சனி, 15 ஜூன், 2024

காஃபி வித் கிட்டு - 189 - இடைவெளி - மாமா - வைத்யநாதன் - நடைமேடையில்… - தாத்தா - Break Free - விழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : இடைவெளி


இப்போதெல்லாம் இந்தப் பக்கத்தில் நான் எழுதுவது குறைந்து விட்டது. நிறைய இடைவெளி வந்து விடுகிறது.  எழுதுவதற்கான விஷயங்களும், தகவல்களும் இருந்தாலும் அடிக்கடி அலுப்பு வந்து விடுகிறது. எழுதுவதில் விருப்பமே இருப்பதில்லை. ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளி வந்தாலும் அது தொடர்ந்து பெரிய இடைவெளி வந்து விடுகிறது. தற்போதும் பாருங்களேன் - 31 மார்ச் 2024 அன்று தான் ஒரு நிழற்பட உலா பதிவினை பகிர்ந்து கொண்டேன் - அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள், 14 நாட்கள் எனது பகிர்வு ஒன்றுமே எழுதவில்லை.  அடிக்கடி இது போன்ற அலுப்பு தான். இங்கே மட்டுமல்ல, முகநூலிலும் கூட எதுவும் எழுதுவதில்லை, படிப்பதுமில்லை. ஏதோ ஒரு வித அலுப்பு, வெறுப்பு என்றே போகிறது.  இப்படியான நிலைக்கு எந்த வித தனிப்பட்ட காரணமும் இல்லை என்பதும் இங்கே சொல்ல வேண்டிய விஷயம் தான்.  ”என்னவோ போடா மாதவா…” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு, இதோ இன்றைக்கு ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்களைச் சந்திக்க வந்து விட்டேன்!


******


இந்த வாரத்தின் சந்தேகம் : மாமா


சமீபத்தில் அலைபேசியில் ஒரு அழைப்பு...... 


"கிட்டு மாமாவா?" 


கிட்டு தான் பேசுறேன் சொல்லுங்க.


”நான் xxxxx பேசறேன். சித்தி எப்படி இருக்கா?” என்றது எதிர்முனை குரல். 


அவர் சித்தி எனக் கேட்டது எனது பெரியம்மாவைப் பற்றி.  அப்படியென்றால், எதிர்முனையில் உள்ள, என்னை விட வயதில் மூத்த, குரலின் சொந்தக்காரருக்கு நான் எப்படி மாமா ஆகமுடியும்? :( 


******


பழைய நினைப்புடா பேராண்டி : பைஜ்னாத் [அ] வைத்யநாதன்!


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பைஜ்னாத் [அ] வைத்யநாதன்! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


Dhauladhar Zoo பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்றோம். அந்த இடம் ஒரு புராதனமான சிவன் கோவில்.  [B]பைஜ்னாத் மந்திர் என அழைக்கப்படும் அக்கோவில் Dhauladhar Zoo-விலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  மிருகக் காட்சி சாலையில் இருந்த மிருகங்களைப் பார்த்து விட்டு, அவை சிறையில் அடைபட்டிருக்கும் நிலை பற்றிய எண்ணங்களுடனே பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் கண்ட அருமையான காட்சிகள் சிலவற்றை கண் பார்த்தாலும் மனம் இன்னும் அந்த மிருகங்களையே நினைத்துக் கொண்டிருந்தது. 


அவற்றுக்கு ஏன் இந்நிலை என்ற எண்ணத்துடனேயே கோவிலை சென்றடைந்தோம். கோவில் வாசலிலேயே ஒரு பெரியவர் தள்ளாத வயதிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நமது ஊர் போல, வடக்கில் இருக்கும் கோவில்களில் பிரசாதங்கள் இருப்பதில்லை. சர்க்கரை மிட்டாய்கள், உலர் பழங்கள் போன்றவை தான் பெரும்பாலும் ஆண்டவனுக்கு படைப்பார்கள். எந்த இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதையே ஆண்டவனுக்குப் படைப்பது தானே நல்லது.  அந்த பெரியவரும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை மிட்டாய் பிரசாதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.


பெரும்பாலும் நான் கோவிலுக்குச் செல்லும் போது எந்த விதமான பிரசாதமோ, அர்ச்சனை தட்டுகளோ வாங்குவதில்லை.  என்னுடன் வருபவர்கள் வாங்கி அர்ச்சனை செய்வது மட்டும் தான். ஏனோ இந்தப் பெரியவரிடம் வாங்க வேண்டும் எனத் தோன்றவே ஒரு சர்க்கரை மிட்டாய் பை ஒன்றை பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.  அவருக்கு விற்பனை ஆன மகிழ்ச்சி, எனக்கு ஏதோ ஒரு பெரியவருக்கு உதவி செய்த திருப்தி. 


