எனது பிரார்த்தனைகள். மேலும் தொடர்ந்து காசி/வாரணாசி குறித்த தகவல்களை வரும் பகுதிகளில் பார்க்கலாம். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 ஜூலை 2024


16 கருத்துகள்:

  1. ஏற்கெனவே உங்கள் பதிவிலும், துளசி டீச்சர் பதிவிலும் படித்திருக்கிறேன்.  பைசாச பூத கணங்கள் உலாவும் என்னும் நம்பிக்கை பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து விரும்பத்தக்கது.  'லைக்' செய்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் அருமை.
    முன்பு காசி போன போது நாங்களும் வராஹி அம்மன் கோவில் போகவில்லை.
    இப்போது வராஹி அம்மன் வழிபாடு மிக சிறப்பாக நடக்கிறது எல்லா இடங்களிலும். இனி காசி போகிறவர்கள் போய் பார்ப்பார்கள்.
    ஆஷாட நவராத்திரி ஜூலை 6 முதல் 15 வரை மிக சிறப்பாக நடந்தது.
    என் தங்கை பூஜை செய்தேன் என்றாள்.

    பைரவரும், வராஹியும் தீயதை அழித்து நல்லதை நிலைநாட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உங்கள் அனுபவங்களையும் சொன்னதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. இன்றைய பதிவைப் படித்தபோது துளசி டீச்சர் படங்களுடன் எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. நான் இந்தக் கோவிலை தரிசனம் செய்ததில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பயணத்தில் முடிந்தால் இந்தக் கோவிலுக்கும் சென்று வாருங்கள் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. விஜி வெங்கடேஷ்26 ஜூலை, 2024 அன்று 8:29 AM

    வாராஹி அம்மன் பற்றிய செய்திகள் நன்று.வாராஹி அம்பாள் அம்சம்தானே? நாங்கள் போக முடியாவிட்டாலும் காசின்யாத்திரையை விளக்கமாகச் சொல்லி எங்களையும் அதை ரசிக்க பார்க்க வைப்பதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி விஜி.

      நீக்கு
  5. வராஹி தேவி பற்றி முன்பும் சொல்லியிருக்கீங்களோ வெங்கட்ஜி என்று கேட்க நினைத்து வாசித்துக் கொண்டே வரும் போது நதிக்கரை நகரங்கள் சொல்லிருக்கீங்க.

    கோயில் குறித்த தகவல்கள் வாசித்த நினைவு வந்தது இப்ப வாசிக்கும் போதும். (இதை நான் ஏன் அடிக்கடி சொல்லிக் கொள்கிறேன் என்றால் நம் நினைவுத்திறன் எவ்வளவு தூரம் இருக்கு ஒழுங்கா இருக்கான்னு பார்த்துக் கொள்ளதான் self checking!!! )

    துளசி அக்கா எழுதினப்பவும் அங்கயும் அவங்க சொல்லியிருந்தாங்கன்னு நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் ஒரு பதிவிலும் எழுதி இருந்தேன். இப்போது இன்னும் சில தகவல்கள்...

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. காசியில் பல கோயிலுக்கு சென்று வந்தோம். ஆனால் வராஹி கோயில் பார்த்த நினைவு இல்லை. உங்கள் தகவல்கள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி. நலம்தானே... சென்னை வாழ்க்கை எப்படி இருக்கிறது?

      நீக்கு
  7. வராஹி அம்மன் கோயில் சிறப்பு பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். புதுமையாகவும் இருக்கிறது. காலை மட்டும் கோயில் திறக்கப்படுவதால் அதுவும் சிறிது நேரம் என்பதால் ஆட்கள் அதிகம் வரன்வைல்லையாக இருக்கலாம்.

    பூதகணங்கள் என்றெல்லாம் சொல்லும் போது நீங்கள் சொல்லியிருப்பது போல மக்கள் பயந்து கோயிலுக்கு வராமல் இருக்கலாம்தான். இப்படி பல ஆச்சரியமான புதுமையான தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பதிவின் மூலம். மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. காசி வராஹி அம்மன் தரிசன முக்கியத்துவம் பற்றி விரிவாக தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....