வியாழன், 27 ஜூன், 2024

கதம்பம் - டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா மைலார்ட் - எலுமிச்சை சாதம் - பிறந்த நாள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கங்கைக்கரை படித்துறைகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா மைலார்ட் - 17 ஜூன் 2024:


திருமணமான புதிதில் கொதிக்கும் சாம்பாரை அடுப்பை விட்டு இறக்கி வைக்கும் போது இடுக்கியின் பிடிமானம் தப்பிப் போக கொட்டி விட்டேன்..🙂 அப்போது மாமனார் மாமியார் வேறு டெல்லிக்கு வந்திருந்தார்கள்! எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை!! 


பயத்துடன் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் என் மாமியார்!  'கை கால்ல எதுவும் கொட்டிண்ட்டயா?'  எங்கள கூப்பிடக் கூடாதா? சத்தமே போடலையே? என்றார்! இல்ல பயம்!!  என்றேன்..🙂 என்ன பயம்! என்ன பொண்ணுடா இவ!! கைலயோ கால்லயோ பட்டிருந்தா! என்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்..🙂


சில வருடங்கள் வரையிலுமே  நான் கொட்டி கவிழ்ப்பதும் எதையாவது கீழே போட்டு உடைப்பதும் என தொடர்ந்து தான் கொண்டிருந்தன! பின்பு என் பட்டர் ஃபிங்கர்ஸிடமிருந்து கண்ணாடிப் பொருட்கள் தப்பத் துவங்கின...🙂 கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கத் துவங்கினேன்! ஆனாலும் என்றைக்காவது பால், எண்ணெய் என்று ஏதாவது கீழே தவறுவதும் அதை சுத்தம் செய்வதுமாகச் செல்லும்...🙂


சரி! சரி! இந்த வரலாறெல்லாம் எதற்கு???


புழுக்கத்தினால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு  குனிந்தாலே பாரமாக இருக்கவே ஒரு டீ போட்டு குடிக்கலாம் என்று போட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே சிங்க்கில் கிடந்த பாத்திரங்களையும் தேய்த்து கூடையில் கவிழ்த்தேன். டீ தயாரானதும் இரண்டு கப்புகளில் வடிகட்ட எடுத்து விடும் போது வழமை போல் இடுக்கியால் விபரீதமாக ஆனது...🙂


கிச்சன் கேபினட், சமையல் மேடை,  தரை என்று எங்கும் டீ அபிஷேகம்! அழுகையே வரும் போல ஆகிவிட்டது! எத்தனை முறை அலசி துடைத்து அலசி துடைத்து என்று தலையில் கோர்த்துக் கொண்ட நீரெல்லாம் வெளியே வர மாங்கு மாங்கென்று செய்யும் நிலை..🙂


மூக்குத்தி தொலைந்தாலும் தொலைந்தது! முற்றம் சுத்தமாச்சு! என்ற பழமொழியைச் சொல்வார் என் மாமியார்! அது சுத்தம் செய்யாமலே அடைசலுடன் வைத்திருப்பவர்களுக்கு?? யாரை நொந்து என்ன செய்ய!!  உங்கள் வீடுகளிலும் இது போல் நடக்குமா? அல்லது எனக்கு தானா?? 


ஒரு டீ குடிக்க நினைத்தது தப்பா மைலார்ட்..???


*******


ரோஷ்ணி கார்னர் - எலுமிச்சை சாதம் - 19 ஜூன் 2024:


கண்ணா! இதக் கொஞ்சம் டேஸ்ட் பார்த்துட்டு சொல்றியா??


லெமன் சாதமா??


ஆமா!


அது என்னமா முதல் நாள்னா லெமன் சாதம் தான் குடுக்கணும்னு ஏதாவது சட்டமா??


அது என்னமோ தெரியல! கலந்த சாதம் லஞ்ச் பாக்ஸ்ல குடுக்கணும்னாலே முதல்ல நினைவுக்கு வர்றது இந்த லெமன் சாதம் தான்..🙂


அதுவும் போக உனக்கு பிடிக்கும் தான??


என்னை பார்த்து முறைத்தாள்...🙂


இப்படி ஏதோ ஒண்ணு சொல்லும்மா!