முழு தகவல்களும் படிக்க, மேலே உள்ள சுட்டி வழி பதிவினைப் படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் அனுபவம் : நடைமேடையில்…



இரண்டு மாதங்களுக்கு மேலாக திருச்சியில் இருந்த பிறகு இந்த வாரம் தான் தில்லி திரும்பினேன். இந்த முறை தமிழகம் வந்ததும், தில்லி திரும்பியதும் இரயில் மார்க்கத்தில் தான். கடந்த சில வருடங்களாக விமானப் பயணத்தினையே அதிகம் பயன்படுத்தி வந்தேன். ஏனோ இந்த முறை இரயில் பயணிக்கத் தோன்றியது. ஒரு இரயிலுக்கும் அடுத்த இரயிலுக்குமான இடையில் உள்ள நேரத்தினைப் போக்க, பொதுவாக நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று விடுவது வழக்கம். இந்த முறை அப்படி இல்லாமல் நடைமேடையிலேயே காத்திருந்தேன்.  தில்லிக்கான இரயில் (GT Express) தற்போது தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதாலும், அங்கே Cloak Room இல்லாத காரணத்தினாலும், உடைமைகளுடன் எதற்காக வெயில் நேரத்தில் அலைய வேண்டும் என அப்படியே தாம்பரம் இரயில் நிலையத்தின் ஐந்தாம் நடைமேடையில் தங்கிவிட்டேன். எனக்கென்று தனியாக ஒரு நீள பலகை! காலை நீட்டி அமர்ந்தும், படுத்துக் கொண்டும் அப்படியே நேரத்தினைக் கடத்தினேன்! அதுவும் சுகமாகவே இருந்தது! கிடைத்த அனுபவங்களும் நன்றாகவே இருந்தது! முடிந்தால் சுவையான சில அனுபவங்களை தனியே எழுதுகிறேன்! 


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை:  தாத்தா


சொல்வனம் தளத்திலிருந்து இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக சா. கா. பாரதிராஜா அவர்கள் எழுதிய கவிதை ஒன்று - மனதைத் தொடும் விதமாக…


தாத்தா



கொளுத்தும் வெய்யிலில்

வியர்வை நீரை

வழித்தெடுத்து

பூமியில் சிந்தி

கிளறும் தாத்தாவிற்கு

இந்த பூமிதான்

தாய்


களைப்பைப் போக்க

அதன் மடியிலேயே

படுத்துறங்குவார்


அசந்துறங்கும் தாத்தாவிற்கு

குழந்தைகள் போல்

தென்றலை வீசும்

தென்னங்கீற்றுகள்


தாய்ப்பால் போல

நீரைச் சுரந்து

தாகம் தணித்து

நெஞ்சை நனைக்கும்

கிணற்றில்

சூரியனும் படுத்துக் கிடக்கும்

தாத்தாவைப் போல


தினம் தினம்

வளரும் கன்றுகளை

அண்ணாந்துப் பார்த்து

அக மகிழ்வார்

தாயைப் போல

தாத்தா!


வளர்ந்தாலும்

எப்போதும்

தனது குழந்தையென

தாத்தாவின் காலடிகளை

நெஞ்சில் சுமக்கிறாள்

பூமித்தாய்


திடீரென

மாண்டு போனார்

தாத்தா!


வளர்ந்து

காய்க்கத் தொடங்கிய

மரத்தில்

சில கனிகள்

உதிர்ந்து விழுகின்றன


தாத்தாவிற்கு

கனிகள் தருவதாக

அசைந்து நெகிழ்கிறது

மரம்


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - Break Free


ஏழு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று - இன்றைக்கும் இதைப் பார்த்தாலும் மனதில் ஒரு உற்சாகம்.  உங்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள் - எப்போது அங்கே இருந்து வெளியேறுவோம் என்று நினைப்பீர்கள் அல்லவா? அப்படியான ஒரு நிகழ்வு தான் இந்த விளம்பரம். எனக்குப் பிடித்தது - உங்களுக்கும் பிடிக்கலாம்! பாருங்களேன்!

மேலே உள்ள காணொளி வழி பார்க்க முடியவில்லை எனில், கீழேயுள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


Adidas – Break Free (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் : விழு


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் ஒன்று உங்கள் பார்வைக்கு!


விழு...

விழுந்து எழு...

அப்போதுதான்

நீ கீழே விழக்

காத்திருந்தது யார்...

