புதன், 19 ஜூன், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - கங்கைக்கரை படகோட்டிகள் - பகுதி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட உப்புமாவும் கெட்ச் அப்பும்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை



சென்ற பகுதியில் காசி தமிழ் சங்கமத்திற்கு வந்த, மொழி தெரியாமல் அவதிப்பட்ட சிலர் குறித்து பார்த்தோம்.  மாலை நேரத்தில் அந்த நமோ Gகாட் என்று அழைக்கப்படும் கங்கை நதியின் படித்துறையில் கிடைத்த அனுபவங்கள், கரையோர விஷயங்கள், கங்கையில் சென்ற ஒரு படகு உலா என சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.  கங்கைக் கரை - எத்தனை எத்தனை காலமாக கங்கை நதி நம் பாரத மண்ணில் தொடர்ந்து எந்த வித அலுப்பில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள். தொடர்ந்து பயணிக்கும் அவளுக்கு தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்! கங்கையும் அதன் நீரும் தனது பாதையில் எத்தனை எத்தனை மனிதர்களை இந்த நாள் வரையில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பது பிரமிக்க வைக்கும் விஷயம்.  கங்கையில், கங்கைக் கரையில் இருக்கும் எண்ணற்ற படகுகளே இதற்கு சாட்சி! நமோ Gகாட் பகுதியில் எண்ணிலடங்கா படகுகள் நீரின் ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல் அசைந்து கொண்டே இருப்பது ஒருவித அழகு!





படகோட்டிகள் தங்களது படகுகளை கரையில் இருக்கும் கொப்பில் கட்டி வைத்து விட்டு படகு சவாரி செய்யும் நபர்களுக்கான தேடலில் இருப்பது தொடர்ந்து இங்கே அரங்கேறும் ஒரு காட்சி. அதிலும் மூத்த சில படகோட்டிகளைப் பார்க்கும்போதே அலுப்பில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கங்கையைப் போலவே இன்னும் அலுப்பில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்களே என்று தோன்றும். அது தான் அவர்களது வயிற்றுப் பிழைப்பு என்றாலும் சாகும் வரை வேலை பார்த்துக் கொண்டேயிருக்கும் அவர்களது உழைப்பைப் பார்த்து பிரமிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறை கங்கைக் கரைக்கு வரும்போதும் இப்படியான பல படகோட்டிகளை காண்கிறேன். என்னிடம் படகுச் சவாரி செய்ய வரும்படியான அவர்களது அழைப்பினை ஒரு வித புன்னகையுடன் மறுக்கும் போதும் மனதுக்குள் ஒருவித வலி உண்டாகும். எல்லா படகோட்டிகளுடனும் சவாரி செய்வது என்பது முடியாத காரியம் அல்லவா! அதுவும் செலவு வைக்கும் விஷயம் என்பதால் இப்படிச் செய்ய முடியாது! ஒரு முறை பயணிக்கலாம் - திரும்பத் திரும்ப படகில் பயணிக்க முடியாது அல்லவா!



நமோ Gகாட் பகுதியில் இப்படி ஒரு மூத்த படகோட்டி தனியனாக உலா வந்து கொண்டிருந்த போது என்னிடம் வந்து படகு சவாரி செய்ய வாருங்கள் என்று கேட்டபோது வருத்தத்துடன் தான் மறுப்பைத் தெரிவிக்க வேண்டியிருந்தது.  அவரைப் பார்க்கும்போதே அன்றைக்கு அவருக்கு சவாரி கிடைக்காதது போலவே ஒரு உணர்வு.  நான் மறுத்த பிறகு வேறு சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார்.  அவரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  பல படகுகள் சில தரகர்கள் மூலம் இயங்கினாலும் ஒரு சிலர் தனியாக படகோட்டியாக, தங்களது சொந்த படகுகளை வைத்துக் கொண்டு இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த தரகர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள், படகோட்டிகள் குறைவான தொகையை பெறுகிறார்கள் என்பது நிதர்சனம்.  பல முறை இங்கே பயணிக்கும் போது நான் கண்ட நிதர்சனம் இது. தரகர்கள் ஆயிரக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு உழைக்கும் படகோட்டிக்கு சில நூறுகள் மட்டும் தருவார்கள் என்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். 