சரி! சரி! கோபிக்காத கண்ணா! இத டேஸ்ட் பார்த்துட்டு புளிப்பு இன்னும் போடலாம்னா சொல்லு! ஒரு மூடி பிழிஞ்சிடறேன்!


ம்ம்ம்! சரியா இருக்கும்மா! என்றாள்!


நீ தான என் மூஷக: ...:))


இதுக்கு தான் வேணும்னு சொல்றது!!! என்றதும்....


உன்ன.....ஹா..ஹா...ஹா..


ஓடினேன் அவளிடமிருந்து தப்பித்து....🙂


கல்லூரி இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறாள் மகள்! முதல் ஆண்டு ஓடியதே தெரியவில்லை!


*******


பிறந்த நாள் - 27 ஜூன் 2024:



நாளைக்கு என்ன எழுதி வெச்சிருக்க?? நாளைக்கா??? முதல்ல நாளைக்கு என்ன விசேஷம்?? நீயே யோசிச்சுப் பாரு?? சொல்றேன்!!! இது எந்த மாசம்!! நாளைக்கு என்ன தேதி!! ஓ! இப்போ ஞாபகம் வந்துடுத்து! நாளைக்கு பெரிய குழந்தைக்கு பர்த்டேயா!! சூப்பர்! சூப்பர்! புன்னகையுடன்(ஃபோனில் தான்!) ஆமா! அதுக்கு தான் கேட்டேன்..🙂 நீ எழுதி வெச்சிருப்பியேன்னு!! அப்படியா! சரி! சரி! ஆமா! நான் ஒண்ணு கேக்கட்டுமா?? என்ன கேட்கப் போற..??? என் பொறந்த நாளுக்கும் நாந்தான் பதிவு எழுதறேன்! ஆமா! அப்புறம்! நம்ம வெட்டிங் டே! உங்க ரெண்டு பேரோட பர்த்டேன்னு எல்லாத்துக்கும் நானே தான் எழுதறேன்! ஆமா! இது எல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே! புதுசா என்ன கேட்கப் போற…??? இதோ! வரேன்! வரேன்! அதாவது எல்லா வேலையும் நானே தான் செய்யணும்ங்கிற மாதிரி நானே தான் எழுதணும்னு ஏதாவது சட்டம் போட்டு யாராவது எழுதி வெச்சிருக்காளா?? நீ கேக்கறதும் நல்ல கேள்வி தான்!! பாராட்டுனது எல்லாம் போறும்! இந்த கேள்விக்கு மொதல்ல பதில சொல்லுங்களேன்!! நானே நேரமே இல்லன்னு சொல்லிண்டிருக்கேன்! இதுல என்னமோ குடுத்து வெச்ச மாதிரி எழுதி வெச்சிருக்கறயான்னு கேட்டா என்ன அர்த்தம்னு வேண்டாமா?? இப்போ நான் ஒண்ணு சொல்லட்டுமா?? அதத்தானே இவ்வளவு நேரமா கத்திண்டு இருக்கேன்! சொல்லுங்களேன்! பார்ப்போம்! அதாவது….! அதாவது…! எனக்கு நானே…! இது உனக்கு தேவையாடா!’ன்னு கேட்டுக்கணும்னு தோணறது..! அப்படி வாங்களேன் வழிக்கு…:))) @@@@@@ பக்கம் பக்கமா உருகி உருகி நிறைய எழுதியாச்சு! புதுசா என்ன சொல்றதுக்கு இருக்கு! அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை!

உற்ற துணை, பக்கபலம், வழிகாட்டி, நல்ல நண்பன், நேர்மையான அரசு ஊழியர், பரோபகார குணம், உழைப்பாளி என்று சொல்லிக் கொண்டு செல்லலாம்! இன்று பிறந்தநாள் காணும் என்னவருக்கு இறைவன் நோய்நொடி இல்லாத அமைதியான வாழ்வும் நீடித்த ஆயுளும் அருளணும் என மனமுருகி பிரார்த்தித்துக் கொள்கிறேன்!