உன்னைத் தூக்கி விட

கை கொடுப்பது யார்...

என்பது

தெரிய வரும்.


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

15-06-2024


23 கருத்துகள்:

  1. காபி வித் கிட்டு ரசித்தேன்.

    நாம் தாழும்போதுதான் நண்பர்களை அடையாளம் காண இயலும்.

    எங்க ஊர் பக்கம் உள்ள தாம்பரம் ஸ்டேஷன். 87-90கிளல் தினமும் சென்றிருக்கிறேன். இப்போ இன்னும் பெரிய ஸ்டேஷனாக ஆனாலும் வசதிகள் வரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாம்பரம் - வசதிகள் அதிகப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும் வசதிகள் இன்னும் வர வேண்டியது அவசியம் தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. என்னுடைய மாமியார் இன்றும் எனது நண்பர்களை 'மாமா' என்றுதான் அழைப்பார்.  அவர்கள் என்னை ஒரு வியப்புடன் பார்த்து   இப்போது அவர்களுக்கும் பழகி விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் திருமணம் நடந்துவிட்டாலே மாமா தான்! :) உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. மக்களை பார்த்துக் கொண்டிருப்பது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு.  நிறைய விஷயமும் கிடைக்கும்.  அதுசரி, சும்மா இருந்த நேரம், ஏதாவது ஒரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்திருக்கலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் படித்துக் கொண்டிருக்கலாமே - லாம்! ஆனால் புத்தகம் எதுவும் எடுத்து வரவில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கவிதை ரசித்தேன். வாசகம் நன்றாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை மற்றும் வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. எழுதுவதற்கு அலுப்பு ஏற்பட காரணம் வலையுலகம் முன்பு போல பரபரப்பாக இல்லாததும் ஒன்று.

    எனக்கு மூத்த சகோதரர்களை விட வயதில் குறைவானவர் எனது தாய்மாமா.

    கவிதை அருமை
    தங்களது இரயில் பயண அனுபவங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரபரப்பில்லாத வலையுலகம் - உண்மை தான். முன்பு எழுதிய பலரும் இன்று எழுதுவதில்லை. சிலர் முகநூல், ட்விட்டர் என்று தாவிவிட்டார்கள். அது ஒரு கனாக்காலமாக இருந்தது உண்மை தான் கில்லர்ஜி.

      கவிதை, மற்ற இற்றைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வாசகம் மிக அருமை ஜி.

    எனக்கும் இந்தச் சோர்வு ஏற்பட்டிருக்கிறது வெங்கட்ஜி, ஏற்படவும் செய்கிறது.

    நானும் எனக்குக் காரணம் எதுவும் இல்லை என்று சொன்னாலும் மறைமுகமான காரணம் எனக்கு இருக்கிறது உள் மனதில் ஆனால் யதார்த்தத்தை ஏற்கும் பக்குவத்தை நான் பழக்கிக் கொண்டு இருக்கிறேன். வேறு வழி இல்லை...

    வயதில் சிறியவர்களையும் கூட மாமி என்று அழைப்பது போல மாமா என்றழைக்கும் பழக்கம் இருக்கிறதுதான் வெங்கட்ஜி.

    பெரும்பாலும் நான் கோவிலுக்குச் செல்லும் போது எந்த விதமான பிரசாதமோ, அர்ச்சனை தட்டுகளோ வாங்குவதில்லை. //

    மீ டூ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோர்வு - உண்மை தான் கீதா ஜி. மனதில் பல குழப்பங்களும் உண்டு - வெளியில் சொல்ல முடியாத குழப்பங்கள். எதார்த்தத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகம் வர வேண்டும்.

      தங்களது அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  7. பழைய நினைப்புடா - பைஜ்யநாத் என்பதைப் பார்த்ததுமே நான் வாசித்த நினைவு இருக்கிறது. பார்க்கிறேன் அங்கு சென்று. அதானே பார்த்தேன் கருத்து இருக்கிறது. பெரும்பாலும் ஆழ்ந்து வாசித்தவை எனக்கு மறப்பதில்லை. அந்த ஆறும், கோயிலும், வெளியில் சிற்பங்கள், வீடும் நினைவு இருந்தது.... அதுவும் மலைகள் சூழ் கோயில் என்பதும் மலைகளின் அடியில் பெரிய வீடும், ஆறும் அதை அசை போட்டுக் கொண்டே சென்று பார்த்தேன். அதே....இப்பவும் அந்த ஆற்றின் அழகை ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவினை மீண்டும் படித்து ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. கவிதையை ரசித்தேன்.