படகோட்டிகள் தவிர இங்கே பார்த்து, பார்த்து வேதனை அடைந்த ஒரு விஷயம் கங்கைக் கரைக்கு வரும் சக மனிதர்கள் செய்யும் செயல்கள்.  கங்கையின் கரையில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் - அத்தனையும் சக மனிதர்கள் வீசியது என்று நினைக்கும் போதே மனதில் வேதனை.  என்னதான் மாநில/மத்திய அரசாங்கமும் தொடர்ந்து கங்கையினை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருந்தாலும், இங்கே வரும் பயணிகளும், சுற்றுலாவாசிகளும் தங்களது செயல்களாலும் கங்கையை புனிதமாக வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வதே இல்லை. அதற்கு சாட்சி - கங்கைக் கரையில் மிதக்கும் பலவித கழிவுகள்.  பல வருடங்களாக காசிக்குச் சென்று வரும் எனக்கு அங்கே இருந்த நிலையில் நடந்திருக்கும் நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும், இன்னமும் சுத்தம் தேவை என்பதும், அதற்கு சக மனிதர்களின் பங்கும் அவசியம் என்பதும் தெரிந்தே இருக்கிறது.  எத்தனை சொன்னாலும் திருந்தாதவர்களை என்ன செய்வது?


கங்கைக் கரையில் மிதக்கும் CNG Filling Station:



கங்கை நதியில் துடுப்பு கொண்டு இயக்கப்படும் படகுகள் பல இருந்தாலும், கூடவே இயந்திரப் படகுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பல வருடங்களாக பெட்ரோல் அல்லது டீசல் கொண்டு இயக்கப்படும் இயந்திரங்களால் படகுகளை இயக்கிக் கொண்டிருந்தார்கள்.  இந்த இயந்திரங்கள் வெளியிடும் நச்சுக்காற்று அதிகம் என்பதோடு சுற்றுச் சூழலை பாதிக்கக்கூடியதும் ஆகும்.  இதற்கு மாற்றாக கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து கங்கைக் கரையில் வாரணாசி நகராட்சியும் மஹாரத்னா நிறுவனமான GAIL India Limited-உம் சேர்ந்து ஒரு மிதக்கும் CNG Filling Station நிறுவியிருக்கிறார்கள்.  நகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சுமார் 890 டீசல்/பெட்ரோல் இயந்திர படகுகளில் 735 படகுகளை CNG மூலம் இயங்கும் விதமாக மாற்றி இருக்கிறார்கள்.  இந்தப் படகுகளுக்குத் தேவையான CNG நமோ Gகாட்  மற்றும் சந்த்(th) ரவி(dh)தாஸ் Gகாட் ஆகிய இரண்டு படித்துறைகளிலும் தற்போது கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் கங்கைக் கரையில் டீசல் மூலம் உண்டான மாசின் அளவு கணிசமாக குறைந்திருக்கிறது. தவிர படகோட்டிகளுக்கான செலவும் குறைந்திருக்கிறது என்பதை அங்கே இருக்கும் படகோட்டிகள் சிலரிடம் பேசிய போது தெரிந்து கொள்ள முடிந்தது. 



படகோட்டிகள் பலருக்கு வாழ்வாதாரம் தரும் கங்கை நதியையும் அதன் கரையோரங்களையும் சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  தொடர்ந்து கங்கை நதியை அசுத்தம் செய்வது மனிதகுலத்திற்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது! உணர்ந்து கொள்வது கட்டாயமும் கூட! இல்லையெனில் இதுவரை இப்படி பல நீர் நிலைகளை நாம் இழந்து விட்டோமோ அப்படி, கங்கை உட்பட பல நீர் நிலைகளை இழக்க வேண்டிய காலம் வந்தாலும் வரலாம்! நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்தை எப்படி நாம் பாதுகாத்து வைத்துக் கொள்கிறோமோ அது போல இயற்கை அன்னை வழங்கிய எண்ணிலடங்கா நீர்நிலைகள், மலைகள் என அனைத்தையும் பாதுகாத்து நமது அடுத்த சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வோம்.  வரும் பகுதியில் இன்னும் சில விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்! அது வரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே! தொடர்ந்து பயணிப்போம்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

19 ஜூன் 2024


16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான விவரங்கள். 

    நாங்கள் படகில் செல்லும்போதும் ஏஜென்ட்டிடம்தான் பணம் கொடுத்தோம்.  இறங்கும்போது படகோட்டிகள் வழியில் நின்று கையேந்தினார்கள்.  'அவர்களுக்கு சும்மா 10, இருபது வேண்டுமானால் கொடுங்கள்.  ஆனால் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை' என்றார் எங்கள் ஏஜென்ட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      ஏஜெண்ட்கள் மட்டுமே இங்கே பிழைக்க முடியும் என்பது வேதனையான உண்மை.