*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


19 கருத்துகள்:

  1. சாய் (தேநீர்) சரித்திரம் ஏற்கனவே படித்தது என்றாலும் மறுபடி ரசித்தேன்.  எலுமிச்சை சாதம் படித்து புன்னகைத்தேன்.  என் அம்மா கொடுத்த காலத்தில் ஏனக்கு அது சுவைக்கப் பிடித்தது.  இப்போதெல்லாம் ரவா உப்புமாவுக்கு இணையாக அதுவும் எதிரி ஆகிவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட்ஜி! எப்போதும் இளமையுடன் சந்தோஷமாக இருந்திட எல்லா நன்மைகளும் கிடைத்திட பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. வாசகம் மிக மிக அருமை. எனக்குத் தற்போதைய தேவையும் இதுவே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  5. வாசகம் அருமை.
    அனைத்தும் ரசித்து படித்தேன்.

    //கல்லூரி இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறாள் மகள்! முதல் ஆண்டு ஓடியதே தெரியவில்லை!//

    ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வெங்கட் , வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது கருத்திற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. விஜி வெங்கடேஷ்27 ஜூன், 2024 அன்று 8:52 AM

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிட்டு. மஹா பெரியவா உனக்கு தீர்க்க ஆயுள் ஆரோக்யம் ஐஸ்வர்யம் சகலத்தையும் அருளட்டும் என்று வேண்டுகிறேன்.
    பொங்க விடுவது, கொட்டுவது இதிலெல்லாம் நான் doctorate வாங்கியிருக்கிறன்.எல்லோர்க்கும் தை 1 தான் பொங்கல்.எனக்கு வாரம் ஒருமுறை பால் பொங்கல்! என் மாமியார் சொல்லுவார் 'பொங்கவிடற ஆனா உடனே துடைச்சுடற' என்று.அது திட்டா பாராட்டா என்று இன்றுவரை தெரியலை🤔.giving benefit of doubt பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்!உப்புமா மாதிரி ஒரு பாவப்பட்ட மிகவும் தாழ்த்தப்பட்ட உணவு எலுமிச்சை சாதம்.ஆனால் அதில் தாளிக்கும்போது சிறிது கொத்தமல்லி விதைப் பொடி,பெருங்காயம்,ஒரு கிள்ளு மிளகாய் வற்றல், தாராளமாக வேர்க்கடலை வறுத்து சேர்த்தால் புளியஞ்சாதம் மாதிரி ஒரு flavour கிடைக்கும்.(இப்படி சொல்லித்தான் ஏமாத்தணும்!). ஆகவே உருவு கண்டு எள்ளல் வேண்டா நண்பர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  7. கை தவறுவத சகஜம் தான் ஆதி. இங்கும் சில சமயம் உண்டு.

    ரோஷிணிக்கு வாழ்த்துகள்! குழந்தைகள் "நான் வளர்கிறேன் மம்மி" என்று நாம் கண்ணை மூடித்திறப்பதற்குள் வளர்ந்திருப்பார்கள்! எலுமிச்சை உரையாடல் ரசனை...அம்மா குழந்தைக்குள் நடக்கும் உரையாடல் எனக்கும் என் மகனுக்கும் இடையே நடப்பதை நினைவுபடுத்தியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. எல்லா வீடுகளிலும் இந்த உடைதல் சப்தம் கேட்கத்தான் செய்கிறது.
    சில நேரங்களில் செயற்கையாய்....

    வெங்கட் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் செயற்கையாக சத்தம் - உண்மை.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. வெங்கட்ஜி அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    பல வீடுகளிலும் நடப்பதுதானே விழுவதும் கொட்டுவதும் உடைவதும் என்று. உங்கள் காலில் தீக்காயம் படாமல் தப்பினீர்களே அதுவே பெரிய விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட். வாழ்க நிறைவுடன் நலமுடன்.

    ரோஷணி இரண்டாம் ஆண்டு இனிய வாழ்த்துகள். காலம் விரைவில் சென்றுவிடும் எல்லாச் சிறப்புகளும் கிடைக்கட்டும்.

    ஆதி கவலை வேண்டாம் எப்பவாவது இப்படி ஆகிவிடும் கவனமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....