    அடிடாஸ் விளம்பரம் மிகவும் ரசித்தேன் அதன் இசையையும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை, விளம்பரம், விளம்பரத்தில் வந்த இசை என அனைத்தும் ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. கவிதை "தாத்தாவுக்கு கனிதர அசையும் மரங்கள்" நெஞ்சை தொட்டது. எங்கள் நண்பர் ஒருவர் கூறுவார் ' நான் பெற்ற பிள்ளைகள் வெளிநாட்டில் , வளர்த்த (தென்னம்) பிள்ளைகள் காய் தந்து என்னுடன்" என்பார்.

    வாசகம் பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  10. பதிவு அருமை. வெங்கட் பதிவு போடுங்கள் என்றேன். முகநூலில் உங்கள் பதிவு படித்தேன்.
    வாசகம் அருமை. சில நேரம் எழுத பல விஷயங்கள் இருந்தாலும் அலுப்பு ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த இரண்டு மாதம் முழுமையாக உங்கள் குடும்பத்தினருடன் பொழுது போய் இருக்கும். மீண்டும் தனிமை டெல்லி வாழ்க்கை. மாறுதலுக்கு வலைத்தளத்தில் எழுதுவது மகிழ்ச்சி தரும்.

    வெயில் நேரத்தில் அலையாமல் ரயில் நிலையத்தில் தங்கியதில் வருவோர், போவோரை பார்த்த அனுபவங்கள் நிறைய கிடைத்து இருக்கும்.
    பழைய பதிவை படிக்க வேண்டும்.


    சொல்வனம் கவிதையும் படமும் அருமை. வய்து ஆக ஆக நம் உடல் சருகு போல மாறவேண்டும், இலை உதிருவது போல நம் மரணம் இருக்க வேண்டும் என்பார்கள்.
    தாத்தாவுக்கு கனி தரும் மரம் கற்பனை அருமை.

    காணொளி அருமை. விழு கவிதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. //அப்படியென்றால், எதிர்முனையில் உள்ள, என்னை விட வயதில் மூத்த, குரலின் சொந்தக்காரருக்கு நான் எப்படி மாமா ஆகமுடியும்?// பலர் என்னையும் நேரிலும் அப்படி அழைக்கும்போது கொஞ்சம் நொந்துதான் போய்விடுவேன். இதைவிட என் 25வது வயதில் என் அலுவலக மேனேஜரின் பையன் என்னை அங்கிள் என்று அழைத்தபோது (முதன் முதலில் ஒருவர் என்னை அப்படி அழைத்தது..அந்தப் பையன் 6வது படித்துக்கொண்டிருந்தான்) கொஞ்சம் திடுக் என்று இருந்தது. ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் வளாகத்தில், 65-75 வயதுடையவர்கள், மார்வாரி/ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் அல்லாத, தமிழர்கள் மற்றும் பிராமணர்கள் ஒரு வாட்சப் க்ரூப் வைத்திருக்கிறார்கள். இங்க வந்த புதிதில் என்னையும் சேர்கிறீர்களா என்றார்கள். நான், ரொம்ப சின்னவன், அதனால என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்களின் வழக்கமான பதிவு மகிழ்வை தருகிறது.

    வாசகம் அருமை. நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களை விரும்பி படிக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி. காத்திருக்கிறோம்.

    அந்தக் காலத்தில், புதிதாக திருமணமான (திருமணமாகி விடவே காத்திருப்பார்கள் போலும்.:)) ) பெண்களைக் அவர்களை விட கொஞ்சம் (ஒரிரு) வயதில் சின்னவர்கள் கூட மாமி என்றுதான் அழைப்பார்கள். இப்போது நாகரீகங்கள் மாறி விட்டதில் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கலாம். தெரியவில்லை. உங்களின் உறவு அப்படி அழைத்ததில் தவறில்லை. சித்தியின் பையன் அவரை விட நீங்கள் வயதில் சின்னவராக இருந்தாலும் மாமா முறைதானே.. . ஹா ஹா ஹா.அதனால் முறை வைத்து அழைத்துள்ளார் போலும்...!

    பழைய பதிவுக்குச் சென்று படிக்கிறேன். தாத்தா கவிதை அருமை. ரசித்த வாசகமும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. தாத்தா கவிதை மனதை மிகவும் தொட்டது. விளம்பரம் அருமை. கவிதையைப் போன்ற விளம்பரம்.

    வாசகம் மிக யதார்த்தம்.

    பழைய பதிவும் வாசித்தேன். அன்று வாசித்த நினைவு இப்போது பார்த்த போது வந்தது. எல்லாமே அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....