      நீக்கு
  2. கங்கைகரையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சட்டம் போட்டு தான் தடுக்க வேண்டும் போல . அசுத்தம் செய்பவர்களுக்கு தண்டனை உண்டு என்றால் பயப்படுவார்கள் என்று நினைக்கிறேன். படகோட்டியின் நிலை வருத்தம் அளிக்கிறது.
    மாசடைந்த கங்கை படம் பார்க்க கஷ்டமாக இருக்கிறது,
    முதன் முதலில் காசி போன போது படியில் உள்ள குப்பைகளை அப்படியே ஆற்றில் தள்ளுவதைப் பார்த்து வருத்தப்பட்டேன், இப்போதும் அப்படியான மனநிலைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டம் போட்டாலும் இங்கே சட்டங்கள் மதிக்கப்படுவதில்லை என்பதும் சிந்திக்க வைக்கிறது. இங்கே நிறைய மாற்றங்கள் - குறிப்பாக மனிதர்களின் மனங்களில் மாற்றங்கள் தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. கங்கைக் கரையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக வலிமையான சட்டம் வர வேண்டும் இல்லையென்றால் நம் மக்களுக்கு புத்தியில் உரைக்கப் போவதில்லை.

    கங்கை பல இடங்களில் அழுக்கடைந்து இருப்பது மனதிற்கு வேதனை. படகோட்டி களுக்கும் அரசு கட்டண நிர்ணயம் வைக்கலாம் இல்லையா? அதாவது அதாவது பயணிகளுக்கும் படகோடிகளுக்கும் உதவும் வகையில், பேருந்து கட்டணம் ரயில் கட்டணம் எல்லாம் நிர்ணயிப்பது போன்று படகிற் கும் வைக்கலாம் இல்லையா? னந்தா பாறைக்கு போவதற்கு படகு கட்டணம் இருப்பது போன்று, சுற்றுலா தலங்களில் ஏரிகளில் படகு சவாரி செய்வதற்கு கட்டணம் இருப்பது போன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலிமையான சட்டமும் வேண்டும், அதை பாகுபாடின்றி நிறைவேற்றும் மனோ தைரியமும் வேண்டும் கீதா ஜி.

      அரசு நிர்ணயித்த கட்டணங்களுடன் சில பெரிய படகுகள் இயங்குகின்றன. அது குறித்த தகவல்களுடன் அடுத்த பதிவு வரும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. நிறைய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    சுத்தமாக வைத்துக்கொள்வது அரசின் கடமை மட்டுமல்ல! மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      இரண்டு பக்கங்களிலும் கடமை இருக்கிறது - அதனை மக்களும் உணர்ந்து கொண்டால் நல்லது தான்.

      நீக்கு
  5. இன்று சென்னையில்..நாளை கருத்திடறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி நெல்லைத்தமிழன். இரவு பயணத்திலேயே கருத்துக்களை பகிர்ந்து விட்டீர்கள் போல!

      நீக்கு
  6. கங்கைக் கரையில் ஏஜெண்டுகள்தாம் படகுப் போக்குவரத்தின் பணத்தை கன்ட்ரொல் செய்கிறார்கள் என்பதை நான் தங்கியிருந்த நாலாவது நாளில்தான் கண்டுபிடித்தேன். அதற்குள் மூன்றுமுறை அக்கரைக்கு படகில் போய் குளித்தோம் (அதில் ஒரு நாள் தர்ப்பணம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஏஜெண்டுகள் தான் அங்கே! அப்படியான ஏஜெண்டுகள் அரசிடம் குத்தகைக்கு இந்த வேலைகளை மொத்தமாக எடுத்துக் கொண்டு படகோட்டிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துக் கொண்டு படகோட்டிகளால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை பலமுறை கண்டிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  7. நீர்நிலைக்குள் உடுத்திக்கொண்ட பழைய துணியைப் போடணும்னு எவன் சொன்னான்னு தெரியலை. அது எந்த அளவுக்கு ந்தியை மாசுபடுத்துதுன்னு புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க.

    அக்கரையில் குளித்தால் தண்ணீரிலிருந்து பழைய துணி காலில் மாட்டுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீர்நிலைக்குள் உடுத்திக்கொண்ட பழைய துணியைப் போடணும்னு எவன் சொன்னான்னு தெரியலை.// அதே கேள்வி தான் எனக்கும்! அங்கே டன் கணக்கில் பழைய துணிகள் குவிந்து விடுகின்றன என்பது வேதனையான நிதர்சனம். பார்க்கும்போதே வேதனை தான் மனதில் மிஞ்சும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  8. ஆனாலும் வாரணாசியில் மோடி அரசு நிறைய மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது கண்கூடு! அவை குறித்தும் வரும் பகுதிகளில் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....